-பவநீதா லோகநாதன்-
வெளிப்பார்வைக்கு இது டேனியலின் வாழ்க்கை .ஆனால் எந்தப்படத்திலும் சொல்லப்படாத ஆழமான உண்மைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன .சாதி அரசியலை இவ்வளவு நேர்மையாக முன்வைத்த திரைப்படத்தை நான் பார்த்ததில்லை .எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை இத்தனை தைரியமாக நேர்மையாக எடுத்தமைக்கு இயக்குனருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் நாம் எல்லோருமே மனிதர்கள் .ஆனால் மனிதத்தை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் மதிப்பு கொடுகின்றோம் .
நடந்து வரும் பாதையில் அந்த மனிதர்கள் எதிர்ப்பட்டாலே பாவம் என்று கருதும் மக்களிடையே சாதி பற்றி எதுவும் யோசிக்காமல் படம் எடுக்கிறார் டேனியல் .சினிமாவில் தீண்டாமை இல்லை என்று ஒரு சமுக மாற்றத்தை ஏற்படுத்திய டேனியலை ஊரை விட்டே விரட்டி அடிக்கிறது சாதி .
ரோசம்மாவின் பெற்றோரிடம் ”சினிமாவில் நடித்தால் நீ என்ன உயர்ந்து விடுவாயா ? எங்க கிட்ட தான் வேலைக்கு வரணும்” என்ற மிரட்டல் வார்த்தைகளில் வெளிப்படுகிறது சாதி மேன்மை .ஒரு தலித் பெண் தியேட்டருக்குள் நுழைவதா என்று ஆவேசப்பட்டவர்கள் சாதியின் பெயரால் மனிதம் மறந்தவர்கள் .
ஒரு நாடார் எடுத்த படம் என்ற அடையாளத்தோடு டேனியலின் படம் திரையிடப்படுகிறது . நாடரும் தலித்தும் தங்கள் சாதியை இழிவு படுத்தியதாக கூறி டேனியலின் உழைப்பை நிராகரித்ததோடு வாழ்க்கையையும் அழிக்கிறார்கள் .சாதியின் பெயரால் துரத்தப்பட்ட ரோசி இரவின் நிசப்ததோடு தொலைந்து போகிறாள் . 30 வருடங்களுக்கு பிறகு , பிராமணர் எடுத்த சினிமாவை பேசும் படமாக அங்கீகரித்து விட்டு டேனியல் மலையாளியே அல்ல என்று சப்பைக்கட்டு கட்டும் போதும் சாதி தன் முகத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை என்று புரிகிறது .
இன்றும் கூட சாதியின் பெயரால் சிக்கித் தவிக்கும் படைப்புக்கள் இருக்கின்றன .
சாதியோடு இன்னொரு விடயத்தையும் இயக்குனர் பதிவு செய்கிறார் . டேனியலின் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் முதன் முதலாக ரோசியைப் பார்த்து “இவ்வளவு கறுப்பான பெண்ணா கதாநாயகி? ஆபிரிக்கர்களைப் போல இருப்பாளே ” என்று கூறும் போது நிறவெறி மனப்பான்மையை பதிவு செய்கிறார் .நமக்கு சாதி போல அவர்களுக்கு நிறப்பிரிவினை . உலகம் மாறப்போவதில்லை .மனிதன் தெய்வத்தை படைத்தான் ;தெய்வம் சாதியை படைத்தது .மனிதன் ,தெய்வம் ,சாதி மூன்றும் சேர்ந்து உலகை கூறு போட்டது . படத்தில் சொல்லப்படும் இந்த வசனம் எத்தனை முக்கியமானது .சினிமா சினிமாதான் .அது முழுக்க முழுக்க கலைஞனின் சினிமா .சாதிக்காரனின் சினிமா அல்ல என்பதை என்று நாம் உணரப்போகின்றோம் ?
படத்தின் ஜீவன் ரோசம்மாவின் கண்களில் இருப்பதை கண்டேன் .
ரோசம்மா மலையாளத்தின் முதல் கதாநாயகி .
அவளுக்கு நடந்த கொடுமை காலத்தால் அழித்து விடமுடியாது .
ஒரு தெருக்கூத்து பெண் முதன் முதலாக சினிமாவில் கதாநாயகி என்று கூறும் போது எப்படி உணர்வாள் ? சினிமா என்பதே என்னவென்று அறியாத அந்த பெண் தன்னை எல்லாம் சினிமாவில் நடிக்க அழைக்கின்றார்களே என்று மகிழ்வும் தயக்கமுமாக தோழியிடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறாள் .நான் என்ன அழகாவா இருக்கேன் என்று சந்தேகமாக கேட்க தோழி ஒரு கண்ணாடிச்சில்லில் அவள் முகத்தை காட்ட
அதில் தெரியும் ரோசம்மாவின் கறுத்த முகமும் பின்னணியில் சித்தாராவின் குரலில் ஒலிக்கும் பாடலும் மழை நேர வானவில்லின் அழகு …
இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த பாடல் …
ரோசம்மாவின் எளிமையான அழகுக்கு ஈடாக இசையில் தவழ்கிறது வரிகள்
ஆர்வத்தோடு முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றால் ரோசம்மா காணாத ஒரு வாழ்க்கை அவளுக்கு காத்திருந்தது .எல்லாரும் அவளை வரவேற்கிறார்கள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை .வீட்டு வாசலுக்கு வந்தாலே விரட்டுபவர்கள் மத்தியில் அவளை உள்ளே அழைகிறார்கள் . பெஞ்ச்சில் அமர சொல்ல தயங்கிய படியே தரையில் அமர்கிறாள் .தான் நாயர் பெண்ணாக நடிக்கப் போகிறோம் என்பதையே அவளால் நம்பமுடியவில்லை .அணிந்து கொள்ள நல்ல ஆடைகளும் ஜேனட்டின் நகைகளையும் தரும் போது நான் அணிந்தால் திரும்பி அதை நீங்கள் அணிவது பாவம் என்று மறுக்க ஜெனட் அன்போடு அவளை அணிய சொல்கிறாள் . நடப்பது கனவா நனவா என்று அறியாத நிலையில் சந்தோசத்தில் டேனியல் சொல்லும் படி செய்கிறாள் . எல்லாரும் உள்ளே அமர்ந்து உணவருந்தும் போது ரோசம்மா மட்டும் வெளியிலிருந்து கஞ்சி குடிக்கிறாள் .எல்லோரும் சாப்பிட்டு தட்டு வைத்து போக அதை சுத்தம் செய்யத் தொடங்குகிறாள் .டேனியலும் ஜெனட்டும் அவள் தயக்கத்தை போக்க முயற்சி செய்கிறார்கள் .ரோசம்மா என்ற பெயரை மாற்றி ரோசி என்று சூட்டுகிறார்கள் . இறுதி படப்பிடிப்பன்று தன் வேஷத்தை கலைத்து விட்டு பழைய ரோசம்மாவாக வெளியேறும் போது அவள் உணர்வது நம் மனதை கனப்படுத்துகிறது . பட வெளீட்டைப் பற்றி அறிவிக்கும் போது இதோ நம் நாயகி ரோசி என்று கூற வெட்கமும் சந்தோசமுமாய் ரோசி புன்னகைப்பது பேரழகு படம் பார்க்க ஆர்வமாக ஓடி வரும் ரோசியை சாதியை காரணம் காட்டி வெளியனுப்ப வாசலிலே இருட்டும் வரை ஏக்கத்தோடு காத்திருப்பதும் எல்லோரும் விலைமகள் என்று அடிக்க துரத்தும் போது செய்வதறியாது அழும்போதும் மனம் ரணப்படுகிறது . ரோசியாக சாந்தினி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் . கறுத்த முகமும் எப்போதும் ஆர்வப்பார்வை சிந்தும் கண்களும் குழந்தை சிரிப்புமாக மென் சோக கவிதையாக மனம் எங்கும் நிறைகிறாள் . தான் நடித்த படத்தை பார்க்க அனுமதிக்கபடாது விரட்டியடிக்கப்பட்ட அவளை அன்று வாழவிடாமல் இன்று வரலாற்றில் வாழவைத்துக் கொண்டிருக்கிறோம் .
ப்ரிதிவிராஜ் கண்களில் தெரிவது என்ன ?டேனியலின் ஆர்வமும் நம்பிக்கையும் அதைக் கொண்டு வருவது அத்தனை சாத்தியமா என்ன ? சினிமா ஆர்வம் என்கிற உணர்வு மனதிலிருந்து எழுகிறது அதை விழிகளின் வழியே கொண்டு வருவது அத்தனை சாத்தியமல்ல அற்புதமாக செய்திருக்கிறார் . கேமராவை கண்டு உற்சாக மடைவதும் ஊர் திரையரங்கை பெருமை பொங்க பார்ப்பதும் விளக்கு வெளிச்சத்தில் பிலிம் ரோலை காட்டி மம்தாவுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர் கண்களின் தெறிக்கும் ஆர்வம் அந்த வெளிச்சத்தை விட பிரகாசமானது . எல்லாவற்றையும் துறந்து பல் மருத்துவனாக வாழ்ந்து பின்னர் மீண்டும் சினிமா ஆசையில் தோற்று போனபின்னர் அவருள் தெரியும் விரக்தி , ஹாலிவுட்டில் படமெடுத்த கலைஞனின் வாழ்க்கையை சொல்லி தன் நிலைமை அதுதான் என்று கூறும் போதும், தன் கண்முன்னாலே பிலிம் ரோல்கள் எரிக்கப்படும் போதும் அமைதியாக வேதனையை சுமந்த படி அமர்திருப்பதும், மரணப்படுக்கையிலும் சினிமா பற்றிய எண்ணத்தோடு இறக்கும் போதும் … சினிமா ஆர்வத்தில் தன்னை தொலைத்தவர்களை எல்லாம் நமக்கு காட்சிபடுத்துகிறார் .ப்ருதிவிராஜ் எவ்வளவு அற்புதமான நடிகன் என்பதை இந்த படத்தில் உணரலாம்.
இந்த படத்தை பார்க்கும் சினிமா ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனும் நிச்சயம் அழுவான் .அவன் கண்ணீருக்குள் சினிமா என்கிற அற்புத கலை தரும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. தன் வாழ்க்கையை தொலைத்து மலையாள தேசத்துக்கு சினிமாவை கண்டுபிடித்து கொடுத்த டேனியல் பற்றி பேசுகிறது படம். நம் மத்தியில் இன்னும் வெளித்தெரியாத டேனியல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் . சினிமா ஆர்வம் கொண்டு சினிமாவை நேசிக்கும் நபர்களில் டேனியல் இருக்கிறார் . சினிமா எடுக்கும் ஆர்வத்தில் அலைந்து திரிபவன் ,முதல் பட வாய்ப்புக்காக ஏங்கி தவிப்பவன் ,பல போராட்டங்களுக்கு மத்தியில் படம் எடுப்பவன் ,எடுத்த படம் வெளியாகமலோ அங்கீகாரம் கிடைக்காமலோ இருப்பதை எண்ணி வருந்துபவன் இவர்களுக்குள் எல்லாம் டேனியல் வாழ்கிறார்.புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொருத்தனும் டேனியல் தான் . அவர்களின் கண்ணீர் எல்லாம் டேனியலுக்கு சமர்ப்பணம்