மாதுமை –
(2007 aug 2 ஊடறுவில் பிரசுரமான கவிதை udaru.blogdrive.com)
திறந்திருந்தது
என் புத்தகம்
தாண்டிச் சென்றவர்கள்
நின்று வாசித்தார்கள்.
வழமைபோல ஒரு சில
பக்கங்கள் களவாடப்பட்டன
இருந்தும்
சுவாரசியம் குறையவில்லை
தொடர்ந்தும் வாசித்தார்கள்.
சிலர் அழுதார்கள்
சிலர் சிரித்தார்கள்
சிலர் ஏதேதோ பேசினார்கள்
எல்லாவற்றையும் கேட்டும்
திறந்துதானிருந்தது புத்தகம்
காற்று சில பக்கங்களை
திறந்து விட்டிருந்தது
கைகள் திருப்பிய பக்கங்களுக்கும்
காற்று திருப்பிய பக்கங்களுக்கும்
வித்தியாசம் இருந்தன.
எங்கிருந்தோ தாழப்பறந்து
வந்த பறவை
எச்சம் போட்டுப் பறந்தது
பறவையை துரத்தி வந்த
நாயொன்று
புத்தகத்தை கௌவிச் சென்றது.