சர்மிதா நோர்வே
கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் உள்ளது உமோஜா கிராமம். கடந்த 1990ம் ஆண்டு 15 பெண்கள் கூட்டாக இணைந்து இந்தக் கிராமத்தில் வாழத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர்.பிரிட்டன் இராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் இந்த கிராமத்தின் தலைவியாக செயற்பட்டு வருகிறார்.
இப்படியும் வாழமுடியும் என்று பெண் இனத்துக்கு ஒரு புதிய பாதையை காட்டியிருக்கிறாள் இந்த கறுப்பின பெண் ரிபெக்கா லோலொசோளி.
இங்கு வாழும் பெண்கள் நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாகவும் தங்களின் வாழ்க்கை செலவினங்களை எதிர்கொள்கின்றனர். அடிமை போல நடத்தும் ஆண்களுக்கிடையே வாழும் பெண்கள் தமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர்களைப் போலன்றி தங்களது வாழ்க்கை சுதந்திரமானதாக அமைந்திருப்பதாக இந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிராமத்துக்குள் செல்ல ஆண்களுக்கு தடையேதும் இல்லை. எனினும், அவர்கள் இந்தப்பெண்களின் அனுமதியின்றி வெகுநாட்கள் தங்கியிருக்க முடியாது. பெண்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்பதால் அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள், அவ்வப்போது அத்துமீறி செயல்படுவதுண்டு. எனினும், அனைத்து தடைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, இந்த 247 பேரும் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
g