நன்றி சொல்வனம் – http://solvanam.com/
சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்ன அளவு சிவப்பாகலாம் எனச் சொல்வதன் ஊடேயே சிவப்புதான் அழகு எனும் கருத்தை லாபி செய்வதே போல…
வெள்ளை அல்லது இள நீல நிற இறுக்கிய பேண்ட் அணிந்து, மாடிப்படிகளில் எந்தப் பெண்ணாவது ஏறினாலோ, கேமிரா படிகளின் கீழ் இருந்து அவளின் ப்ருஷ்டபாகம் முன்னிறுத்தித் தெரியும்படி இருந்தாலோ, அவள் அளவுக்கதிகமாகத் துள்ளிக்கொண்டிருந்தாலோ அது பெண்களுக்கான நேப்கின் விளம்பரமேதான். அந்த நேப்கின் பயன்படுத்தினால் அப்படித் துள்ளித் திரிய முடியும் எனச்சொல்வதோடு மட்டுமல்லாமல் வாருங்கள் சந்தோஷமாக வாழ்வை அனுபவியுங்கள் டைப் வாசகங்களின் மூலம் ரெஸ்ட் தேவை இல்லை என்கின்றன இந்த விளம்பரங்கள்.
இதைப் பார்த்து நம் ஊர் அரை குறைகளும் அவற்றைக் காதலோடும், எதோ அதுவரை சிறைப்பட்டிருந்தது போலவும் இந்த நேப்கினால் மட்டுமே தனக்கு விடுதலை கிடைத்ததைப் போலவும் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
அந்த அளவுக்கு இயல்பானதா பீரியட்ஸ்?
இல்லை. ஒரு போதும் இல்லை. இதன் வலியை ஏற்கனவே பெண்கள் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டோ, ஒரு வேளை சொன்னால் ரெஸ்ட் எடு என தன் மற்ற வேலைகளிலிருந்து முடக்கிப் போட்டுவிடுவார்களோ எனும் அச்சத்திலேயோ சொல்வதே இல்லை. ஊருக்குத் தெரிந்ததெல்லாம் அதன் ஒரு துளி மட்டுமே.
இதில் பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தீர்வு.
அதை அவளேதான் கண்டுபிடித்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். குளிக்க வேண்டுமா வேண்டாமா? அந்த சமயங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தணிப்பது சரியா? அல்லவா? சரி எனில் எப்படி அதைச் செய்வது என அவளேதான்…அவளே என்றால் ஒவ்வொருவளும், முடிவெடுக்க வேண்டும், அதற்கு முதலில் தன் உடலை அவளே உற்று கவனிக்க வேண்டும். ஆனால் அவற்றை ஊடறுப்பதாகவே உள்ளன விளம்பரங்களும், மற்றவர் அறிவுரைகளும்.
அது போன்ற சந்தர்ப்பங்களில் குளிக்கலாம் என்றும் குளிக்கக்கூடாது என்றும் இரு வாதங்கள். இரண்டுமே சரி அல்லது இல்லை. ஏனெனில் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.
குளியல் என்பது சுத்தப்படுத்த மட்டும் அல்ல. உடலைக் குளுமைப்படுத்தவும்தான். அந்த சந்தர்ப்பங்களில் உடல் சூடு அதிகமாக இருக்கும். நீரில் ஊறிக்குளித்தால் சூடு குறையும். ஆனால் அப்படிக் குளிர்வித்தால் அந்த நாட்களின் அளவு அதிகரிக்கும். இது சிலருக்கு.
அதீத சூட்டைக் கட்டுப்படுத்த ஊற வைத்த வெந்தயம் தின்பார்கள். ஆனால் அதுவும் கூட நாட்களை சற்றே அதிகரிக்க வைக்கும். இதுவும் கூட இயற்கைக்கு எதிரானது என, தெளிவானவர்கள் அந்த நாட்களை அப்படியே கடப்பதுண்டு. இது பின்னாட்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைத் தள்ளி வைக்கும்.
நாப்கின்கள் எந்த அளவுக்கு ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்படுகிறது என்பதில் நிறைய சந்தேகம் உண்டு.
சுத்த உணர்வைத் தருவதற்காக இள மஞ்சள் நிறத்தில் இருக்கும் பருத்தியானது டயாக்ஸின் கொண்டு ப்ளீச் செய்யப்படுகிறது. நாப்கின்கள் நேரடியாக பொருத்தப்படுவதாலும் எல்லா நேரமும் ஈரத் தொடர்பில் இருப்பதாலும் அந்த கமிகல்கள் உடலினுள் புகக்கூடியதாகவே இருக்கிறது. இது புற்று நோயையும் இன்ன பிற கர்பப்பை தொடர்பான, தோல் தொடர்பான நோய்களை வரவேற்கிறது.
இதற்கு மாற்றாக மார்கெட்டில் இருக்கும் க்ளோரின் ஃப்ரீ முத்திரையுடைய நாப்கின்களில் கூட 100% டயாக்சின் இல்லை என்க முடியாது.
குழந்தை நாப்கின் போலவேதான் பெண்களுக்கான நாப்கின்களும. சிறு குழந்தைகளுக்கு சிறுநீரை தேக்கி வைக்கும் வகையிலேயே பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கப்படுகிறது. அதாவது வெளியேறிய குழந்தையின் சிறுநீரின் நீர்மத்தன்மையை ஜெல்களாக மாற்றிவிட கெமிகல்கள் நேப்கின்களில் சேர்க்கப்படும்.
அதே கெமிகலே பெண்களுக்கான நாப்கின்களிலும். ஆனால் பெண்களின் உதிரப்போக்கில் நீர்மம் மட்டும் வெளியேறுவதில்லை. பிண்டங்களும்தான். இவை இந்த கெமிகல்களால் இன்னும் இறுகி அந்த கெமிகல் உறுப்புகளுக்குள்ளும் சென்று நோய் மட்டுமல்ல அரிப்பு, புண் தடிப்பு என எல்லாவற்றையுமே ஏற்படுத்துகிறது.
இது போக இப்போது புதிதாக, விலக்கு நாட்களின் துர்நாற்றத்தை மறைக்கிறது எனச்சொல்லி சில நாப்கின்கள். இதற்கும் கெமிகல்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த கெமிகல்கள் உடலுக்குள் ஊடுருவும் என்பதிருக்கட்டும். அதன் மணம் இயற்கை துர்நாற்றத்தோடு இணைந்து இன்னும் எரிச்சலையே உண்டுபண்ணுகிறது.
இவற்றை எல்லாம் பெண்கள் பேசாமலிருக்க கூச்சம் காரணம் இல்லை. இதன் வலியைச் சொன்னால், அது இவளது இயலாமையாகவே பார்க்கப்படும். போட்டியான உலகில், இவற்றை மறைத்தே தன் வேலையைச் செய்கிறாள். அல்லது ஆணுக்கு எதிராகக் குறை சொல்வதாகவே பார்க்கப்படும். இதில் ஆண் எங்கே வந்தான்? ஆனால், அனேக அறைகுறைகள் தன் வலி சொல்லும் பெண்ணை அப்படிப் பார்க்கவே கற்றிருக்கின்றனர். இதை ஆண் உணரவே முடியாது. குறைந்தபட்சம் இழிவு பேச்சு இல்லாமலாவது கடக்கட்டும் என்றே இத்தனை விளக்கங்களும் பெண்ணின் வலி மிகுந்த மறுபக்கமும். இதை புனிதம் என்று போற்றவும் வேண்டாம். தீட்டு என விலக்கவும் வேண்டாம். இரங்குவது போல இறக்கவும் வேண்டாம்.
நான் ஒன்பதாம் வகுப்பு படித்த காலங்களில் என்னோடு பவானி என ஒரு மாணவி படித்தாள். எங்களை விட மூன்று வயது மூத்தவள். சடங்கானவள்தான். பெரியவள்தான்.
அந்த சமயங்களில், அந்த வகுப்புகளில் அவ்வப்போது ஏதேனும் ஒரு மாணவி திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுவாள். டீச்சர் வந்து அவளை ரெஸ்ட் ரூமுக்கு கூட்டிச் செல்வார். சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து பெண்கள் எவரேனும் அழுது கொண்டே வந்து இவளைக் கூட்டிச் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுமே டீச்சர்கள் இந்த தகவல் பவானிக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு முறை இப்படியான செய்தியைக் கேள்விப்படும்போதெல்லாம் பவானி மலங்க மலங்க விழிப்பாள்…திடீரென…”ஊ….வென ஊளையிட்டபடி மயங்கி விழுவாள்”
காரணம், அவள் இலங்கையிலிருந்து தப்பிவந்தவள். அப்படி வருகையில் கடல் நீரால் சூழப்பட்ட மணல் திட்டு ஒன்றில் அடுத்த படகுக்காகக் காத்திருந்த சமயத்தில் அவள் பெரியவளாகி இருக்கிறாள். கற்பனை கூட செய்ய இயலாத கொடூர சம்பவம் அது. (ஏனெனில், சடங்கான இளம்பெண்கள்தான் சில கொடூர காமுகர்களின் முதல் தேர்வாம்.) அன்று அவள் அம்மாவும் மற்ற பெண்களும் அவளைப் பாதுகாக்க படாத பாடுபட்டிருக்கின்றனர். உடுத்தவே துணி இல்லாத கடல் வெளி மணற்திட்டில் இவளுக்கு என்ன உதவி செய்திருக்க முடியும்? சாதாரண நாட்களிலேயே பெண்களுக்கு எல்லாவித எரிச்சலையும் கஷ்டத்தையும் தரக்கூடிய நாட்கள் அவை. இந்த அழகில் போர்க்காலத்தைல் இதையும் சுமந்து தாண்டியவள் இவள்.
இது போன்றே அனேக பெண்களுக்கும் வெவ்வேறுஅனுபவங்கள்.
விலக்கு நாட்களில் இரத்தம் மட்டும் வெளியேறுவதில்லை. நம் அலுவலக வேலையைச் செய்து கொண்டிருக்கையிலேயே பிண்டம் வெளியேறும். கவனம் எப்படி வேலையில் இருக்க முடியும்? கழிப்பறை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எல்லா வேலைகளிலும் நினைத்தபடி வேலைக்கு விடுப்பு எடுக்க இயலாது. சிமெண்டு சட்டி தூக்கும் சிறுமி முதல் பெண் மந்திரிகள் வரை இதே தான்.
அது சரி. அது ஏன் முதல் நிகழ்வில் பெற்றோர், குறிப்பாக அம்மாக்கள் ஏன் அவ்வளவு அழுகை?
ஒவ்வொரு முறையும் பொறுப்பாக இருக்க வேண்டும். விலக்காக்விட்டதா என்பதை ஒரு ஒன்பது வயதுக் குழந்தையால் சட்டென கணிக்க இயலாது. அப்படியே கவனித்தாலும், பொறுப்பாக தன்னைத் தயாரித்துக்கொள்ள முடியாது. பள்ளிகளில் கழிப்பறை பிரச்சனை இருக்கட்டும். ஓட்டமும் ஆட்டமுமான பழைய துள்ளல் முடியவே முடியாது.
உண்மையில் அன்று அவளின் இயற்கை அவளை என்ன செய்யச் சொல்கிறதோ அதைச் செய்ய இயலாது. இயற்கை அவளுக்கு இடும் கட்டளைகள் வேறு, சமூகம் அவள் மீது திணிக்கும் சரி தவறுகள் வேறு. ஒரு டாக்டரானால், ஆபீசரானால் அவளுக்குக் கிடைக்கும் பெருமை வேறு. உடலைக் கொண்டாடிக்கொண்டிருந்தால் மரியாதை இல்லை. எனவே தூக்கிப் போடு. அந்த உடல் என்ன ஆனால்தான் என்ன? என அதில் கவனம் கொள்ள முடிவது இல்லை. அப்படியே அதைப் பொத்திப் பாதுகாத்தாலும் பெண்ணின் உடல் எனும் அந்தப் பொருள் குலப்பெருமை காக்கவும், ஆணின் குடும்பத்தின் சந்ததியைக் காக்கவும் பயனாகும் அந்த வஸ்து பாதுகாக்கப்பட வேண்டியது என ஆண் நினைக்கிறான். அப்படிப் பாதுகாக்கும் வேலைக்கு ஆண் தேவைப்படுவதாக அவன் நினைப்பதால், அந்த உடல் ஆணின் கட்டுக்குள் இருக்க வேண்டும். இந்த நிலையில் பெண்ணுக்கான வாசகங்களை / கருத்தை ஆணே வடிவமைப்பதாலும், அவள் எதைச்செய்வது எனும் திணறலில் இருக்க …
அந்த அவளின் உடலை ஒட்டி ஒரு அரசியலே அடங்குகிறது.
அவளின் மாதவிலக்கு என்பது ஒரு சந்தை. அதில் எவற்றையெல்லாம் விற்கலாம்? என்னவெல்லாம் சொல்லி விற்கலாம்? விலக்கு நாட்களுக்கு பேட்கள். அவை அரிப்பைத் தருகிறதா? அதற்கு க்ரீம்கள். க்ரீம்களைச் சுத்தம் செய்ய வேண்டுமா? Ph பேலன்ஸ் செய்யப்பட்ட கிருமி நாசினிகள். துர்நாற்றமடிக்கிறாதா? இதோ அதற்கென அதிக விலையில் பேட்கள்..
அவற்றைப் பயன்படுத்தினால் ஆணுக்குச் சமமாகத் துள்ளலாம், ஓடி ஆடலாம்.
ஏற்கனவே ஆணைப்போல தொந்தரவின்றி ஒரு வாழ்க்கை என்பதே அவள் கனவாக இருக்க, அவனே போல இருக்கலாம் இந்தச் சுமைகளைச் சுமந்தபடி எனச்சொல்லும் விளம்பரங்கள்.
ஆனால் இவற்றில் எதுவுமே இயற்கையை ஒட்டியோ, பெண்ணின் தேவைக்குத் தீர்வாகவோ இல்லை என்பது மட்டுமல்லாமல் இன்னும் தொந்தரவு தருவதாகவே
என்ன காரணங்களால் எல்லாம் இவற்றை பயன்படுத்தக்கூடாது, பேசக்கூடாது என ஒரு விளம்பரம் வந்தால் நன்றாக இருக்கும்.
பெண்ணின் தாலி எப்படி அவள் மட்டுமே முடிவெடுக்க வேண்டியதோ அதைப் போலவே அந்த சமயங்களில் அவள் ஓய்வெடுக்க வேண்டுமா? நாப்கின் உபயோகிக்க வேண்டுமா? என்பதை அவளே முடிவெடுக்க, அவளே தேர்ந்தெடுக்க விட்டால் மட்டுமே… எதிர்கால சந்ததி என ஒன்றிருக்கும். என்ன செய்ய அவளிடம்தானே கர்பப்பை இருக்கிறது? அது அவளுடையது மட்டும்தானே?அதில் மற்றவர் ஆதிக்கம் செலுத்தினால் அந்த ஆதிக்கம் நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ எப்படி இருந்தாலும் மனித குலத்திற்கே பெரும் நட்டம்.
அவள் முடிவெடுக்கட்டும். அந்த முடிவுக்கு மற்றவர் உதவட்டும் அப்படி இருந்தால் மட்டுமே இனி மனித எதிர்காலம். இதன் சீரி்யஸ்னஸ் உணர்ந்து மட்டுமே,
அவளுக்கு உதவுவதுபோல அவள் மீது ஆதிக்கம் செய்யும் கன்ஸ்யுமரிசத்தில்ருந்து அவள் வெளிவர வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?