பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன் 

ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில் 
ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில் 

வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை பாலியல் வன்முறை செய்தியும்,காதலன் காதலியை கூட்டுபாலியல் வன்முறைசெய்த செய்த செய்தியும், தந்தை மகனை பாலியல் சேட்டை புரிந்தும், தந்தையின் காதலியை மகன் வன்புணர்வு செய்ததும், அறுபது வயது மூதாட்டியை இருபது வயது இளைஞன் வன்புணர்ந்ததும் என கிட்டத்தட்ட ஒரு நாளில் பத்து வெவ்வேறுபட்ட செய்திகளை படிக்கக்கூடியதாக இருந்தது.இதற்கெல்லாம் காரணம் என்ன என்ற கேள்விகளை விட இவற்றையெல்லாம் ஏன் பத்திரிகைகள் அதிகமாக பிரசுரிக்கின்றன என்ற கேள்வியே என்னிடம் அதிகமாக இருந்தது. ஒரு வன்புணர்வு செய்தியை பிரசுரிப்பதை தற்சமயம் உள்ள பத்திரிகைகளும் இணையங்களும், குற்றம் செய்தவர்களுக்கானதோ இனி செய்வதற்கான மனநிலையுடன் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு விடயமாக கொள்கிறார்களோ இல்லையோ நிச்சயமாக அந்த செய்தியை பாலியல் கவர்ச்சிக்கான செய்தியாக ஆக்கிவிடுகிறார்கள். அவன் கதவை திறந்தான் என ஆரம்பித்து அவள் இறுதிக்குரலுடன் அடங்கினாள் என்பது வரை நன்றாக காட்சியைவிபரித்து எழுதக்கூடிய மிகச்சிறந்த செக்ஸ் எழுத்தாளர்களாக எமது ஊடகவியலாளர்களின் ஒரு பகுதியினர் மாறியிருக்கும் அதேவேளை இன்னொரு பகுதியினரோ

‘மாணவி கொலை காமக்கொடூரர்களின் வேலை’ என்று கைக்கூ கவிதை போல செய்தியை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.நிலைமை தெளிவின்றிய மக்களோ( அதாவது செய்திகள் படித்து தெரிந்து கொள்ளும் ஒரு கூட்டத்தினர்) ஆர்வலர்களாக இருக்கிறார்களே தவிர ஆத்திரக்காரர்களாகவோ உணர்வு ரீதியானவர்களாகவோ இல்லை. இந்தப்பத்தியை நான் எழுதக்காரணமாக அமைந்தவர்கள் அண்மையில் புங்குடுதீவில் கூட்டுவல்லுறவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவும், இன்ன இதர பாலியல் கொடுமைகளில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நொடியிலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களும் தான் , மேலும் உணர்வு, சிந்தனை, உடல் ரீதியான பாலியல்வன்முறைகளில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் இந்தப்பத்தியை எழுதிக்கொள்கிறேன்.
 
இங்கே ஆண் அல்லது பெண் தமது இனத்தின் தன்மையை வெளிப்படுத்தும் ஆற்றலை பாலியல் என்று கூறிக்கொள்ளுமிடத்து (பெண்ணியம், ஆணியம் பற்றி பிறகு பார்க்கலாம்) அது சிந்தனை ரீதியான வெளிப்பாடாகவும், உணர்வு ரீதியான வெளிப்பாடாகவும், பாலியல் நடவடிக்கை சார்ந்த வெளிப்பாடாகவும் எடுத்துக்கொள்ளலாம். இங்கு பாலியல் வன்முறைகள் என்பதும் சிந்தனை ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பாலியல் நடவடிக்கை ரீதியாகவும் வெவ்வேறு வகைப்படும். ஒரு பெண்ணினது சிந்தனையில் ஆணோ ஆணின் சிந்தனையில் பெண்ணோ வலிந்து மாற்றங்களை ஏற்படுத்துதல் , கருக்கலைப்பை ஊக்குவித்தல் என்பன சிந்தனை ரீதியான பாலியல் வன்முறையை சாரும் அதே நேரம், பாலியல் சார்ந்தவார்த்தை பிரயோகங்களால் துன்புறுத்தல், கேலி செய்யும் போது ஏற்படும் மனத்தாக்கம், உடல் சார்ந்த கருத்துக்களை வழங்குதல், வீட்டில் வயது வந்த பெண்ணிணதோ ஆணிணதோ கல்வி , திருமண முடிவுகள் சம்பந்தமான தீர்மானங்களை வலிந்து மேற்கொள்ளல் அதற்காக அவர்களை மாற்றியமைத்தல் என்பன உணர்வுகள் சார்ந்த பாலியல் வன்முறைகளாகவும் வலிந்து ஒரு பெண்ணை கர்ப்பமாக்குதல், அனுமதியின்றி தொடுதல், பாலியல் வண்புணர்வு, பாலியல் நோக்கம் கருதி ஆணையோ பெண்ணையோ அடிமைப்படுத்துதல், திருமணவயது வரமுதல் திருமணம் செய்துவைத்தல், வயது வந்த பிள்ளைகளின் சுயசெயற்பாடுகளில் அடக்குமுறையை மேற்கொள்ளுதல் போன்றவை பாலியல் நடவடிக்கைகள் சார்ந்த வன்முறையாகவும் கொள்ளலாம். இங்கே அதிகமாக சிந்தனைரீதியானதும், நடவடிக்கை ரீதியானதுமான பாலியல் 
வன்முறைகள் அதிகளவாக பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு மிகநெருக்கமானவர்களாலயே அதாவது பெற்றோர், மாற்றுத்தாய், மாற்றுத்தந்தை, உடன்பிறந்தோர், உறவினர்,அயலவர்,கணவன், காதலன்
போன்றோராலயே நிகழ்த்தப்படுகின்றது. 
 
அடுத்ததாக இங்கு பாலியல் வன்முறைகளை நாம் எப்படிபிரித்து நோக்கவேண்டும் என்றபோது, அவை பாகுபடுத்தப்படும் அளவுகள் வித்தியாசம் அதே நேரம் பலதரப்பட்டவை. ஆணொருவன் பெண்மீது, பெண்ணொருத்தி ஆண்மீது, ஆண் ஒருவன் சக ஆண்மீது, பெண்ணொருத்தி சகபெண்மீது, மாற்றுப்பாலினத்தவர்களால் பொதுப்பாலினத்தவர்மீது, பொதுப்பாலினத்தவர்களால் மாற்றுப்பாலினத்தவர்மீது, பால் புதுமையினரால் மாற்றுப்பாலினத்தவர், பொதுப்பாலினத்தவர் மீது, பொது, மாற்றுப்பாலினத்தவர்வர்களால் பால்புதுமையினர்மீது ஏற்படுத்தப்படும் பாலியல் உணர்வு , சிந்தனை , நடவடிக்கை சார்ந்த அனைத்து வன்முறைகளும் பாலியல் வன்முறைகள் என்று கருதப்படும் அதேவேளை. ஒரு சில பாலியல் உசுப்புதல்கள் (பாலியல் பிழைகள்) பரவலாக இவ்வாறான பாகுபடுத்துதலில் உட்படுத்திக்கொள்ளலாம்.
 
