றஞ்சி –சுவிஸ்
உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. ஆனால் பெண்களின் எழுச்சி சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிய எல்லா தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும் ஜனநாயகப் போராட்டங்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் தேசிய விடுதலைக்கான போரில் கூடுதலாக பலியாகி கொண்டிருப்பவர்கள் ஒரு தரப்பினராகிய சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறு தரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. உலகில் எங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்த பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளிவருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புகளும் பல்வேறு சாசனங்களும் உருவாக்கப்பட்டாலும் அவற்றால் இவர்களைப் பாதுகாக்க முடியாத நிலைமையே இன்று வரை காணப்படுகிறது.
ஷ்சியப் புரட்சியில் பங்கேற்ற எண்ணற்ற பெண் போராளிகள் தான் உலகத்துக்கு பெண்கள் சார்பாக புதியதொரு திசையை முதன் முதலாக காட்டினார்கள். ரபோரில் படைத்தலைமை உட்பட அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு சமம் என்பதை நிரூபித்தார்கள். பின்னர் தொடர்ந்து பெண்களின் பிரச்சினைகளினை வெளியுலகுக்கு எடுத்துக் கூறவும் அதற்காக போராடுவதற்கு ஒரு தனி அமைப்பு தேவை என்றும் உலக பெண் அனைவருக்குமான ஒற்றுமை நிறுவப்பட வேண்டும் என்பதின் அவசியத்தையும் வலியுறுத்தியவர்கள்.
போலந்தில் பிறந்த ரோசாலக்சம் பேர்க் ரஷ்சியப் புரட்சியில் பெரும் பங்கு வகித்தவர். போராட்டங்களை பெண்கள் தலைமை தாங்கி நடத்தமுடியும் என்பதையும் உலகுக்கு நிரூபித்தவர். அதே போல் சீனப்புரட்சி மீண்டுமொருமுறை பெண்களின் பலம் என்னவென்று பறைசாற்றியது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனப் பெண்களின் மீது நிகழ்த்திய பாலியல் வன்முறைக்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சீனப் பெண்களுக்கு செய்த கொடுமைகளுக்கு பதிலடியாக சீனப்புரட்சியில் பெண்களின் பங்கு பெரும் அளவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கீயூபப் புரட்சியில் பெண்கள் முக்கிய பொறுப்புக்களை வகித்தனர் 1945ம் ஆண்டு ஜப்பானிய வியடம்நாமிலிருந்து பிரெஞ் ஆட்சியாளர்ளைக் விரட்டியடிக்க அனைத்து பெண்கள் கெரில்லாப் படை உருவாக்கப்பட்டது. கிட்டதட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிரெஞ்க்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சிறுமைப்படுத்தி ஓட வைத்த வியட்நாம் பெண்களின் வீர வரலாறு போரில் பெண்களின் போராட்ட சக்தியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியது. அதே போல் மிகவும் பிற்போக்கான வறுமையான நிலையிலிருந்த நிகரகுவாவின் போர் புரட்சியில் சாண்டினிஸ்டா பெண்களின் வீரம் எல்லா திசைகளிலும் வியப்பை ஏற்படுத்தியது. இதே போல் வியட்நாமின் நீளக் கூந்தல் படை என்ற பெண்கள் போராட்ட அமைப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..
உலக அளவில் பெண்கள் மீதான சக்திவாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக பாலியல் வன்முறை காணப்படுகிறது. பாலியல் வக்கிரங்களை தீர்த்துக்கொள்வதற்கும் பெண்களுக்கான உடலியல் உளவியல் ரீதியான தண்டனையாகவும் போராடும் பெண்களை பீதிக் ஆளாக்கி போராட்டத்திலிருந்து அகற்றுவதற்காகவும் இந்த வழிமுறையை போரில் ஈடுபடும் பெண்கள் மேல் ஆணாதிக்கம் நிலை நாட்டுகிறது. இக்கொடுமைகளை பெண்கள் எதிர்த்து நின்றாலும் பெண்களின் வகிபாகத்தைப் புறக்கணிக்கும் நிலை ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தே எழுகிறது. ஆனாலும் பெண்கள் மேலும் மேலும் கொலைசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதை உட்பட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டும் கூட தேசிய விடுதலைக்காக பெண்கள் கடுமையாக உழைப்பது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
ஜான் கோவா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரையு ட்ரின் நுவாங் என்ற இளம் பெண் „உ“ என்ற வம்சத்தை சேர்ந்த நிலப்பிரபு வர்க்கத்தின் ஆட்சியை எதிர்த்து ஒரு போரையே தலைமையேற்று நடத்தினார். சுதந்திரத்தை மீண்டும் வெல்வேன் என்ற சபதத்துடன் தனது 21 வயதில் 30 போராட்டங்களை தலைமையேற்று நடத்தியிருந்தார். அதே போல் அ,ல்ஜீரியத் தேசிய விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கெடுத்தனர். ஆயுதம் ஏந்தினர்.அவ்வாறே ஈரான்,பலஸ்தீனம், ஈராக், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்றுவரும் போர்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனாலும் பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்தச் சமூகம் அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறது. கீழ்தரமாக பேசுகிறது. யார் மீது குற்றம் இழைக்கப்பட்டதோ அல்லது பாதிக்கப்பட்டார்களோ அவர்களே குற்றவாளிகளாக கருதப்படுவது சர்வசாதாரணம் ஆகி விடுகின்றது. இவையெல்லாம் ஆணாதிக்க வழிக் கலாச்சாரக் கட்டமைப்புள் வைத்து சாத்தியமாக்கப்படுகிறது.
