மாலதி மைத்ரி
முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட
பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும்
பிறப்பைச் சபித்து வெறுத்த
மகள்களின் கனவுப் பெருங்காட்டின்
ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள்
சூரியனைப் போல் பிரகாசித்தன
உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை
தொடுவானத்திற்கும் அப்பால் பயணித்தது
பின்கட்டுத்தளைகளின் கண்ணிகள் கழன்று
அடைபட்ட வாசல்கள் அரைவிழிப்பென திறந்தது கொண்டன
அச்சமற்ற வீதியில் நடந்து புழுதி கிளப்பிய
தெருவே அறியாத மென்பாதங்கள்
பல்கலையின் படிக்கட்டில் ஒய்வெடுத்தன
இலக்கை அடைந்து முற்றுகை தகர்த்து
கந்தக நெடியுடன் உருகருகிக் கரைந்தபோது
நகரத்தின் அழகு நிலையங்களிருந்து
வெளியேறிய மெழுகு உடல்கள்
காதலர்களின் தழுவலுக்குள் கட்டுண்டு கிடந்தன
கண்துஞ்சா கனமழைக்குள் காவலரணில்
சாரலின் சரடில் இளமையின் கனவுகளைக் கோர்க்க
தலைமுறையும் தாண்டி நீள்கிறது கொடும்வலி
முன்நெற்றி வேர்வையென
நினைவு கசிந்துச் சொட்டும் கதகதப்பான
சொற்களை மின்மினியாக்கிக் கூரைக்குள்
பதுக்கினாய் காதலின் நினைவாக
நிரந்தரமாக உன்னை
பதுங்குக்குழிக்குள் கையளித்துவிட்டு
எல்லைகள் கடந்து எல்லா காலங்களிலும்
நான்கு சுவர்களுக்குள் மென்குளிரூட்டப்பட்ட
களிவிருந்தில் தஞ்சமடையும்
நகரத்து நங்கை தன் காதலர்களுக்கு
மின்மினிகளை பரிசளிக்கவும்
பேரம் பேசவும் உடன்படிக்கைகள்
கைச்சாத்திடவும் கற்றுத் தேர்ந்தாள்
போராளிகளின் கல்லறையிலிருந்து
விடுதலையைக் களவாடியவள்
ஆயிரமாயிரம் சகோதரிகளின்
சரித்திரத்தைக் கொள்ளையடித்தவள்
அண்ணாந்து உமிழ்கிறாள் தற்போது…