வித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்

 சிங்களத்தில்: http://www.vikalpa.org/?p=24033 தமிழில்: லறீனா அப்துல் ஹக்

 யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள  பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை  அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக்கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.

 

முன்னரைப் போலன்றி, பாராளுமன்ற அமைச்சர்கள் முதல் திவயின பத்திரிகை வரையும், அரச சார்பற்ற நிறுவனம் முதல் சாதாரண சமூக அமைப்புகள் வரையும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தெற்கில் சுமார் 100 சிறுமியரை வல்லுறவுக்குட்படுத்தி, அதனை பார்ட்டி வைத்துக் கொண்டாடிய காமக்கொடூரர்களான அரசியல்வாதிகளைப் பற்றி வாயே திறக்காத தெற்கின் சிங்கள பௌத்தர்கள், வித்யாவுக்காகக் குரல் எழுப்பினர். (ராஜபக்‌ஷ மற்றும் அக்கோஷ்டியில் உள்ள கயவர் குழுவைத் தவிர) தெற்கில் நடந்த அக்கொடூரம் பற்றி வாய்திறக்காத பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள், மகளிர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வித்யாவுக்காகக் குரல்கொடுப்பதில் முன்னின்றமை குறிப்பிடத்தக்கது. 

 வித்யாவும் இசைப்பிரியாவும்

 வித்யாவின் கொலைஞர்கள் தமிழர்களாக இருந்தமை, தெற்கில் ஏதோ ஒருவகையில் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தூண்டுதலாக அமைந்தமையானது, இலங்கையில் தமிழராக இருப்பதன் பின்னாலுள்ள  ‘அரசியலை’ இன்னுமின்னும் ஆழமாக வெளிக்காட்டும் வகையில்  அந்நிகழ்வு அமைந்துவிட்டது எனலாம். அது ஒரு பாரபட்சமான/ நேர்மையற்ற தூண்டுதலே என்பதை அவர்கள் அறியாதவர்களா? அந்தத் தூண்டுதல் எவ்வாறானது?

 அப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது போல் தெற்கின் அமைச்சர்களும், இதுகாலம் வரையில் வடக்கில்  இடம்பெற்ற அத்தகைய பாலியல் வல்லுறவுகள், கொலைகள் தொடர்பில் இத்தகைய விழிப்புணர்வோடு எதையுமே செய்யாத தெற்குவாழ் மக்களும் மேற்படி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்திருந்தனர். அவ்வாறான எதிர்ப்புப் பேரணிகள், கொழும்புக் கோட்டையில் இருந்து பொரல்ல வரையும், பல்வேறு இடங்களிலும் வீதிகள்தோறும் இடம்பெற்றன. இன்னும்கூட  இடையறாது இடம்பெற்று வருகின்றன. அதில் எந்தத் தவறும் இல்லை. என்றாலும், இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பில் இதையொத்த எதிர்வினைகள் ஏன் எழவில்லை என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.  

 வித்யா பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டதைப் போலவே வன்னியில் கல்விகற்று பின் எல்.டி.டி.ஈ. அமைப்பின் ஊடகத்துறையில் இணைந்த சோபா இசைப்பிரியாவும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு குழந்தைக்குத் தாயான இசைப்பிரியா, 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரச படையினரால் நிகழ்த்தப்பட்ட ஷெல் தாக்குதலில் தனது குழந்தையைப் பறிகொடுத்து, அதே வருடம் தனது கணவனையும் போரில் இழந்து ஆற்றொணாத்துயரில் ஆழ்ந்திருந்தவர். எது எப்படி இருப்பினும், புலிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவில் செய்தியாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, போரினால் தற்செயலாகக் கொல்லப்படவில்லை என்பதை இன்று உலகறியும். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் பின் அரச படையினரிடம் சரணடைந்த இசைப்பிரியா, இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தால் கைதுசெய்யப்படும்போது, எந்த உடல்நலக் கோளாறும் இன்றிக் காணப்பட்ட இசைப்பிரியா, பின்னர் இராணுவச் சிப்பாய்களால் மிலேச்சத்தனமான இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட உயிரற்ற நிர்வாண உடலாகக் கண்டெடுக்கப்பட்டமைக்கு இணையவெளி முழுதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்த வீடியோ மற்றும் புகைப்படங்களும் சான்றுபகன்றன. (செனல் 4 எனும் தொலைக்காட்சியும் இதுதொடர்பில் இலங்கை இராணுவத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. உலகம் முழுதும் உள்ள துறைசார் நிபுணர்களால் குறித்த வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இந்த வீடியோ போலியானது என வாதிடும் நபர்கள் இந்தத் தீவில் இன்னுமே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானவர்களும்கூட தற்போது வித்யாவுக்காகக் குரல் எழுப்பிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது).

 அவ்வாறே, கடந்த ஆறு வருட காலமாக இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையதளமெங்கும் உலவின. என்றாலும், இன்று வித்தியாவுக்காக எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றவர்கள் அன்று இசைப்பிரியாவைக் கண்டுகொள்ளவில்லை. இசைப்பிரியாவின் உயிரற்ற உடலருகே மிருகங்களைப் போல் நடந்துகொண்ட கொடூரர்களைக் கண்டுகொள்ளவில்லை.

