இன்றைய அரசியலும் “அங்காடித்தெருவும்”

 – ச.விசயலட்சுமி (இந்தியா)

angadi-theru பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.

பெண்களுக்குரிய 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற 14 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில், முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு பத்து சதவிகிதம்கூட இல்லாத நிலையில் இளைய சக்திகளை சமூக ஈடுபாட்டிலிருந்து திசை திருப்பும் பொருட்டாக காட்சி ஊடகங்களில் பெண்கள் அரை நிர்வாணத்தோடு வளையவருவதற்கு தாராள இட ஓதுக்கீடு எழுதா சட்டமாக இருக்கிறது. பெண்கள் கவர்ச்சிக்காக, பயன்படுத்துவது மட்டும் இவர்கள் நோக்கமன்று. வைக்கோல் அடைபட்ட கன்றை வைத்து பசுவின் மடி சுரக்கவைப்பதைப்போல பெண்களை வைத்து இரக்கத்தையும் காமத்தையும் சுரக்கவைக்கும் தொழில் அரசாங்கத்தின் பரிபூரண சம்மதத்தோடு (சென்சார் போர்டு) நிறைவேறிக் கொண்டிருக்கிறது.


 பெண்களின் உடலை சந்தைப்படுத்தும் போக்கைக் கொண்ட திரைப்பட ஊடகத்தில் பெண்களுக்கான காட்சியமைப்பு ஆபாசத்தைக் தூண்டாதவகையில் பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் அங்காடித்தெரு திரைப்படம் கவனித்தலுக்குரியது. வியாபார உத்திக்கு பயன்படும் மூலதனமாக பெண்களைக் காட்சிப்படுத்தாமல் டூபீஸ் உடையுடன் நடிகர்களோடு டூயட்பாடினால் போதும் நடிப்பு இரண்டாம் பட்சம் என்ற உத்தியை முன்னிறுத்தாமல் பெண்களின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருகிறது அங்காடித்தெரு. கதாநாயகிக்கு பலவண்ண உடைகளை (காஸ்டியும்) அணிவிக்காமல் பகலில் பணிபுரியும் இடத்திற்குரிய சீருடையும் அடித்தட்டு வர்க்கப் பெண்களின் பொதுவான மாற்றுத்துணியாக அணிகிற நைட்டியும் பிரதான உடைகளாகின்றன. கடைநிலைவர்க்கத்துப் பெண்களின் வாழ்க்கை முறையில் நிறைந்திருக்கிற வலியை சந்திக்கும் அவலங்களின் சிலபகுதியை இயல்பாக பதிவுசெய்கிறது. அந்த வலிகளை எதிர் கொள்ளும் விதமாக தன்னம்பிக்கை உடையவர்களாக காட்டுகிறது.

நபர்கள் மீதான ஈர்ப்பை மையப் படுத்தாமல் கதையம் சத்தோடு பாத்திரங்கள் இயைந்து போவதற்குரிய இடத்தை உருவாக்கித்தந்திருக்கிறது. பலவண்ண உடைகளை விற்பனை செய்யும் வண்ணமயமான இடத்தில் சாயம்போன கந்தல் துணிகளாக உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாகும் பெண்களை மிகைப்படுத்தாமல் கோட்டோவியமாக காட்டியிருக்கிறது. இந்த வறுமையில் பூக்கும் அழகிய காதலை அதுதரும் ஆறுதலை மெல்லிய நீர்வீழ்ச்சியாக்கி மனதெங்கும் வடியவிடுகிறது.

நிலவுடமை சிந்தனையில் பெண்கள் நடத்தப்படும் முறைக்கும் முதலாளியத்தின் உறிஞ்சி சக்கையாய்த் துப்பும் உழைப்புச் சுரண்டலுக்கு மிடையே அல்லல்படும் பெண்ணின் வாழ்வை நுட்பமாய்ப் பேசுகிறது. நின்றுகொண்டே பலமணி நேரம் பணியாற்றுதல், காதலின் பெயரால் நம்பிக்கை துரோகம் ஏற்படுகையில் உயிரை துச்சமெனக்கருதும் பெண், மாதவிலக்கின் ஆசாராத்திற்கு நாயைப்போல ஓதுக்கப்படும் நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமி, போதிய சத்துணவு இல்லா நிலையிலும் தன்னம்பிக்கையே சத்தாக இவர்களை இயக்குவது, பெண்பாலியல் தொழிலாளி பொதுப் புத்தியிலிருந்து விலகிநின்று ஏற்கிற பிள்ளைப்பேறு, காலற்ற நிலையில் வாழ்க்கை வேர்விட்டு துளிர்க்கும் கதாநாயகி கனியின் பாத்திரப்படைப்பு என பெண்களின் இயல்பான குணாம்சத்தை பதிவு செய்திருக்கிறது.

பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக்கியிருக்கிறது.

ஊடறுவுக்காக தடாகத்திலிருந்து யசோதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *