மாலதி மைத்ரி
பாவாடை சரசரப்புடன்
பள்ளி முடிந்து வீடு திரும்பும்
சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு
பிசுபிசுத்துக் கசிகிறது பகல்
சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின்
கதகதப்பும் மென்மையும் ஏறிய
சன்னமான அந்தி
அவளைத் தழுவி அணைத்தபடி
செல்கிறது ஒற்றையடிப் பாதையில்
கனக்கும் புத்தகப் பையைத்
தோள் மாற்றும் ஆசுவாசத்திலும்
வழியில் அம்மா தென்படுவாளா என
ஏங்கும் பார்வையிலிருந்தும்
தன்னைச் சற்று விடுவித்து கொள்ளுமது
அவளின் பாதையிலேயே
முகம் சுணங்கி படுத்துவிடுகிறது
வாசலில் கவிழ்ந்த முகத்துடன்
அமர்ந்திருக்கும் அந்தியின் முதுகைத் தடவி
விளக்கேற்றுகிறாள்
வேலையிலிருந்து வீடு திரும்பும் தாய்
பின்பு மகளின் கபகபக்கும் வயிற்றிலிருந்து
சிறு தீயெடுத்து
உலையேற்றி நிமிர்கிறாள்
உணவருந்தும் தட்டைச் சுற்றி
பூனையின் வாலென
வாஞ்சையுடன் சுற்றிக் களைத்த இரவு
நழுவிச் சட்டியில் சுருள்கிறது
இருளின் வயிற்றைக் கிழித்து நுழையும்
தந்தையின் மாமதத்தில்
தெறிக்கும் கலன்கள்
மண்டையுடையாத ஆசுவாசத்தில்
நெளிவுடன் உருள்கின்றன
கதவுகள் முன்னும் பின்னும்
மூர்க்கமாகக் குரைக்கின்றன
குடிகாரனின் சூறையாடலில்
இரவு உடைந்து
பொலபொலத்து வீழ்கிறது
எல்லா இரவுகளையும் போலவே
பழியின் இறுதித் துளியையும்
பருகிய நிம்மதியில்
அப்பனின் சிதறிய மண்டையாக
கிழக்கில் கிடக்கிறது சூரியன்.
. நன்றி தீராநதி