மகளி்ர் விவகார அமைச்சின் கீழும், கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழும் பதிவுசெய்யப்பட்ட வடமேல் மாகாணத்திற்குட்பட்ட மகளிர் சங்கங்களிற்கான யாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களிற்கான யாப்பு சிங்கள மொழியில் மாத்திரமே இதுவரை காலமும் இருந்துவந்தது. புத்தளம் மாவட்டத்தில் முந்தல்,கல்பிட்டி,புத்தளம்,வனாத்தவில் ஆகிய பிரதேச செயலகங்களிற்கு கீழ் பதிவுசெய்யப்பட்ட மகளிர் , மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் கிட்டத்தட்ட 50 ற்கு மேல் இயங்கி வந்தபோதிலும் இச்சங்கங்கள் யாப்பு விதிகள் எதுவும் தமிழ் மொழியிலின்றி விதிமுறைகள் தெரியாத நிலையில் பல நிர்வாக பிரச்சினைகளோடு இயங்கிவருகிறது. இதனை கவனத்திற்கொண்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு மகளிர் சங்க யாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி யாப்பு ஆகிய இரண்டையும் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அவை பயனளிக்கவில்லை. இறுதியாக கடந்த மார்ச் மாதம் மகளிர் தினத்தினை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழியிலான சங்கங்களின் உதவியினை பெற்றுக்கொண்டு
1. அரச கரும மொழிகள் ஆணைக்குழு
2. பெண்கள் பணியகம்
3. மகளிர் விவகார அமைச்சு
4. கிராம அபிவிருத்தி அமைச்சு
ஆகிய அமைச்சுக்களிற்கு தமது முறைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் உள்ளடக்கி 1000 அங்கத்தவர்களின் கையொப்பங்களை இணைத்து கடிதங்களை அனுப்பியது அதனை கவனத்திற்கொண்ட அரச கரும மொழிகள் ஆணைக்குழு மகளிர் விவகார அமைச்சிற்கும், கிராம அபிவிருத்தி அமைச்சிற்கும் யாப்புக்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்ககோரி கடிதங்களை அனுப்பிவைத்தது. இதனை தொடர்ந்து மகளிர் விவகார அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் யாப்பினை தமிழ் மொழியில் மாற்றம் செய்து பெற்றுக்கொடுத்துள்ளனர். எனினும் கிராம அபிவிருத்தி அமைச்சு இதுவரையும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுவரைகாலமும் வடமேல் மாகாணசபை அமைச்சின் மகளிர் சங்கங்களிற்கு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த யாப்பினை பேதமின்றி அனைத்து மகளிர் சங்கங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பிற்கு எமது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்…!