Thanks -http://tamil.thehindu.com/tamilnadu/
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளிக்கும் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நிலச்சட்டம், இடதுசாரி அரசியல், முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது:”இந்திய சமூகத்தில் ‘சாதி’ என்ற ஒன்றின் பங்கு குறித்து இடதுசாரிகள் அறிவார்த்தமாக தங்கள் நிலைப்பாடுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். இடதுசாரிகளின் அரசியல் வெறும் தலைமை மாற்றத்தினால் பெரிய மாற்றங்களைக் காணப் போவதில்லை. மதப்பிரிவைனைவாதத்துடன் கார்ப்பரேட் பொருளாதார வளர்ச்சிக் கனவில் சிக்கியுள்ள தற்போதைய ‘இந்து வலதுசாரி’ ஆட்சிக்கு மாற்றாக இடதுசாரிகள் திகழ முடியாது.
கர்வாப்ஸி போன்ற மதரீதியான திட்டங்களை வைத்துக் கொண்டே, அம்பேத்கர் போன்றவர்களையும் தங்களுக்குச் சாதகமாக இந்துத்துவ சக்திகள் வளைக்க முற்படுகின்றன. சாதி என்பதை புரிந்து கொள்வதில் இடதுசாரிகள் அறிவார்த்த தோல்வி கண்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலமானாலும் சரி, கேரளாவாயினும் சரி, ‘சாதி என்பது வர்க்கமே’ என்று கூறுவதன் மூலம் தங்களுக்குத் தாங்களே ‘செக்மேட்’ வைத்துக் கொண்டனர். தங்களை தொடர்பற்றவர்களாக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பாம்பேயில் மில் தொழிலாளர்கள் உரிமைகள் குறித்து 1920-களின் பிற்பகுதியில் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினரான ஷ்ரீபத் தாங்கேவுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது. தலித்துகள் குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபடுத்தப்படும் போது பாட்டாளி வர்க்கத்தினரிடையே சமத்துவம் எப்படி ஏற்படும் என்பதை அம்பேத்கர் மிகச்சரியாகச் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்தே இதுதான் நிலவரம்.தத்துவார்த்தமாகக் கூற வேண்டுமென்றால், அடித்தட்டு சாதிப்பிரிவினர் தங்கள் அடையாளத்தின் மீது கர்வம் கொண்டு அடக்குமுறைக்கு எதிராக செயல்படுவதன் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்தல் அவசியம். முஸ்லிம்களாகவும், கிறித்தவர்களாகவும் மதம் மாறிய தலித் உள்ளிட்ட அடக்கப்பட்ட சாதியினரை கர்வாப்சி மூலம் இந்து வலதுசாரிகள் அவர்களை பெரிய வீட்டுக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் பணியாட்கள் குடியிருப்பையே அவர்களுக்கு அங்கு வழங்குகின்றனர்.கர்வாப்ஸி என்பது புதிதான விஷயம் ஒன்றுமல்ல. இது 19-ம், 20-ம் நூற்றாண்டுகளிலேயே, ஆர்ய சமாஜ், மற்றும் ஷுத்தி இயக்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கையே. மதம் மாறியவர்களை இந்து மதத்துக்குள் கொண்டு வரும் முயற்சி அப்போதிலிருந்தே தொடங்கியதுதான்.
உலகமயமாதலை உக்கிரப்படுத்தும் பொருளாதாரம் சாதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. முதலாளித்துவத்தைத் தழுவுவதன் மூலம் சாதிகள் உடைந்து சிதறி விடாது, மேலும் வலுப்பெறவே செய்யும்.
’21-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம்’ என்ற தனது நூலில் தாமஸ் பிக்கெட்டி என்பவர், பரம்பரை பரம்பரையாக குவிக்கப்பட்டு வந்துள்ள செல்வம் முதலாளித்துவ பொருளாதாரத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.ஆகவே, சாதி என்பது முதலாளித்துவத்தின் தாய் ஆகிவிடும். ஏனெனில் பரம்பரைச் செல்வம் அல்லது சொத்துரிமை என்பது ‘கடவுளின் கட்டளை’ என்று பரப்பப்படுகிறது. சாதியும் முதலாளித்துவமும் நச்சுக் கலப்பு உலோகமாக பின்னிப் பிணைந்துள்ளது. தனியார்மயமும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வாயிலாக கிடைக்கும் கொஞ்சநஞ்ச நன்மைகளையும் சீரழித்து விடும்.
புதிய பொருளாதாரத்தின் அடிப்படை உந்துதலே நில அபகரிப்பு. தகவல் தொழில்நுட்பத் துறையாயினும், நிலக்கரித்துறையாயினும் முதலில் நிலத்தையும் நீராதாரத்தையும் அபகரிப்பதே குறிக்கோள். இவர்களை அனுமதித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது பொய். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே நாம் கண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
1960-70-ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், நில மசோதா குறித்த விவாதங்கள் தற்போது நீர்த்துப் போயுள்ளன. அதன் தீவிரத்தை இழந்துள்ளன.
நக்சலைட்டுகள் இயக்கம் தொடங்கிய போது ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை போராட்டங்கள் தொடங்கின. இந்திரா காந்தி மீதான விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன, அப்போது சமூக நீதி, நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைப்பது, உழுபவனுக்கே நிலம் சொந்தம் ஆகிய கோஷங்கள் ஆதிக்கம் செலுத்தின, ஆனால் இன்று மிகவும் தீவிர இயக்கங்கள் என்று கூறிகொள்பவை கூட ஆதிவாசிகளின் நிலத்தை அபகரிக்கக் கூடாது என்ற அளவில் தேங்கிப் போயுள்ளது.”
இவ்வாறு கூறினார் அருந்ததி ராய்