விடுதலை

பிறெளவ்பி ,மட்டக்களப்பு, இலங்கை.

 

சிதறுண்டு போன சுயங்களை
மீண்டும் சேர்த்துக் குவிக்கின்றேன்
காலங் காலமாய் அழுத்தி வைத்திருந்த
உறவுக்குள் இருந்து ……
விடுதலை பெற்ற விரல்களால்!

வேகமாய் நடந்தாலும்
மெதுவாய் இருந்தாலும்
சூட்சகமாய் வார்த்தைகளால் வஞ்சிக்கும்
வெளி உறவுக்குள் கட்டுண்டிருப்பது
எனக்கென்ன கட்டாயமோ?

தாய்வழிச் சமூகத்தில் இருந்து
பெயர்க்கப்பட்ட – உன்
தந்தை வழிச் சமூகத்தால்
முயன்று முடிவது – முடிந்தது
“பனிக்குட உடைப்பு” மட்டுமே!!

உனதான அடையாள அழிப்பில்
எனதான புதிய வெளி ….
சுயமான தனித்துவங்களுடன்
இடைவெளியின் பள்ளத் தாக்கிலும்
முற்றுப்புள்ளி இன்றி நீள்கிறது!

முன்னிறுப்புகளின் இறுதி நாட்களில்


வாழ்ந்தமைக்கான தடயங்கள்
பிண்டப் பிரளயமான இரு ஜீவன்கள்
வாழ்தலுக்கான திராணியற்று
திசை தெரியா தொலைந்த அவலம் – நீ!

உன் உளவியலில்
காதலாகிக் கசிந்து கரைந்து
சமரசத் தொடரில் பின்னூட்டப் பட
நீ காணும்
‘தலித்’தும் நானல்லவே!

கற்பு – தாய்மை – புனைவு
நுகர் பொருள் கலாசாரம்
மேலாண்மை சமூகம் ….
இடைச் செருகலற்று வீறு போட
காலங் கற்பித்து விட்ட பாடம் பல!!

அடிமை நிலையினுள் உறைந்து
வெளி உலகப் பிளிறல்களுக்கு இடையே
சமூகக் கட்டமைப்பினுள் அமிழ்ந்து
சுயமிழத்தல் – விடுதலையுமல்ல!
ஏன் முகவரியுமல்ல!!

1 Comment on “விடுதலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *