ச.விஜயலட்சுமி -இந்தியா)
உழைப்புச் சக்தியின் மிகக் குறைந்த பட்ச மதிப்பு,வாழ்க்கைக்குரிய உடலைக் காப்பாற்ற இன்றியமையாத தேவைகளின் மதிப்பாகும்–பிரெடெரிக் எங்கெல்ஸ்(மூலதனம்)
ஒரு சமூகத்தின் பண்பாடெனப்படுவது அக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையை,ஒழுகலாறுகளைச் சொல்வதுதான். வாழ்க்கை முறையின் அடிப்படையில் நமது பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் என சிலவற்றை ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் கடத்திச் செல்வதன் வாயிலாய் குறிப்பிட்ட மக்களுக்கு நீண்டதொரு பண்பாடு இருக்கிறதான பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோம். தமிழர் பண்பாடு, இந்தியப் பண்பாடு, ஆசியப்பண்பாடு இப்படி இடங்கள் தோறும் வெவ்வேறாய் ஒரே மனிதனுக்கு ஏராளமான பண்பாட்டு அடையாளங்களைத் தரமுடியும். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளாய்ப் பிறப்பதன் மூலம் அந்தத் தம்பதிகள் காலங் காலமாய் கடைப்பிடித்து வரும் சம்பிரதாயமான அத்தனை பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் அவர்களின் குழந்தைகளும் பின்பற்ற வேண்டியவர்களாகிறார்கள். இதனை வெறுமனே மரபார்ந்த சிந்தனைவயப்படலென சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் சில தலைமுறைகளும் அதிகபட்சமாக நூற்றாண்டுகளாகவும் இப்படியானதொரு வாழ்க்கை முறையை நமது சமூகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. நுட்பமாய் அதனைக் கவனிக்கையில்தான் வெவ்வேறு காலகட்டங்களில் சில அத்யாவசியமான தேவைகள் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.மாற்றியாக வேண்டியதென சிக்கலான பல இன்றளவில் மாறாமலிருப்பதன் பின்னணியை ஆராயவேண்டியது அவசியமாகும்.
பெண் விடுதலைக் குறித்தும் பெண்ணுடல் குறித்தும் பெரும் விவாதங்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்தில் பெண்களின் பண்பாடு எது? என்பதையும் பண்பாட்டில் பெண்களின் இடம் எது என்பதையும் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியுள்ளது. சற்றுக் குழப்பமான இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இதுவரையிலான பெண்களுக்கான பண்பாடு முழுக்கவும் ஆண் மனதின் ஆதிக்க மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்டதே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பண்பாடு குறிப்பிட்ட இனத்திற்கும் ,நிலத்திற்கும் உரியதாயினும் மாற்றத்திற்குரியது. ஒவ்வொரு காலகட்டத்தின் வாழ்வியல் தேவைகளும் சில புதிய வழக்கங்களைக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கான பண்பாட்டினை பொருள்சார் பண்பாடு மற்றும் பொருள்சாரா பண்பாடு என பொதுவாக வகைப்படுத்தலாம். உணவு,உடை சார்ந்த பருண்மையான பொருளுக்கு ஆட்பட்டவை பொருளியல் சார்ந்ததெனின் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு,களவு,கற்பு முதலானவை பொருளியல் சாரா பண்பாடாகக் கொள்ளலாம்.பொருளியல் சார்ந்தவை காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதைப்போல பொருளியல் சாராதவை கட்டமைக்கப்பட்டதன் தீவிரத்திற்கேற்ப எளிதில் மாற்ற முடியாத சக்கரவியூகங்களைக் கொண்டதாயிருக்கின்றன.
சங்ககாலத்தில் பெண்ணின் உடல் குறித்த கட்டுப்பாடு பண்பாட்டின் பெயரால் அனுசரிக்கப்பட்டதை உடலரசியல் குறித்து விரிவான விவாதங்கள் சுழன்றுவரும் இன்றைய நிலையில் ஆராய்வது பொருத்தமாயிருக்கும். இவ்வகையில் இலக்கியத்தின் மூலமாக அறியவரும் பெண்ணடிமைத்தனத்தின் உச்சபட்சமான நிலையைத் தெரிந்துகொள்ள ஒற்றைப்பாடலொன்றைத் தேர்வது பொருத்தமாயிருக்கும். சங்க இலக்கியத்தில் பெருங்கோப்பெண்டின் (புறநானூறு 246) பாடல் உடன்கட்டை ஏறுதல் தொடர்பான பல கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
எரிமூழ்கும் எரிமலர் காலத்தின் தடயம்:
“பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்க’எனச் சொல்லாது,ஒழிக’என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்ளெட் சாந்தொடு,புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை,வல்சி ஆக
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுகதில்ல;எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென,அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே!
திணை-பொதுவியல் துறை-ஆனந்தப்பையுள்”
புறநானூறு 246
இப்பாடலின் மையக்கருத்து:
1.நெய் மற்றும் எண்ணெய் கலப்பில்லாத நீர்சோற்றை உண்ண வேண்டும்
2.எள்துவையல்,புளியிட்ட வேளைக்கீரைமட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ளப்பெறுதல் வேண்டும்.
3.சுகமாக தூங்கும் படியாக பாயில் படுக்கக் கூடாது.கற்கள் நிறைந்த தரையில் படுக்க வேண்டும்.
4.இத்தகு கொடுமையினும் உடன்கட்டை ஏறுவது தடாகத்தில் குளிப்பது போன்றது.ஆதலால் என்னைத்தடுக்காதீர்கள் சான்றோர்களே.
பழந்தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கிய,இலக்கணநூல்களிலும் இதுகுறித்தான செய்திகளைப்பார்க்கமுடிகிறது.
தொல்காப்பியத்தில் ”நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇ(புறத்திணையியல் ,நூற்பா-19)” என்றவரி புறப்பொருள் வெண்பாமாலையில் (காஞ்சிப்படலம்-23) கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறுவதைக் குறிக்கிறது. மணிமேகலையின் ஆதிரை உடன்கட்டை ஏறும் முயற்சி,கம்பராமாயணத்தில் உடன்கட்டை ஏறியதாக தசரதனின் அறுபதினாயிரம் மனைவியர் (அயோத்தியாகாண்டம்,பாடல்-2325,2327)குறிப்பிடப்படுகின்றன. இத்தகு இலக்கிய பதிவுகளோடு கல்வெட்டிலும் பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக வீரச் சோழ இளங்கோவேள்(கொடும்பாளூர்ச் சிற்றரசன்) மனைவி கங்காதேவி உடன்கட்டை ஏறும்முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது.
ரூப்கன்வர் சதிக்குத் தள்ளப்பட்டபோது இது வட இந்தியாவில் நடப்பதாக பேசப்பட்டதும்,எழுதப்பட்டதும் நிகழ்ந்தது. தமிழகத்தில் குறிப்பாக உடன்கட்டை தொடர்பாக இத்தனை ஆதாரங்கள் இருக்கும் நிலையில் இதனை எங்கோ நடப்பது போலவும் தமிழ்ப்பண்பாட்டில் காதலும் வீரமும் இரு கண்கள் என்கிற மேம்போக்கான கருத்தையும் வைப்பது போதுமானதல்ல.
பண்பாடு எழுப்பிய பதட்டங்களும் எதிர்பண்பாட்டின் தேவையும்
கி.பி 1829இல் பெண்டிங்க்பிரபு உடன்கட்டை தடைச்சட்டம் கொண்டுவரும் வரை உடன் கட்டை ஏறுதலென்பது மிக முக்கியமானதொரு பண்பாட்டுச் செயல்பாடாக இங்கு இருந்து வந்திருக்கிறது. உலக அரங்கில் இந்தியமானம் போகிறதென பதறியடித்து தடைசட்டம் கொண்டுவர போராடியவர்களுக்கு பிறநாட்டு மாதர்களோடு ஒப்பிட்டுபார்த்துதான் இந்தியப்பெண்களின் அடிமை நிலையை உணரமுடிந்திருக்கிறது.அதுவரையில் இந்திய மன்னர்குலத்தினர் யாரும் சட்டமியற்றி தடுக்கவில்லை என்பது மனுவின் அடிப்பொடிகளாக ஆட்சியாளர்களைப் பார்க்கவேண்டிய ஒற்றைத்தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறது.புறாவுக்காகவும் மயிலுக்காகவும் தேருக்காகவும் பிற்காலத்தில் வாடிய பயிருக்காகவும் இரக்கப்பட்டவர்கள் சக மனுஷிக்காக இரங்கியிருப்பார்களா எனும் கேள்வியை இவ்விடத்தில் எழுப்பியாக வேண்டும்.
இன்னொரு வகையில் உடன்கட்டை ஏறுதலுக்குப் பின்னால் நிகழ்ந்திருக்கும் அரசியல் ரீதியான காரணங்களை முன்வைத்துப் பார்க்கையில் ஒரு சாம்ராஜ்யம் அழியும்போது ஜெயித்தவனின் முதல் இலக்கு தோற்ற அரசனுக்குப் பாத்தியப்பட்டப் பெண்களை சிதைப்பதுதான். இதில் இந்திய,தமிழ் சிற்றரச பேரரசர்கள் யாரும் விதிவிலக்கில்லை. இவ்வாறாக அடிமைகளாகப் பிடிக்கப்படும் பெண்களின் மீதான வன்முறை என்பது நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதளவிற்கு கொடூரமானது. இது ஒருவகையில் பண்பாட்டுத் தொடர்ச்சியாய் இன்றளவில் எல்லா சமூகத்திலும் இருந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் நடந்த போர்களிலும் இந்த நூற்றாண்டில் இன்னும் முடிவுறாது தொடரும் போர்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறுமிகளும்தான். [இன்னும் சில வருடங்களில் இலங்கையை இன்னொரு தாய்லாந்தாக மாற்றுவோமென சிங்களத் தலைவர்கள் கூறுவதன் பின்னாலிருக்கும் குரூரத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் முகாம்களிலும், அவர்கள் வாழும் பகுதிகளிலும் நிராதரவான பெண்கள் அனேகம் பேர் நிர்பந்தப்படுத்தப்பட்டு விபச்சார விடுதிகளுக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தப் பெண்களின் உடலையே இலங்கையின் மிகப்பெரிய மூலதனமாய் இலங்கை அரசாங்கம் நம்பியுள்ளது. ஈழத்தில் மட்டும் என்றில்லை போரால் துண்டாடப்படும் எல்லா நிலங்களிலும் இந்தத் துயரம் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.]
சங்கப்பாடலில் காதல் மனைவி இடம் பெற்றதுபோல காமக்கிழத்தியும்,காதற்பரத்தையும் இடம் பெற்றிருக்கிறார்கள் .அக்காலத்தில் பரத்தமை போற்றப்பட்டதற்கும் சதிக்கும் கற்புக்கும் தொடர்பு உள்ளது. இவை எல்லாமும் நிலவுடமைத்தன்மைக்கு உடன்போகிற ஆணாதிக்க வடிவங்களேயாகும். இவை இன்றளவில் ஒழியவில்லை.காலத்திற்கேற்ற வடிவத்தில் கூடுபாய்கின்றதை செய்துவருகின்றன.பரத்தமை இன்று பாலியல் தொழிலாக மாற்றமடைந்திருக்கிறது. விடுதலை என்பது புதிய இறையாண்மை கொண்ட நாட்டின் மக்களுக்கு அதிகாரம் வழங்கினாலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு அதிகார மாற்றம் மூலம் முழு காலனிய அமைப்பையும் மாற்றித்தருவதாக நடைமுறையுள்ளது.சுதந்திரத்தின்பெயரால். இராணுவம், காவல்துறை, சட்டம், நீதி, அரசாங்க நிர்வாகம், வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியவை கைமாறினாலும் பால்பாகுபாடு தீவிரப்பட்டுவருவது அதிகரித்தவண்ணமிருப்பது கண்கூடு. பல நாடுகளில் தேசிய இறையாண்மைக்கான போராட்டத்தோடு பெண்களது அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை வலியுறுத்திவரும் போராட்டங்களும் நடந்தவாறிருப்பினும் பெண்ணின் பௌதிக உடலைத் தனிமைப்படுத்தி இழிவுபடுத்துகிற பண்பாட்டின் சாரத்தை மாற்ற வேண்டியுள்ளது.
பெண்ணுடல் அரசாங்கத்தின் அயல்நாட்டு உறவுகளை வளர்த்துக்கொள்கிற வணிகமாக உல்லாச சுற்றுலாக்களில் மையமானதாக மாற்றப்பட்டிருக்கிறது.காலந்தோறும் இந்நிலை வன்முறையாக,மறைமுகமாக,பகிரங்கமாக என எல்லா கோணங்களிலும் அரங்கேறியிருப்பினும் உலகமயமெனும் போர்வையில் இவை முன்னெப்போதையும் விட இப்பொழுது வெகு இயல்பாகியிருக்கிறது..
ஒழுக்கம் குறித்தான கட்டுப்பாடு எல்லாக் காலங்களுக்கும் பெண்களுக்கு மட்டுமானதாகவே இருந்து வருகிறது. உடனடியாக பெண்ணை குற்றவாளியாக்குதல் ,வன்முறைக்கு உள்ளாக்குதல் முதலானவை மாறவில்லை.பண்பாட்டின் பெயரால் பெண்ணினுடைய உடல் அவளுக்கே உரிமையற்றதான கட்டுப்பாடும் .பண்பாட்டின் ஒத்துழைப்போடு நடந்துவருகிறது. பெண்ணின் பூரண சம்மதம் அல்லது சம்மதமின்மை என்கிற பெயரளவிலான விசாரிப்புகளுமின்றி பல வன்முறைகளுக்கு உள்ளாகிறாள்.கணவனைத்தேர்ந்தெடுத்தல்,குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தல்,உடலுறவுக்கு ஒப்புதல் தருதல்,கணவன் இறந்தபின் மேற்கொள்ளும் வளையல் உடைத்தல் போன்ற சடங்குகளிலிருந்து விடுபடல் இப்படி எதையும் தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாதவளாக இருப்பது இன்றளவிலும் மாறவில்லை.காதல் திருமணங்கள் மட்டுமே தொடர்ந்த அரசியல் செயல்பாடுகளாலும் குறைந்தபட்ச பெண்ணின் பொருளாதார சுய சார்பாலும் சாத்தியப் பட்டிருக்கிறது .முக்கிய பங்காற்றிய சுயமரியாதை இயக்கம்,திராவிடர்கழகம் இவற்றில் தூணாக நின்று இறுதிக்காலம் வரை பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பெரியார் இயங்கியிருந்தும் அவரது இயக்கத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் களப்பணியாற்றியிருந்தும் உடனடி மாற்றங்கள் இன்றளவிலும் வீச்சான அளவில் சாத்தியப்படவில்லை என்பது வருத்தத்திற்குறியது.அவர் கூறியதுபோல உடைவிஷயத்தில் மணலூர் மணியம்மா இருந்திருக்கிறார்.பல பெண்கள் சுதந்திரத்தின் பொருட்டாகவும் சுயமரியாதை இயக்க செயல்பாட்டிற்காகவும் களமிறங்கி பண்பாட்டுத்தளத்தில் தீவிரமாக இயங்கிய இயக்கம் இருந்த நிலத்தில் அவர்களின் செயல்பாட்டினை விட தீவிரம் கொண்டதாக நிலவுடமையும் ஆணாதிக்கமும் இருக்கின்றன.இன்று உலகமயமாதலாலும்,முதலாளியத்தாலும் பண்பாட்டு நிலையில் மாற்றங்கள் தீவிரமாகியுள்ளன.இதேகாலத்தின் முன் தொன்மையும் மண்சார்ந்த வழக்காறுகளும் உலகமயத்தால் காணாமல் போய்விடக்கூடாதென பேசிக்கொண்டிருக்கிறோம்.இதனை சமன்பாட்டுநிலையில் கருத்தில்கொண்டு பெண்கள்,தலித்துகள்,ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற அத்துணை இனங்களின் உரிமையை மீட்கவேண்டியிருக்கிறது .
எழும் கேள்விகள், குவிமையப்பட்ட விடைகள், தீராத சந்தேகங்கள்:
1.பெண்ணின் உடல் அவளுக்கானதாக இருந்திருக்கிறதா?
பெண்ணின் உடல் அவளுக்கானதாக இருந்ததில்லை.ஆணாதிக்க
நிலவுடமைப் பண்பாட்டிற்கு அடிமைப்பட்டிருக்கிறது.
2.பெண்ணின் உடல்மீது ஆதிக்கம் செலுத்தியது ஆணாதிக்கம் மட்டும்தானா?
ஆணாதிக்கத்தின் கூறான நிலவுடைமை பெண்ணடிமை சமூகத்தின் கருவியாக வினைபுரிந்து வருகிறது
3.ஆணாதிக்கமும் ஆணாதிக்கத்தின் கருவியாக பண்பாடும் இருக்கிறதா?
ஆம்.உயிர்க்கொலையை பண்பாட்டின் பெயரால் மேற்கொண்டதுதான் சதி
நூற்றாண்டுகளாக தொடர்ந்த சதியை வெள்ளையர் ஆட்சிக்குமுன் யாரும் எதிர்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.அதன் தடயங்கள் எங்கே?
கைம்மையைக் காட்டிலும் தீயில்விழுவது தாமரைத்தடாகத்தில் குதிப்பது போன்றதெனக்கூறும் ஒப்புமை வாழ்வதற்கான மனநிலையை மொத்தமாக கலைத்துப்போட்டு அவளாகவே தற்கொலைக்குத்தயாராகிற விளிம்பிற்கு மனநிலையை நகர்த்துகிற அளவிற்கு உளவியலை சிதைத்திருக்கிறது.
மரணதண்டனைக்கு எதிராக குரல்கொடுத்துவருகிறோம்.பெண்கள் மட்டும் நூற்றாண்டுகள் தோறும் ஏதோ ஒரு அடக்குமுறையின் உச்சத்தில் தற்கொலைக்கு தயார்படுத்துகிற சீழ்பிடித்த பண்பாட்டு வடிவங்கள் தொடர்கின்றன.இக்காலத்திலும் பெண்களுக்குமட்டும் கேஸ்வெடிப்பது ஸ்டவ் வெடிப்பது என்பது சதிக்கு இணையான வடிவங்களாகியிருக்கின்றன.அது கற்புக்காக இது காசுக்காக என்பதுதான் வெளிப்படையாகத் தெரியும்.ஆழ்ந்து பார்த்தால் இரண்டும் நிலவுடமைப் பண்பாட்டின் அசையும் அசையா சொத்துசார்ந்தவையாக இருக்கிறதைக் காணலாம்.
பெருங்கோப்பெண்டின் பாடல் மனநெருக்கடிக்கு நஷ்ட்ட ஈட்டினைப்பெற முடியாத,நியாயம் கேட்கமுடியாத கைவிடப்பட்டவர்கள் தேற்றிக்கொள்ள எழுதிய ஆறுதல் பாடலா?இப்படியாக தன் மனதிற்கு உடன்கட்டை ஏறுவதே மேலென சமாதானம் சொல்கிற பாடலாக இதனைக்கொள்ளலாமா?
ஆண்டாளின் பாடல்கள் பக்தியின் பெயரால் எழுதியதால் இன்றுவரை தப்பித்துள்ளன எனக்கருதுவது போல சதியை ஆதரிப்பதான தொனியில் வன்மையாக கைம்மையையும் கண்டித்து சதியின் எல்லைவரைசெல்கிற அவலத்தைப்பாடுகிறது பெருங்கோப்பெண்டுவின் பாடல்.
குழந்தையில்லாதவளுக்கு மலடியெனக்கூறி ஒதுக்கிய பண்பாட்டிற்கு இன்று சோதனைக்குழாய் குழந்தை பயன்பயன்படுகிறது.ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்கும் மனநிலை வளராமல் சோதனைக்குழாயிடம் ஓடுவதும் ஓடத்தூண்டுவதும் நிலவுடைமையின் கற்பு இன்று பூண்டுள்ள நவீன வடிவத்தில் இதுவும் ஒரு கூறாகியிருக்கிறது.
தற்கொலையின் பொருட்டான உளவியல் உற்பத்திசாதனம்
உடலும் உடலின் சக்தியும் தான் மூலதனம் என்கிறபோது உடலைவருத்தும் கைம்மைநோன்பு என்பது உடலின் சக்தியைப்போக்கி திராணியற்றவளாக்குகிறது.உடலின் சக்தி மனதின் தன்னம்பிக்கைக்கு பலமான ஆதாரமாகும்.உடலை சிதைத்தல் என்பது மனதைத்தளரச்செய்வதாகும்.உடல் சக்தியை படிப்படியாக குறைப்பது சிறிதுசிறிதாக விஷம் வைத்து கொள்ளப்படுவதற்கு ஒப்பானதாகும்.
சீனாவின் பாதக்கட்டு ஆப்பிரிக்காவின் பிறப்புறுப்பு சிதைத்தல் என்கிற இரண்டில் முதலாவது அவள் வலிமையை சிதைத்தல் இரண்டாவது அவளது இச்சையை அறுத்தல் எனும் வினையாற்றுதலில் கைம்மை நோன்பு உடல் நாளொன்றாய் வருத்தத்தையும் வலியையும் சேமித்துவைக்கிற அதேநேரத்தில் இச்சையையும் சிதைத்து தற்கொலைக்குத்தூண்டுகிறது.இத்தகு உளவியல் சிதைவு சம்மந்தப்பட்ட பெண்ணுக்குமட்டுமானதல்ல அதனைப்பார்க்கும் கேள்விப்படும் அத்தனைப்பேருக்குமானதாக மாற்றமடையும் நிலையில் இம்முறையை கடைபிடிக்கப்போகிறோம் என்கிற உண்மை சக்தியற்ற மனோபாவத்தைப் பெண்களிடம் உருவாக்குகிறது.
நிலவுடைமை,அசையாசொத்து + கற்பு( கடைக்கற்பு-இடைக்கற்பு-தலைக்கற்பு ) , கைம்மை – கற்புக்கரசி – சதி
என்கிற அடுக்குகள் இன்றும் வரதட்சணை,பெண்சிசுக்கொலை என பெண்பிறப்பை இழிவாக கருதுகிற நிலையை உற்பத்தி செய்து வருகின்றன.சமூக மதிப்பில்லாமல் வெற்று சட்டங்கள் கவசங்களாக மட்டுமே பாவிக்கப் படுகின்றன.
பெண்ணுக்கான கற்பை வலியுறுத்திவிட்டு பாலியல்தொழிலையும் பண்டமாக பார்க்கப் படுவதையும் தொடர்ந்து செய்கிற பண்பாடு பெண்களை ஆணாதிக்க மனோபாவத்தோடு வைத்திருக்க பழக்குகிறது.பெண்கள் தங்களின் உடல் வலிமையை மனதிடத்தை உணராதவண்ணம் தங்களைத்தாங்களே இழிவாகக் கருதுகிற போக்கு குறைவதாயில்லை.
சராசரி மனிதர்கள் மட்டுமின்றி மிகப்பெரிய ஆளுமைகளும் கூட கைம்மை நோன்பென்பதை மிக முக்கியமானதொரு பண்பாட்டுக் கடமையாய்ச் செய்தபடிதான் இருந்திருக்கிறார்கள். முழுவதும் பெண்களாளேயே இயங்கிய நாடகக் குழுவை நடத்தியவரான கே.பி.சுந்தராம்பாள் கணவரின் சந்தேகத்திற்கு ஆளானது குறித்து கடிதமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.அவ்வாறு சந்தேகப்பட வேண்டாமென்றும் அத்தகைய பெண் தானில்லை எனவும் விளக்கமளிக்கிறார்.கே.பி.சுந்தராம்பாளின் 25 வயதில் அவரது கணவர் கிட்டப்பா இறந்தார்.திருமணம் முடிந்து ஏழாண்டுகாலம் மட்டுமே ஆகியிருந்தது.இந்த இளம் வயதில் இவள் கைம்மை நோன்பு நோற்க ஆரம்பித்திருந்தார்.அவர் சாவி இதழுக்கு தந்த குறிப்பொன்றில்”நான் பால் சாப்பிடுவதில்லை; சோடா,கலர் குடிப்பதில்லை; புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை;அமாவாசை தோறும் காவேரி ஸ்நானம் செய்யத்தவறுவதில்லை” என்றதோடு நகையும் அணிவதில்லை;பிற ஆடவருடன் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருந்தார்.
இப்படி முடிவெடுக்க காரணமாக இருந்தது பண்பாட்டின் பெயராலான பெண் தன்உடலை மறுக்கிற கட்டமைப்புதானே.ஆகச்சிறந்த நடிகையாக ஊரறிய விளங்கிய கே.பி.எஸ் சமூக மதிப்பிற்காக இப்படியான முடிவுகளை தானாகவே மேற்கொள்கிறார்.நடிக்கமாட்டேன் என்கிற முடிவை மாற்றிக்கொண்டு அவர் மீண்டும் நடிக்க வந்தது முக்கியமானது.மகாகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்பில்(1936) இவரை சந்தித்ததும் இவருக்காக பாடலெழுதிக்கொடுத்தது என்கிற பதிவுகள் இருக்கின்றன.அக்காலத்தில் இராஜபார்ட்டாக நடித்து அனைத்துத் தரப்பிலும் இரசிகர்களைக்குவித்திருந்தவர் முடங்கிவிடாமல் தொடர்ந்திருப்பது ஆறுதலாயிருக்கிறது.
