மாலதி மைத்ரி
காதலின் புராதன சடலம்
வாசற்படிகளில்
நிரந்தரமாக கிடக்கிறது
கொலையா தற்கொலையா
கேள்வியைப் பகடையாக்கி
ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம்
எருக்கங்குச்சி எள் சிகிச்சையில்
கருணையின் எச்சமாய்
தப்பிப்பிழைத்த வேறு ஒன்று
நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது
இரவு பகலாய் விழித்திருந்து
கூத்து களித்த ஊரார்
இழுத்து வந்த இதிகாசச் சவம்
திண்ணையில் கிடக்கிறது
குடும்பம் குடும்பமாய் கொண்டாடிச் சுகித்த
வெள்ளித்திரை காவியப் பிணத்தின்
சாம்பல் வீதியெங்கும் குவிகிறது
முப்பொழுதும்
சாதியைச் சுமந்தலையும் கலைஞனின்
வன்புணர்வில் மரித்த உடல்
ஏட்டிலும் இணையத்திலும்
புழுத்து நெளிகிறது
காலந்தோறும் மரபின் கொடுங்கால்கள்
காதலின் சடலத்தை
முகமழிய உதைக்கின்றன
ஆயுள் முழுதும்
சுயசாதிக் கிணற்றை
சளைக்காமல் தூர்வாரி
சரித்திரம் படைக்கும் தமிழன்.