Thanks to -yourstory
“இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க என்னைப் போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?”
இந்தக் கேள்வியுடன் யுவர்ஸ்டோரியுடன் தனது பேட்டியைத் துவக்கினார் பத்மினி பிரகாஷ். தற்போது லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் இவர், இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்பது தடைகளை தகர்த்தெறிந்த பத்மினி பிரகாஷ் நிலைநாட்டிய சாதனை.
தான் எதிர்கொண்ட உடல் சவால், மன அழுத்தம், குடும்பத்தினரின் புறக்கணிப்பு, சமுதாயத்தின் வெறுப்பு திணிப்பு என அனைத்து துயரங்களையும், சவால்களையும் தவிடு பொடியாக்கி சாதனையாளாராக உருவான தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி விவரிக்கிறார்.
பத்மினி பிரகாஷ் அனுப்பியிருந்த புகைப்படங்களில் இருந்த புன்னகையும், நம்பிக்கை முகமும் அவர் தொலைபேசியில் பேசியபோது அவரது குரலிலும் எதிரொலித்தது.
இளமைப் பருவம் பற்றி…
எனக்கு 7 வயது இருக்கும். அப்போதுதான் என்னுள் ஏதோ விபரீத மாற்றம் ஏற்படுவதை நான் உணர்ந்தேன். மெல்ல மெல்ல அந்த உணர்வு என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. என் நடை, உடை, பாவனை என அனைத்திலும் பெண்மை மிளிரும் ஒவ்வொரு தருணம் என் குடும்பத்தாரால் வார்த்தைகளால் ஒடுக்கப்பட்டதும், அடித்து துன்புறுத்தப்படுவதும் தவறாமல் நடந்தது.
அப்போதெல்லாம் என் மன வேதனைக்கும், உடல் காயங்களுக்கும் மருந்தாக இருந்தது பரதமும், வீணையும் கற்றுத் தந்த பக்கத்து வீட்டுப் பெண்ணே.
இருந்தும் நாளுக்கு நாள் துயரம் என்னை துரத்தியது; விரக்தி என்னை தற்கொலைக்கு விரட்டியது.
ஆனால், அந்த தற்கொலை முயற்சிதான் என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. ஆம், என்னை மீட்டெடுத்த வெட்டியான் ஒருவர் என்னை ஆசிரமம் ஒன்றில் சேர்த்தார். அந்த பிதாமகன் அளித்த மறு ஜென்மமும், ஆதரவளித்த ஆசிரமத்தையும் நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன். இந்த உலகில் நான் வாழ வேண்டுமா என்பதை வெளியில் இருந்து யாரும் நிர்ணயிக்க முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அத்தனை திருநங்கைகளும் வாழப் பிறந்தவர்களே. வாழ்க்கையை வாழுங்கள் நம்பிக்கையுடன்.
ஆசிரமத்துக்கு அடுத்து என்ன நேர்ந்தது?
ஆசிரமம் அளித்த உத்வேகத்தில் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது பிரகாஷ் என்பவர் என்மீது அன்பு செலுத்தினார். ஆனால், சமூகத்தின் ஏளனம் என்னைத் துரத்தியது. மும்பை, சென்னை என ஓட ஓட விரட்டியது. அறுவை சிகிச்சையுடன் இன்னும் பிற வேதனைகளையும் எதிர்கொண்டேன். வாய் பொத்தி நான்கு சுவர்களுக்குள் அழுது தீர்த்த நான், சொந்த ஊர் கோவைக்கே திரும்பினேன். யாரைச் சந்திப்பேன், அடுத்து என்ன செய்வேன் எனத் திசை தெரியாமல் நின்ற என்னை அதே அன்புடன் கரம் பற்றினார் என் பிரகாஷ். அன்றிலிருந்து இன்றுவரை என் வாழ்வு பிரகாசமாகவே இருக்கிறது.
செய்தி வாசிப்பாளர் ஆனது எப்படி?
அது நான் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம். ஒரு நாள் என் வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. கதவைத் திறக்க, வாசலில் நின்றனர் இரண்டு இளைஞர்கள். லோட்டஸ் தொலைக்காட்சியில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். அடுத்து அவர்கள் பேசியது என்னுள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
ஆம், அவர்கள் தொலைக்காட்சியில் நான் செய்தி வாசிப்பாளராக சேர வேண்டும் என்றனர். வழக்கமாக கிண்டல் பேசும் இளைஞர்கள்போல் தான் இவர்களும் என சற்று கோபம் கொண்டேன். இல்லை. நாங்கள் உண்மையாகவே உங்களை ஒரு செய்தி வாசிப்பாளராக ஆக்கவே இங்கு வந்திருக்கிறோம் என்றனர். சங்கீத் குமார், சரவணக் குமார் பேச்சில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர், லோட்டஸ் தொலைக்காட்சி அலுவலகம் சென்றேன். முறையான பயிற்சி மேற்கொண்டேன். எனது தமிழ் உச்சரிப்பு எனக்கு நன் மதிப்பு பெற்றுத் தந்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நான் செய்தி வாசிக்க அது நேரடியாக ஒளிபரப்பானது. அந்த நொடிப்பொழுது என் வாழ்க்கையை முழுமையாக்கியது. முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் நான்தான் என்பது எனக்கே புது விஷயம்தான் என சிரிப்பைச் சிந்தினார் பத்மினி.
பத்மினியைப் பற்றி பல்வேறு அச்சு ஊடகங்களிலும், ஆன்லைன் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். அவரது நம்பிக்கையை, சாதனையை யுவர் ஸ்டோரியும் மனம் உவந்து பாராட்டுகிறது.
திருநங்கைகளை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு நீங்கள் கூற விரும்புவது?
இது ஒரு நல்ல கேள்வி. அன்று என் தந்தை வார்த்தையாலும், பிரம்பாலும் என்னைத் தாக்கி புறக்கணிக்காமல் இருந்திருந்தால்? என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி என்னுள் இன்றும் இருக்கிறது. எனவே, பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இவன் என் மகன், இவள் என் மகள் என பெருமைப்படும் நீங்கள் என் இந்தக் குழந்தை திருநங்கை என்ற அங்கீகாரத்தை தாருங்கள். ஒதுக்குதலும், புறக்கணிப்பும் இன்றி மற்ற குழந்தைகளைப் போலவே தரமான கல்வியையும், பாதுகாப்புடன் கூடிய ஆதரவையும் வழங்க வேண்டும்”.
உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எது? மிகவும் வேதனையளித்தத் தருணம் எது?
என்னைப் போன்றோரை, இந்த சமூகம் மனித இனமாகக் கூட ஏற்றுக்கொள்ளாதபோது ஒரு பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தருணமே மகிழ்ச்சியான தருணம்.
நான் வாழவே தகுதியில்லை என பெற்ற தந்தையே என்னை வீட்டை விட்டு வீதியில் நிறுத்தியது என்னை வேதனைக்குத் தள்ளிய தருணம். நான் இந்த உலகில் வாழ தகுதியற்றவள் என்பதை நிர்ணயிப்பது யார்?
உங்களைப் போன்ற சக திருநங்கைகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
ஒவ்வொரு திருநங்கைக்கும் கல்வி மிக அவசியம். பிச்சை புகினும் கற்கை நன்றே. கல்வியுடன் உங்களது தனிதன்மையை கண்டுகொண்டு அதையும் வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்ளுங்கள். கவுரவமாக வாழ வாய்ப்பை தேடுங்கள் அல்லது வாய்ப்பை சுயமாக உருவாக்கிக்கொள்ளுங்கள். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்களாக இருப்பார்கள் அல்லது கைத்தட்டி பிச்சையெடுப்பார்கள் என்ற சமூகப் பார்வை மாற வேண்டும்.
நானும் அப்படித்தான் என் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தது. அதனால், நானும் சில சிறுகதைகளை எழுதினேன். என் கவனத்தை ஆக்கப்பூர்வமாக செலுத்தினேன். எனது சில சிறுகதைகள் பிரசுரமாகின.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லிப் டிவியில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரான பத்மினி பிரகாஷ் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
பத்மினி ஓர் அடையாளம். முகம் தொலைந்துவிட்டதாக கதறும் திருநங்கைகளுக்கு நல்லதொரு முன் உதாரணம்.
அரசாங்கத்திடம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் சில..
என்னைப் போன்றோர் சார்பில் நான் இந்த அரசுக்கு 5 கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
1. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண், பெண் பாலரை போலவே திருநங்கைகளுக்கும் ஓர் இடம் வேண்டும்.
2. திருநங்கை என்று தெரிந்த பிறகும் பாகுபாடின்றி தொடர்ந்து பள்ளிகளில் கல்வி கற்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
3. மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கும் பிரத்யேக சிகச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும்.
4. சமூகத்திற்கு திருநங்கைகள் பற்றிய புரிதல், விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவி செய்ய வேண்டும்.
5. அரசு அலுவகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர உதவி செய்ய வேண்டும்.
தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துகொண்ட பத்மினி, யுவர்ஸ்டோரி வழியாக ஒரு சேதி சொல்ல விரும்புகிறார். எங்களைப் புரிந்துகொள்ளுங்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண், பெண் போல் திருநங்கைகளையும் ஏற்றுக்கொள்வதில் சமூகம் தயக்கம் காட்டக்கூடாது என்பது செய்திகள் வாசிக்கும் பத்மினி பிரகாஷ் சொல்லும் சேதி.