இங்கு பாலியல் பிழைகள் என்பதில் சாதாரணம் அசாதாரணம் என்று பகுக்குமிடத்தே பிழையில் சாதாரண பிழைகள் சமூகத்தால் பரவலாக விரும்பப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. வீதியில் ஒரு பெண்ணை ஒரு ஆண் கிண்டல் கேலி செய்யப்படும் போது அது பெண்களில் பெரும்பகுதியினரால் விரும்பப்படுகிறது  , ஒரு பெண் ஆணிடமோ ஒரு ஆண் பெண்ணிடமோ காதலை சொல்லுதல் என்பது சாதாரணமான ஒன்று ஆனால் அதை உணர்வு ரீதியான பாலியல் உசுப்புதல் என்று கொள்ளுமிடத்து அது கூட அதே சமுதாய ஆண் பெண்ணிணால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது .அடுத்தது காதலில் உரிமை எடுத்தல் அதாவது காதலியில் அல்லது காதலனில் கோபம் ஏற்படுமிடத்தில் அடித்தல், திட்டுதல் மற்றும் கோபத்துடன் மொழிகளை கையாளுதல் போன்றவை,ஒரு பாலியல் சார்ந்தவன்முறை என்றாலும் அது அந்த காதலியினாலோ காதலனாலோ சமூகத்தில் பெரும்பாலான நடைமுறையாகவோ இது ஏற்றக்கொள்ளப்படுவதால் இவ்வகையான வன்முறைகளை பிழைகளில் சாதாரணம் என்ற வகையறாக்களில் அடக்கமுடியும் ஆகவே இங்கு பிழையில் சாதாரணங்கள் சரியென்றே எதிர்ப்பாலினர்களால் கருதப்படுதல் ஒரு சமூக கோளாறு என்றே எனக்கு தோன்றுகிறது. 
 
இங்கு பாலியல் வன்முறைகளின்  ஆணிவேர் சிறுபராயத்திலிருந்தே தொடக்கப்படுகின்றது. அதேவேளை அதில் பெரும்பகுதி பெற்றோர்களை சார்ந்துள்ளது. ஒரு குழந்தை அப்பாவின் சாயலில் இருக்கிறது, அம்மாவின் சாயலில் இருக்கிறது என்ற கருத்துக்கணிப்பே, ஒரு குழந்தையில் நாம் திணிக்கும் பாலியல் வன்முறையாகும்.சாயல் என்ற வார்த்தை பிரயோகத்தில் சமூகம் எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என அறிய முற்படும்போது. அந்த சாயல் என்றவார்த்தை ஒரு குழந்தையின் சிறுவனின் அல்லது சிறுமியின், இளைஞனின் அல்லது யுவதியின் பாலியல் தனித்துவத்தை உணர்வுரீதியாக சிதைவடையசெய்வதை நான் உணர்கிறேன். இதுவும் சமூகத்தால் பிறந்தகுழந்தையின் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறைதான். 

அடுத்ததாக ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் உடன்பிறந்தவர்களின் அடிப்படையில் பாலியல் வெளிப்படுத்துதலை கருதினால் ஒரு சிறுவனின் கூடப்பிறந்தவர்கள் இரண்டு பெண்களாக இருக்கும் பட்சத்தில் அந்தச்சிறுவனின் பாலியல் வெளிப்படுத்துகை பொதுவாக பெண்தன்மையை ஒத்ததாக காணப்படுகிறது. அதாவது பெண்களுக்குரிய சிந்தனை உணர்வு செயற்பாடுகள் அவனிடம் இலகுவாக ஒட்டிவிடுகின்றன. அதேவேளை ஒரு சிறுமியின் உடன் பிறந்த சகோதரர் இருவர் ஆணாக இருக்கும்பட்சத்தில் அந்த சிறுமியின் பாலியல் ஆண்பாலியல் வெளிப்படுத்துதல் ஒட்டிவிடுவது இயல்பு. இதே வேளை குடும்பத்தில் அதிகமான பிள்ளைகள் இருத்தலின் இவ்வாறான பிரச்சனைகள் குறைவாக இருக்கும் அதேவேளை, தனிப்பிள்ளையாக இருக்கும் சிறுவனோ சிறுமியோ தனது பருவ வயதுவரை அவனுக்கு பெற்றோரில் மிக நெருக்கமான அம்மா அல்லது அப்பாவின் பாலியல் தன்மையை பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு பெண்குழந்தைக்கு தாயின் நெருக்கமும் ஆண்குழந்தைக்கு தந்தையின் நெருக்கமும் அவசியாகிறது. இவ்வாறான வெளிப்படுத்துகையில் ஏற்படும் மாற்றமே அவர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி பின்னைய நாட்களில்அவர்களை பால்புதுமையினராக (genderqueer) சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது எனலாம். அதே வேளை பெற்றோர் அவர்களின் மூன்று வயது ஆரம்பிக்கும் போதே வகுப்புகள் மற்றும் பாடசாலைக்கு அனுப்பிவிடுகின்றனர். அங்கே அவர்களுடன் பழகும் நண்பர்கள் ஆசிரியர்களின் மூலமும் சிறுவர்களின் பாலியல் வெளிப்படுத்துகையில் மாற்றம் சடுதியாக ஏற்பட்டுவிடுகிறது. அதேவேளை சிறுவயது பாலியல் வன்முறைகள் இந்த வயதிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. ஒரு மனிதவாழ்க்கையின் முதற்கட்டபாலியல் வேட்கையானது மூன்றுவயது தொடக்கம் ஏழு ,எட்டு, பத்து வயதுவரை அதாவது பருவ வயதுவரை கூட நீடிக்கலாம். ஆனால் இதை ஒரு ஆறுவயதுவரை பெற்றோர்கள் அனுமதிக்கலாம், இது அந்தவயதை கடந்து தொடரும் சந்தர்ப்பத்தில் அதுபற்றி அவர்களுக்கு பெற்றோர் சரியானவிழிப்புணர்வு வழங்குதல் அவசியமானது. தேடலின் அதிதீவிர சூட்சுமத்தை உள்ளடக்கியதே மனித உடல். இதையே வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் ஒரு குழந்தை உணர்கிறது. இங்கு நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் ஒரு குழந்தை தாய் தந்தைக்கிடையிலான உடல் வேற்றுமையை , உடை வேற்றுமையை அடையாளம் காண்பதுடன். ஒரு பொதுவெளியில் தன்வயதை ஒத்த சிறுவனையோ சிறுமியையோ பார்க்க நேருமிடத்தில் அதன் உடைவேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இங்கே தான் குழந்தைகளிடையேயான பாலியல் விளையாட்டுக்களின்( sexual play) காலப்பகுதி ஆரம்பிக்கிறது.

 
 சிறுவயதில் ஆண், பெண் பிள்ளைகள் அயலில் ஒத்த வயதில் இருக்கும் சிறுபெண், ஆண் பிள்ளைகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் அம்மா அப்பா விளையாட்டு, கணவன் மனைவி விளையாட்டு, மற்றும் வைத்தியர் நோயாளி விளையாட்டு போன்றவையை அவதானிக்கும் போது எதிர்பால் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை தொடுதல் போன்ற செயற்பாடுகள் பின்னைய நாளில் ஏற்படுத்திகொள்ளும் சுய இன்ப செயற்பாடுகளுக்கு ஈடானவை. இருந்தும் இதை  சாதாரணமாக பாலியல் எதிர்தன்மையை அறியும் ஆவல் என்று கூறிக்கொள்ளலாம். இங்கே அதிகளவான  கண்டிப்பை பெற்றோர் காட்டக்கூடாது, காரணம் இது ஒரு சாதாரணபாலியல் நடத்தை மாத்திரமே.
இங்கு உளவியலாளர் kinsley யின் உளவியல் அறிக்கையை உதாரணப்படுத்திக்கொள்ளலாம்.கட்டிளமைபருவத்தின் முன்னே 50%மான பிள்ளைகள் பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர் என்பதையும் 34%ஆன குழந்தைகள் மாற்றுப்பாலின விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் அவதானிக்கலாம். இங்கு இவ்வாறான நடத்தைகளில் இந்தவயது காலப்பகுதியில் ஆண் பிள்ளைகளின் செயற்பாடுகளே அதிகம் உள்ளதை அவதானிக்கலாம், பெண்பிள்ளைகளிடையே இவ்வாறான செயற்பாடுகள் ஒப்பீட்டுரீதியில் குறைவானவை மாத்திரமே. அதுவும் வீட்டில் ஏற்படுத்தப்படும் அதீதகட்டுப்பாடுகளால் மாத்திரம் கட்டுப்பட்ட உறங்குநிலையில் இருக்கின்றன என்றே சொல்லலாம்.இங்கே இவ்வாறான குழந்தைப்பாலியல் விளையாட்டுக்கள் அதிகம் கிராம்ப்புறங்களில் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். காரணம் நகர்ப்புறங்களில் சிறுவர்களின் தற்போதைய செயற்பாடுகள் மனழுத்தம் தரக்கூடிய கல்விமுறையையும், இணைய விளையாட்டுக்கள், தொலைக்காட்சிகளை சார்ந்திருக்கிறது. இது அவர்களின் கட்டிளமைபருவத்தின் பின்னான பாலியல் வேட்கையை இறுக்கமடைய செய்துவிடும் ஒரு செயற்பாடகவும் நோக்கலாம்.
 
அதேவேளை இவ்வாறான தொடர்செயற்பாடுகள் ஆறுவயதிற்கு மேலும் தொடரும் சந்தர்ப்பத்தில் சரியான புத்திமதிகள் அவசியம் அதிகமான பெற்றோர் தமது குழந்தைகளுக்கு முன் தமக்கிடையேயான உடல்ரீதியான நெருக்கத்தைகாட்டுவதும். தவறான வார்த்தை பிரயோகங்களினால் சண்டைபிடிப்பதும் தவிர்க்கப்படவேண்டியது. காரணம் இவ்வுலகில் எந்தமொழி தூஷண வார்த்தைகளும் ஆண் பெண் பாலியல் உறுப்பினை கொச்சைத்தன்மையாக வர்ணிக்க பாவிக்கப்பட்டு வரும் சொற்களாகவே இருக்கின்றன. இங்கு நான் ஆரம்பத்தில் கூறிய பாலியல்விளையாட்டுக்களின் தொடர்ச்சி   பத்துவயதுக்கு உட்பட்ட பாடசாலை காலங்களில் ஏற்படும் காதலும், ஆசிரியர் அல்லது ஆசிரியை மேல் ஏற்படும் பாலியல் ஈர்ப்பும். அதே வேளை ஆண் பெண் கலவன் பாடசாலைகளில் ஆண்களின் மலசலகூடத்தை பெண்பிள்ளைகள் எட்டிப்பார்த்தலும், பெண்பிள்ளைகளின் மலசலகூடத்தை ஆண்பிள்ளைகள் எட்டிப்பார்த்தலும் இவ்வாறான பாலியல் விளையாட்டு வகையறாக்களே.இவற்றின் தொடர்ச்சி பன்னிரண்டு வயதுகளிலும் இருக்குமென்றால் நிச்சயம் இங்கு காப்பு நடவடிக்கை அவசியமாகிறது. இவ்வாறான வயது காலப்பகுதியிலேயே (அதாவது ஏழு தொடக்கம் பன்னிரண்டு) அதிகமான சிறுவர் பாலியல் உணர்வு, சிந்தனை, செயற்பாடு ரீதியான வன்முறைகள் ஏற்படுகின்றன. அதாவது தகாதபாலியல் உறவின் ஆரம்பம், ஓரினப்புணர்ச்சி, பாலியல் தூண்டுதல் விளையாட்டுக்கள் ஏற்பட்டு சிறுவர்களின் மனம், உடல், சிந்தனை ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. என்னைப்பொறுத்தவரை இதற்கான தீர்வாக ஆறுவயதிலயே பாலியல் கல்விமுறை அவசியமாகின்றது என்பேன், ஐந்து வயதில் பாலியல்துஷ்பிரயோகப்படுத்தப்படும் பெண், ஆண் குழந்தைகள் எமது சமூகத்தில் இருக்கும்போது ஏன் ஏழு வயதில் சரியான விழிப்புணர்வுடன் கூடியபாலியல் கல்விமுறையை எனது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தக்கூடாது.
பெற்றோராவது இது பற்றிய அறிவுறுத்தல்களை கட்டிளமை பருவத்திற்கு முதல் வழங்குதல் அவசியம் என்றே நான் கருதுகிறேன்.
 
தொடரும்…
நன்றி முகநூல் -ஆதிபார்த்தீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *