அம்பையின் கதைகள் குறிப்பாக ‘காட்டில் ஒரு மான்’ என்ற தொகுப்பில் இருக்கும் கதைகள், இக்காலப் பெண்களுக்கும் அவர்களின் வாசிப்புக்கும் இன்னும், ஏற்றவையாக அதே வீரியத்துடன் இருக்கின்றன. அம்பை என்று சொன்னால் அதிகமானவர்கள் அடையாளப்படுத்தும் கதை ‘அம்மா கொலை செய்தார்’ என்ற கதையைத்தான். ஆனால், ‘காட்டில் ஒரு மான்’ தொகுப்பில் இருக்கும் பல கதைகள் அம்பையின் எழுத்தை அடையாளப்படுத்துபவையாக இருக்கின்றன.
இதற்குமுன் நான் அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தாலும், அந்தப் புத்தகம் ஏற்படுத்தாத பாதிப்பை இந்த புத்தகம் என்னில் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத்தொகுப்பில் இருக்கும் பல சிறுகதைகளில் அதன் கதாப்பாத்திரங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண்களாக, அந்த பெண்ணாக யோகி (நான்) வாழ்ந்திருக்கிறாள் என்று தோன்றியது. என் கதையை, யாரோ எழுதி அதை நானே படிக்க நேர்ந்தால் என் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிலையை பல கதைகளில் அனுபவித்தேன். குறிப்பாக ‘அடவி’ என்ற கதையில் வரும் செந்திருக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமைகள் அதிகம். செந்திரு ஒரு வனப்பிரியாக இருக்கிறாள். அவளின் தேடல்கள் வனத்தை நோக்கியே இருக்கின்றன. அவள் மனதிற்கு கிடைக்கும் அமைதி வனம்தான் கொடுக்கமுடியும் என அவள் நம்புகிறாள். அவளாகவே சமாதானம் ஆகும் வரை யாராளும் சமாதானம் ஆக மாட்டேன் என்கிறாள். தனக்கென அடையாளத்தை நிலைநிறுத்துவதிலும், தன் சுயத்தை மதிப்பதிலும் அவள் காட்டும் முனைப்பு அனைத்தும் யோகியுடைய குணாதிசயங்கள். இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்வது என்றால், செந்திரு நெடுந்தூரம் நடப்பவள். யோகியும் அப்படித்தான். நடை என்றால், உடற்பயிற்சிக்காகவும், பொழுது போவதற்காகவும் நடக்கும் நடையல்ல. அது ஒரு வேள்வி நடை. தேடலுக்காக நடப்பது. என்ன தேடல் என்பது அப்போதைய நிலவரம் குறித்து மேற்கொள்ளப்படும். இப்படியாக பல இடங்களில் நான் என்னையே கண்டு கட்டுண்டு கிடந்தேன்.
‘காட்டில் ஒரு மான்’ காலச்சுவடு பதிப்பகம் 2000-ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 17 கதைகள். வெவ்வேறு சிற்றிதழ்களில் வந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் வாசிப்புக்கு இந்தப் புத்தகத்தை கையில் எடுத்த போது வாசித்த முதல் கதை, ‘காட்டில் ஒரு மான்’ தான். அம்பையை அதிகம் சிலாகிக்க வைத்தக் கதை.
உண்மையில் இந்தக் கதையையே புத்தகத்தின் தொடக்க கதையாகவும் வைத்திருக்கலாம். இந்த ஒருகதையே மற்ற கதைகளை வாசிக்க தூண்டிவிடும் கோளாக இருந்தது எனக்கு.
அந்தக் கதையை வாசித்து முடித்ததும் தங்கம் அத்தையை பற்றி என்னுள் பலவாறான கற்பனைகள் எழுந்த வண்ணமே இருந்தன. என் பள்ளி தோழி ஒருத்தி 18 வயது கடந்தும் வயதுக்கு வராமல் இருந்த சம்பவம் என்னுள் நிழலாடத்தொடங்கியது. அவள் இப்போதும் வயதுக்கு வந்தாளா என்ற கேள்வி என்னுள் எழுவதுண்டு. இந்தக் கதையின் ஒர் இடத்தில் அத்தை மான் கதையை கூற தொடங்கும்போது நாமும் உச்சுகொட்ட தொடங்குகிறோம். ‘காட்டில் ஒரு மானுக்கு’ இப்போ வயது 21. சின்னக்கதைதான் என்றாலும் இத்தனைக்கால இடைவெளிக்கு அதில் பெறுவதற்கு இன்னும் விஷயம் உள்ளன.
இந்தத்தொகுப்பில் அம்பை ‘பயணம்’ என்ற தலைப்பில் 3 கதைகளை எழுதியுள்ளார். இரண்டு கதைகள் என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால், பயணம் 3 என்ற கதை ஒவ்வொரு பெண்ணுக்கும் நெருக்கமான கதையாக இருக்கும். அதில் மருதாயிக்கு நடக்கும் சில சம்பவங்கள் கிட்டதட்ட நமது எல்லாருடைய வாழ்விலும் நடக்கக்கூடியதுதான். நகைச்சுவை பாணியில்லை என்றாலும் நகைச்சுவையாகவே கதையை நான் கடந்துச்சென்றேன். அதில் ஒளிந்து கொண்டிக்கும் வலியையும் நான் உணராமல் இல்லை. அம்பை சம்பவங்களை கதையாக்கிய விதம் அருமை என்று நானே கூறிக்கொண்டேன்.