இவருக்குப்பின் 1932 இல் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அவர்கள் 115 நாவல்களை எழுதியிருக்கிறார். ஜகன்மோகினி என்னும் இதழை 35 ஆண்டுகாலம் நடத்திய இதழாசிரியர்,சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர் இப்படி பல்துறை ஈடுபாடு கொண்டவராக இயங்கியுள்ளார். திரைப்படதணிக்கைக்குழுவில் பாரபட்சமின்றி செயல் பட்ட வீராங்கனையாயிருந்தும் இலக்கிய வரலாற்றில்,சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.அவர் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேரமுயற்சித்தபோது சமகால எழுத்தாளர்கள் இவரை சேர்த்துக்கொள்ளாமல் மறுத்திருக்கிறார்கள்.இவர் எழுதிய முதல்நாவலை இவர் எழுதவில்லை என்று சம்பளப் பணத்தின் பொருட்டாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.இவரின் எழுதத்தொடங்கிய துவக்ககாலம் நெருக்கடியைக் கடந்துவந்திருக்கிறது.ஒரு பெண் என்பதால் அவளது திறமையை,அறிவை முற்றாக மறுத்துவிடமுடியும் என்கிற ஆணாதிக்க சிந்தனையை வெற்றிகரமாக துரத்தியிருக்கிறார்.இவரிடத்து தன்னம்பிக்கையில்லையெனில் எதிர்மறையான விளைவுகளன்றோ இருந்திருக்கும்.எழுதவந்தவர் முடங்கிப்போயிருப்பாரல்லவா?இன்றும் எழுதவரும் பெண்கள் பலர் என்னவானார்களென தெரியாமல் காணாமல் போகக் காரணம் குடும்பம்,சமூகம் சார்ந்த தரப்புகளில் அவளது எண்ணத்தை மறுக்கிற ,அச்சுறுத்துகிற போக்குகள் இருந்துவருவதை நுணுகிப்பார்த்தால் அறியமுடியும்.
ஒருநாட்டின் பண்பாட்டுத்தளத்தை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அச்சமூகத்தின் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதிலிருந்தே துள்ளியமாக கணிக்க முடியும்.பெண்களின் திறமைகளை மறுக்கிற ,இருட்டடிப்பு செய்கிற பணியைத்தொடர்ந்து செய்கிற பண்பாடு ஆரோக்கியமான பண்பாடாக இருக்கமுடியுமா?
வை.மு.கோவின் பெண்களின் சுதந்திரப்போராட்டம் குறித்த பதிவொன்றில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் தக்களியில் நூல் நூற்றவாறு மறியல் செய்யும் காட்சி கல்நெஞ்சையும் கரைத்து ஆனந்தமும் சுதேச உணர்வும் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது என்கிறார். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களின் போராட்டம் எதனால் மறைக்கப்பட்டது. பிரிவினைக்குமுன்பாக சுதந்திரப் போராட்ட காலத்தில் பெஷாவரில் இந்தியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ்க்காரர்கள் நடத்திய தடியடியின் போது இரண்டு இரவுகள் முழுக்க வீட்டின் மாடிகளிலிருந்து தண்ணீரை வாரி இறைத்த நூற்றுக்கணக்கான பெண்கள் வீரப்பெண்மணிகள் இல்லையா?…
நாடகத்துறையில் மிக அரிதாகவே பெண்கள் அனுமதிக்கப்ப்பட்ட காலத்தில் மிகவும் துணிவோடு தேவதாசி முறையை எதிர்த்த காரணத்தால் மூவலூர் இராமாமிருதம்மாளுக்கு பாலில் விஷம் வைக்கப்பட்டதும் அவர் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தலைமுடியை அறுத்ததும் நடந்திருக்கிறது. அந்த மாபெரும் கலைஞியின் போராட்டம் தமிழகத்தின் வரலாற்றுத் தடத்தில் எந்த முக்கியத்துவங்களுமில்லாமல் போனதில் இந்த வரலாற்றை மறைப்பவர்களின் திருட்டுத்தனங்களுக்கும் பங்கிருக்கிறதுதானே?..35 ஆண்டுகாலம் வெளிவந்த ஜகன்மோகினி இதழை பெண் நடத்தியதால் பதிவின்றி போகச்செய்வது இந்த மண்ணில்தானே நடந்திருக்கிறது.பண்பாடு பெண்ணுக்கெதிராயிருப்பின் இத்தனையும் மறைக்காப்படாமல் வேறென்ன நடக்கும்?
சமகாலத்தில் வரதட்சணைக்கொடுமை மட்டுமில்லாமல் குடும்ப வன்முறை அதிகமாகியிருப்பது,பணிபுரிந்தாலும் பொருளாதார தன்னிறைவு இல்லாமலிருப்பது என்கிற அடிப்படையில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
பொதுவாக பெண்கள் முன்னேறிவிட்டதாகக் கூறுவதை அப்படியே ஏற்கமுடியாது. கிராம பின்தங்கிய வர்க்கப்பெண்கள் இன்றைய நகர்மயமாதல் மற்றும் இயற்கை சீரழிவுகளில் சிக்கி தவித்து சவாலான சூழலில் குடும்பத்தை, குழந்தைகளைப்பார்க்கும் பொறுப்பையும் சுமந்து கொண்டிருக்கின்றனர்.பெண்ணின் பௌதிக உடல் இழிவாக பார்க்கும் நேரத்தில் பெண்ணின் உழைப்பு மட்டும் சுரண்டப்பட்டு வருவது ஏன்?
பெண்களின் உடலை நுகர்பொருளாக பார்க்கும் மனநிலைக்கு எதிராக பெண்கள் தங்களின் உடலை போராட்டத்தின் ஒரு பகுதியாய் வைப்பதை மிக முக்கியமான எதிர்ப்பண்பாடாக கருத வேண்டும். எதிர் பண்பாடு என்கிற வார்த்தை நமது விழுமியங்களையும் வாழ்வையும் மேலோட்டமாய் சிதைத்துப் போடுவதில் இல்லை. ஒரு சமூகத்தின் அடிப்படை மனதை மாற்றப் போராடுவது. பெண்களின் எதிர்ப்பண்பாடு சுதந்திரப்போராட்டத்தின்போதான பெண்களின் களமிறங்குதலில் ,சிட்டகாங் போராட்டத்தில்,நேதாஜியின் பெண்கள் அணியில்,தெலுங்கானா,மற்றும் தெபாகா போராட்டங்களில் என சமகாலத்தின்முக்கிய போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். கென்ய கிராமப்புற மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு வங்காரி மத்தாய் துவக்கிய ரீக்ஷீமீமீஸீ தீமீறீt னீஷீஸ்மீனீமீஸீt போலவே இந்தியாவில் இமயமலைப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாதென பெண்கள் போராடினர். பெண்கள் சூழலியல் காக்க போராடும் ’நர்மதா பச்சாவ் அந்தோலன்’ நர்மதா மக்களின் போராட்டமும் பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த நூற்றாண்டின் மாபெரும் போராட்டம்.தமிழகத்தில் அணுவுலை பாதிப்பை உணர்ந்து பெண்கள் திரண்டு நட்த்திவரும் கூடங்குளம் போராட்டம் மிக முக்கியமானதாகும்.
”கோடிக்கணக்கான எழுத்தறிவற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியப் பெண்கள் ‘முதலாளித்துவத்தின் மயிர்க் கண்களில்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் செய்தித் தொடர்புப் பரிமாற்ற வழிகளை நமக்கு அனுமதிக்கும் முதலாளித்துவ இயக்கமுறை இவர்களை எட்ட வாய்ப்பில்லை. இத்தகு பெண்களிடம் நாம் எப்படிப் பேசவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இயலும்? எப்படி ஒன்றாக நமது பொது எதிரிகளை வரையறை செய்ய முடியும்? முதல் உலகப் பெண்ணியவாதிகளுக்கு மூன்றாம் உலகப் பெண்ணியம் குறித்த செய்திகளை வழங்கும் முன்னோடி நூல்கள் அந்தந்த நாடுகளில் உள்ள உயர் அந்தஸ்து பெற்ற தகவலாளிகளால் எழுதப்படுபவை. பயிற்சிமிக்க வாசகர்களால் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். களைப்படைந்த தேசியவாதக் கருத்தாக இதனைக் கருதமுடியாது. பகுதிவாழ் உள்ளூர் மக்கள் மட்டுமே உண்மையான நிலவரத்தைக் கூறமுடியும் என்றும் சொல்ல வரவில்லை. மூன்றாம் உலகப் பெண்கள் பற்றி முடிந்தவரை அறியவும் வேறுபட்ட வாசகத்தளத்தை வளர்த்தெடுக்கவும் இத்துறையின் விரிவான பன்முகக் கூறுகளைப் பாராட்டும் மனநிலை தேவை என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன். அதோடு முதல் உலகப்பெண் ‘ஒரு பெண்’ என்ற வகையில் தனக்கு மேலான நிலைமை இருப்பதாகக் கருதுவதை நிறுத்த வேண்டும்.” என்கிற காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவாக்கின் கூற்று ( இன் அதர் வேர்ல்ட்ஸ் 1987) பெண்ணின் உடல் பண்பாட்டுநிலையில் மிக மோசமாகக் கையாளப்படுவது உலகம்தழுவிய ஒன்றாயிருப்பதைக்காட்டுகிறது.
நடைமுறையில் வாழ்வாதாரச்சிக்கல்கள்,குடும்பம்,பணியிடமென தத்தளிக்கும் பெண் ஒருபக்கமிருக்க இன்றைய காட்சி ஊடகங்களும் காஸ்மெடிக் [அழகுசாதனப் பொருட்கள்]சந்தைப் பொருளாதாரத்தில் இவளின் அன்றாட உழல்வு மறைக்கப்பட்டு ஆணாதிக்கத்திற்கு துணைபோகும்படியாக பெண்ணே நீ அழகுபடுத்திக்கொள் என புற அழகொன்றே உலகில் முக்கியமானதெனும் கருத்தியலைத் தொடர்புடைய பல காரணிகள் அதிகப்படுத்தி வருகிறது.
அடிமைப்படுத்தும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு எதிராக. தமது அரசியல் நோக்கங்களுக்காக நவீனத்துவத்தின் கூறுகளை தன்வயப்படுத்துவதை பெண்ணியவாதிகள் நிறுத்தவில்லை… நவீனத்தின் பிற கூறுகளைப் போலவே பெண்ணியம் கடந்த நூற்றாண்டுகளில் வளர்ந்துவரும் வளரும்நாடுகளின் சமூகங்களில் பலவகை நுண்ணிய அலகுகளையும் மாற்றங்களையும் பெற்றுள்ளது.
பெண்கள் உடலென்பது வெறும் சொல்லோ உடலோ அல்ல. உடலென்பது அவர்களின் அளவில் ஒரு அரசியல் செயல்பாடு. பெண்கள் இல்லாமல் மூன்றாம் உலக அரசியல் இல்லை என்கிற அளவிற்கு பெண்களின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறது.பெண்கள் இல்லாமல் அரசியல் இல்லை எனவே செயல்பாட்டிற்கான அரசியல் வெளியைக் கட்டமைத்து வருகிற முன்னேற்றமான போக்கு நவகாலத்தில் உறுதியாகிறது.
இந்தியாவில் அரசியல் அதிகாரம் பெற்ற விளிம்புநிலைப் பெண்ணான தாழ்த்தப்பட்டப் பெண்ணான பூலாந்தேவி சம்பல் பகுதியின் கணவாய்களில் எவராலும் அடக்க முடியாதவராய் இருந்தார். 1983 ல் அவர் தானாகவே சரணடைந்தார். பின்பு சிறிது காலம் சிறையிலிருந்து விடுதலையான பின் பாராளுமன்ற உறுப்பினரானார். ‘மிகவும் பின் தங்கிய சாதிகளைச் சார்ந்த மக்கள் ஆகியோருக்காக பணி புரிய வேண்டும்’ என்ற ஆவலைத் தெரிவித்ததோடு தொடர்ந்து அதைச் செய்யவும் செய்தார். ஜீலை 2001 ல் அவர் கொல்லப்பட்டார். சேகுவேரா, ஃப்ரான்ஸ் ஃபனான், துணைத்தளபதி மார்க்கோஸ் வரிசையில் முதலில் சேரும் அடக்கப்பட்ட ஏழை மக்களின் குறியீட்டுச் சின்னமாக பிரபலமானவராக பூலான் மாறியிருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.அரசியல் வல்லுநர்களின் கருத்தின் மீது விமர்சனம் எழுந்தாலும் பண்பாட்டில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் பெண் அதனைத் துறந்து துச்சமாய்த் தூக்கியெறிந்து செயல்படும் பொழுது கட்டுப்படுத்தமுடியாத ஆற்றலாக மாறமுடியும் என்பதற்கான சமகால எடுத்துக்காட்டாக பூலான் இருக்கிறாள்.
பெண்களுக்கான பண்பாடு என்பதன் மற்றொரு முக்கியமானக் கூறாய் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பண்பாடு என்பதையும் பேச வேண்டியுள்ளது. இந்தியா போன்ற சாதிய ஆதிக்கம் கொண்ட நாட்டில் கடந்த சில நூற்றாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்திருக்கும் துயரும் வன்முறைகளும் சொல்லி மாளாதது. தென் தமிழகத்தில் பழைய வழமைப்படி, பெண்கள் தமது மார்புகளை மறைக்கச் சட்டை அணியக்கூடாது. ஆதிக்க சாதி ஆண்களுக்கு தமது உடல் உரியது என்பதை எப்போதும் இதன் மூலம் உறுதி செய்ய வேண்டும். இன்றுகூட தலித்துகள் மீதான பாலியல் வன்முறைகள்,தாக்குதல்கள், திருட்டுகள் போன்றவை காவல் துறையால் பொருட்டாகக்கூட கருதப்படுவதில்லை. அவர்களைப் புறந்தள்ளி, இக்கொடுமைகளைச் செய்பவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். தலித்துகளின் நிலை இந்துமதத்தின் பிரிக்க முடியாத அம்சம். சாதி இந்துமதத்தின் அடிப்படைக் கருதுகோள்.
ஆக, நமது பண்பாடு என்பது இன்று வரையிலும் ஒற்றைப் பாலினருக்கு சாதகமானதாயும் அவர்களை மட்டுமே பேசுவதாயும்தான் இருந்து கொண்டிருக்கிறது. பெண்களை காப்பியங்களில் எழுதினார்கள், ஓவியங்களாக்கினார்கள். பாடல்களாக்கினார்கள். ஆனால் மதிக்கப்பட்டார்களா? சம உரிமையுடன் நடத்தப்பட்டார்களா?…
இதேகேள்வி எழும் சூழலில் மற்றொருமுனையில் பெண்ணின் உடல் அவளது பிரக்ஞைக்கு அப்பாற்பட்டதாக பண்பாட்டின் தற்கொலைக்கும்,அச்சுறுத்தலுக்கும்,ஒடுங்குதலுக்கும் ஆட்பட்டு அடிமைப்பட்டிருந்த நிலையில் மரபார்ந்த கட்டுக்கோப்பினின்று விடுபட்டு சமூகப் பங்களிப்புகளில் களப்பணியாற்றவும் அரசியல் செயல்பாடுகளில் ஆயுதம் ஏந்தல்,தற்கொலைப்படைத்தாக்குதல்,கெரில்லா யுத்தத்தில் ஈடுபடுதல் என்பதோடு தன் உடலை அரசியல் விழிப்புணர்வு பெற பயன்படுத்துகிற அள்விற்கு பிரக்ஞைபூர்வமாக அவர்களே முடிவெடுத்து செயல்படும் காலத்தில் நிற்கிறோமென்கிற முன்னேற்றமான முதிர்ச்சியையும் வரவேற்கவேண்டியுள்ளது. எழுதப்பட்ட பண்பாட்டின் ஒற்றைத் தன்மையைக் கலைத்துப் போட்டு பெண்கள் தமக்கான வரலாற்றையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் இயக்கமாக இடைத்தங்களில்லாமல் தொடரவேண்டும் .ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய ஆறாம் பூதம் பெண்ணென்பதை பெண்கள் உணரவேண்டும்.உணர்தலும் உணர்த்துதலும் தொடரட்டும்,.தொடர்வோம்.