அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8ஐ முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் வெளி வரவுள்ளன.
– விஜயலட்சுமி- (மட்டக்களப்பு)
தோழி கேட்டுக் கொண்டாள்
உன் தேசத்தின் துர்பாக்கியத்தை
வடித்து விடு என்று…
விடியும் வரை முயன்றேன்
முடியும் என்று தோன்றவில்லை
என் தேடல்களில் கிடைத்தது
முழுவதும் சாம்பல்கள்தான்
இன்னும் என் தேடல்
தேசத்திற்கான எழுத்துக்காகவே...
இங்கு எல்லாமே காய்ந்து விட்ட பிறகும்
எரிந்து விட்ட பிறகும்
கடதாசியில் வடிக்க
என்னதான் உள்ளது...?
எனக்குத் தெரிவது
துளைக்கப்பட்ட இதயங்களில் இருந்து
இன்னும் வழியும்
ஈரம் காயாத நினைவுகளும்
பயத்தே உறைந்த
பேனைகளின் (உண் )மைகளுமே...
தோழியே...
இங்கு இன்னும்
சாம்பல் சுடுகிறது
வாசிக்கும்
உன் நெஞ்சும் சுடும்
தணியட்டும்...
அதுவரை உன் கண்களை மூடு
நீ விட்டுப்போன -நமது
தேசத்தை நினைத்து.
பூத்துக் குலுங்கும்
வசந்தங்களையும்
உதயத்தின் வருகையையும்
காண்பாய்...
தயவு செய்து
கண்களை மட்டும் திறவாதே
வடக்கிருக்கும் மக்களையும்
வெளிறிப்போன கிழக்கையும்
உன் கண்கள் காணாதிருக்க
தயவு செய்து • உன்
கண்களை மட்டும்
இப்போது
திறவாதே.