முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன? வெற்றிச்செல்வி

எஸ். கேசவன்…-http://www.supeedsam.com/?p=19659

vettishelvi-aவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்கவராக விளங்குபவர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் உருவாகியுள்ளதா?

இலட்சியங்கள் காணாமல் போனதால் இலட்சங்களில் மட்டுமே வாழ்க்கை உள்ளதாக இளைய தலைமுறையின் பாதிப்பேர் பொருளாதாரத்தைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்த, பிறந்த, இடங்களிலிருந்து புலம்பெயர் நாடுகளில் புகலிடம் தேடிக் கொண்டார்கள், தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள், பலருக்கு இந்த மண் என் சொந்த மண்ணில்லை என்ற வெறுப்பு. பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சியில் வாழ்க்கை தேய்வதால் யாராலும் தம் வாழ்க்கையை தமக்காக வாழ முடியாத தவிப்பும் வெப்பியாரமும். போரின் எச்சங்களென வாழ்பவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே தொடர்கிறது.

முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை என்ன?

வழிகளை தமக்காக உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். உலகம் முழுதும் கால்களை ஊன்றி விட்டவர்களாயும் தமது சுய உழைப்பால் உயர்பவர்களும், சொந்தமாய் தொழில் புரிபவர்களும், குடும்பமும் குடித்தனமுமாய் வாழ்பவர்களும் தாம் நேசித்த சனங்களுக்காக இப்போதும் தமது உழைப்பையும் உணர்வையும் அர்ப்பணிப்பவர்களுமாக காண்கிறேன். ஐயோ பாவம் என்று யாரும் இரங்க வேண்டியவர்களாயும் போர்க் காயங்களால் அவையவங்களை இழந்தவர்களில் சிலரும் இருக்கிறார்கள்.

முன்னாள் போராளிகளுக்கான அரசின் புனர்வாழ்வு என்பதன் அர்த்தம் என்ன?

அரசாங்கம் பலதிட்ட முன்மொழிவுகளை வைத்து திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொண்டது. ஆயிரம் பேருக்கு முன் மொழிந்த திட்டத்தில் 300 பேருக்கு பயிற்சி வழங்கியது. வயல் நிலங்களில் வேலை செய்யத்தக்க வாலிபர்களுக்கு சிரட்டையில் கைவினைப் பொருள் செய்யவும், கராத்தே கற்று முடித்த பெண்களுக்கு மணப்பெண் அலங்காரப் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆக தச்சுத்தொழில், தையல் தொழில் பயிற்றுவிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் புனர்வாழ்வு ஓரளவு தொழில் வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பேன். ஒட்டுமொத்தமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்பதற்கு தடுத்து வைத்திருக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்பதே அர்த்தம்.

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன?

அவர்கள்தான் அவர்களுக்கான சவால்கள். அரசியல், இராணுவக் கெடுபிடிகள் காரணமானவர்கள் தவிர மற்றெல்லோரும் தமது வாழ்வை தமக்கே சவாலாக்கிக் கொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்பேன். ஒரு சின்ன இலகுவான உதாரணம், கடற்புலிகள் அமைப்பில் படகுக் கட்டுமாணப் பகுதியில் கடமையாற்றிய ஆண் பெண் போராளிகளெல்லாம் தற்போது என்ன செய்கிறார்கள்? கடற்கரைகளில் உடைந்தபடகுகளைச் சீரமைக்கும் தொழிலுக்கு உதவினாலே உதவு தொகையாக வருமானம் ஈட்டலாம். போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு துப்பாக்கி பிடிக்க மட்டும்தான் கற்றுக் கொடுக்கப்பட்டதாக பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வாழத் தகுந்த தொழில்கள் தெரியும். சவால்களையெல்லாம் தமது வெற்றிப் படிகளாக மாற்றும் வல்லமை அவர்களிடம் உண்டு என்று நான் இப்போதும் நம்புகிறேன்.

மருத்துவத்துறையில் வீரம் கிழித்த காயங்களை ஆற்றுவதே தம் பணியாக இருந்தவர்கள் இன்று மருத்துவமனையிலும், தனியார் மருந்தகங்களிலும் தொழில் அனுபவம் மிக்கவர்களாக தொழில் புரிகின்றார்கள். தொண்டு அமைப்புகளால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பணிகளில் தோளோடு தோள் நின்று உழைக்கிறார்கள். பெண்களுக்கான செயற்பாட்டாளர்களாக செயலாற்றியவர்கள் இப்போதும் மாதர் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற உண்மை உழைப்பாளிகளாக வாழ்கிறார்கள்.

காலிழந்த ஒரு முன்னாள் பெண் போராளி களத்தில் ஆயுதம் தரித்து நின்றவர்கள்தான். எனினும் திருமணம் செய்து, அழகான பிள்ளைகளைப் பெற்று தனது குடும்பத்தை வளமாகவும் சமூகத்தை வளப்படுத்தும் தொண்டுள்ளம் கொண்டவளாகவும் வாழ்கிறாள். போராட்டம் துப்பாக்கியை மாத்திரம் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உலவ விடவில்லை. ஊணையும் உயிரையும் பிறருக்காகக் கொடுத்து வாழவும் மடியவும் சொல்லித் தந்த அழகான வாழ்வைத் தந்திருக்கிறது.