போரில் பல சாதனைகளை படைத்த பெண்களின் வரலாறுகள் பல. ஆனாலும் பொதுவாக எத்தனையோ பெண் போராளிகளின் செயற்பாடுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் நிலவும் வரட்டுக் கலாச்சாரத்தை பாதுகாக்கும் பதுமைகளாகவும் அந்தந்த விடுதலை இயக்கத்திற்குப் புதல்வர்களை அல்லது புதல்விகளை பெற்றுக்கொடுக்கும் தாய்மார்களாகவும் மாறிவிடுகிறார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு அவர்களது எதிர்காலம் குறித்து எத்தகைய சமூக உத்தரவாதமும் உருவாக்கபட்டு பேணப்படுவதில்லை அமைப்பு சார்ந்த இறுதி சாதனைமட்டுமே வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. இதன் மூலம் பெண்களில் வகிபாத்திரம் பெண்களின் மீதான ஆணதிகார கருத்தியலை வருங்காலங்களில்; போராட்டங்களில் பெண்களின் பொறுமையும் விடாதமுயற்சியும் கற்றுக்கொடுத்த பாடங்களில் இருந்து முழுமையான பயனைப் பெற முடியாது போய்விடும்.
மேலும் பெண்களை இராணுவத்தில் அல்லது போராட்டத்தில் சேர்த்துப் பயிற்றுதல் தாக்குதலில் பங்கெடுக்க அனுமதித்தல் போன்றவை எப்போதும் பெருமைக்குரிய விடயங்களாக கருதப்படும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் காலம் காலமாக ஒடுக்கபட்டு வாழ்ந்து வரும் பெண்கள் இராணுவ உடை அணிந்து களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேராக போரில் ஈடுபடுவதைத் காட்டி பெண்கள் முழுமையான விடுதலை அடைந்து விட்டார்கள் எனக்கூறுவதும் நடந்தேறுகிறது. இதையே புலிகள் அமைப்பினரும் கைக்கொண்டனர். தேசியவிடுதலைப் போராட்டத்துடன் பெண்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தையும் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை அல்லது வழியேற்படுத்திக் கொடுக்கப்படவில்லை மாறாக பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டதை இயக்கத் தலைமை தமது சாதனையின் அம்சமாக நிறுவ முற்பட்டது இனவொடுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தாம் ஆயுதத்தைக் கையெலுத்துக் களமாடுவது பெண்களின் கருத்துநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற மாயைக்குள் போராளிப் பெண்கள் விடப்பட்டனர். பெண்கள் பற்றிய மனோபாவங்கள் பலவற்றை இந்தக் களமாடல் உடைத்தெறிந்தது உண்மை என்ற போதும் அது பெண்களின் சமூக அந்தஸ்தில் கூட மாற்றமெதையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் அரசியல் அந்தஸ்து அதிகாரம் என்ன?
போராட்ட அமைப்புகளில் தீர்மானிக்கும் சக்திகளாக ஆண்களே இருந்தனர். இங்கு பெண்களுக்கான இடம் தவிர்க்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குள்ளும் ஆணாதிக்கம் அடிப்படையில் விடுதலை இயக்கங்களில் தொடர்ந்து நிலவி வருகின்றதை நாம் காணலாம்.
விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளில் இராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் பயன்பட்டார்களே ஒழிய பெண்விடுதலையிலும் சரி பால்வாத அடிப்படையிலும் சரி எந்த வித மாறுதல்களையும் இப்பெண்களினால் ஏற்படுத்த முடியவில்லை என்பது மிகக்கசப்பான உண்மையாகும்.
போர் முடிந்ததும் பெண்கள் இராணுவப்பணியிலும் சாதாரண நிலைக்கும் தள்ளப்பட்டனர். இன்று அப் பெண்கள் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதையே வியட்நாம் சீனா,நமீபியா,அல்ஜீரீpய, மொசாம்பிக, நிக்கரகுவா போன்ற நாடுகளிலும் இன்று இலங்கையிலும் நடைபெற்றுள்ளது. ஒரு சக ஜீவியாய் சமூகத்திற்காகப் போராடிய இந்தப் பெண்கள் மேற்சொன்ன நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூகம் மீண்டும் அவர்களை தமது ஆண்நோக்கினுள் வீழ்த்துகிறது. பெண்களை உடல் உள ரீதியில் பாதிக்கும் இப்பிரச்சினையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத் தேவைகளோடு மட்டும் குறுகிவிடாமல் சமூகத்தின் ஆணதிகாரக் கருத்தியலுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டங்களும் தேவை.
போர்க்களத்தில் பங்கு பற்றிய பெண்களின் அனுபவங்களும் இந்த அமைப்புககளுக்குள்; செயற்பட்ட ஆணாதிக்கச் சிந்தனைகள் முறைமைகள் பற்றியுமெல்லாம் அவர்கள் முன்வந்து பேச வழியேற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் இந்த அனுபவங்கள் பேசப்பட வேண்டும் அவற்றிலிருந்து படிப்பனைகள் பெறப்பட வேண்டும்.
11.9.2011
இதற்கு உதவிய அடி நூல் போடா பெண்களால் வெளியிடப்பட்ட மார்ச் 8 என்ற நால்.