என்னை கவராத கதையாக ‘ஒரு எலி, ஒரு குருவி’ இருந்தது. அதன் புனைவு நன்றாக இருந்தாலும், என் மனதில் அந்தக் கதை ஒட்டவில்லை. ஒரு சம்பவமாகவும், செய்தியை சொல்வது போலவும்தான் எனக்கு இருந்தது. ஒரு வேளை, அந்தக் கதையை புரிந்துக்கொள்ளும் மொழி வேறாகக்கூட இருக்கலாம். தெரிந்தவர்கள் அல்லது அம்பையேகூட இதற்கு விளக்கமளிக்கலாம். அல்லது இந்தக் கதை அப்படிதான் என்றால், சரி; அப்படிதான்.
இந்தக் தொகுப்பில் நான் ரசித்த மற்றும் பாதித்த மற்றுமொறு கதை ‘பிரசுரிக்கப்படாத கைப்பிரதி’. இந்தக் கதையில் வரும் நாயகி திருமகளைப்போல் எல்லா பெண்களுக்கும் மனவலிமையிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இந்தக் கதையில் வரும் சில வரிகள்
‘எதை மீறுகிறோமோ அது முதலில் கைவர வேண்டும்’
‘ஒரு ஆண் செய்யும்போது சரியாகத் தோன்றும் ஒன்று, ஒரு பெண் அதைச் செய்தால் பைத்தியக்காரத்தனமாக ஏன் தோன்றுகிறது’
உள்ளிட்ட வரிகள் இந்தக் கதைக்குள் வேறொரு கதையை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டவையாகதான் நான் பார்க்கிறேன். முத்துமாதிரியான ஆண்களை சமாளிப்பதற்கு தனி ஒரு வலிமை பெண்களுக்கு வேண்டும்.
‘திக்கு’ என்ற கதையில் ‘லஷ்மிக்கும் ஒரு ஆதிசேஷன்’ என்ற மற்றுமொறு கதையும் இருக்கிறது. மிக நாசுக்காக உள்ளே புகுத்தப்பட்டக் கதை. பாபர் மசூதி இடிப்பையும் இந்தக் கதையில் பதிவு செய்திருக்கிறார் அம்பை. இந்தக் கதையை வாசிப்பவர்கள் அறிவார்கள் அம்மை இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்று. குறிப்பாக ‘செல்ல உறுமலா, முரட்டு உறுமலா என்று கணிக்க முடியாதபடி மெல்ல உறுமியது, சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, நாய் அவளைப் பார்த்தது’ போன்ற வரிகள் மேலோட்டமாக பார்க்கக்கூடியது அல்ல.
இந்தச் சிறுகதை தொகுப்பு என்னை கவர்ந்ததற்கு மேலும் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இந்த தொகுப்பில் வரும் கதைச் சொல்லிகள் அனைவரும் பெண்கள். சராசரி பெண்களின் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளை அழகாக இலக்கியமாக்குவது அம்பை போன்ற பெண்ணியவாதிகளால் சாத்தியப்பெற்றிருப்பது என்னைப்போன்ற வாசகிகளுக்கு பெருமை என்றே சொல்ல தோன்றுகிறது.
அதிக இடங்களில் அம்பை ராமாயண சம்பவங்களை இந்தக் கதைத்தொகுப்பில் புகுத்தியிருக்கிறார். மிக அழகாக மிகையில்லாமல் பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை. எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை. அம்பை விவரிக்கும் காடுகள் இந்த தொகுப்பு முழுவதும் பச்சை வாசம் வீசிக்கொண்டிருக்கின்றன.
நான் புத்தகங்களை வாசித்துவிட்டு, அது என்னை பாதிக்கும்போது ஒரு விமர்சனம் எழுதிவிட்டு அடுத்த புத்தகத்தை நோக்கி போய்விடுவேன். ஆனால், அம்பையின் இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, நானும் இப்படி ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதற்காக நான் அதிகம் உழைக்க தேவையில்லை. என்னிடம் இருக்கும் அனுபவங்கள் அதற்கு போதுமானவை. இருந்த போதும், கவிதை அல்லது கட்டுரை எழுத தெரிந்த எனக்கு சிறுகதை அமையவே மாட்டேன் என்கிறது.
ஆனால், நான் ஒரு கதையை எழுதிவிட்டால் அதில் அம்பையின் வாசம் வீசுவதை தவிர்க்க முடியாது என நினைக்கிறேன். நான் எழுதும் கதையில் அம்பையின் பாணி அல்லது அம்பையின் தாக்கம் இருக்கிறது
என்று சிலர் சொல்லக்கூடும். சொன்னால் என்ன?
அட்டகாசமான பதிவு. எனக்கும் மிகப் பிடித்தமான, இன்னும் மனதுக்குள் நிற்கும் தொகுதி அது. ஐ லவ் யூ அம்பை+யோகி!