-தினக்குரல் நாளேடு, இலங்கை
மலேசியாவில் தமிழ் பெண்கள், சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளார்கள்?
சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் சிந்தனை வளர்ச்சி இன்னும் மரபு சார்ந்துதான் இருக்கிறது. ஆனால், இளைய பெண்களிடத்தில் அது கொஞ்சம் மாறுப்பட்டிருப்பது காண முடிகிறது. அதற்காக அவர்கள் மரபை பின்பற்றவில்லை என்று கூறமுடியாது. இது கணினி யுகம். அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் தங்களை மேம்படுத்த முனைகிறார்கள்.
ஆனால், தங்கள் பொருளாதாரத்திற்காக இன்னும் பூ-மாலை கட்டுதல், பலகாரம் செய்தல், மணி பின்னுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவற்றையே கற்றுக்கொண்டிருக்காமல் இந்த காலத்திற்கு ஏற்றமாதிரியான தொழிற்துறைக்கு அவர்களின் சிந்தனை இன்னும் மாறவில்லை என்பது வருத்தம்தான். மலேசிய தமிழ்ப்பெண்கள் பண்பாடு, சமய பற்று மிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்தவே விரும்பும்கிறார்கள். பட்டப்படிப்பு படிக்கும் மக்களில் பெண்களே அதிகம். ஆயினும் கல்விக்கு வெளியில் அவர்களின் ஆற்றல் வெளிப்படுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வளர்ச்சி என்பது பொருளாதார சந்தையையும், முதலாளியத்தின் தேவையையும் சார்ந்து உள்ளது. உதாரணமாக இன்று மின்னூடக வளர்ச்சியை எல்லா பெண்களும் அறிந்திருந்தாலும் அதை கொண்டு சிந்தனை மாற்றத்திற்கு நகர விரும்புவதில்லை. பொழுது போக்கு கருவியாகவே அது உள்ளது. இலக்கிய ரீதியிலும் சிந்தனை மாற்றம் தேங்கி நிற்ப்பது ஒரு படைப்பாளியாக, எனக்கு வருத்தம் இருக்கிறதுதான்.