மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

 —இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம் (http://www.visai.in)

பிரித்திகா

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்கள் இருத்தலுக்காக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள்; திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களே.தமிழ்ச் சமுகத்தில் நூற்றாண்டு காலமாக நடைபெறும் சமுக நீதிக்கான போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அவ்வப்பொழுது நம்பிக்கை ஊட்டும் சில வெற்றிகளையும் அடைகின்றது. அப்படியான வெற்றி தான் அண்மையில் மெட்ராசு உயர்நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக சேரத் தகுதியானவர்; அவருக்கு அப்பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதே அந்தத் தீர்ப்பு.

பிரித்திகா

இந்த உத்தரவிற்கு முன்னதாக பிரித்திகா தனது எழுத்து தேர்வுக்கு இசைவு பெற்றது; உடல் தகுதி தேர்வை கடந்தது; பணிக்கான நேர்காணலில் பங்கெடுத்தது என அனைத்தையும் வழக்கு தொடுத்தே சாத்தியமாக்கியுள்ளார். காரணம்; மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய தேர்வு விதிமுறைகள் எந்த தேர்வாணையத்திடமும் இதுவரை இல்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு – 4 தேர்வு எழுத திருநங்கை சுவப்னாவும் நீதிமன்ற உதவியுடனயே வெற்றி பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

தமிழகத்தில் அரசின் கணக்கெடுப்பின் படி மூன்றாம் பாலினத்தவர்கள் ஏறக்குறைய 30;000 மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.

திருநங்கைகளின் பல்வேறு கட்ட உரிமைப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு “திருநங்கைகள் நலவாரியத்தை” நிறுவியது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தாவர்களாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இவர்களை சமுகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் கடவுச்சீட்டு உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவை முன்வைத்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றினார்.

வாரியங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என அறிவுப்புகள் வந்தாலும் அரசுகள் இதுவரை இவர்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கவோ, தேர்வுகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கான விதிமுறைகளை வகுக்கவோ இன்னும் தொடங்கவில்லை. இதுவே பிரித்திகா, சுவப்னா போன்றவர்கள் நடைமுறை விதிகளை கடைபிடிக்கக் கூட நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவலநிலைக்கு வழிவகுத்துள்ளது. இவர்கள் காவல் நிலையத்திற்கு நீதி கோரி செல்லவே அச்சப்படும் சூழலே இன்றும் நிலவுகின்றது.

மூன்றாம் பாலினத்தவர்கள் என்றாலே பிச்சை எடுப்பவர்கள்இ பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், கேலிக்கானவர்கள் என சமுகத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான கருத்தை மாற்றுவதற்கு பிரித்திகா போன்றவர்களின் உழைப்பும் வெற்றிகளும் போராட்டக் கருவிகளாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை வெகு மக்கள் ஊடகங்களிலும் குறிப்பாக திரைப்படங்களிலும் மூன்றாம் பாலினத்தவர்களை கேலிக்கானவர்கள் என பரப்பும் சமூகப் பொறுப்பற்ற இழிநிலையுமே தொடர்கின்றது. பொது வெளியில் பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வை வளர்ப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.

நீதிமன்றம் சென்று போராடி தங்களுக்கான உரிமைகளை ஒருசிலர் வெல்வது நம்பிக்கை அளித்தாலும், அனைத்து மூன்றாம் பாலின மக்களும் பயன்பெரும் வகையில் தமிழக அரசு இவர்களுக்கான உரிமைகளை சட்டங்கள் மூலம் உடனடியாக நடைமுறைப் படுத்துவதே சமத்துவத்திற்கான நீண்ட பயணத்தின் உறுதியான முதல் படியாக அமையும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *