-யாழினி – யோகேஸ்வரன் –
என் சன்னதச் சீறல்கள்
நான் சன்னதம் கொள்வேன்
என் உணர்வறியா உலகமதில்
அச் சன்னதம் மிக விரைவில் அரங்கேறும்
மிக வலிதான கால்களால் நிலம் நோக
அசாத்திய வழி தேடி சன்னதம் கொள்வேன்
என் சன்னதம் கீழ்க் கண்டவாறமையும்
மிக நீண்ட வறிய ஓலங்கள்
உக்கிர தாண்டவங்கள்
நிறுத்திவிட முடியா வார்த்தைச் சமர்கள்
அடக்கி விடத் தெரியாத கோபச் சுமைகள்
அழுது தீர்த்து விட முடியாத சிவந்த கண்கள்
மகிழ்வென்பதறியா மிக மெல்லிய தேடல்கள்
இவை இதுவோ என் சன்னதச் சீறல்கள்
முன்னெப்பொழுதுமிலா என் பேரமைதி
அலைகளுக்குள் வெறிகொண்டெழும் சூறாவளி போல்
என் சன்னதங்கள் திடுமெனப் பொங்கி எழும்
என்னுள் இதுவென அறியக்கிடைக்காத நிலை
என் சன்னத நிலை
சீறியடிக்கும் சன்னத நிலை கண்டு
பலர் எனை “பாவம் இச் சிறு பெண் “
“சன்னதங்களின் கடை எல்லைக்குச் செல்கிறாள்”
“பாடழிந்த வாழ்வை இவள் வலிந்தெடுத்துள்ளாள்”
எனத் தம்முள் புலம்புவர்
ஆயினும் என் சன்னதங்கள்
ஈற்றில்,என்னுள் மெல்ல முனகிக் கொள்ளும்
“எனக்கு மட்டுமேயான பகுத்தறிவு ஒன்றை”
Thankyou oodaru