“நீட்சி” பெறும் சொற்கள் -லறீனா அப்துல் ஹக்.-நேர்காணல்

 தினக்குரல்,பூங்காவனம் ஆகியவற்றில் வந்த நேர்காணல் 

lareena 4lareena 3அதாவது, காலங்காலமாக கவிதை என்ற வடிவம் மனித மனதின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் மிகக் காத்திரமானதும் வாலாயமானதுமான ஓர் ஊடகமாகவே இயங்கிவருகிறது. காலந்தோறும் மொழிகளில் எல்லாம் இன்பத்தைப் போலவே துன்பத்தைப் பாடவும் கவிதையே களமாய் இருந்துவருகிறது. சங்க காலம் முதல் இதனை நாம் காணலாம். அவ்வாறு துயர்தோய்ந்த உணர்வு வெளிப்பாட்டை வெற்றுப் புலம்பலாகவும் ஒப்பாரியாகவும் கொள்வதானால், அகத்திணைசார் முல்லைநில, பாலைநில மற்றும் நெய்தல் நிலப்பாடல்கள் சொல்லும் இருத்தல் மற்றும் இரங்கற் பாடல்களையும், பிரிதற் பாடல்களையும்கூட நாம் புறந்தள்ள வேண்டியதிருக்கும். அப்படி யாரும் புறந்தள்ளவில்லை. மாறாக, அன்றைய மக்களின் வாழ்வியலையும் மனவுணர்வுகளையும் படம்பிடித்துக்காட்டும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவை இன்றும் போற்றப்படுகின்றன.

*********************************************************

 என்னுடைய முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா. மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் 30க்கும் அதிகமான தொடர்கதைகளை எழுதியுள்ளார். ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் பங்குபற்றி எப்போதும் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு வருவார். நல்ல இனிய குரல்வளம் அவருக்கு. அவரைப் பின்பற்றி, என்னுடைய 9 வயதில் பிரபல அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தயாரித்தளித்த ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டியில் நானும் பங்குபற்றி இரண்டாம் பரிசு பெற்றமை ஓர் இனிய ஞாபகம்தான். அவ்வாறே, ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சை தமிழ் வினாப்பத்திரத்தில் எழுதிய கதைதான் என்னுடைய முதல் கதையாகும். 12 வயதில் நான் எழுதிய “ஓ! பஸ்ஸே!” என்ற கவிதை பிற்காலத்தில் வீரகேசரியில் பிரசுரமானது. இதுவே பத்திரிகையில் பிரசுரமான எனது முதலாவது படைப்பாகும். மேலும் தமிழ்மொழித்தினம், சிங்கள மற்றும் ஆங்கில மொழித்தினப் போட்டிகள், மீலாத் விழாப்போட்டிகள் மற்றும் கலைவிழாக்கள் என் கலை மற்றும் எழுத்தாற்றல் வளரக் களம் அமைத்துத் தந்தன.

என்னுடைய தந்தை கலகெதர எம். எம். அப்துல் ஹக் பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினாலும், சிங்கள சினிமாத்துறையின் பிரபல இசையமைப்பாளராகவும் இருந்தவர். ‘சுஜீவா’, ‘சுனேத்ரா’, ‘சூகிரி கெல்ல’, ‘கீதா’, ‘ஒபய் மமய்’ என்பன அவர் இசையமைத்த திரைப்படங்கள். ஜோதிபாலவின் விருதுபெற்ற பிரபல பாடலான ‘சந்தன எல்லென் நாலா’ பாடல் என்னுடைய தந்தையின் இசையமைப்பில் உருவானதுதான். என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஓர் இந்தியர். திருநெல்வேலிக்காரர். சித்த வைத்தியராய் இருந்த அவர், கர்நாடக சங்கீதத்தில் குறிப்பிடத்தக்க பயிற்சி உடையவராய் இருந்தவர். அவருடைய கம்பீரக் குரலில், ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக்களஞ்சியமே!’ என்ற பாரதி பாடலைக் கேட்டு அனுபவிப்பது ஒரு சுகானுபவம்தான். இந்தப் பின்னணியும் நான் கல்விகற்ற மாத்தளை ஆமீனா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் ஊக்குவிப்புமே என்னை எழுத்து மற்றும் கலைத்துறைகளில் ஈடுபடுத்தின எனலாம்.

?.இதுவரை வெளியிட்ட புத்தகங்கள்/ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்?

01. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத் தொகுதி) – 2003
02. வீசுக புயலே! (கவிதைத் தொகுதி) – 2003
03. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003
04. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
05. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004
06. மௌனத்தின் ஓசைகள் – மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
07. வார்த்தைகளின் வலி தெரியாமல்… – சமூகவியல் கட்டுரைகள் 2012
08. ‘பொருள் வெளி’ ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012
09. நீட்சிபெறும் சொற்கள் – கட்டுரைத்தொகுதி 2015
10. சுயமி – மெல்லிசைப் பாடல்கள் இறுவட்டு

இவை தவிர, ‘நம் அயலவர்கள்’ எனும் சிறுகதைத் தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், ‘அசல் வெசி அப்பி’ எனும் சிங்களச் சிறுகதைத் தொகுதிக்காக ரஞ்சகுமாரின் ‘கோளறு பதிகம்’ சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்களமொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழிமாற்றம் செய்துள்ளேன். நான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள ஹிஸ்ஸல்லே தம்மரத்தினத் தேரரின் ‘சிங்கள மொழியில் தமிழ்மொழியின் செல்வாக்கு’, மார்ட்டின் விக்ரமசிங்கவின் ‘கம்பெரலிய”, மஞ்சுள வெடிவர்தனவின் “பத்தலங்குண்டுவ”‘ எனும் சிங்கள நூல்களின் செவ்வையாக்கத்தில் ஈடுபட்டு வருகிறேன். அது முடிந்ததும் விரைவில் நூல்களைச் வெளியிடும் உத்தேசம் உண்டு. http://nilapenn.com/ என்பது என்னுடைய இணையதளமாகும்.

 

?.  உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்

ஆய்வு
————
இலங்கைத் தமிழ் இலக்கியப் பேரவையின் விருது

நூல்: பொருள்வெளி

சிறுகதை

—————-
வீரகேசரி பவளவிழா சிறுகதைப் போட்டி (2005) 3ஆம் பரிசு

சிறுகதை: வேரில் வைத்த தீ
அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின சிறுகதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2ஆம் பரிசு

சிறுகதை: எருமை மாடும் துளசிச் செடியும்

அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (2010)

சிறுகதை: எனக்கான ‘வெளி’
கவிதை
————–
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000)

அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின கவிதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2ஆம் பரிசு

பாடல்:
———–
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 3ஆம் பரிசு (1993,1995)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1992)

சிறுவர் இலக்கியம்
———————————-
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2ஆம் பரிசு (2003)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1994)

நாடகம்
—————
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப் போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998)

நாடகம்: இதுவரை இவர்கள்…

கட்டுரை:
—————–
“நமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்” என்ற தலைப்பில் “பாலைவனத்தூது” வலைதளம்
நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.

பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு)
—————————————————————————————
பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப் போட்டிகள்: 3ஆம் பரிசு (1999)

* வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச மகளிர் தினவிழாவில், ‘பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்’ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

 

?.  உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

lareena 3நான் மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றேன். என்னைப் பாலூட்டி வளர்த்தவர் என் அன்னை எனில், என்னைச் சீராட்டி வளர்த்த கலைத்தாய் மாத்தளை ஆமினா. எனது கல்விக்கு மட்டுமின்றி, எனக்குள் மறைந்திருந்த திறமைகளை இனங்கண்டு வளர்த்துவிட்டவர்கள் ஆமினாவின் ஆசிரியர்களும் அதிபருமே என்பதை நன்றியோடு

நினைவுகூர்கின்றேன். அதனால்தான் நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய மெல்லிசைப்பாடல் இறுவட்டினை “மா/ஆமினா மகளிர் கல்லூரியின் நினைவுகளுக்கு”ச் சமர்ப்பித்துள்ளேன். வறுமையில் உழன்ற காலத்தே என் ஆசிரியர்களில் அனேகமானவர்கள் என்னைக் கனிவோடு நடத்தி, பெரும் பக்கபலமாக இருந்தார்கள். திருமதி வஜீஹா மக்கீன், திருமதி ஆயிஷா இஸ்ஸதீன் ஆகிய ஆசிரியைகள் விஞ்ஞான, கணித பாடங்களில் நாம் அனைவருமே சித்தியடைய வேண்டும் என்ற தணியாத ஆவலினால் பாடசாலை விட்டு முற்றிலும் இலவசமாக மேலதிக வகுப்புகளை வைப்பார்கள். ஏனைய ஆசிரியர்களும் நம் கல்வி முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையோடு உழைத்தார்கள். ஆக, அந்த அர்ப்பணிப்பு உணர்வினை நாம் அவர்களிடமிருந்தே பெற்றோம்.

