கெகிறாவ சுலைஹா
நிஜமான வீடொன்றுள் சென்று வந்து
நிரம்பத்தான் நாளாகி விட்டது.
உயிர்க்குலை பதறும்,
சின்னக் கால்கள் சுதந்திரமாய் நீட்டி
பாட்டி வீட்டுக்குள் படுத்துறங்கிய பிஞ்சு நாட்களில்
காடைத்தனங்களின் பிடியில்
வேலிகளே வந்து பயிர் மேய்ந்த
எவர்க்கும் சொல்லவியலாக் கதைகளை
மூட்டைப் பூச்சிகளின் குடைச்சல் தேக்கி வைத்த
சுண்ணாம்பு பொங்கிய சுவர்களின்; பதிவுகளில்
அந்த வீடு இன்னமும் வைத்திருக்கிறது ஆதலால்.
அப்புறம்,
அம்மா கட்டிய வீடு அழகாய்த்தான் இருந்தது
ஞாபகங்களின் பதிவுகளில் முன்னரெல்லாம்.
விளக்கணைத்ததும் சூழ்ந்த இருளில்
அடுத்த வீட்டான் பெண்ணோடு அத்துமீறி அப்பா படுத்ததுவும்,
அது பற்றிக் கேட்ட அம்மாவை அடித்துத் துவைத்ததுவுமாய்
நீள்கின்ற நினைவுகளோடு புகையே படிந்து கிடக்கிறது
அந்த வீடும் இப்போதெல்லாம் புதிதாய் வெள்ளையடித்த
அதன் சுவர்களின் வெண்மையையும் மீறி.
செம்பஞ்சுக் குழம்பாய் பச்சை நரம்போடும்
என் குட்டிக் குழந்தையை அணைத்தபடி
இன்று நானுறங்கும் எவனதுவோவான
என் தற்காலிக இல்லத்துக்குள்ளும்;
வீடொன்று பற்றிய பிரதிமைகள்;
அச்சுறுத்தல்களையே தந்தாலும்,
ஊருக்குப்பயந்தாவது வீடொன்று கட்டத்தான்
வேண்டியிருக்கிறது,
உயிர் தேய்ந்த ஈனக்குரலில்
‘வீடொன்று உன் சடலத்தை உன் பிள்ளை
கிடத்தி வைக்கவேனும் வேண்டும்’ என்று
ஆன்மா அலறியலறிச் சொல்லும் ஆதலால்,
வானத்திலிருந்து மின்னலை, இடியை ஊடறுத்து
மழைத்தாரைகள் பொழிதலை,
புதர்ச்செடிகள் பேய்க்காற்றில் அங்கொரு புறமாய்ச் சரிந்தாலும்,
மறுகணமே தைரியமாய் நிமிர்தலை,
கிளிகள், மைனாக்களின் காலை மாலைக் கொஞ்சுதல்களை
வீடற்ற திறந்த வெளியில் நின்று ரசிக்கவெல்லாம்
வீடென்ற விலங்கு வந்து தடுக்குமாயினும்…..!!!
உள்ளத்தை அப்படியே உருக்கிப்போட்ட கவிதை. கவிஞர் சுலைஹாவுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.