வி.பு பெண்கள் பற்றிய தமிழரின் கூற்று வி.பு களின் ஆயுதப்போராட்டம் என்ற அம்சத்தின் மேலாதிக்கத்தினுள் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு கிடக்கிறது. வி.பு பெண்களில் ஒருவரான மலைமகளின் வார்த்தைகள் இபிரதிபலிக்கிறது,
“மரபுகளை உடைத்தல் தடைகளைத் தாண்டி எல்லையற்ற வெளியல் உலவுதல் சிறுவயதிலிருந்தே எனது இயல்பு. விதிமுறைகளை நான் மீறியபோது விளைந்த பயிர்களின் தொகுப்பே என் எழுத்து. …… நடைமுறை வாழ்வியல் அசைவியக்கத்தின் அச்சணியாகப் பெண்கள் இருக்கின்ற போதும் அவர்கள் கௌரவிக்கப்படுவதில்லை. அவர்களின் இயல்பு மதிக்கப்படுவதில்லை என்ற கோபம் எனக்கு நிறையவே உண்டு. பெண்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக, விளைவை ஏற்படுத்தவல்ல செயல்களைச் செய்துவிட்டும் பேசாதிருப்பவர்கள் என்பதற்காக, நாலா திசையும் விரிந்து பரந்திருக்கும் தமிழீழப் போரரங்கில் ஓய்வெடுக்கவும் நேரமின்றி இப்போதும் விழித்திருக்கும் என் தோழிகள் பேசப்படாதவர்களாக போய்விடுவார்களோ என்ற பயத்தினாலேயே நான் எழுத முனைந்தேன்.” –மலைமகள் –
தலைமுறை தலைமுறையாகவே என் புத்திக்கூர்மையும், ஆளுமையும் கடத்தப்படுவதாக என்னுள் உணர்கிறேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக்கூடிய ஆற்றலுடன்தான் இருந்துவருகிறேன். எந்தப் பெரிய நிர்வாகத்தையும் சிக்கலின்றி இயக்கக்கூடிய ஆளுமை பண்டுதொட்டு என்னிடம் இருந்து வருகிறது. ஆனால், என் புத்திசாலித்தனத்தை சந்திக்காமல், தம் அதிகாரத்தால் என்னை அடக்க முனையும் மனிதர்களே இந்த உலகில் பெரும் எண்ணிக்கையில் என் கண் முன்னே உலவுகிறார்கள். எனக்கு இருக்கும் ஒரே ஒரு மனவருத்தம் என்னவென்றால், என்னுடைய புத்திசாலித்தனத்தை, ஆளுமையை மதித்து கௌரவிக்கக்கூடிய, உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடிய மனிதர்களைப் பெரும்பாலும் காணமுடிவதில்லை என்பதுதான். தாய்வழிச் சமுதாயம் அழிந்த நாள் முதலாய் நான் அவர்களை, அந்த நல்ல மனிதர்களை தேடியலைகிறேன். இன்னும் தான் அவர்களைச் சந்திக்கவில்லை.
நான் காணுகின்ற மனிதர்கள் என்னைத் தம் அதிகதரத்தால் அடக்க முயல்கின்றனர். அல்லது அன்பு என்னும் போர்வையில் கட்டுப்போட்டு முடக்க முயல்கின்றனர். இரண்டு வழிகளுமே சரிவராத நிலையில் எனக்கு ‘அடங்காப்பிடாரி’, ‘ஒரு மாதிரி’, என்று பட்டங்களைச் சூட்டிவிட்டு விலகி நின்று வீண் விமர்சனம் செய்து என்னை மழுங்கடிக்க முயல்கின்றனர். நான் தம்மை விட ஒரு படியேனும் குறைந்தவளாக இருக்க மாட்டேனா என்ற ஆதங்கம் அவர்களிடம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நாலுபேருக்கு முன்னால் என்னை அறிவுபூர்வமானவள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. என்னைவிட தாங்களே அறிவுபூர்வமானவர்கள், ஆளுமையானவர்கள் என்று நாலுபேரிடம் காட்டிக்கொள்ள முயலும்போது, நான் ஒன்றும் தெரியாதவள் போல் இருந்துவிட்டால் அதில்தான் அவர்களுக்கு எத்துணை மனநிறைவு?! தம்மைவிட பெண் மேலானவள், அறிவு கொண்டவள் என்பது எங்கேனும் வெளிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு உண்டாகும் கொதிப்புத்தான் எத்துணை? அப்படியான நேரங்களில் அவர்களுக்கு முடியுமானால் என்னைக் கொன்றே விடுவார்கள். இவர்களுடன் நான் எப்படி கைகுலுக்க?
