நியோகா
என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது.
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் தொலைத்த ஒரு பெண்ணின் கதையாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. இதன் இயக்குநர் சுமதி பலராம் ஆவார். ஏலவே இவரின் ‘உறையும் பனிப்பெண்கள்’ சிறுகதைத் தொகுதியில் உள்ள கதை ஒன்றையே அவர் திரைப்படமாக எடுத்திருந்தார்.
திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது சுமதியின் குறித்த சிறுகதையில் காணப்பட்ட வலுவும் வீச்சும் திரைப்படத்தில் காணப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. நேர்த்தியான கதையை திரைப்படத்துக்காக அவர் மாற்றியமைத்திருக்கின்றார். சிறுகதைக்கும் திரைக்கதைக்குமான வேறு பாடு புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான். எனினும் சிறுகதை ஏற்படுத்திய அனுபவத்தை திரைப்படம் தரவில்லை என்னும் போது அது கலையாக்க உத்தியின் மீதான கேள்வியாக அமைந்துவிடுகின்றது.
பாத்திரங்களின் நீண்ட உரையாடல்கள் திரைப்படத்தின் வலுவை இழக்கச் செய்வதாகக் காணப்பட்டன. உரையாடல்களை தவித்திருக்க வேண்டிய இடங்களில் உரையாடல்களால் திரைக்கதையை சுமதி வலுவிழக்கச் செய்திருக்கின்றார். புலம்பெயர் வாழ்வில் ஏற்படத்தக்கதான பண்பாட்டு எதிர்கொள்ளலின் சிக்கல்களை நுண்மையாக பதிவு செய்ய எத்தணிக்கும் சுமதி கதையின் மையக் கருத்துக்கு இயையத் தக்கவகையில் பதிவு செய்வதில் தவறியிருக்கின்றார். ஆனால் திரைக் கதைக்கமைவாக பாத்திரங்களை தெரிவு செய்திருப்பது பாராட்டத் தக்கதே தந்தையாராக வருபவரின் நடிப்பும் படத்தின் மையப் பாத்திரத்தின் நடிப்பும் மெச்சத் தக்கன.
உடல் தாகத்தினால் கட்டிலிருந்து புரண்டு கொண்டிருக்கும் பெண்ணின் அசைவுகளுடன் ஆரம்பிக்கும் திரைப்படம், இறுதியில் தன் பிள்ளையுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருப்பதுடன் முடிகின்றது. புனிதத்தின் பெயரால் தமிழ்ச் சமூகம் ஒரு பெண்ணுக்கு இயல்பாக இருக்கக் கூடிய காமத்தை ஏக்கத்தை புரிந்துகொள்ளாது போலியான சமூக ஆசாரங்களால் அவளை சிறுமைப்படுத்தி ஒடுக்குகின்றது என்பதுதான் திரைப்படத்தின் மையக்கதை.
வயதுபோன நிலையிலும் காமத்தில் களிப்படையும் தந்தையும் தாயும் கூட, இளவயதில் தன் கணவனை இனந்தெரியாதவர்களிடம் தொலைத்துவிட்டு அவஸ்தையும் பெண்ணின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் சாத்திரக்காரிடம் அவளின் வாழ்வை எதிர்வு கூற வேண்டி நிற்பது அபத்தமே. தம்பியின் மனைவியால் சுமதியின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் தம்பியால் அவளின் புரிதலும் நிராகரிக்கப்படுகின்றது. இவற்றை மீறி பெண்ணின் மனவுணர்வு அலைபாயும் தருணங்களை திரைபடம் காட்சிப்படுத்துகின்றது. மையப்பாத்திரைத்தை நோக்கி குவியப்படுத்தப்பட;டிருக்கும் தொலைபேசி வாயிலாக அறிமுகமாகும் ஆண், சாமியாராக வருபவர், பூங்கொத்தோடு அலைபவர், உறவினராக வந்து வீட்டில் தங்கியிருப்பவர் என நான்கு பாத்திரங்களும் பெண் பொதுப்பரப்பில் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளை பதிவு செய்வதற்காக பின்னப்பட்ட பாத்திரங்கள். இவற்றில் உறவினராக வரும் பாத்திரத்தை சிறுகதையில் வலுவாக காட்டியிருக்கும் சுமதி திரைப்படத்தில் நீத்துப்போகச் செய்துவிட்டிருக்கின்றார். அந்த பாத்திரத்துக்கும் மையப்பாத்திரத்துக்குமான முக்கியத்துவத்தை திரைக்கதையில் வலுவாக்கியிருந்தால் சிறுகதையப் போல திரைப்படத்தையம் கனதியாக காண்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
திரைப்படத்தின் முடிவில் மையப்பாத்திரம்.’’ கற்பமாக இருக்கிற நான் சாப்பிடாமல் இருக்கக் கூடாது’’ என சொல்லி விட்டு சாப்பிட்டு எழுந்துபோகிறாள். பின்னர் சிறிது காலத்தின் பின் என காட்சிப்படுத்தி விட்டு பூங்காவில் தன் பிள்ளையுடன் விளையாடுவதாக மையப் பாத்திரம் காணப்படுகின்றது.