மேலும், திறமைக்கு முதலிடம் அளித்து மாணவத் தலைவியராய் பணிகளை நம்மிடம் ஒப்படைத்ததன் அடியாய் கடமையுணர்வை, பொறுப்புணர்வை வளர்த்துக்கொண்டோம். கூடைப்பந்தாட்டம், ஒட்டப்பந்தயம், உயரம் பாய்தல், தூரம் பாய்தல் முதலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் அக்கல்லூரி நமக்கு அளித்ததன் விளைவாய் தோல்விகளைக் கண்டு துவளாத மனோதிடமும், தன்னம்பிக்கை உணர்வும், தொடர்ந்து போராடும் தன்முனைப்பும் நம்மிடம் ஊன்றி வளர்ந்தன எனலாம். அந்தவகையில் ஆமினாவில் இருந்து உருவாகிப் கல்வி, மருத்துவம், பொறியியல் முதலான பல்வேறு துறைகளில் ஒளிவீசும் பல மாணவிகளை நாம் கண்டுகொள்ள முடியும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றபின் தமிழ்த்துறையில் இரண்டு வருடங்களும், மும்மொழித்துறைகளும் இணைந்து நெறிப்படுத்திய மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சுமார் நான்கு வருடங்களும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது சிங்களத்துறையில் வருகைநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றேன்.

?. உங்களது இலக்கியப் படைப்பில் சிறப்பெனக் கருதுவது எதை?

அப்படி ஒரு படைப்பை இனித்தான் தரவேண்டும் என நினைக்கிறேன். இதுவரை எழுதிய எதுவுமே எனக்குப் பூரண திருப்தியைத் தரவே இல்லை என்பதே உண்மை. அந்த விஷயத்தில் என் உள்ளம் நிரம்பாத வெற்றுக் குவளையாகவே இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ், இனியேனும்… என்ற நம்பிக்கையோடு முன்னகர்ந்தபடி இருக்கின்றேன்.

?. சமகாலத்து ஈழத்து இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பீடு என்ன?

அவ்வாறு கணிப்பிடும் அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. ஆனால், இலக்கியத் துறையில் ஒப்பீட்டளவில் முன்னரிலும் பார்க்க பெண்களின் பங்குபற்றுதல் அதிகரித்து வருவது மன மகிழ்ச்சி தருகின்றது.

?. மரபு ரீதியாக கவர்ந்த இலக்கியம், புதுமையாக கவர்ந்த இலக்கியம் விளக்க முடியுமா?

சங்க இலக்கியங்கள் தொட்டு நவீன இலக்கியம் வரை பலதரப்பட்ட இலக்கியங்களையும் அவ்வவற்றுக்குரிய தனித்துவங்களை ஏற்று மதிப்பதால் தனிப்பட்டு ஒன்றிரண்டைச் சொல்வது அரிது எனக் கருதுகிறேன். என்றாலும், மிக அண்மையில் வாசித்த நூல்களுள் ரவிக்குமாரின் மழைமரம், தேன்மொழியின் நெற்குஞ்சம், தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, யோ. கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி, ஏபிஎம் இத்ரீஸின் புன்னகைக்கும் நபிகள், த. உருத்திராவின் ஆண்கோணி, பேராசிரியர் மௌனகுருவின் சார்வாகன் என்பன என்னை மிகவுமே கவர்ந்தன. இன்னும் நிறைய நூல்களை வாங்கி வைத்துள்ளேன். வாசிப்பதோடு அவைகுறித்து எழுதவும் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டு. இன்ஷா அல்லாஹ், பார்ப்போம்.

 

? .எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.

