-யோகி -(மலேசியா)
தேன்மொழி தாஸ், எளிமையான தோற்றம், தன்னலமற்ற உபச்சரனைகள், கலங்கமில்லாத சிரிப்பு. இப்படியாகத்தான் அறிமுகமானார் கவிஞரும் பாடலாசியருமான தேன்மொழி தாஸ். மிக அண்மையில் உயிர்மை வெளியீடாக அவரின் ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. அது அவரது நான்காவது கவிதை தொகுப்பாகும். அன்றைய தினம்தான் முதன்முதலாகத் தேன்மொழி தாஸ் எனக்கு அறிமுகமானார். அவரைவிடவும் அவரின் கவிதைகளில் நமக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. தேன்மொழி தாஸின் கவிதைகளைக் குறித்துப் பேசினாலே தேன்மொழி தாஸ் யார் என்பதைக் கண்டுக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட அந்தக் கவிதைத் தொகுப்பில் மொத்தம் 34 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2008-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டுக் கால இடைவெளியில் தனது சிந்தனையில் உதித்த, தன்னைப் பாதித்தவைகளை அவர் தமது கவிதையில் பேசியுள்ளார். முக்கியமாகத் தமது கவிதையின் வரிகளுக்கு வழுச் சேர்க்க இயர்கையைப் புனைவாகக் கையில் எடுத்து அதில் சொற்களைக் கோர்த்திருக்கிறார். அந்த வரிகள் நம்மிடம் கேள்விகளை எழுப்புகின்றனஇ தர்கம் செய்கின்றன, சில வேளைகளில் அதிலிருந்து கடக்கவிடாமல் ஸ்தம்பிக்க நிற்கவிடுகின்றன. பல கவிதைகள் துயரங்களையே பேசுகின்றன. தொடக்கவரிகளிலிருந்து வாசிக்கும் போது உங்கள் கவிதைகள் பேசிக்கொண்டிருக்கும் ஒன்று தொடர்ந்து அதன் வரிகள் மாறுபட்டு வேறு ஒன்று பேசப்படுவதாக உணர நேர்கிறது. மீண்டும் ஒரு முறை மறுவாசிப்புச் செய்யும் போது வேறு ஒரு புரிதலைத் தருகிறது. இப்படியான நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன?” என்று நான் தேன்மொழிதாஸிடம் ஒரு முறை கேட்டேன்.
“நான் என்னேரமும் கவிதை வரிகளுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். சராசரியாக 20 கனவுகள் என்னைச் சூழ்ந்தபடி உள்ளன. அதனோடு நடக்கும் எனக்குச் சஞ்சாரங்கள் சில வேளைகளில் கவிதைகளாகவும் உயிர் பெறுகின்றன. ஆனால் அவை கவிதைகளைக் குழப்புவதில்லை. நான் என் கவிதைகளைத் திட்டமிட்டு எழுதுவதில்லை. என் மனநிலையைத்தான் எழுதுகின்றேன். அவை எனக்கு மிக எளிமையானக் கவிதைகளாகத்தான் உள்ளன. மேலும்இ ஓரு வாசிப்பாளினியாக நீங்கள் அப்படிப் புரிந்துக்கொண்டால் அப்படியான கவிதைகளைப் புனைவது தேன்மொழி தாஸின் பாணி என எடுத்துக்கொள்ளுங்களேன்” என்றார். அப்படியாயின் தேன்மொழி தாஸின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்ததுதான்.
‘உன் வீட்டின் உச்சியில் தங்குகிற
மேகத்தோடு தவித்ததையும்
இளமை யாராலும் மீட்டெடுக்க இயலாத
வெறுமைக்குள் இடறியதையும்
ஒரு மெல்லிய அப்பத்தை
விழுங்குவதெனச் சுவைத்துக்கொள்’
என எதார்த்தத்தைப் பேசிக்கொண்டிருக்கும் போதே
‘நான் என் நாய் குட்டிகளின் கண்களுக்குள்
வசிப்பதில் நிறைவுறுகிறேன்’
என்கிறார். தொடர்ந்து தன்னுடைய வாழ்கையில் உடன் வரும், தொடர்ந்து பயணம் செய்யும் யாரையும் கவிதைகளில் அடக்கி அவர்களுக்கென்று தனியிடத்தைத் தந்துவிடுகிறார் தேன்மொழி தாஸ். குறிப்பாக அவர் கவிதைகளில் வரும் நாய்குட்டி. தன் அன்புக்கு பாத்திரமான அந்தச் செல்ல நாய்குட்டி இறந்து விடுகிறது. அல்லது அதன் மரணம் ஒரு விபத்துபோல நிகழ்ந்துவிடுகிறது. அதன் பிரிவையும் துயரத்தையும் பல இடங்களில் தன்னிச்சையாகப் பதிவாகிவிடுவதைக் கவிஞரால் தவிர்க்க முடியவில்லை.
‘வீட்டுக் கதவைத் தட்டிய விரல்கள்
என் இளமையோடு உதிர்ந்து விட்டன
வெகு தூரம் வந்துவிட்டேன்
அறிவு தெளிவு நிதானம்
மிக நீண்டதொரு மௌனம்
எல்லாவற்றையும் ஒரு மரத்தினடியில்
இறந்த என் நாய்க் குட்டியைப் போல் புதைக்கிறேன்
இப்போது உங்களுக்குப் புரியக்கூடும்
என் மனது தவிர மற்றவை மரித்துப் போனதும்’
என்கிறார். ‘பில்லியன் ரகசியமாய்க் கொல்லப்பட்டவன்’ என்ற கவிதை மிக வலி நிறைந்த கவிதையாக இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. முக்கியமான கவிதை என்றும் அதைக் கூறலாம். பில்லியன் எனும் மகன் மெர்சியால் கொல்லப்படுகிறான். மகனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என அறியாத தாய் அது குறித்து ஒரு மாதத்திற்குப் பிறகு அறிகிறாள். ஒரு மாதத்திற்குப் பிறகு மெர்சியை விவரிக்கச் சொல்லி அந்த மரணத்தைக் கேட்டறிகிறாள். அப்போது அவள் மெர்சிக்கு உணவை பரிமாரிக்கொண்டிருக்கிறாள்.
இந்தச் சம்பவங்களை ஒரு காட்சி படிமமாக நினைத்துப்பாருங்கள். இதயம் பதற்றமாவதை உணர முடிகிறது இல்லையா? அந்தச் சம்பவத்தில் பங்கு பெற்றிருக்கும் தேன்மொழி தாஸ் அதிகாலை 3.13 மணிக்குஇ மீளா அத்துயரத்தை கவிதையில் எழுதி கடந்துவந்திருக்கிறார்.
ஃதேவதைகளின் ஆடைகளாய் அவிழ்ந்து விழுகின்றன
சாம்புராணி மரத்துப் பூக்கள்ஃ
ஃஆலி மழை பெய்யும் தூவானக் காடு
உறைந்த மழையின் பண்டகசாலைஃ
ஃதனிமையைத் தண்ணீரெனக் குடித்து
எளிமையாய்க் கடக்கிறது என் காலம்ஃ
ஃஇன்றைக்கும் நட்சத்திரத் துளிகளென
கண்ணீர் பெருகுகிறதுஃ
ஃஎனது கண்ணீர் துளிகளை
பறவைகளாகப் பறக்க விட்டிருக்கிறேன்ஃ
இப்படியாக ஒவ்வொரு கவிதையிலும் இயற்கைகளை ஒன்றுகூட்டி தன் துயரத்திற்கு மருந்து கட்டியிருக்கிறார் கவிதாயினி. தனது கனவுகளில் வரும் கதாப்பாத்திரங்கள் தன்னுடன் துயரங்களைப் பேசுவதாகவும்இ அவர்களின் துயரங்களுக்குக் காரணம் தெரியவில்லை எனத் தேன்மொழி தாஸ் கூறிய போது கனவுகள் சரியான மருந்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது என எனக்கு நினைக்கத் தோன்றியது. தேன்மொழி தாஸின் கவிதைகளில் வரும் சூசன், லத்தா, ஜெசி, சூனு போன்றவர்கள் வாழும் கதாபாத்திரங்களாக இன்னும் அவரோடு பயணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இருத்தல் மட்டுமல்லாமல் உடன் பயணிப்பவர்களையும் ஒரு புகைப்படம்போலக் கவிதையில் பதிவு செய்திருப்பது அழகு. செவிலியர் பட்டப்படிப்பு முடித்திருக்கும் தேன்மொழி தாஸ் கவிதை, சிறுகதை, சினிமா, தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விருதுகளையும் பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். பல சவால்களுக்கிடையில் தொடர்ந்து தன் எழுத்துகளால் இயங்கிக்கொண்டிருக்கும் தோழி தேன்மொழி தாஸ் தொடர்ந்து கொண்டாட்ட நிலைகளையும் பதிவு செய்ய வேண்டும். நிறைய துயரங்கள் அடங்கிய வரிகள் நாளடைவில் வாசகருக்கு சலிப்பு தட்டலாம். என்னேரமும் தனது கவிதை உலகில் நிரந்தரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தோழிக்கு வாழ்த்துகள்.
புத்தகம்: நிராசைகளின் ஆதித்தாய் (கவிதை தொகுப்பு) ஆசிரியர்: தேன்மொழி தாஸ்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்