சுமதி இதை ஒரு உச்சக்கட்ட காட்சியாக காட்ட முயற்சித்திருக்கின்றார் போல இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான உணர்ச்சி வெளிப்பாட்டையும் முகத்தில் வெளிப்டுத்தாது இயந்திரத்தனத்துடன் அந்த வார்த்தைகள் நின்றுவிடுகின்றன. பார்வையாளரின் மனதில் ஏற்படுத்தக் கூடியதான அதிர்வுக்கான சாத்தியங்களையும் அது தந்துவிடாமல் பொருளற்ற வார்த்தை போல புதைந்துவிடுகின்றது.
திரையிடலுக்குப் பின்னரான உரையாடல்களில் பார்வையாளரினால் கேட்கப்பட்ட கேள்விகள் அந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பதுதான். மையப்பாத்திரத்துடன் தொடர்புபடும் நான்கு ஆண்பாத்திரங்களில் யாருக்கு பிறந்த பிள்ளை அது அல்லது நான்கு பாத்திரங்களையும் விட வேறு ஒருவருக்கு பிறந்த பிள்ளையா? என்ற விதமாக கேள்விகள் இருந்தன. பேசாமல் யாராவது ஒருவரை அப்பிள்ளைக்கு அப்பாவாகக் காட்டியிருக்கலாம் போலத் தோன்றியது. கடைசியில் அப்பா யார் என்பதை தேடுவதாக திரைப்படத்தின் முடிவு அமைந்துவிட்டதோ என்று தோன்றியது. திரைக்கதையில் யாவற்றையும் சொல்ல வேண்டுமா? என உரையாடலின் போது சுமதி பார்வையளர்களிடம் கேட்டார். தான் முடிவை திட்டமிட்டே அமைத்ததாகவும் குறிப்பிட்டார். அவரது கேள்வி நியாயமானதுதான்.
பெண்ணின் உடல் வேட்கையை காமத்திற்கான ஏக்கத்தை ஆரம்பத்தில் காட்டி படத்தை ஆரம்பித்த சுமதி, வெறுமனே உடற்சுகத்தின் விளைபொருளா அந்தப்பிள்ளை என்ற கேள்வியையும் கூடவே எழுப்பச்செய்துவிடுகின்றார். அரங்கில் ஒருவர் அப்பன் பெயர் தெரியாத பிள்ளை எவ்வளவு சிரமத்தை சமூகத்தில் எதிர்கொள்ளும் என்ற களிவிரக்கமிக்க கேள்வியையும் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பிரார்த்தனையாக அப்பிள்ளை போலிச் சாமியாருக்கோ அல்லது தொலைபேசியில் உரையாடுபவருக்கோ பிறந்திருக்கக் கூடாது எனவும் பூக்கொண்டு திரிபவருக்கோ அல்லது உறவினராக அறிமுகமாகும் பாத்திரத்துக்கோ பிறந்திருக்க வேண்டுமென இருந்திருக்கக் கூடும். ஆனால் சுமதியின் சிறுகதை இத்தகைய கேள்விகளுக்கு இடந்தராது நேர்த்தியாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
அரங்கில் இத்திரைப்படம் குறித்து கவிஞர் ஒருவர் கவித்துவமான விளக்கத்தை தெரிவித்திருந்தார். அந்த பெண்ணை பூச்செடிகளை விரும்பும் பாத்திரமாக சுமதி காட்டியிருப்பது. மலரத்துடிக்கும் ஒரு பெண்ணை சமூகம் எவ்வாறெல்லாம் திரையிட்டுத் தடுக்கிறது என்பதை திரைப்படம் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான். எனினும் திரைப்படம் என்று வரும் போது ரசிகநிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.
என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது.
நன்றி ஊடறு