நிறைய உள்ளன. என்றாலும் ஒருசிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். மித்திரன் பத்திரிகையில் ஒரே காலகட்டத்தில் என்னுடைய தொடர்கதையும் என் தாயார் மாத்தளை ஃபர்வீனின் தொடர்கதையும் வெளிவந்தமை ஓர் இனிய அனுபவம். அவ்வாறே, என்னுடைய முதலாவது நூல் வெளியீட்டு விழா மறக்க முடியாத மற்றோர் அனுபவம். எனது முதல் சிறுகதைத் தொகுதியான “எருமை மாடும் துளசிச் செடியும்”, கவிதைத்தொகுதி “வீசுக புயலே!” இரண்டையும் ஒருமிக்க நான் கல்வி கற்ற மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியிலேயே வெளியிட்டதும், பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தமையும் என்றுமே மறக்க முடியாத இனிய நினைவு. விழாவை மிக விமரிசையாக ஒழுங்குசெய்த மாத்தளை இஸ்லாமிய இலக்கியப் பேரவைச் செயலாளர் பீர் முஹம்மது அவர்கள் என் நன்றிக்குரியவர். அடுத்து, கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் கையெழுத்துப் பிரதியான “இஸ்லாமியச் சரித்திரக் 

கதைகள்” எனும் கதைகூறும் கவிதைநூலினைப் பதிப்புக்கும் பொறுப்பினை ஏற்றமை என் வாழ்வின் மகத்தான ஒரு தருணம் எனக்கருதுகிறேன். மழையில் கரைந்த அவற்றின் சில பகுதிகளை மீட்டெடுப்பதில் எதிர்கொண்ட சவால்கள் மிகவும் சுவாரஷ்யமானவை. அவை குறித்து அந்நூலில் எழுதியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் அது வெகு விரைவில் வெளிவரும்.

?. சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல மாற்றங்களில் நீங்கள் எதை இலக்காகக் கொள்கிறீர்கள்?

மிகக் குறிப்பிட்டுச் சொல்வதானால், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் பரவலாக்கும் முனைப்பே எனக்குள் உள்ளது. அவ்வாறு பெரிதும் பெண்களின் பிரச்சினைகளைச் சுட்டி எழுதும்போது “மேற்கின் மூளைச் சலவைக்கு உட்பட்ட பெண்ணியவாதி” என்று முத்திரை குத்தி நம்மை ஓரம்கட்டும் முயற்சிகள் ஆங்காங்கே மேலெழுந்தபோதிலும், தளர்ந்து ஒதுங்கிவிடும் உத்தேசம் இல்லை, இன்ஷா அல்லாஹ். புரிந்துணர்வுள்ள பல சகோதர சகோதரிகள் எப்போதும் எனக்குப் பக்கபலமாக இருப்பது மிகவும் நிறைவைத் தருகின்றது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

?. இலங்கையில் வெளிவரும் கவிதைப் படைப்புகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

அவை மிகவும் காத்திரமாகவும் கூர்மையான சமூக விமர்சனங்களோடும் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாகப் பெண்கள் இத்துறையில் பெருமளவு பங்கேற்கிறார்கள். அது மிகுந்த மனநிறைவுக்குரிய ஒன்று. ஒருவிஷயத்தை இங்கு சிறப்பாகக் குறிப்பிட விழைகின்றேன். பெண்கள் தமது கவிதைகளை வெறுமனே புலம்பலாக, ஒப்பாரியாக முன்வைக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை சமூகத்தளத்தில் சிலர் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். தமிழிலக்கியம் உள்ளிட்டு உலகின் பிறமொழிக் கவிதை வரலாறு பற்றிய அடிப்படை அறிவற்ற சிலரின் இக்குற்றச்சாட்டு மிக இலகுவாகப் புறந்தள்ளக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்துக்களை சரியானது எனக்கருதும் பிறருக்காக ஒரு விளக்கத்தைச் சொல்லவேண்டியதிருக்கிறது.

அதாவது, காலங்காலமாக கவிதை என்ற வடிவம் மனித மனதின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் மிகக் காத்திரமானதும் வாலாயமானதுமான ஓர் ஊடகமாகவே இயங்கிவருகிறது. காலந்தோறும் மொழிகளில் எல்லாம் இன்பத்தைப் போலவே துன்பத்தைப் பாடவும் கவிதையே களமாய் இருந்துவருகிறது. சங்க காலம் முதல் இதனை நாம் காணலாம். அவ்வாறு துயர்தோய்ந்த உணர்வு வெளிப்பாட்டை வெற்றுப் புலம்பலாகவும் ஒப்பாரியாகவும் கொள்வதானால், அகத்திணைசார் முல்லைநில, பாலைநில மற்றும் நெய்தல் நிலப்பாடல்கள் சொல்லும் இருத்தல் மற்றும் இரங்கற் பாடல்களையும், பிரிதற் பாடல்களையும்கூட நாம் புறந்தள்ள வேண்டியதிருக்கும். அப்படி யாரும் புறந்தள்ளவில்லை. மாறாக, அன்றைய மக்களின் வாழ்வியலையும் மனவுணர்வுகளையும் படம்பிடித்துக்காட்டும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவை இன்றும் போற்றப்படுகின்றன.

அவ்வாறே, மிகப் பெரும்பாலான பெண்களின் கவிதைகளில் துயரும் வலியுமே அதிகம் மேலெழுகின்றன என்றுகொண்டால், அவற்றை அடியாகக் கொண்டு அவர்களினதும் சமூகத்தினதும் நிலைமை ஆராயப்படல் வேண்டும்; குடும்பத்திலும் சமூகத்திலும் வறுமை, வன்முறை மற்றும் போர் முதலான பல்வேறு காரணங்களின் விளைவாகப் பெரிதும் பாதிக்கப்படும் பெண்களின் துக்கமும் இழப்பும் இரங்கலும் கேலிக்குரியவை அல்ல; அவை சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றமே என்ற புரிதல் பரவலாக வேண்டும். ஏன் பெண்களில் மிகப்பெரும்பாலானோர் அவ்விதம் எழுதுகிறார்கள், அவர்களின் மன நெருக்கடிகளைக் கட்டமைக்கும் காரணிகள் எவை என்று சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுவதன் அடியாகவே அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி நாம் நகரமுடியும் என்பதே நிதர்சனம். மாறாக, அக்குரல்களை நையாண்டி செய்து, அவற்றை எழ முடியாமல் இருட்டடிப்புச் செய்வதும், அக்குரல்களை மானசீக நெருக்கடிகளைப் பிரயோகித்து முடக்கிப் போட முயற்சிப்பதுமான அணுகுமுறைகளின் பின்னால் உள்ள குரூர “அரசியல்” கண்டிக்கத்தக்கது.

?. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

நிறையப் பேர் இருப்பதால் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லை.

இன்று இலக்கியம் பரவலான தளத்தைச் சென்றடைவதற்கு மேற்கண்ட எல்லா வடிவங்களுமே பெரிதும் துணைநிற்கின்றன என்றால் மிகையில்லை. அதேவேளை, இணையப்பாவனையின் விளைவாகப் படைப்பாக்கங்கள் பெருகி உள்ளமை கவனிக்கத்தக்கது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால், தரமற்ற படைப்புகள் முதற் தடவையிலேயே எந்தத் திருத்தமோ மேற்பார்வையோ இன்றி

நேரடியாகவே பிரசுரமாவதால் தரமற்ற படைப்புகள் அதிகரித்துவருவதான குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை. அதேவேளை, பெண்களுக்கான படைப்பு வெளி இவற்றினூடே அதிகரித்திருப்பது மிக முக்கியமாகக் கவனங்கொள்ள வேண்டிய ஒன்று என்றே நினைக்கிறேன்.

புத்தகம் ஒன்றை வெளியிட ஆகும் செலவையும் சிரமங்களையும் அனுபவித்தவர்களுக்கு அதில் உள்ள சவால்கள் நன்கு தெரியும். ஆக, எழுத்தாற்றல் இருந்தாலும்கூட எல்லாப் பெண்களுக்கும் (ஆண்களுக்கும்தான்) தமது படைப்புகளை நூலுருவில் கொண்டுவரும் சாத்தியப்பாடு வாய்த்துவிடுவதில்லை. பெருங் கஷ்டப்பட்டு ஒன்றோ இரண்டோ நூல்களை வெளியிட்டாலும், விற்பனைசெய்து செய்த செலவை மீட்டெடுப்பதே குதிரைக் கொம்பாய் மாறிவிடும்போது ஒருகட்டத்தில் பின்வாங்கிவிடவும் நேர்கிறது. ஆனால், இணையவெளி அதற்கான மாற்றீடாய் அமைந்துள்ளது. தாம் நினைப்பதையும் எழுதுவதையும் சுதந்திரமாய் வெளிப்படுத்தும் பரந்த “வெளி”யினை இணையம் வழங்கி உள்ளது. முகநூலும் வலைப்பூக்களும் இணைய தளங்களும் மிக இலகுவான வெளியீட்டுத் தளமாக மாறியுள்ளமை அனேக பெண்களுக்கான “எழுத்துவெளி”யினை சாத்தியப்படுத்தி உள்ளது எனலாம். அதனை அவர்கள் முற்றுமுழுதாகக் காத்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா, இல்லையா என்பது அவரவரைப் பொறுத்த விடயம். அதேவேளை, பெரும் எழுத்தாளர்கள், முன்னோடிகளுடனும் சமமாகப் பழக, உரையாட, கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினையும் சமூக வலைதளங்கள் சாத்தியமாக்கி உள்ளமை ஆரோக்கியமான ஒருநிலைதான் என்பேன்.

