நன்றி-எங்கள் தேசம்
கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக திகழும் இவர், கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அதிபராவார். இவ்வாறு பல்தரப்பட்ட ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கெகிராவ ஸூலைஹா
உங்களைப் பற்றியஅறிமுகக் குறிப்பு (இது என்னால் அறிமுகம் செய்யப்படும். குறிப்பை தரவும்)
கெகிறாவ ஸூலைஹா என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஸூலைஹா பேகம். இவரது முதல் எழுத்துலகப் பிரவேசம் 80களில் நடந்தது. ‘மல்லிகை’யில் முதல் மொழிபெயர்ப்புக் கவிதை ‘ஓ! ஆபிரிக்காவே’ வெளியானது.
2009இல் பண்ணாமத்துக் கவிராயர் அவர்களின் அணிந்துரையுடன் வெளியான இவரது ‘பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்’ முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது என்பவற்றைப் பெற்றது.
2010 இல் ‘அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு’ முதல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத்தொகுதி, 2011இல் ‘இந்த நிலம் எனது’ மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி என்பன வெளியாகின. அவையிரண்டும் இலங்கை கலை இலக்கியப்பேரவையின் சான்றிதழ்கள் பெற்றன.
2014 இல் வடமத்திய மாகாண கலாசார அமைச்சின் அனுசரணையில் வெளியான இவரது ‘ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை’ மொழியாக்கக் கட்டுரைத் தொகுதி, 2014 ‘துரைவி’ ஞாபகார்த்த விருது பெற்றது.
நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையில் வெளியான, மன்சூர் ஏ காதிர் அவர்களின் அணிந்துரை பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ‘வானம்பாடியும் ரோஜாவும்’ 2014க்கான சிறந்த சிறுகதை மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
ஒரு பள்ளிக்கூடத் தலைமையாசிரியராக அனுராதபுர மாவட்டத்தில் கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் இவரை ‘எங்கள் தேசம்’ பத்திரிகைக்காக சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.(தேவையற்ற பகுதிகளை நீங்கள் நீக்கலாம்.)
? உங்களுடைய இலக்கியப் பயணத்தின் ஆரம்பம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
மிகுந்த தயக்கங்களுடன் தான் எனதான எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. இந்தத் துறைக்குள் என்னை இழுத்தவர்களில் அக்கா கெகிறாவ ஸஹானா, திரு.மேமன்கவி அவர்கள் மிக முக்கியமானவர்கள். 88,89களில் என எண்ணுகிறேன். அவ்வப்போது எதை எதையோ எழுதி அக்கா ஸஹானாவின் பார்வைக்குக் கொடுப்பேன். அவளே அதன் தகுதி கண்டு பிரசுரத்துக்கான வழிவகைகளைச் செய்வாள். அதிகபட்ச எனது நேரங்கள் ஒரு வாசகனாய்க் கழிந்தது. மேமன்கவியவர்கள் எனது தேர்ந்த வாசிப்புக்கு நிறைய தீனி போட்டார். ஆங்கிலக் கவிதை நூல்கள் நிறைய தருவார். மற்றும் படித்த ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ போன்ற நாவல்கள், கவியரசர் பாடல்கள், இலங்கை வானொலி, பள்ளிக்கூடத்தே கிடைத்த உந்துதல்கள் எல்லாமும் எதையாவது எழுதலாம் என்ற நம்பிக்கையை ஊட்டின. ‘மல்லிகை’ எனது முதல் மொழிபெயர்ப்புக் கவிதை “ஓ! ஆபிரிக்கா”வை பிரசுரித்தது.
?. தங்களுக்குப் பிடித்த நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? அவர்கள் எந்த வகையில் உங்களைப் பாதித்தார்கள்?
எனக்குப் பிடித்த கவிஞர்;கள் என்று கேட்டால்; மஹாகவியையும், நீலாவணனையும் சொல்வேன். நான் எப்போதும் பண்ணாமத்துக் கவிராயர் அவர்களின் எழுத்தால் ஈர்க்கப்படுபவள். அவர் என் ஆசானும் கூட. ஆங்கிலத்தில் வியப்பூட்டும் நிறைய எழுத்துக்களை மேமன்கவியவர்கள் தந்தும், பேராதனை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் பெற்றுப் படித்தும் அறிந்தேன். கலீல் கிப்ரானை, ரஸ{ல் கம்ஸதோவை, ரொபர்ட் ஃப்ரொஸ்ட்டை, வேட்ஸ்வேர்த்தை, ருட்ரியாட் கிஃப்லிங்கை, பப்ளோ நெரூடாவை, அம்ரிதா ப்ரிதமை, அனீஸ் ஜங்கை தேடித்தேடிக் கரைத்துக் குடித்தேன். ஜெயகாந்தன் அவர்கள் நா.பார்த்தசாரதி போன்றவர்கள் மலைப்பூட்டி அதிசயிக்க வைத்தபடியிருக்கிறார்கள். இப்போதைக்கு உள்ளம் கவர்ந்திழுப்பது ஆழியாள் எழுத்துக்கள் என்பேன்.
?. இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தமட்டில் இலக்கியத்துறையில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறிருக்கிறது?
நிறைய பெண்கள் எழுதுகிறார்கள். புத்தம் புதிது புதிதாய் சிந்தனைகள் பீறிட்டுக் கிளம்புகின்றன அவர்களிடமிருந்து. தலித் இலக்கியத்தில் பெண்களின் வகிபாகம் வியப்பூட்டுவது. சமூகத்தில் அவர்கள் தாங்கிய வலிகளை, அனுபவங்களை அவர்கள் தமது எழுத்துகள் வாயிலாக அழகுற சொன்னார்கள். ‘கருக்கு’வில் பாமா, போன்றோரைத் தரிசித்தபோது, இப்படியும் சொல்ல முடிகிற தைரியமான பெண்களா என்று மலைப்பு வந்தது.
?. நீங்கள் அவ்வாறு கருதுவதற்கான காரணம் என்ன?
பெண்கள் இல்லாத துறையென்று எதுவுமேயில்லை. ஆதலால் அவர்களது இலக்கிய வளர்ச்சி பற்றியும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பெண் என்கிற வகையில் மகிழ்கிறேன்.
?. இன்று எல்லா துறையிலும் ஒரு வித அரசியல் இருப்பதைப் போல இலக்கியத்திலும் ஒரு வித அரசியல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இது பற்றிய தங்களின் கருத்துக் கணிப்பு என்ன?
அப்படியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லுமளவுக்கு நான் வளர்ந்து விட்டதாகக் கருதவில்லை.
? இன்றைய இலக்கியப் போக்கு எவ்வாறிருக்கிறது? அது எவ்வாறு இருக்க வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
கலை சிந்திக்கவும், சீர்திருத்தவும் உதவுகிற ஒரு வியத்தகு கருவி. எழுத்தை யாசிக்கின்றவன், பொழுதுபோக்குக்காக கண்டதை தேர்ந்தெடுக்காமல், அவசர அவசரமாய் புத்தகம் போட முனையாமல் மொழியாற்றலை உயர்மட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய வாசிப்பின் கலையை உயரப்படுத்தல் வேண்டும். ஊருக்கொரு வாசிகசாலையை நாம் உயிர்ப்பூட்டலாம். பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் இறப்பு கண்டிருக்கின்றன. மாணவர்கள் பாடப்புத்தகங்களின் அறிவோடு மட்டும் நின்று விடுகிறார்கள். பிழையான பாதையில் வெகு வேகமாக நம் மாணாக்கரை இட்டுச் செல்கிற தொழில்நுட்பச் சாதனங்களின் மத்தியிலே இது ஒரு பகீரதப் பிரயத்தனம் தான் என்றாலும் முயற்சி செய்யலாம். ஆசிரியர்கள் நிறைய கற்கவும், வாசிக்கவும் வேண்டியிருக்கிறது.
?.நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களைப் பற்றி குறிப்பிடுங்கள். அவை எத்துறை சார்ந்தவையாக அமைந்துள்ளன?
இதுவரை ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளன. 2009இல் ‘பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்’ முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பண்ணாமத்துக் கவிராயர் அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது என்பவற்றைப் பெற்றது.
2010 இல் ‘அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு’ முதல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத்தொகுதி அன்பு ஜவஹர்ஷா அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. இலங்கை கலை இலக்கியப்பேரவையின் சான்றிதழ் பெற்றது.
2011இல் ‘இந்த நிலம் எனது’ மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளியானது. அதுவும் இலங்கை கலை இலக்கியப்பேரவையின் சான்றிதழ் பெற்றது.
2014 இல் வடமத்திய மாகாண கலாசார அமைச்சின் அனுசரணையில் வெளியான எனது ‘ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை’ மொழியாக்கக் கட்டுரைத் தொகுதி, 2014 ‘துரைவி’ ஞாபகார்த்த விருது பெற்றது.
நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையோடு 2014 இல் வெளியான, மன்சூர் ஏ காதிர் அவர்களின் அணிந்துரை பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ‘வானம்பாடியும் ரோஜாவும்’ இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
?.நீங்கள் மொழி பெயர்ப்புதுறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை யாவரும் அறிந்ததே. உங்களுடைய மொழி பெயர்ப்பு ஈடுபாடுகள் பற்றி குறிப்பிடுங்கள்?
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற எல்லா வகைமைகளும் குறிப்பாக, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட அம்சங்கள், போர்ச்சூழலில் வதையுறும் ஆன்மாக்களின் துயரங்கள், பெண்ணினது கண்ணீர் போன்ற கருக்களை சுமந்த எந்த வகைமையாயினும் அவை என் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. மட்டுமன்றி, ஏழையின் அவல வாழ்வு, இயற்கை மீதில் மனிதனின் கோரத் தலையீடு, பள்ளிக்கூட அனுபவங்கள் இன்னபிறவும் என்னை அக்கறை கொள்ள வைத்தன; வைப்பன. “கவிதை ஒரு மேலான மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கு” என்பார் ஆங்கிலக்கவி டி.எஸ்.எலியட் என்பார். தமிழிலே நாம் கண்டு கொள்ளாத பக்கங்களை அதிகம் தொட்ட பிறமொழிக்கவிதைகளை நிறைய தரிசித்தேன். நீண்டகால மரபு கொண்ட தமிழ்க்கவிப்பூந்தோப்பு விதவிமான மலர்களால் நிரம்பி அழகு காட்டி நின்றது. எனினும், ஆங்கிலத்தில் வித்தியாசமான கருக்கள் கூடி வந்தமை பெருந்திகைப்பை ஏற்படுத்திற்று. எனவே அவற்றை நான் புரிந்து கொண்ட விதமாய் மொழிமாற்றி தமிழ்கவிதைகளில் கலந்து விடச் செய்ய அவாவினேன்.
மேலும், பாடசாலைகளில் இரசனை இல்லாத வெற்று ஆங்கில ஆசிரியர்களால் கவிதைகள் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்த நிலையும் இருந்து வந்தது. அவர்கள் கற்பிக்காது கைவிட்டுப்போகும் அத்தகு கவிதைகளை இந்தச் சிறார்கள் அறிய வழி ஏது என யோசித்தும் மொழிபெயர்ப்பை என் ஊடகமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.
வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
புதிய விடயங்களை தேடிக் கற்றுத் தேற முயலலாம். நிறைய வாசிக்க வேண்டும். இன்றைய கல்வி நிறுவனங்கள் சமூகஜீவிகளை அதிகபட்சம் உருவாக்குவதில் தோற்றுப்போய் இருக்கும் நிலை காண்கிறோம். தன்னைச் சுற்றித் தீங்கே நடந்தாலும், குருட்டுக் கண்களுடன் அதைக் கடந்து போய் விடுகின்ற இளைய பரம்பரையை இன்றைய கல்விப்புலங்கள் காட்டித் தந்துள்ளன என உணர்கிறேன். மக்கள்பால் நிற்கின்ற, அவர்தம் துயரங்களை தம் துயரமாய் உணர்கின்ற, அன்பு வயப்படுகின்ற எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். வாசிப்பு மூலமே மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதால் நிறைய வாசிக்க வேண்டும்.
?.மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதவிரும்பும் புதியவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?
இலகு மொழிநடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் அவர்கள் தந்ததை நாம் கொடுத்துவிட்டாலே போதும், நாம் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்தாம். அவர்களது பண்பாட்டு கலாசார வேறுபாடுகள், அந்த பின்னணியில் அவர்களது உணர்வுக்கோலங்கள் போன்றவற்றை அதிதீவிரத்தனமான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட, அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மற்றவர்க்கும் புரிய வைக்கிற மாதிரி மொழிமாற்றினால், அந்தப் புதுச்சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுத்ததாக ஆகும். இலக்கணச் சுத்தத்தோடு எழுதும் பண்டிதர்கள் தேவையில்லை நமக்கு. அந்தப் புதுச் சிந்தனையின் வரவு அதையும்விட முக்கியமானது எனக் கருதுகிறேன். மொழியை செம்மைப்படுத்திக் கொண்டே வரவும் வேண்டும்.
நன்றி!!