-பிரியாந்தி- யாழ்ப்பாணம்.2015.08.22
புத்தகம் ஒன்றைப் புத்தகமாக அணுகவே மனம் அவாவுகின்றது. அதன் உணர்வுச் சுழிக்குள் சிக்குவதற்கு ஒரு வாசகனாக, நான் தயாராக இருந்ததில்லை எப்போதும். புத்தகங்கள், முழுமையாக எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், மாறாக நான் அவற்றின் கட்டுப்பாட்டில் இருத்தலாகாது என்பதுமே எனது வாசிப்பு விதி. இருந்தும் வரிகளின் பெரும் பழு என்னை அழுத்துகையில் இந்த விதி மீறப்படுகின்றது. அத்தகைய தருணங்களில் வரிகளுக்கிடையிலும் வாசிப்பதற்கென எண்ணற்ற அரூப வரிகள் தோன்றி மறைகின்றன. எழுத்துருக்கள் ஊடான இந்த உணர்வுத் தொற்றல் மிகப் பயங்கரமாக மனதை உலுக்கத் தொடங்குகின்றது.
இனி எழுதாமல் தீராது….
2009. இறுதி யுத்தத்தின் இன்னமும் அவிழாத மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் மந்திர வரிகைளத் தேடியே ‘விடமேறிய கனவினை’ வாசிப்பிற்கு எடுத்துக்கொண்டேன். பெரும் வசைகளையும், மாபெரும் புனிதப்படுத்தல்களையும் கடந்து மண்மேடாகிப்போன கனவு அரசிற்காக கடைசிவரை போராடிய போராளியால் எழுதப்பட்டது என்பது இப்புத்தகம் மீதான கூடுதல் கவனத்தை ஈர்த்திருந்தது.
18 அத்தியாயங்கள்,
256 பக்கங்கள்.
எந்த மக்களுக்காகப் போராடினானோ அந்த மக்களின் கூட்டுப்பலியை, சிதறிச்சிதைந்த அவர்களின் உயிரற்ற உடலங்களை வெறுமனே கடந்நுவர நேர்ந்த கையறு நிலையின் விளைவான மன அவசமே இப்படைப்பு.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வெளிவந்த படைப்புகளுக்கூடாகப் போராளிகளின் பல்வேறு முகங்களைத் தரிசித்த எனக்கு அவர்களின் ஆத்மாவைப் புரிந்துகொள்வதற்கான கூடுதல் வழிகளைத் திறந்துவிட்டிருக்கின்றது இந்நாவல். ‘புலி’ என்பது கொள்கையா? அல்லது ஒரு தனிமனிதனா? ஏன்ற நீண்ட நாட் சர்ச்சைக்கான விடை விடமேறிய கனவில் இருப்பதாகவே நான் நம்புகின்றேன்.
போராளியாகவே இருக்கும் போராளியின் மொழியும், அதற்குண்டான மனமுமே விடமேறிய கனவு. கொள்ளை மீது பொரும் போதை கொண்ட ஒருவனின் மனம். இது சாதாரண ஒரு மனமன்று. எல்லாவகை விசாரங்களின் பின்பும் தான் வரித்துக்கொண்ட கொள்கையை உடும்பெனப் பற்றி நகர்கின்றது. இருந்தும், இத்தகைய மன ஒழுங்கமைவுடைய ஒருவரின் படைப்பில் நம்பமுடியாத அளவிற்குப் “படைப்பின் நேர்மைத்திறன்” வெளிப்பட்டு நிற்கின்றது. எந்த நியாயப்படுத்தல்களோ, திரிபுபடுத்தல்களோ இன்றி தான் கடந்து வந்த சம்பவங்களையும், தன்னைக் கடந்துபோன அத்தனை மனிதர்களையும் அவையவற்றின், அவரவரின் இயல்புகளுடன் பதிவு செய்கின்றார் குணா கவியழகன்.
இயங்குவதன் ஊடாகவே தம்மை இயக்கமாக உணர்ந்து கொள்ளும் இயல்பு வெளிக்குள் சஞ்சரிக்கும் எண்ணற்ற போராளிகள் என்னைக் கடந்து போகின்றனர் கதை நெடுக. ஒரு விடுதலைப் போராட்டம் அதன் அத்தனை மகத்துவங்களையும் இழந்த பின்னர் வரித்துக்கொண்ட கொள்கையின் பெயரால் ஒரு தனிமம் அல்லது ஒரு குழுமம் நிந்திக்கப்படுகையில் எழும் தனிமனிதத் துயரம் அல்லது கூட்டுத்துயரம், வதைமுகாம்களின் காரை நிலங்களிலும், சாயமிழந்த சுவர்களிலும் ஈரப்பிசுபிசுப்புடன் கப்பிக்கிடக்கின்றது இன்னமும் .
சம்பவங்களின் கோர்வையும், சொல் நேர்த்தியும், கதை மொழியும், சிரிப்பில் உறையும், குரூரமான துயர்தரும் வலிகளும், எள்ளலும், சலிப்பில்லா வாசிப்பு மனநிலையைத் தக்கவைக்கின்றன. காலை மாலை, இரவு பகல் பேதமறியாத நரகவாதையில் கிடந்தழுந்தும் சொற்களும், நுரைத்து நுதம்பும் மலத்தின் மணமும், ஒழுகி உறையும் குருதியின் நீர்மையும், ஓர்மமும், விரக்தியும், மறைக்க முடியா வாழ்வில் தம் முகங்களை மறைத்தபடி உலவும் கதை மாந்தர்களும் எழுந்துவர முடியாதபடிக்கு, கைவிட்டு வந்த கண்டல் நிலங்களில் மீள மீளக் கொண்டு சென்று நிறுத்துகன்றது மனங்களை.
அவமானத்தின் பெரும் வலி பற்றிப் படர்ந்து வேர்விட்டோடி நிலை கொள்கின்றன உயிரின் பேராழங்களில். ஓளியின் சிறு கீற்றுக் கூட அண்ட முடியாத வெற்றிடங்களில் காற்றெழுந்தும் வீசாத வெம்மை கவிகின்றது. யதார்த்தம் தகிக்கும் குரூர வெளியில் ஆங்காங்கே சில புனைவுகளில் நிழலில் இழைப்பாறுகின்றது படைப்பு.
இசை தப்பிய பாடலை
ஏந்திப்போகிறது காற்று.
தொடர முடியாத சுவடுகளில்
யாரோ நடந்துகொண்டிருக்கிறார்கள் இன்னமும்
என் இரவுகளில் மிதப்பதோ
பெயரற்றவர்களின் கண்கள்.
யாருக்காகவோ காத்திருக்கும் அவர்களிடம்
இனி காலம் தன்னை ஒப்புவிக்கட்டும்.