? .தமிழ் இலக்கியத்தில் நீங்கள் அதிகம் ஆர்வம் காட்டும் துறை எது?

மொழிபெயர்ப்பும் ஆய்வும்

?. வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

எழுத்துத்துறையில் நானுமே இன்னும் வளர்ந்துவரும் நிலையிலேயே உள்ளேன். என்றாலும் எனக்கும், வயதில் என்னிலும் இளையவர்களுக்கும் கூறிக்கொள்ள விழைவது, நிறைய வாசிப்பும் தேடலும் இருந்தால்தான் காலத்தை வென்று நிற்கும் நல்ல பல படைப்புகளை உருவாக்க முடியும். கூடியவரையில் எழுத்து மற்றும் வசனப்பிழைகள் இன்றி எழுதும் பயிற்சியை அதிகரித்துக்கொள்ளுதல் நன்று.
15. நம் நாட்டில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் பற்றி என்ன கூறவிழைகிறீர்கள்?
சிங்கள – தமிழ், தமிழ் – சிங்கள மொழிபெயர்ப்புக்களைப் பொறுத்தவரையில் அவை இன்னுமின்னும் அதிகரிக்கப்படவும் செம்மைப்படுத்தப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். இதுவரையும் வந்துள்ள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் அனேகமானவை போர் மற்றும் போருக்குப் பின்னான நிலைமைகளை வெளிக்கொணரும் வகையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போரின் அவலங்கள் குறித்துச் சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்ற முனைப்பு தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் எழுத்தாளர்களின் துயரங்களை நாமும் விளங்கித்தான் உள்ளோம் என்ற உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் உந்துதல் சிங்கள எழுத்தாளரிடையேயும் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதில் ஐயமில்லை.

ஆனால், அதுமட்டுமா இச்சமூகங்களுக்கு இடையிலான அடிப்படைப் பிரச்சினை என்ற கேள்வி இங்கு முக்கியமானது. அந்தவகையில், நம் நாட்டின் எல்லாச் சமூகங்களும் தமது அன்றாட வாழ்வில் அனுபவித்துவரும் துயரங்கள், ஊழல்கள், அடக்குமுறைகள், சுரண்டல்கள் முதலானவற்றையும் பரஸ்பரம் மொழிபெயர்ப்புகள் வழியே ஊடுகடத்துவதன் மூலம், சாதாரணப் பொதுமக்களின் பிரச்சினைகளை, இன்னொரு வகையில் சொல்வதானால் வர்க்க ரீதியான பிரச்சினைகளின் பொதுமைத்தன்மையை பரஸ்பரம் உணரவும் உணர்த்தவும் கூடியதாக இருக்கும். இதனடியாக, எல்லாப் பேதங்களையும் தாண்டி மக்கள் வர்க்கரீதியாக ஒன்றிணைந்து அவற்றை எதிர்கொண்டு வெல்லவும், அதிகார வர்க்கத்தின் அநீதிகளுக்கு எதிராகக் கரம்கோத்துச்செயற்படவும்கூடிய உந்துதலைப் பெறவும்கூடியதாக இருக்கும், சமூகக்குழுமங்களுக்கு இடையே வன்மத்தைத்தூண்டித் துண்டாடித் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனையும் ஆதிக்கவர்க்கத்தின் தந்திரங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் பெற முடியும். ஆகவே, அவ்வாறு மக்களனைவரும் சகோதரரே, எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பல பொதுவானவையே என்பதை உணர்த்தும் படைப்புகளை நோக்கியே மொழிபெயர்ப்புக்கான கவனம் குவிமையம்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை ஆகும். அவ்வாறே, அச்சுக்குப் போகுமுன் மொழிபெயர்ப்புகளின் தரத்தினை உறுதிசெய்யத்தக்க அமைப்புரீதியான பொறிமுறையொன்றும் கட்டமைக்கப்படல் வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *