–விக்கினேஸ்வரி– பெண் -சஞ்சிகைக்காக –
தாமரைச்செல்வியின் படைப்புகள்: -சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?
உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை அள்ளிக் கொடுக்கின்றது. இத் தாகத்தால் தோன்றும் கருவை தனது அனுபவத்தின் சாரத்தை ஊட்டி வளர்த்து உரிய நேரத்தில் பிரசவிக்கும் போதுதான் அது அமரத்துவமான படைப்பாகின்றது. திடீர்த் திருப்பங்களையும் அதிகமான கற்பனைகளையும் கலந்து மக்களை மயக்க முயல்வது போலித்தனமான நடிப்பாகும் மக்களின் பார்வைக்கு சுலபமாக எட்டக் கூடிய நியாயமான பாதையைக் காட்டுவது தான் பயன் தரும் படைப்பாகும்.-தாமரைச்செல்வி
நீங்கள் எழுத்து துறையில் பிரவேசித்தமைக்கான நோக்கம் என்ன?
வாசிப்பது எனக்கு ரொம்ப பிடித்த விடயம் என்னை எழுதத் தூண்டியதும் அந்த ஆர்வமே நான் பார்த்து வளர்ந்த பிரதேசத்தை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசையாகும் சமூகத்தை கவனிக்க வைக்கும் விடயங்களை எழுதுவது சிறப்பானது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் வாழ்ந்த விவசாய சூழலை,அந்த ஏழை மக்கள் வாழ்வை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
நீங்கள் எழுத்துக்களில் அதிகமாக உள்வாங்கும் விடயம் என்ன?
நான் வாழ்ந்த சமூகச்+சூழலில் நான் காண நேர்ந்த… என்னால் உணர முடிந்த எம் நாட்டின் ஏழை மக்களின் பிரச்சினைகளே எனது படைப்புகளில் கருக்களாகின்றன. கடந்த போர்க்காலச் சூழலுக்கு முகம் கொடுத்து வாழந்த மக்களின் பல்வேறு உணர்வுகளையும் அவலங்களையும் எனது எழுத்துக்கள் சித்தரிக்கின்றன.
எமது மண்ணில் நடந்த உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாகவும் கருதலாம். எமது மண்ணின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது காலத்தின் தேவையாகும். அப்போது தான் மக்களின் உண்மையான பிரச்சினைகளயும் பல வருடங்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த மக்களின் உணர்வுகளையும் மற்றைய மக்களும் நாளைய சந்ததியினரும் அறிந்து கொள்ள முடியும். சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து அகதியாகி குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும் ஒருபுறம் துரத்த உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பதுங்குகுழியின் பக்கத்துணையுடன் வாழ்ந்த மக்களின் நடுவில் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டே தான் இப்படைப்புக்களை எழுதி தொகுப்பாக்க முனைந்தேன்
உங்கள் புனைகதைகளில் அதிகமானவை இடப்பெயர்வை மையப்படுத்தி இருக்கின்றது இது பற்றி கூற முடியுமா?
அதிகமான புனைகதைகள் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதியவை. அதனால் எல்லாக் கதைகளுக்கும் பொதுவான அடித்தளமாக இடப்பெயர்வு இருக்கின்றது. அதனால்தான் ஒரே பின்னணி எல்லாக் கதைகளிலும் பரவும் போது ஒரே சாயலைத் தரம் தன்மை ஏற்பட்டிருக்கின்றது. இது வாசிப்பவர் மத்தியில் சிறிது சலிப்பையும் தரக் கூடும் ஆனாலும் ஒரே மண்ணில் ஒரே காலகட்டத்தில் வாழும் இந்த மனிதர்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள் இந்த விதமாய் அமைவதை தவிர்க்க முடியாமலே இருக்கின்றது. எத்தனையோ அவலங்களுகு;கு மத்தியிலும் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப்பற்றி எழுதுவது காலத்தின் தேவையாகின்றது. இதுவே மனநிறைவையும் தருகின்றது.
நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் ஒரு சிறந்த படைப்பு என்பது எப்படிப்பட்டது? அது பற்றிய உங்கள் கருத்து என்ன?
தனக்காக மட்டும் சிந்திக்காமல் பிறருக்காகவும் சிந்திப்பவ ன்/ள் தான் உண்மையான எழுத்தாளகின்றனர் அவனது/அவளது சிந்தனை மிகவும் பரந்தது. சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் அவனை/ அவளை தாக்கி கொண்டேயிருக்கின்றது உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை அள்ளிக் கொடுக்கின்றது. இத் தாகத்தால் தோன்றும் கருவை தனது அனுபவத்தின் சாரத்தை ஊட்டி வளர்த்து உரிய நேரத்தில் பிரசவிக்கும் போதுதான் அது அமரத்துவமான படைப்பாகின்றது. திடீர்த் திருப்பங்களையும் அதிகமான கற்பனைகளையும் கலந்து மக்களை மயக்க முயல்வது போலித்தனமான நடிப்பாகும் மக்களின் பார்வைக்கு சுலபமாக எட்டக் கூடிய நியாயமான பாதையைக் காட்டுவது தான் பயன் தரும் படைப்பாகும். சோகமும் சோதனைகளும் நிறைந்த வாழ்வில் பலத்தையும் நம்பிக்கையையும் ஊட்டி ஒருவிதத்தெம்பை ஏற்படுத்துவது எழுத்தாளனின் கடமையாகும்.
புனைகதைகளில் பெண்ணிய சிந்தனைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள் அந்த வகையில் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி உங்கள் கரத்து என்ன ?
சுமூகத்தில் பெண்ணடிமைத்தனம், சீதனப்பிரச்சினை என்பன புரையோடியிருந்த போது அவற்றை படைப்புக்களில் வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருந்தது. தமிழச்சமூகத்தின் பெண்ணின் நிலை,பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களது அனுபவங்கள்,பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு தான் படைப்பில் பெண்களை சித்தரிக்க முடியும்.
சீதனப்பிரச்சினை பெண்களின் வாழ்வை அதிகமாக சீர்குலைத்து விடுகின்றது. இதனால் மனமுடைந்து கூனிக்குறுகிப்போய் விடுகின்றார்கள் பொதுவாக தமிழ் மக்களிடையே தான் இந்த சீதனப் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது இதைச் சாடுவதும், அதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவதும் தமிழ் எழுத்தாளர்களுடைய கடமை,ஆண் எழுத்தாளர்கள் இதன் மீது ஒரு மேலோட்டமான சிந்தனையைத்தான் செலுத்துவார்கள். ஆனால் யதாhத்த பூர்வமான – ஆணித்தரமான கண்ணோட்டத்தில் நோக்குகின்ற திறமை பெண் எழுத்தாளர்களுக்குத் தான் இருக்கும் குடும்பத்தில் அதிகமான வலிகளை ஆண்களைவிட பெண்களே சுமக்கின்றார்கள். பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர்இது இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும்.
பெண்கள் கல்வியறிவு உடையவர்களாகவும் சுயதேவையை தாமே பூர்த்தி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். உத்தியோகம் பார்க்கும் ஆணுக்கு இருக்கின்ற உரிமை உத்தியோகம் பார்க்கும் பெண்ணுக்கு இல்லாமல் போவது வேதனையான விடயம் இல்லையா? இத்தகைய பாகுபாடுகள் நம் சமூகங்களிடையே இழையோடி உள்ளனன. அதனை படைப்பில் வெளிக்கொணர எழுத்தாளர்கள் முன்வர வேண்டும். அத்தோடு இந்நிலமை முற்றுமுழுதான மாறுதலை கொண்டமைய வேண்டும்.
உங்கள் படைப்புகளின் செயல்நிலை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பத்திரிகை, சஞ்சிகைகளில் 200க்கு மற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன் அதில் உயிர் இருக்கும் வரை(2000)நாவல் தினக்குரலில் தொடராக வெளிவந்தது. எனினும் அதனை நூலுருவாக்க முடியவில்லை மற்றும் இரு குறுநாவல்களை எழுதியுள்ளேன் வேள்வித்தீ -1994 இல் வெளிவந்தது. அவர்கள் தேவர்களின் வாரிசுகள் சஞ்சிகைகளில் மட்டுமே வெளிவந்தது. இதனைவிட சிறுகதைகளில் 3 தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றேன். கவிதைகளும் எழுதியுள்ள போதிலம் தொகுதிகளாக்க முனையவில்லை.1974 ஆம் ஆண்டு எழுத ஆரம்பத்ததிலிருந்து எனது படைப்புக்கள் பிரசரிக்கப்பட்ட பத்திரிகைகள்,சஞ்சிகைகள் அனைத்தும் 1987 ஆம் ஆண்டு எமது வீடு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்ட அத்தனை படைப்புக்களும் சான்றிதழ்களும் அழிந்து விட்டன. இவை அழிந்ததினால் ஒரு படைப்பாளிக்கு ஏற்படக் கூடிய மனவேதனையை இன்னொரு படைப்பாளியால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அழிந்து போய்விட்ட நிலையில் இருக்கின்வற்றையும் சிரமம்பட்டு தேடி எடுத்தவைகளையும் நூல் வடிவில் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்ற சிந்தனை எழுந்து பல சிரமங்களை எதிர்கொண்டு பொருளாதார சிக்கல்களுகு;கு முகம் கொடுத்து வெளிவந்த இந்த எழுத்துக்கள் மக்களால் வாசிக்கப்பட வேண்டும் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டால் தான் நிறைய நிறைய நூல்கள் வெளிவர வாய்ப்பு ஏற்படும். நேர்மை, வறுமை உழைப்பு ஆகியவற்றை எழுதி வந்தேன். இவற்றை தாண்டி போரின் போதான மக்களின் வாழ்க்கை நிலை தொடர்ந்து போரில் இருந்து மக்கள் எப்படி மீண்டு வந்தனர் போன்ற விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் எனது எழுத்துக்கள் அமைந்தன. சமூக மாற்றத்துக்குகேற்ப எழுத்துக்களில் மாற்றங்கள் அமைய வேண்டும். ஆந்த வகையில் எனது எழுத்துக்கள் சென்றன.
எழுத்தார்வம் தவிர்த்து ஏனைய துறைகளில் ஆர்வம் உள்ளதா?
ஆம் எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும் முறைப்படி படிக்கவில்லை பல ஓவியர்களது ஓவியங்களைப் பார்த்து வரைந்து பழகியது தான் சுடர்,ஈழநாடு,சித்ரா,போன்ற பத்திரிகைகளில் தான் என் ஓவியங்கள் வந்துள்ளன. ஏன் மற்ற பத்திரிகைகள் என்னுடைய ஆக்கத்திற்கு தந்த இடத்தை அவை தரவில்லை அது ஏனெ;று தெரியவில்லை.
ஒரு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு இப்படி ஓவியம்,எழுத்து என்று கலைத்துறையில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றீர்களே அது எப்படி சாத்தியமாகின்றது?
சிரமம் தான் என்றாலும் எனது விடாமுயற்சி மற்றும் கணவர் தரும் ஊக்கம்,பெற்றோர் தரும் தன்னம்பிக்கை என்பன என்னை விடாமல் எழுத வைத்தது. பெண்ணுக்கு குடும்ப ஆதரவு கட்டாயம் தேவை.
வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?
வாசிக்க வேண்டும். வாசிப்பு முக்கியமானது வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே எழுத முடியும். அத்தோடு படைப்புக்கள் பற்றிய அறிவும் முக்கியமானது. தாம் வாழும் சமூகத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றை மனதில் உள் வாங்கி எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். எமது காலத்தைப் போன்ற சூழல் தற்போது இல்லை. மாற்றங்கள் நிறைந்த வசதி வாய்ப்புக்களுடன் கூடிய சுழ+ல் காணப்படுகின்றது. ஆகையால் சந்தர்ப்பத்தைப் பயனுள்ளதாக்குங்கள்…
*******************************************************************************************************************************
தாமரைச் செல்வி எனும் புனைபெயரைக்கொண்ட ரதிதேவி கந்தசாமி அவர்கள் ஈழத்தின் நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் உடையவராகக் கொள்ளப்படுகின்றார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பிரதேசத்தில் குமாரபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் 1973 இல் எழுத்துத்துறையில் பிரவேசித்தார். ஆரம்பத்தில் இலங்கை வானொலியின் பல நிகழ்ச்சிகளுக்கு சிறுகதைகளை எழுதினார். 1974இல் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்தார். ஈழத்துப் பெண் எடிழுத்தாளர்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்த இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் குறுநாவல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்
(1977) சுமைகள்
(1992) விண்ணில் அல்ல விடிவெள்ளி
(1993) தாகம்
(1994 ) வேள்வித்தீ
(1998) ஒரு மழைக்கால இரவு
அழுவதற்கு நேரமில்லை
(2002) வன்னியாச்சி
(2003) வீதியெல்லாம் தோரணங்கள்
(2004) பச்சைவயல் கனவு
(2005) வன்னியாச்சி
ஆகிய புனைகதைகள் நூலுருப்பெற்றவையாகும். மேலும் பசி எனும் சிறுகதை தமிழ்நாடு ஜே டி இமயவர்மன் என்பவரால் குறும்பட படமாக எடுக்கப்பட்டு விம்பம் தமிழக்குறுந்திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப்பெற்றது. தாமரைச்செல்வி அவர்கள் தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திழரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.