 ஏன் அப்படி நிகழ்கின்றது? ஏன் அப்படி நிகழ்ந்தது?

 மிகப் பொதுவான அதேநேரம் ஆழமான இனவெறியைப் பிரதிபலிக்கும் அவலமான நிலையே இதன் காரணமாகும்.

 வித்யா அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். அதனால், நாம் அந்த வல்லுறவாளர்களுக்கும்  படுகொலையாளர்களுக்கும் எதிராய் அணிதிரண்டுள்ளோம். அதனால், வித்யாவுக்காக நீதிகேட்டு நாம் வீதியில் இறங்கிப் போராடுகிறோம். வித்யாவைப் படுகொலை செய்தவர்களுக்கு உச்சபட்சமான தண்டனையை வழங்குமாறு கோரிநிற்கின்றோம். அதில் தவறில்லை. அது அப்படித்தான் செய்யப்படல் வேண்டும்.

 ஆனால்..!

 இசைப்பிரியாவைப் படுகொலை செய்தவர்கள் நம்மவர்கள். தெற்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் சிங்கள இனத்தவர்கள். அவர்கள் தமிழர்கள் அல்லர். அதனால், சிங்களவர்களாகிய நாம் சலனமின்றி மனசாட்சியை நாட்டுப் பற்றினால் சுற்றிக் கட்டி, நல்லிணக்கம் பற்றிக் கதைபேசுகின்றோம். இசைப்பிரியாவைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோரும், படுகொலை செய்தோரும் நம்மவர்கள் என்பதால், அதனை அவர்கள் செய்தது, நாட்டின் விடுதலைக்காக என்று கொள்கின்றோம். அதனால், நாம் இசைப்பிரியாவைப் பற்றி ஒரு வார்த்தைதானும் பேசுவதில்லை. இசைப்பிரியாவின் உடலில் இருந்து பெருக்கெடுத்தோடிய இரத்தத்தை நாம் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுகின்றோம். அதனால், ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் கோட்டையிலோ பொரல்லையிலோ வேறெந்த இடத்திலுமோ இசைப்பிரியாவின் பெயரைத் தவறிக்கூட உச்சரித்துவிடாமல் மிகக் கவனமாக இருக்கிறோம்.

 தற்போது வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடும் எதிர்ப்புப் பேரணிகளில் இசைப்பிரியா போன்ற பெண்களின் துயரமும், அவர்களின் உடல்களில் இருந்து பெருக்கெடுத்தோடிய குருதியும் நம்மை எதிர்கொள்ளாமலேயே கடந்துபோய் விடுவதும் அதனால்தான்.

 வித்யாவைப் படுகொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் சிங்களவர்களாகிய நாம் அந்தப் படுகொலைக்கு எதிராகக் குரல் எழுப்பி வீதியில் இறங்கிப் போராடுகின்றோம். இசைப்பிரியாவின் படுகொலையாளர்கள் சிங்களவர்களாக இருப்பதால், சிங்களவர்களாகிய நாம் போலியான நாட்டுப்பற்று எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு பாரபட்சமாய் நடந்துகொள்கின்றோம். இன்று தெற்கில் அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

 இதற்குச் சமாந்திரமான மற்றோர் உதாரணத்தைத் தருகின்றோம். சில மாத காலத்துக்கு முன்னர், இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டாததும் இதுபோன்றதே!

 ஆகவே, இந்த இரட்டை நிலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பொருத்தமான சொல்லொன்று இருக்கிறதா?

 இந்தக் குறிப்பினை நிறைவுசெய்வதற்கு முன், “வித்யாவுக்குப் போலவே இசைப்பிரியாவுக்கும் நீதி கிடைக்கச் செய்யுங்கள்! வித்யாவுக்குப் போலவே இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையாளர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுங்கள்!” என்று கேட்டு, தெற்கில் உள்ளோர் எப்போது போராடப் போகின்றார்கள்? அப்போதுதான் நமக்கு நல்லிணக்கம் பற்றியும் சகோதரத்துவம் பற்றியும் மனப்பூர்வமாகப் பேசக்கூடியதாக இருக்கும்.

 நீங்கள் உங்கள் இதயத்தைத் தொட்டுக் கேளுங்கள்.

 வல்லுறவாளனின், படுகொலையாளனின்  வர்க்கம், இனம் என்பவற்றின் அடிப்படையிலா நீங்கள் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் எதிராகக் குரல்கொடுப்பீர்கள்?

 வித்யாவின் படுகொலையின்போதும் வடக்கு மக்கள் சரியான நிலைப்பாட்டிலேயே நின்றிருக்கிறார்கள். 

 ஆனால், தெற்கின் மக்கள்?

 இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் நடுநிலைதவறிய பாரபட்சமான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்றால், வித்யாவுக்காக நீதிகேட்டுப் போராடும் வடக்குவாழ் மக்கள் தெற்கில் வாழும் நமக்கு ஒரு புதிய பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதை உணர்வோம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *