சொந்த இடங்களுக்கான குடியமர்வு – மீள் வரவு- நல்வரவாக அமையுமா?

துஷிய்ந்தினி கனகசபாபதிபிள்ளை (இலங்கை)

IRINHA1 ரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கையின் வடக்கு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் அகதிகளை மீள் குடியமர்த்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ள மக்கள் அக்டோபர் 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் சில பகுதிகளில்  

 வெளியேறும்படி தமிழீழ விடுதலை புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். சர்வதேச பிணக்குகள் குழுமத்தின் (International Crisis Group) தகவல்களின்படி, சுமார் 75,௦௦௦ வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தப்பித்து வவுனியா, அனுராதபுரம் மற்றும் வடமேல் கரையோரப் பகுதியில் உள்ள புத்தளம் மாவட்டம் ஆகிய பகுதிகளை வந்தடைந்தனர். மீள்குடியமர்வு மற்றும் மீள் நிவாரணப் பணிகளுக்குமான அமைச்சர் ரிசாத் பதியுதீன், டிசம்பர் 2009 இல் 100,000 முஸ்லிம் அகதிகளை அவர்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் தொடங்குவதாக அறிவித்திருந்தார். “தற்போது மீள் குடியேற்றம் தொடர்பிலான கணிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்த அமைச்சர் பதியுதீன், மீள் குடியமர்வு பகுதிகளில் யுத்த காலத்த்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப் வேண்டியுளதெனவும் வலியுறுத்தினார்.

“கண்ணி வெடிகள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் மக்கள் அவர்தம் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கையின் மொத்த 20.2 மில்லியன் சனத்தொகையில் சுமார் 8 வீதமானோர் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினராவர்.யுத்த காலத்தில் பெரும்பாலும் இவர்களின் இடர்ப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலங்களில் இலங்கையின் 25 வருட யுத்த முடிவின் பிற்பாடு இடப் பெயர்வுக்கு உள்ளாகியுள்ள ஆயிரக் கணக்கிலான தமிழ் அகதிகள் பற்றி சர்வதேச கவனம் இருப்பினும், ஆய்வாளர்களும், தொண்டர்களும் இடப் பெயர்வுக்குள்ளான முஸ்லிம் அகதிகள் நிலவரம் தொடர்ந்தும் கவனத்தில் கொள்ளப்படாமல் போகும் நிலமையே உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். “உள்ளக இடப் பெயர்வுக்கு உள்ளானோரை மீளக் குடியமர்த்துவது தொடர்பிலான அவசர தேவையை நாம் தெளிவாக காணும் அதே சமயத்தில், வடக்கு முஸ்லிம்களினது இருப்பு, தேவைகள் குறித்து எதுவிதமான கரிசனைகளும் தெரிவிக்கப்படாமல் இருக்கும் நிலவரம், மீள் குடியமர்வு தொடர்பான முழுமையான திட்டமிடல் விவகாரங்களில் தாம் விடுபட்டுப் போகும் நிலவரத்தினை ஏற்படுத்தி விடக்கூடும் என்ற விசனத்துடன் அவர்கள் உள்ளனர்”, எனக் கூறுகிறார் இடப் பெயர்வுக்கு உள்ளானவரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ஷெரின் ஷரூர்.

சர்வதேச பிணக்குகள் குழுமம் ஜனவரி 2010 இல் வெளியான அறிக்கையொன்றில், முஸ்லிம் உள்ளக இடப் பெயர்வுக்கு உள்ளான மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீள் குடியமர்வு செல்வதற்கான உரிமை குறித்து கருத்தில் கொள்ளும்படி சர்வதேச சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அரசாங்கத்திடமும் இம் மக்களை மீள் குடியமர்த்துவது தொடர்பான திட்டங்கள் குறித்த விளக்கங்களை அது கோரியிருந்தது. “மீள் குடியமர்வதற்கான அவர்களின் உரிமை தெளிவாக நிலை நிறுத்தப்படுவது மட்டுமின்றி, தற்போதய வசிப்பிடங்களை விட்டுச் செல்ல முடியாதவர்கள் மற்றும் விரும்பாதவர்கள் மீது எது விதமான நிர்ப்பந்தங்களும் பிரயோகிக்கப்படமாட்டாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,” எனவும் சர்வதேச பிணக்குகள் குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இடம் பெயர்ந்தோரில் சிலர் இருப்பிட வீடுகளை கட்டிக்கொண்டிருப்பினும், எனையோர் பற்றுக் கொடுத்துள்ள ஏனைய குடும்பங்கள் அல்லது அடிப்படை சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் மட்டும் கொண்ட முகாம்களிலேயே வாழ்கின்றனர்.

IRINHA2.jpg

அப்துல் கபூர், புதிய வீடொன்றை நிர்மாணம் செய்ய இவரிடம் நிதிவசதி இல்லை

இடம் பெயர்ந்தோரில் பெரும்பான்மையானோர் மீன்பிடி, விவசாயம் மற்றும் இறைச்சி வியாபரம் போன்ற துறைகளில் தமது சொந்த இடங்களில் ஈடுபட்டவர்களாயினும் தற்போது சாதாரண கூலித் தொழிலாளர்களாயும் கட்டடத் தொழில் புரிவோராயும் உள்ளனர். இருப்பினும் மீள்குடியமர்வுக்கான சாத்தியங்கள் தென்படினும், புத்தளத்தில் 20 வருடங்கள் வாழ்ந்த பிற்பாடு, சொந்த இடங்களுக்கு திரும்புவது பற்றி முடிவு செய்வது என்பது உள்ளக இடப் பெயர்வுக்குள்ளான முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் ஓர் தெளிவற்ற விடயமாகவே உள்ளது.

புத்தளத்தில் உள்ள சால்ரேன் உள்ளக இடப் பெயர்வுக்குளானோர் முகாமினைச் சேர்ந்தோர் தாம் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசங்களில் உள்ள தமது பூர்வீக இடங்களுக்கு சென்ற போது, வீடுகள் அழித்தொளிக்பட்டதையும் மற்றும் உடமைகள் சூறையாடப்பட்டதையுமே கண்ணுற்றதாக கூறுகின்றனர். “நான் யாழ்ப்பணத்தில் பிறந்து, வாழ்ந்து, இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன். அங்கு மகிழ்ச்சியாகவும், தேகாரோக்கியதுடனும் இருந்தவன், இங்கு கவலையுடனும், சுகயீனமுடனும் இருக்கிறேன்,” எனத் தெரிவித்தார் மொஹமட் யுசுப்.

“எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் சென்று வாழவே விரும்புகிறேன். ஆனால் நான் இறப்பதற்கு முன் அது நிறைவேறுமா என்பது நிச்சயமன்றி உள்ளது,” எனவும் கூறினார் யுசுப்.

சிலர் தாம் புத்தளத்தில் வாழப் பழகிக் கொண்டுவிட்டார்கள் எனக் கூறும் அதே சமயத்தில், பலர் தமக்கு வீடு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமாயின் திரும்பிச் செல்ல விளைவார்கள் தெரிவித்தனர்.

IRINHA1.jpg

நஜீபா மொகமட் ஹுசெயின்

“நான் 10 வருடங்கள் சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக கடமையாற்றி சேமித்து, யாழ்பாணத்தில் நிர்மாணம் செய்திருந்த 3 வீடுகளும் அழிக்கப்பட்டுவிட்டன,” எனக் கூறினார் நஜீபா மொகமட் ஹுசெயின். “ஒரு வீட்டையாயினும் மீளக் கட்டிட விரும்புகிறேன், இருப்பினும் அது கைகூட போதிய நிதி நிலவரங்கள் என்னிடம் இல்லை,” என்றார் அவர். [இச் செய்தி கண்ணோட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தில் (IRIN-Integrated Regional Information Networks) பிரசுரமான “SRI LANKA: Difficult homecoming for Muslim IDPs” இன் தமிழ் வடிவம் – இச் செய்தி சேவை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் ஒரு பிரிவாகும் – UN Office for the Coordination of Humanitarian Affairs]

தமிழ் வடிவம்: க.திருக்குமரன்

ஊடறுவிற்காக அதிரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *