நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி
சூரியப்பயணம், ஹேராம், நிழல்களைத் தேடி, ஐந்திணை, செங்காந்தாள்(மின்னூல்) என்று 5 கவிதை தொகுப்புகளும், மின்சாரவண்டிகள், புதிய ஆரம்பங்கள், தனியறை, பெண்வழிபாடு என்ற 4 சிறுகதை தொகுப்புகளும் சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள், ஊமைத்தசும்புகள், மழைக்கால மின்னலாய், செய்திகளின் அதிர்வலைகள் என்ற 4 கட்டுரைத் தொகுப்புகளையும்வெளியிட்டவர
“புதியமாதவி” என்ற புனைப்பெயரை தாங்கள் தெரிவு செய்ததன் காரணம் என்ன?
நான் இந்தப் பெயரை தெரிவு செய்து கொண்டேன் என்று சொல்வதை விடஇப்பெயர் என்னைத் தேடி வந்து தெரிவு செய்து கொண்டது. அது ஒரு சுவராஸ்யமான கதை. நான் முதலில் எழுதியது கவிதையோ கட்டுரையோ அல்ல. சிறுகதை எழுதினேன். அந்த முதல் சிறுகதையின் தலைப்பு “புதியமாதவி’ சிலப்பதிகாரம் படித்த வயது. ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்கு போகும் வயது. அப்போதுதான் அக்கதையை எழுதுகிறேன். அப்போதெல்லாம் ஜெராக்ஸ் வசதிகள் கிடையாது. கார்பன் பேப்பர் வைத்து எழுதி 1 + 1 என்று இரண்டு இரண்டு படிவங்கள் எழுதிக்கொள்வேன். பின்னர் அதை நூல் கோத்து என் தந்தையைப் பார்க்கவரும் அவருடைய தோழர்களிடம் வாசிக்க கொடுப்பேன். அவ்வாறு வாசித்தவர்களில் ஒருவர் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள். அவர் மும்பையில் சீர்வரிசை என்ற இதழின் ஆசிரியராக இருந்தக் காலத்தில் என்னை மீண்டும் எழுதச் சொல்கிறார். கவிதை, கதை என்று இலக்கிய உலகை விட்டு 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு நான் எழுதவ்ருகிறேன். குடும்பம், பணிச்சுமை, அடையாள சிக்கல் என்ற பல்வேறு மன உளைச்சல்களுக்கு நடுவில் என் இயற்பெயருடன் என் கவிதைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். மல்லிகா என்ற என் பெயரில் எழுதுவதில் புதிதாக எதுவும் சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற நிலை. அப்போதுதான் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் என் முதல்கதையான “புதியமாதவி” என்ற பெயரில் என் எழுத்துகளை வெளியிட்டார். சில வருடங்களுக்குப் பின் மல்லிகா தான் புதியமாதவி’என்று தெரியவந்தக் காலக்கட்டத்தில் கேட்டார்கள். வேறுபெயர் கிடைக்கவில்லையா ? அது ஏன் மாதவி? என்று அப்போது தீர்மானித்தது தான் என் புனைபெயரை அப்படியே தொடர்வது என்று. மாதவி என்றால் குருக்கத்தி, துளசி, துர்க்கை என்ற பல பொருட்களும் உண்டு. இந்த ஒவ்வொரு அர்த்தங்களும் /\எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. மல்லிகா புதியமாதவியாக பயணம் தொடர்வது இதனால் தான்.
இலங்கை பயணம் பயனுடையதாக அமைந்திருந்ததா ?
பயணங்களில் பயன் பற்றி யோசிப்பதில்லை நான். பயணங்கள் எப்போதும் புதுப்புது அர்த்தங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன. பத்து புத்தகம் வாசித்த அனுபவத்தை விட ஒரு பயணத்தின் அனுபவம் என்பது நிஜங்களின் தரிசனத்தை தரும் அனுபவம். அவ்வகையில் இலங்கைப் பயணம் என் வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியமானது. ஒன்று முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு நான் வருகிறேன். கண்டி வெகுதூரமில்லை, கடலும் மிக ஆழமில்லை என்றாலும் நான் கையறுநிலையில் இருந்தேன். அந்த உணர்வு ஒருவகையான குற்றவுணர்வு என்று கூட சொல்லலாம். மனித நேயமிக்கவர் எவருக்கும் தன் கண்முன்னால் நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துஎதுவும் செய்யமுடியாத குற்றவுணர்வு ஏற்படுகிறது, இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், என் தந்தை தன் இளம்வயதில் வாழ்ந்த கொழும்பு நகரத்திற்கு நான் வருகிறேன், கொழும்புக்கு ஒரு முறையாவது மீண்டும் போக வேண்டும் என்பதே என் அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை. என் அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் கொழும்பில் தான் வசிக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் இருந்த தொடர்புகள் அப்பாவுக்குப் பின் இல்லை. இந்த மனநிலையும் சேர்ந்து கொழும்பு மண்ணில் கால்வைத்தவுடன் ஏற்பட்டது.
நீங்கள் மும்பையில் வளர்ந்தவர். மும்பைக்கும் உங்களுக்குமான தொடர்பு எத்தகையது?
தாமிரபரணி என் தாயகம் என்றாலும் அரபிக்கடலோரம் மும்பை தான் என் வாழ்விடம். மும்பை தான் என் வாழ்க்கை. மும்பையில் பிறந்து, வளர்ந்து திருமணம் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கும் நான், மும்பை தமிழ் சமூகத்தின் நாலாவது தலைமுறை. என் அப்பாவுக்கு தாத்தா காலத்திலேயே அவர்கள் மும்பை வந்துவிட்டார்கள். மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்த இடம் மும்பை. அதனால் தான் மும்பை என் வாழ்க்கையுடன் நெருங்கிய நேரடி தொடர்புடையதாக என்னைப் பாதிப்பதாக இருக்கிறது. தாமிரபரணி எனக்கு வேடந்தாங்கலாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 4வது தலைமுறையாக மும்பையில் வாழும் நான் மும்பையை அம்ச்சி மும்பையாக (அம்ச்சி – எங்கள்) . ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் மும்பை என்னை அப்படி தன் மகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறதா? நான் இன்றும் மும்பையில் ‘பொழைக்க வந்த மதராஸி, இனக்கலவரங்களின் போது “ஸாலா மதராஸி” என்ற இரண்டாம்தர குடியுரிமையுடன் தான் வாழ்கிறேன் என்பது தான் யதார்த்தம்.
மும்பை சேரிப்புறங்கள் தமிழ்ச்சூழலில் விமர்சனத்துக்குரிய கலாசார சூழலாக காண்பிக்கப்படுகிறது..?
இவ்விடத்தில் என் அரசியல் பணி என்பது ஓட்டு அரசியலோ, அதிகாரம், பதவிக்கான அரசியலோ அல்ல. முழுக்க முழுக்க சமூகவிடுதலை சார்ந்த அரசியல் பணி. சமூகவிடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் எப்போதும் நான் துணையாக நிற்கிறேன். பல்கலாசார சூழலில் இது சாத்தியமா என்று கேட்டால் நாம் எந்த தளத்தில் நிற்கிறோம் என்பதை வைத்து நம் சாத்தியப்பாடுகள் தீர்மானிக்கப்படும் என்பது என் எண்ணம். தமிழ் தேசியத்தையும் இந்தியா பல்வேறு இன மக்கள் வாழும் இடம், அதிலும் குறிப்பாக பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாடு என்ற புரிதல் வேண்டும். இங்கு வாழும் மராட்டிய சகோதரர்களின் மண்ணின் மைந்தர்கள் கொள்கையில் இருக்கும் சில அடிப்படை நியாயங்களை நான் புறக்கணிப்பதில்லை. தந்தை பெரியாரைப் பற்றி மும்பையில் எந்த மொழி சார்ந்த மேடையிலும் என்னால் பேச இயலும். யாருக்கும் அவர் தெரியாவதவர் அல்ல.பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் இந்த மூவருக்கும் இருக்கும் நுண்ணிய வேறுபாடுகள் பகை முரண்கள் அல்ல என்ற தெளிவும் எனக்கிருக்கிறது. இந்த மூவரும் எப்போதும் என்னுடம் பயணிக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் மும்பையில் இவர்களுக்கான தேவையும் இடமும் இருக்கிறது. நான் பிறந்த குடும்பமும் முழுக்கவும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். என் அப்பாவுக்கு தாத்தா நரசிம்மமேஸ்திரி அவர்கள் தான் மும்பையில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்தை நிறுவி இருக்கிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மும்பைக்கு அருகில் இருக்கும் புனே நகரில் வாழ்ந்த மகாத்மா புலே. என் அப்பா பி.எஸ்.வள்ளிநாயகம் அவர்கள் பெரியார், அண்ணா வழி வந்த அரசியல் வாழ்க்கையிலும் என் அப்பாவின் தம்பி , என் சித்தப்பா பி.எஸ் கோவிந்தசாமி விளிம்புநிலை மக்களின் அரசியலை முன்னெடுத்த குடியரசு கட்சியிலும் இருந்தார்கள். இந்தப் பின்புலம் என் சமூகவிடுதலைக்கான பயணத்தில் எனக்குத் துணையாகவும் இருக்கிறது. சில நேரங்களில் தொந்தரவாகவும் இருக்கிறது.
ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக இயங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எவ்வாறு?
மலையகம் இந்த பிரதேச வேறுபாடுகளில் பெண்களின் சூழலை எவ்வாறு உணருகிறீர்கள்?
மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வில் “பெண்களும் அரசியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள்.இந்த தலைப்பின் முக்கியத்துவம் எத்தகையது/
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல என் அரசியல் பின்னணி. தற்போது தொடர்ந்துநான் எழுதிவரும் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் இன்று என்னை ஓர் அரசியல் விமர்சகராக அடையாளம் காட்டும் சூழல் (நான் இந்த அடையாளங்களை விரும்பவில்லை ஏற்கவில்லை என்றாலும்) . பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகள் என்றால் குழந்தைப்பேறு. குழந்தை வளர்ப்பு, பால் சமத்துவம், பெண்ணுக்கு சொத்துரிமை, குடும்ப நிர்வாகத்தில் ஆணின் பங்கு, பெண் உடல், பெண்கள் எழுதும் பெண்மொழி கவிதைகள், பெண் உடல்நலம், பெண் சிசுக்கொலை, மத ரீதியான பெண் பிரச்சனைகள், கருப்பை, கருச்சிதைவு, இதை எல்லாம் காட்டி வியாபாரம் செய்யும் திரை உலகம் என்று ஒரு வட்டத்தில் பெண் சந்திப்புகள் முடிந்துவிடுகின்றன. இவை எல்லாமே பெண்ணியம் சார்ந்தவை தான் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால் ஆட்சி அதிகாரம் சட்டம் என்று வந்துவிட்டால் அது முழுக்கவும் பெண்ணுலகிலிருந்து ரொம்பவும் தூரமாக இருக்கிறது. ஒரு வகையில் சொல்லப்போனால் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அரசியல் முழுக்கவும் ஆண்களுக்கானதாக இருக்கிறது. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுடன் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பெண்ணியம் சார்ந்த பிரச்சனையும் பெண் அரசியலில் நுழைவதற்கான தடைக்கற்களாக இருக்கின்றன . இதை பெண்கள் புரிந்து கொள்வதுடன் இதைப் பற்றி பேசவும் விவாதிக்கவுமான தருணம் வந்துவிட்டது. நாம் இனி அரசியல் பேசி ஆகவேண்டும்.
இன்றைய அரசியலில் பெண்களின் இடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இலங்கையில் தாங்களை பெரிதும் பாதித்த விடயம் எது?
முள்ளிவாய்க்காலின் போர் தின்ற சனங்களின் கதைகள்.. ..வரலாற்றை துடைத்து எடுத்தல் என்ற சொற்றொடரை நான் வாசித்திருக்கிறேன் ஏன் எழுதியும் இருக்கிறேன்… ஆனால் உண்மையில் வரலாற்றை துடைத்து எடுத்தல் என்றால் என்ன என்று இலங்கையில் பார்த்தேன், உணர்ந்தேன்.
பெண் வழிபாடு சிறுகதைகள் தமிழ்நாட்டின் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை.எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்பது தான் உண்மை. தற்போது எங்கள் தமிழ்நாட்டு சூழலில் .தமிழ்நாட்டு இலக்கிய சூழலில் பெண்ணின் கலாச்சாரம் சார்ந்து சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த சாதி சார்ந்த அடையாளமும் இருக்க கூடாது.. அப்படி ஒரு அடையாளம் இருந்தால் அந்தக் குறிப்பிட்ட சாதிக்காரார் என்னவோ அவர் பொண்டாட்டியை பற்றி எழுதிவிட்டதாக கலவரம் செய்ய வருவார்கள். அந்த அடையாளம் இல்லை என்றால் அந்தப் பெண் ” எவளோ ருத்தி..அவர்கள் வீட்டுப் பெண் அல்ல” என்ற மனப்பான்மை.அதே நேரத்தில் என்கவிதை தொகுப்பு “ஹேராம்” வெளிவந்தவுடன் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டது. காரணம் அக்கவிதைகள் வெளிப்படையாக இருந்த இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கருத்துகள். என் தனியறை சிறுகதைகள் தொடர்ந்து மும்பை போஸ்ட் வார இதழில் வெளிவந்த காலத்தில் ” நான் அவர்கள் வீட்டு கதையை எ ழுதிவிட்டதாக ” ப்லர் என்னிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். அதில் என் உறவினர்களும் உண்டு. மேலும் அண்மைக்காலங்களில் என் அரசியல் விமர்சனங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? அதன் சரிவுகளுக்கு யார் காரணம்? இந்தியாவின் இந்துத்துவ ஆட்சி, இந்தியாவின் மதசார்பின்மை, சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னைக் கருத்தியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் எழுதுவதற்கு கூட ஆள் வைத்து தரக்குறைவாக எதிர்ப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? முரண்கள் அனைத்தையும் பகை முரண்களாகவும் விமர்சனங்களை எல்லாம் எதிர்ப்புக்குரலாகவும் எண்ணுவது அச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் வியாதி. இது தீர்க்கப்படவில்லை என்றால் .. ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியையும் அது பாதிக்கும். தினக்குரல் ஆசிரியர் குழுமத்திற்கும் வாசகர்களுக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்.
அருமையான பேட்டி. பல்வேறு பயன்மிக்க கருத்துக்களை உள்ளடக்கிய பேட்டியும்கூட! குறிப்பாக, //ஆணின் விடுதலை எப்போதும் சமூகவிடுதலையாகவும் அதே நேரத்தில் இச்சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்ணின் விடுதலை மட்டும் தனித்துபெண்விடுதலையாகவும் இன்றுவரை தொடர்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளரை நாம் இனி சமூக செயற்பாட்டாளராக அடையாளம் காண பழக வேண்டும்.// என்ற கருத்து மிகவும் முக்கியமானது.
பேட்டிகண்ட லுணுகலை ஶ்ரீ மிகுந்த பாராட்டுக்குரியவர்.