– ஆதிலட்சுமி.
வலிகளும் வேதனைகளும் புரியாத நீ
எத்தனை வார்த்தைகளையும் உமிழ்ந்துசெல்
அந்த வார்த்தைகளின் நெடியிலிருந்து உன்
நெஞ்சிலுள்ள நஞ்சின் அளவறிகிறேன் நான்.
பெருநெருப்பை அள்ளி என் முற்றத்தில்
புகையவிட்டுச் செல்
பெருமையுடன் நான் சுவாசித்துக்கொள்கிறேன்.
முட்செடிகளை இழுத்துவந்து என்
நடைபாதையெங்கும் விதைத்துச் செல்
இரத்தம் சொட்ட நான் நடந்துசெல்கிறேன்.
கந்தகத்தை காவிவந்தென் மூச்சுக்
காற்றினிலே கலந்துவிடு…
கர்ப்பூரமாய் அதனை முகர்ந்துகொள்கிறேன்.
வேற்றுக் கிரகவாசிகளை அழைத்துவந்து
வீட்டருகே நிறுத்திவை.
நெஞ்சுநிமிர்த்தியபடி கடந்துபோகிறேன்.
உன் பாவங்களை மூட்டையாக்கி என்
முதுகில் ஏற்றிவிடு.
ஒரு கழுதையின் நன்றியோடு
சுமந்துசெல்கிறேன்…..
உணவருந்தும் வேளைகளில் என் சோற்றில்
உப்பைக் கலந்துவிடு.
உள்ளளவும் உன்னை நினைந்திருப்பேன்.
அருவெறுப்பூட்டும் அசிங்கமெனினும்
அள்ளிவந்தென் முகத்தில் எறி.
அதனையும் கூட நான் தாங்கிக்கொள்கிறேன்.
ஆயிரங்கைகளை அணிசேர்த்து
வந்தென்முன் முறைத்து நில்.
அதற்கும் நான் அமைதிகாக்கின்றேன்.
ஏனென்றால் நான் பேதங்கள் அற்றவள்.
வலிகள் அறியா உனக்காகவும் தான்
என் உயிர்சுமந்து நிற்கின்றேன்.