இப்படித்தான் ஒருமுறை பாஞ்சாலபுரத்தில் ஜனகனின் மகாசபையில் பிரம்மவாதியான யக்ஞவல்கியனுடன் பிரம்மம்பற்றிக் கருத்தாடல் செய்யச் சென்றிருந்தேன். யக்ஞவல்கியனால் என்னைக் கருத்தாடலில் வெல்ல முடியவில்லை. பிரம்மம்பற்றிய என் கேள்வியினால் திணறிப்போன யக்ஞவல்கியன், ‘நிறுத்து கார்க்கி, இதற்கு மேல் கேள்வி கேட்டால் உன் தலை அறுந்து விழும்’ என்று அந்த மகாசபையில் கூடியிருந்த அத்துணை அறிஞர்கள் முன்னிலையில் நாகரிகமேயில்லாமல் கத்திக்கூச்சலிட்டுத்தான் அந்தக் கருத்தாடலை நிறுத்த முடிந்ததே தவிர, என் அறிவோடு தன் அறிவால் மோதியல்ல.
பின்னொரு நாளில் இன்னொரு சம்பவம் நடந்தது. சோழ மண்டலத்தில் கம்பன் என்னைத் தன் கவியால் மட்டம் தட்ட முயன்று என்னிடம் மூக்குடைபட்டான். எப்படியாவது என்னை ‘எடி’ போட்டு மட்டம்தட்ட விரும்பிய கம்பன் ‘காலடி நாலிலைப் பந்தலடி’ என்று நொடி போட்டான். ஒரு தண்டிலே நான்கே இலைகள் மட்டும் கொண்டிருக்கும் ஆரை என்ற கீரையைப் பற்றியதே நொடி. என்னை ‘எடி’ போடவே கம்பன் நொடி போட்டான். விட்டேனா நான்?
‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல் கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அடா’
(அவலட்சணமே, எருமைமாடே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே நீ கேட்டது ஆரை என்ற கீரையை அடா) என்று பதில் கொடுத்து மடக்கினேன். கவிச்சக்கரவர்த்தியே ஆனாலும் ஒரு பெண்ணை மட்டம் தட்டித்தான் தன் புலமையை காட்ட நினைத்த கம்பனை வேறு எவ்வாறு நான் அணுகியிருக்க முடியும்?
வேறொரு நாளில் சால்வனும் என் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தியதை இன்னும் எத்தனையோ தலைமுறை கடந்தாலும் மறக்க முடியுமா என்னால்…?
சாளுவ மன்னம் சால்வனுடன் மனதால் ஒன்றியிருந்த என்னை சுயம்வர நாளன்று சுயம்வர மண்டபத்திலிருந்து என் சகோதரிகள் இருவருடன் சேர்த்து தன் தம்பி திருதராட்டினனுக்கு மணம் முடித்துக் கொடுப்பதற்காக தூக்கிச் சென்றான் பீஷ;மன். அத்தினாபுரத்திலிருந்த அவனது அரண்மனைக்கு கொண்டு சென்ற பின் நான் என் மனதில் இருந்ததை பீஷ;மனிடம் தெரிவித்தேன். அவன் என்னை சால்வனிடம் அனுப்பினான். சுயம்வர மண்டபத்துக்கு வந்திருந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியிருந்த சால்வனோ.
‘பீஷ;மனால் தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணை என்னால் மணம் செய்ய முடியாது. நீ பீஷ;மனிடம் போ அம்பை’ எனத் திருப்பியனுப்பிவிட்டான். மீண்டும் பீஷ;மனிடம் வந்து அவன் தம்பி திருதராட்டினனுக்கு என்னை மணம் செய்து வைக்குமாறு கேட்க, ‘இன்னொருவரை மனதால் நினைத்த உன்னை என் தம்பிக்கு மணம் செய்து கொடுக்க முயாது. நீ சால்வனிடம் போ’ என பீஷ;மன் திருப்பியனுப்ப, மீண்டும் சால்வனால் மறுக்கப்பட்டு பீஷ;மனிடம் திரும்பி வந்து ‘உங்களால்தான் இந்த நிலைமை வந்தது. நீங்களே என்னை மணம் செய்யுங்கள்’ என்று கேட்க அவன் மறுத்துவிட்டான். நான் என்ன குப்பையா இப்படிச் சால்வனாலும் பீஷ;மனாலும் மாறி மாறித் தூக்கி வீசி எறியப்பட?
நான் ஒரு பெண். உடலும் உயிரும் உணர்வும் கொண்ட மனித உயிர். என் இளமை உணர்வுகளைத் தூண்டியவன் சால்வன். கேட்டுக்கேள்வி இல்லாமல் தூக்கிச் சென்றவன் பீஷ;மன். தன்னுடன் மனதால் ஒன்றிய என்னை பீஷ;மன் தூக்கிச் சென்றான் என்று காரணம் சொல்லி மறுத்தான் சால்வன். தன்னால் தூக்கிச் செல்லப்பட்ட என்னை வேறொருவனை விரும்பினேன் என்று காரணம் சொல்லி மறுத்தான் பீஷ;மன். அவன் பிரம்மச்சாரிய விரதம் கடைப்பிடித்தது வேறு விடயம். ஒரு பிரம்மச்சாரி ஏன் என் வாழ்வில் தலையிட வேண்டும்?
இந்த இருவரில் ஒருவராவது எனக்கு மனம், விருப்பு, வெறுப்பு, உணர்வு இருக்கும் என்பதை சிறிதும் புரிந்து கொள்ள முயன்றார்களா? எனக்குத் தெரியும் சால்வன் என்னை மறுத்தது பீஷ;மன் என்னைத் தூக்கிச்சென்றான் என்பதற்காக மட்டுமல்ல, அவனது அரண்மனையில் நின்றபோது என் ஒழுக்கம் மாறுபட்டிருக்கக் கூடுமோ என்ற ஐயத்தால்தான் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவு முட்டாளா நான்?
தன்னிலேயே நம்பிக்கை இல்லாத சால்வனிடம் மனதைக் கொடுத்தது என் தவறுதான். ஆனால் இந்த பீஷ;மன் கடையிலே ஒரு பொருளை வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய்க் காட்டி, பிடிக்கவில்லை என்பதும் திருப்பிக் கொடுப்பதும் போலல்லவா என் வாழ்வுடன் விளையாடினான். ஒரு பட்டாம் பூச்சிபோல் விளையாடித் திரிந்த என்னை, சிட்டுக்குருவிபோல் கட்டற்று பறந்த என் சிறகுகளை ஒடித்து என்னைக் காயப்படுத்தியதும் அல்லாமல் காயத்துக்கு மருந்து போட மறுத்த அவன் மிருகத்தனத்தை என்னவென்று சொல்ல?
எவனோ ஒருவனின் கதையைக் கேட்டு என்னில் ஐயுற்ற இராமன், வேடம் புனைந்து வந்து என்னை ஏமாற்றிய இந்திரன், தானும் இந்திரனிடம் ஏமாந்துவிட்டுத் தன் ஆற்றாமையால் என்னில் சினந்த கௌதமன்… இப்படி இவர்கள்போல் இன்னும் எத்தனையோ பேரை நான் காலம் காலமாக கண்டு வருகின்றேன். இது போன்றவர்களிடம் இன்னும் ஏமாந்து போக நான் என்ன மூளையே அற்றவளா?
என்னை அறிவால் மடக்குவதில் தோற்று, பின் என் உணர்வுகளை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி என்னை ஏறி மிதித்த இவர்கள் இப்போது என்னவென்றால் என் உரிமைக்காக தாம் குரல்(?) எழுப்பப் போகிறார்களாம். என் விடுதலைக்காக தாம் வழியமைக்கப் போகிறார்களாம். என்னை தம் பின்னால் வரட்டாம். எப்படியிருக்கிறது?
அடப்போடா பைத்தியக்காரா! அன்றொரு நாள் ஜனகனின் மகாசபையில் ‘உன் தலை அறுந்து விழும்’ என்று நீ கத்தினதயே. அன்றே நான் உன்னை நன்றாக அறிந்து கொண்டேன். நான் நடக்கும் போது பாதையை நீ தீர்மானிக்கத் தேவையில்லை. என் வழியில் நீ குறுக்கே பாய்ந்து விழாமல், விலகி நடப்பாயானால் அதுவே போதும். என் வழி எனக்குத் தெரியும். அதற்காக, இந்த உலகம் உள்ள வரையும் நீயும், நானும் தனித்தனி வழிகளில்தான் பயணம் என்று உன்னை நான் தள்ளி வைக்கவும் இல்லை. என் பாதை உனக்குத் தடை செய்யப்படவும் இல்லை.
என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, என் திறமைக்கு மதிப்பளித்து என் ஆளுமையை கௌரவிக்கக்கூடிய மனிதர்கள் என்னோடு என் வழியில் எப்போதும் நடக்கலாம். என்னுடன் கைகோர்த்து நடக்க நீ தயாரானால், என் பாதையில் வரலாம். என் கைகளைப் பிணைத்துக் கட்டி, உன் பின்னால் என்னை இழுத்துத்தான் திரிவாயானால், நீ உன் பாதையிலே போ. நான் என் சிறகுகளை அகல விரித்து பறக்கத் தொடங்கி நீண்ட நாட்களாயிற்று. மண்ணிலே உள்ள கூண்டு, பொன்னால் ஆனதாக இருந்தாலும், இனி அதற்குள் நான் வந்தமரப்போவதில்லை. இந்நத மண்ணிலே எத்துணை பசிய புல்வெளிகளும், பச்சை மரங்களும், ஆற்றோரங்களும், கடற்கரைகளும் உள்ளன நான் இறங்கி இளைப்பாற. ஆனால் என் மனதின் கதவுகள் நல்ல மனிதர்களின் வருகைக்காக அகலத் திந்தபடியேதான் உள்ளன.
(சரிநிகர், அக்டோபர் 14-27, 1999, மறுபதிப்பு “மலைமகள் கதைகள்” – சிறுகதை தொகுப்பு, கப்டன் வானதி வெளியீட்டகம் – வி.பு மகளரிர் பிரிவு, 2004)