பொய், பிரட்டு, பித்தலாட்டம் செய்யும் ஒரு சிலரால் உண்மைப் போராளிகளின் உயர்ந்த கொள்கைகள் அடிபட்டுப் போவதாக நினைக்கத் தேவையில்லை. போராளியாக வாழ்ந்ததற்காக எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களாக கருதத் தேவையில்லை.

வாழ்வு என்பது பிறப்பிலிருந்து வாழ்வதன் தொடர்ச்சிதானே ஒழிய புனர்வாழ்வு, மறுவாழ்வு, சமூகத்திற்கு மீளத் திரும்பியவர்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை.

சவால்கள் மனிதனாகப்பட்ட அனைவருக்கும் பொதுவானதே என்பேன். தவிர மேற்சொன்ன அரசியல், இராணுவக் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டை விட்டோ கிராமத்தை விட்டோ அல்லது நாட்டைவிட்டோ விலக முடியாமல், இப்போதும் புலிப் பார்வை பார்க்கப்படுகின்ற முன்னாள் போராளிகள், அல்லது அப்படித்தான் அரச தரப்பு தம்மைப் பார்க்கும் என்று உள ரீதியான பாதிப்புகளை அடைந்தவர்களது வாழ்க்கை சவால்கள் மிக்கதுதான் என்பதுவும் உண்மையே. இதுவரை படையினரைப் பார்த்து வெகுண்டெழும் நிலையிலேயே ஒரு முன்னாள் பெண் போராளி மனநோய் மருத்துவ நிலையமொன்றில் கட்டிலில் கட்டிவைத்துப் பராமரிக்கப்படுவதும், தன்னை போராளி என்று இனங்காட்டாமல் மறைக்க விரும்பிய ஒருவர் தன்னைத்தானே அலங்கோலப்படுத்திக் கொண்டு மனநலத்திற்காக மருத்துவம் பெற்று வருபவராகவும் இருப்பதைநான் அறிவேன். அவர்களதும் அவர்களது குடும்பத்தவர்களது வாழ்க்கையையும் சவால்கள் அற்றவை என்று சொல்ல முடியுமா என்ன?

18 வருடங்கள் போராடிய ஒரு முன்னாள் போராளியாய் இயங்கிய அனுபவம் அல்லது காலம் உங்கள் இன்றைய வாழ்க்கையில் எவ்வாறான செல்வாக்கை செலுத்துகிறது?

இதே நீங்கள் இந்தக் காரணம் சொல்லித்தான் என்னை நேர்காணல் செய்கிaர்கள். எனது இருப்பை உயிர்த்தப்பித்துக் கொண்டிருக்கின்ற காலம் அந்த 18 ஆண்டுகளாய் ஆகிவிட்டிருக்கிறது. அந்தக் காலங்களை நான் இப்போதும் நேசிக்கிறேன். மக்களையும் நண்பர்களையும் நேசிக்கவும் அவர்களுக்காக தியாகம் செய்யவும் அவர்களுக்காகவே வாழவும் கற்றுத்தந் நாட்கள் அவை. அவ்வாறு வாழ்ந்ததன் காரணமாகவே நான் மதிப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால் அது மிகையில்லை.

ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் உங்கள் ஆயுதம் எழுத்து எனச் சொல்ல முடியுமா?

ஆயுதப் போராட்ட காலத்திலும் நான் எழுத்துலகில்தான் அதிகம் வாழ்ந்தேன். நானொரு அங்கமிழந்தவர் என்பதால் ஆயுதம் தாங்கிப் போராடும் வாய்ப்பு எனக்கு குறைவாயிருந்தது. எனினும் களமுனைகளைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

போரின் இறுதிநாட்கள் புத்தகம் முக்கியத்துவமான வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படி அவ்வாறான ஒரு பதிவை மேற்கொள்ள முடிந்தது?

முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெருப்பாய் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நாட்கள் அவை. மனசு வெடித்து விடும் என்றளவு அழுத்தத்தில் இருந்த தடுப்பு முகாம் வாழ்வில் நான் சாதித்திருக்கிறேன் என்றால் அது இந்தப் பதிவை செய்ததுதான். போரின் இறுதியில் நான் எனது கண்களால் கண்டவற்றை எழுதிவிட நினைத்தேன். அது என்னையும் என் தோழிகளில் பலரையும் மன அழுத்தங்களிலிருந்து சற்று ஆறுதல் படுத்தியது என்பேன். சுவரில் சாய்ந்து குந்திக்கொண்டு மடியில் வைத்து, முதுகு வலிக்க வலிக்க எழுதிய அந்த எழுத்து ஒரு காலத்தின் பதிவாய் ஆகியிருக்கிறது.

இன்று என்ன எழுதிக்கொண்டிருக்கிaர்கள்?

எழுத வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். ஆனால் பொருளாதாரத் தேவை என் நேரத்தில் அதிகமானவை தின்று விடுவதாலும் உடல் நிலையும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. நான் எழுதாவிட்டால் நான் சார்ந்த சமூகத்தின் பதிவை யார் செய்வார்கள்? தப்பும் தவறுமாக, உண்மைக்கும் மாறாக எழுதி வைத்திருப்பவர்களின் எழுத்தல்லவா சரி என்றாகிவிடும். தவறைத் தவறென்று தவறாக வரலாற்றை எழுத ஆயிரம்பேர் இருக்கிறார்கள். நம் இனமானத்தையும் இனத்துக்காக உயிரிழந்த இலட்சக் கணக்கானோரையும் சொல்ல ஓரிருவர்தான் இருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *