குழந்தைகளை நெறிப்படுத்தல், இயந்திர மனிதர்களை உருவாக்கல்…

மீராபாராதி

sex workers ஆனால் இந்த அறிவுகள் எல்லாம் பெரும்பாலும் முடக்கப்பட்டே இருக்கின்றன. அல்லது தவறாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பெண்கள் மற்றும் “பிற பால்” அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள், காமம் மற்றும் பாலியல் உறவுகளினால் தொடர்ந்தும் கஸ்டப்படுவது மட்டுமல்ல இந்த சமூகத்தால் தொடர்ந்தும் அவர்களது காமம் மற்றும் பாலியலுறவுகள் சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் வருகின்றன.

காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை- 

நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுது நமது மனம் தூய்மையானதாக கள்ளம் கபடம் இல்லாது இருக்கின்றது. இக் காலங்களில் குறிப்பாக இரண்டு மூன்று வயதுகளில் பயம் தயக்கம் என்பன குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நமது உடல் என்ன கூறுகின்றதோ அது படி நடப்பதும் பின் அந்த அனுபவமே அறிவாக நம் தூய மனதில் உருவாகின்றது. மேலும் நம்மை சுற்றியிருக்கும் சூழலில் நடைபெறுகின்றவையும் அதனுடனான நமது உறவும் மற்றும் அதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்களும் நமது அறிவாக அதிகரிக்கின்றது. இந்த அறிவின் வழியில் பயமின்றி தயக்கமின்றி குழந்தைகள் செயற்படுவாhகள்; மற்றும் எதிர்வினையாற்றுவார்கள். ஆனால்; குழந்தைகள்; இயல்பாக எந்தக் குற்றவுணர்வுகளுமின்றி ஆனந்தமாக செய்பவற்றை, நம்மை சுற்றியிருக்கும் நமது குடும்பம் பாடசாலை மதம் சமூகம் குறிப்பாக நமது பெற்றோர் அச் செயற்பாடுகளுக்கு, தண்டனைகள் அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தி நம்மை தமது சமூகத்திற்கு ஏற்றவகையில் நெறிப்படுத்துகின்றனர். இங்கு பெற்றோரை குறை கூறுவதோ அல்லது அவர்களில் குற்றம் காண்பதோ நோக்கம் அல்ல. காரணம் அவர்களது அறியாமை மட்டுமல்ல அவர்களும் அவ்வாறே வளர்க்கப்பட்டனர். அவர்களும் தமது வளர்ப்பு முறையை கேள்விகேட்காததுடன் தொடர்ந்தும் அவற்றை நம்பி பின்பற்றி வருவது மட்டுமல்ல தமது குழந்தைகளுக்கும் அதை அமுல்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு குழந்தையின் மனம் மாசுபடுத்தப்படுகின்றது. அவர்களது செயற்பாடுகள் இயந்திரதனமானவையாக்கப்டுகின்றன.

குழந்தைகள் தமது உடல் உறுப்புக்களை குறிப்பாக ஆண் குழந்தைகள் ஆண்குறியுடனும் அல்லது பெண் குழந்தைகள் பெண்குறியுடனும் அல்லது உடலின் எந்தப் பகுதியை தொட்டால் சுகம் தருகின்றதோ அதனுடன் விளையாடுவார்கள். இது அவர்களுக்கு உடல்சார்ந்த இன்பத்தை சுகத்தை அளிக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு உடல்சார்ந்த இன்பம். தாயுடனோ தகப்பனுடனோ கட்டிப்பிடித்திருக்கும்போது ஏற்படும் இன்பம் போன்றதே இதுவும். இது பாலியல் இன்பம் சார்ந்ததாக இருக்கலாம் ஆனால் காமமல்ல. ஆனால்; சமூகத்தால் நெறிப்படுத்தப்பட்டு காம மற்றும் பாலியல் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு (socially conditioned) வயதால் மட்டும் வளர்ந்த மனிதர்களின் பார்வையில் இக் குழந்தைகளின் செயற்பாடுகளை காமம் சார்ந்த செயற்பாடாகவே பார்ப்பதற்குத் தோன்றும். இந்த மனிதர்களின் அதாவது குறிப்பாக பெற்றோரின் உடனடி செயற்பாடு அக் குழந்தைகளை அவ்வாறு செய்யாது தடுப்பதேயாகும். குழந்தைகள் மாபெறும் தவறு செய்வதைப்போல அவர்களின் கைகளை அந்த உறுப்பிலிருந்து சடுதியாக தட்டிவிடுவார்கள். இந்த சடுதியான செயற்பாட்டினால் குழந்தைகளின் மனம் உளவியல் அடிப்படையில் பாதிக்கப்படுகின்றது. தாம் ஏதோ தவறுவிட்டவர்களாக உணர்வார்கள். ஆனால் அந்த உறுப்பை தொடுவதனால் ஏற்படும் இன்பத்தை அவர்கள் அனுபவிக்க விருப்புவதால் தொடர்ந்தும் தொடுவார்கள். அதனுடன் விளையாடுவர்கள். ஆனால்;; குழந்தைகள் தொடர்ந்தும் அவற்றுடன் விளையாடுவதை தடுப்பதற்காக பெற்றோர்கள் அல்லது வளர்ந்தவர்கள் தண்டனைகள் வழங்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்?; தாம் அந்த உறுப்புகளுடன் விளையாடுவது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு அது இன்பம் அளிப்பதால் களவாக செய்வதற்கு ஆரம்பிப்பார்கள். இதனால்; தாம் ஏதோ களவு செய்வது போன்ற ஒரு குற்ற உணர்வும் அவர்களை பற்றிக்கொண்டுவிடும். இது இவர்களிடம் உளவியல் அடிப்படையிலான உள் முரண்பாட்டை உருவாக்கிவடும் (internal conflict or cognitive dissonance).

இவ்வாறான உள்முரண்பாடு (internal conflict or cognitive dissonance) குழந்தைகளின் பால்தன்மையை அடையாளமிடுவதிலும் உருவாகின்றது. குறிப்பாக குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களது வெளி பால் உறுப்புகைளை அடிப்படையாகக் கொண்டு ஆண் அல்லது பெண் என அவர்களது பால் அடையாளம் இடப்படுகின்றது. தொடர்ச்சியாக இந்த வேறுபாடானது அக் குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்படும் உடைகளிலும் அதற்கான நிறங்களிலும் வித்தியாசமான வேறுபாட்டை உருவாக்கி இரு பால்;களும் வேறுவேறரானவர்கள் என்றும் எதிர் பால் தன்மைகளுடையவர்கள் என கட்டைத்துவிடுகின்றது. இதற்காக அவர்களது உடல் தன்மைகள் மற்றும் செயற்பாடுகளையும் வரையறை செய்வதள் மூலம் இயல்பான தன்மைகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் சில அல்லது பல குழந்தைகள் தமது ஆண் மற்றும் பெண் பால் அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட இயற்கையான பால் அடையாளங்களை இழந்துவிடுகின்றன அல்லது மறைத்துவிடுகின்றனர். இவ்வாறு ஒரு மனிதரை அவரது குழந்தைப்பருவத்திலையே தனது உடலுக்கு எதிராக பல்வேறு வழிகளினுடாக குறிப்பாக பெற்றோர் மூலமாக இந்த சமூகம் திருப்பிவிடுகின்றது. இதன் மூலம் முதன்முறையாக அக் குழந்தை உளவியல் அடிப்படையில் முடமாக்கப்படுகின்றார். இதனால் உருவாகும் உளவியல் பிரச்சனைகளை அவர்களது வாழ்க்;கை முழுக்க எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக இனியொரு வெளியிட்ட மூன்றாவது பால் அடையாளத்திற்கான அங்கீகாரம் இப் பிரச்சனை தொடர்பானதே.

இதன் தொடர்ச்சியாக பிற அல்லது “எதிர்” பாலுடனான குழந்தைகளின் உறவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது குழந்தைகளின் குற்றவுணர்வற்ற வக்கிரமற்ற இயல்பான “அம்மா அப்பா” விளையாட்டுக்கள் தவறானவையாகப் பெற்றோர்களாலும் வயதால் வளர்ந்தவர்களாலும் பார்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாதபோது தண்டிக்கப்படுகின்றன. இது பிற அல்லது எதிர் பாலுக்கு எதிரான உணர்வுகளையும் அதேவேளை கவர்ச்சியையும் அக் குழந்தையில் உருவாக்கிவிடுகின்றது. மறுபுறம் வயதால் வளர்ந்த மனிதர்கள் சிலர் இக் குழந்தைகளை தமது காம உணர்வின் தேவைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் பாலியல் அடிப்படையிலான துஸ்பிரயோகம் செய்கின்றனர். இதுவும் அக் குழந்தைகளில் உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கின்றது எனக் கூறுகின்றனர். உதாரணமாக சுய மதிப்பீடு (selfesteem) மீதான தாக்கம் மற்றும் மனஅழுத்தம் (PTSD) போன்றன ஏற்பட காரணமாகின்றது. சமூகத்தில் ;நடைபெறும் இவ்வாறனா செயற்பாடுகளுக்கு அப்பால் சிக்மன்பிரைட் (Sigmund Freud) கூறும் பால் உறுப்புகள் தொடர்பான குழந்தைகளின் உளவியலும் (உதாரணமாக: oedipus complex) குழந்தைகளில் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இத்துடன் இக் குழந்தைகள் அனுபவிக்கும் வறுமை கல்வியின்மை மற்றும் சுய பால் (sex) மற்றும் மனித பால் தன்மை (gender) அடையாளங்கள்; போன்ற பிரச்சனைகளும் இக் குழந்தைகளில் உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அனுபவித்திருப்போம். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனனில் நாம் வாழுவது ;ஆணாதிக்க இருபால் உறவின் மே;லாதிக்கம் (patriarchal heteronormative hegemony) நிலவுகின்ற ஒரு சமூகம்.

இந்த சமூகத்தில் காமம் பாலியல் மற்றும் அது தொடர்பான அறிவுகளும்; மற்றும் பெண்களுடன் சாதாரண அல்லது பேராசிரியர் ஸ்டேரிலிங் (Anne Fausto-Sterling) குறிப்பிடும் பொதுவான சமூகத்திற்கு (normative society) அப்பாற்பட்ட பால்> பால் தன்மை மற்றும் பாலியலுறவு அடையாளங்களை (identites) கொண்ட பிற மனிதர்களும் (hem. mem, trans, gays, lesbians, and bisexuals) என அனைத்தும் அடக்கப்படுகின்றன. இந்த மனிதர்கள் சாதாரண சமூகத்திற்கு (normative society) ஏற்றவாறு நெறிப்படுத்தப்பட்டு பொதுவான அடையாளங்களான ஆண் (man) பெண் (woman) ஆண்மை (masculine) பெண்மை (feminine) என்பன இரு துருவங்களாகக் கட்டமைக்கப்பட்டு (constructed) அமுல்படுத்தப்பட்டு வழிநடாத்தப்படுகின்றனர். உண்மையில் பெரும்பாலன மனிதர்கள் சமூகம் கட்டமைத்தவாறு இரு துருவங்களாக இல்லை (not polar opposite). மாறாக இந்த எதிர் துருவங்களுக்கு இடைப்பட்ட தொடர்ச்சியின் (continuum) பல இடங்களில் இருக்கின்றனர் என யூடித் பட்லர் (Judith Buttler) போன்ற பல பெண்ணியவாதிகள் வாதிடுகின்றார்கள். ஆனால் இந்த சமூகமானது மனிதர்களின் பாலியலுறவானது இரு துருவங்களிலும் இருக்கின்ற ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையில் மட்டுமே நடைபெறுகின்ற (heteronormative) ஒரு உறவாகவும்; அதுவே இயற்கையானது என்றும் மேலதிகமாகவும் ஒன்றைக் கட்டமைக்கின்றது. இதன் மூலம் மனிதர்களின் விருப்பங்கள் ஆசைகள் கூட ஒழுங்கமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேவேளை இத் துருவங்களிக்கிடையில் இருக்கின்ற மனிதர்களை இத் துருவங்களை நோக்கி நகர்த்துகின்றனர் அல்லது அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு புறக்கணித்து அடக்கப்படுகின்றனர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக கணிக்கப்பட்டு இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு பூக்கோ (foucault) கூறுவது போல் பல்வேறு ஆணாதிக்க சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, சமயங்கள், இராணுவம், மற்றும் சிறைச்சாலைகள் மூலமாக நிறைவேற்றுகின்றன. இதனால்தான் பெண்ணியவாதிகள் ஆணாதிக்க சமூகத்தைக் கட்டிக்காப்பதில் ஒருதார இருபாலுறவு (monogamous heteronormative relationship) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது எனக் கூறுகின்றனர். உதாரணமாக எழுத்தாளர் இளங்கோ (DSe) தனது வலைப்பதிவில் சுமார் 660 000 அமெரிக்க இராணுவத்தினர் தமது பாலியல் தன்மைகளை மறைத்து வாழ்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது ஜனநாயகம் மற்றும் பாலியல் சுதந்திரம் ஒப்பிட்டளவில் இருப்பதாகக் கூறப்படும் வட அமெரிக்காவிலையே இப்படியான நிலைமை எனின் பிற நாடுகளின் நிலைமைகளை உணர்ந்து கொள்ளலாம்.

குழந்தைகளாக இருந்த காலத்தில் தமது பாலியல் தொடர்பான எதிர்மறை அனுபவங்களைக் பெற்ற குழந்தைகள் வளர்ந்து வாலிப வயதை அடைந்தவுடன் மேலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இயற்கையாக இவர்களுள் எழும் காம சக்தி அவர்களை உடல் மன ரீதியாக அலைக்கலைக்கின்றது. ஆனால் மறுபுறம் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பயம் மற்றும் தண்டணைகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே காமத்தின் தேவையை பூர்த்தி அல்லது திருப்தி செய்வதற்கு தமது அறிவுக்குட்பட்ட சரியான அல்லது தவறான குறுக்கு வழிகளை கண்டுபிடிக்கின்றனர் அல்லது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். முதலாவது சுயஇன்ப (masturbation) செயற்பாட்டில் ஈடுபடுதல். இதில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆனாலும் ஒரு குற்றவுணர்வுடன் களவாகவே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு மறுதலையாக பெரும்பாலான பெண்கள் அவ்வாறான குற்றவுணர்வுடன்கூட சுய இன்ப செயற்பாட்டில் பொரும்பாலும் ஈடுபடுவதில்லை. குறிப்பாக ஆண்களைப் போல் அல்லாது பெண்களுக்கு இது தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்கு பல சமூகத் தடைகள் இருக்கின்றன. ஆகவே இது தொடர்பான அறியாமையிலையே தமது காலத்தை பெரும்பாலும் இவர்கள் கழித்துவிடுகின்றனர். சுய இன்பதிற்கு மாறாக அல்லது மேலாக காதல் என்ற முகமுடியும் காமத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இளம் வயதில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால்; காதல் என்பது கூட பல சமூகங்களில் தவறாகப் பார்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது. சில சமூகங்களில் காதல் செய்வதற்காக மனிதர்கள் தண்டிக்கவும்;படுகின்றனர். காதல் செய்கின்றேன் என்று கூட கூறமுடியாத ஒரு சமூகத்தில் காமத்தின் தேவையை எப்படி கூறுவது அல்லது பூர்த்திசெய்வது. விளைவு காம உணர்வுகளும் அதன் சக்திகளும் அடக்கப்படுகின்றன அல்லது வேறு செயற்பாடுகள் மூலம் திசைதிருப்படுகின்றன. அல்லது நேரடியாக அனுகாது மறைமுகமான அல்லது சுற்றிவளைத்து மாற்று வழிகளில் தமது காமம் மற்றும் பாலியலுறவுக்கான தேவைகளைப் பெறுவதற்கு மனிதர்கள் குறிப்பாக ஆண்கள் முயற்சிக்கின்றனர். இதனால் தமக்கும் பிற மனிதர்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகளையும் வேதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாலியல் தூஸ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபடுகின்றனர். ஆண்களின் இவ்வாறன தன்மைகள் இயற்கையானதா அல்லது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதா என்பதில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களின் இந்த தன்மையானது ஆண்களுக்கு பாலியல் ரீதியாக சாதகமானதாகவும் பெண்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. ஏனனில் பெண்கள் பொதுவாகவே தம் உணர்வுகளை தேவைகளை அடக்கி அல்லது அவற்றைப் பற்றிய புரிதல் இல்லாது அல்லது புரிதல் இருப்பினும் நிவர்த்திசெய்ய வழி இல்லாது அமைதியாக வாழ பழகிக் கொள்கின்றனர் அல்லது அவ்வாறு வாழ்வதே சரியானது என கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர்.

மனித காம சக்தி 14 வயதிலிருந்து 21 வயதுக்குள் அதன் ஊச்சத்தை அடைவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த ஆணாதிக்க இருபால் உறவு கொண்டதும் மற்று காமத்திற்கு எதிரானதுமான சமூகத்தால் குறிப்பாக ஆசிய அல்லது மேலும் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் இந்த சக்தி அதன் தேவையை அனுபவிக்காது வீரயமாக்கப்படுகின்றது. இச் சமூகங்களில் உள்ள ஆண்களைப் பொறுத்தவரை கல்வி கற்று வேலை ஒன்று எடுத்தபின் குடும்பபொறுப்புகளையும் பூர்த்திசெய்த பின் திருமணம் மூலம் காமமம் தனது இறங்குமுகத்தில் இருக்கும் தருணத்தில் காமத்தின் தேவையை பூர்த்தி செய்ய இந்த சமூகம் அனுமதிக்கின்றது. இதில்கூட காமத்தின் மீதான அக்கறை என்பதைவிட தலைமுறை அதாவது சந்ததியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே காமம் அனுமதிக்கப்படுகின்றது. இதனால்தான் திருமணம் முடிந்து ஒன்பதாவது மாதத்தில் குழந்தை ஒன்றை இந்த சமூகம் எதிர்பார்க்கின்றது. ஆம் திருமணம் செய்தவர்களின் முதல் கடமை குழந்தை பெறுவது. ஆவ்வாறு குழந்தை பெறாதவர்கள் தொடர்பாக ஒரு எதிர்மறை பார்வையையும் இந்த சமூகம் கொண்டுள்ளது. இவ்வாறு சமூகம் தனக்குள்ளேயே முரண்பாடுகளை கொண்டுள்ளது. மறுபுறம் இளம் வயதில் பெண்களை திருமணம் செய்துகொடுப்பதால் அவர்கள் காமத்தின் இன்பத்தை அனுபவிக்கின்றார்கள் என்பதல்ல. மாறாக பெண்கள் ஆண்களைவிட மிகமோசமான எதிர் மறை அனுபவங்கைளை தமது காம மற்றும் பாலியலுறவு தொடர்பாக பெறுகின்றனர். இதுபற்றி விரிவாக மூன்றாவது பகுதியில் பார்ப்போம்.

காமத்தை காமத்திற்காக அதன் ஆனந்தமான அனுபவத்திற்காக அதன் இன்பத்திற்காக அனுபவிப்பதை அனுமதிப்பதற்கு இந்த சமூகத்தில் பெரும் தயக்கம் இருக்கின்றது. இது எதனால்? ஆணாதிக்க சமூக கருத்தியலினாலா? ஆண்களினால் உருவாக்கப்பட்ட சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால்? ஆல்லது இருபால் உறவையும் ஒருதரா திருமணத்தையும் நடைமுறையில் கட்டிக்காப்பதற்காகவா? ஆப்படி எனின் பாலியல் தொழிலாளர்கள் அதிலும் குறிபாக பெண் பாலியல் தொழிலாளர்கள் ஏன் தேவைப்படுகின்றனர்? இவர்களது சேவை யாருக்குத் தேவை? மறுபுறம் இதன் மூலம் நன்மை பெறுகின்றவர்கள் அப் பாலியல் தொழிலாளர்களை அவமதிப்பதும் அடக்கி ஒடுக்குவதும் ஏன்? இப்படி பல கேள்விகள் உண்டு. அதேவேளை காமம் தொடர்பான தேடல்களும் அது முக்கியத்துவமானது என்பதற்கான ஆதாரங்களும் வரலாற்றில உள்ளன. அதேவேளை சமூகம் அதற்கு எதிரான செயற்பட்டதற்கான ஆதராங்களும் ஏன் அவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்த பல ஆய்வுகளும்; உள்ளன.

ஆனால் இந்த அறிவுகள் எல்லாம் பெரும்பாலும் முடக்கப்பட்டே இருக்கின்றன. அல்லது தவறாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பெண்கள் மற்றும் “பிற பால்” அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள், காமம் மற்றும் பாலியல் உறவுகளினால் தொடர்ந்தும் கஸ்டப்படுவது மட்டுமல்ல இந்த சமூகத்தால் தொடர்ந்தும் அவர்களது காமம் மற்றும் பாலியலுறவுகள் சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் வருகின்றன. இளமைப் பருவதத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் இவ்வாறன காமம் மற்றும் பாலியலுறவு தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுதொடர்பான வெளிப்படையான கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும். முதலில் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மனிதர்களின் பால் (sex), பால்தன்மை (gender) மற்றும் பாலியல் தன்மை (sexuality) அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். ஒவ்வொரு மனிதரும் தான் உணர்கின்ற பால், பால்த்தன்மை மற்றும் பாலியல் தன்மை அடையாளத்துடன் வளர்வதற்கும் வாழ்வதற்குமான வழிலையும் சூழலையும் உருவாக்கவேண்டும். மேலும் ஒரு மனிதருக்கு இன்னொரு மனிதர் மீது ஏற்படும் விருப்பத்தை தெரிவிப்பதற்கான தைரியமான மனநிலையையும் மனிதர்களிடம் ஏற்படுத்தவேண்டும். அதேவேளை மற்ற மனிதர் தனக்கு விருப்பமில்லை எனக் கூறுவராயின் அதை புரிந்துகொண்டு ஏற்கும் பக்குவத்தையும் மனிதர்களிடம் வளர்க்கவேண்டும். இதற்கான சாதகமான நேர்மைறையான சூழலை ஒவ்வொரு சமூகமும் உருவாக்கவேண்டும். அப்பொழுது பெரும்பாலான மனிதர்கள் ஆரோக்கிமாக வளர்வதற்கும் வாழ்வதற்குமான பிற மனிதர்களையும் அவர்களது உரிமைகளையும் மதிப்பதற்கான சாத்தியங்கள் உருவாகலாம்

தேவையும் அவசியமும் கருதி இக்கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *