’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?…!…

தாலி படுத்தும் பாடு இருக்கே…

 பா. ஜீவசுந்தரி.

எனக்கு சிரிப்புத்தான் வருது. நகை அணிவதில் பெண்களுக்கே உண்டான ஆர்வத்தை அதிகரிக்கவே இந்தத் தாலி பயன்படுகிறது. இல்லாத ஒரு புனிதத்தை அதில் ஏற்றி, அதை ஊரை எரிக்கவும், கலவரத்தைத் தூ’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?...!...ண்டவும் சில அடிப்படைவாத அமைப்புகள் முயல்வது வேடிக்கை மட்டுமல்ல, அயோக்கியத்தனமும் கூட. இந்தத் தாலியைப் பற்றி யோசிக்கும்போது என் சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட சில சம்பவங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

 சம்பவம் – 1

 என் தாத்தா வீடு தஞ்சை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமம். என் பாட்டிமார்கள் நால்வர். சின்னப் பாட்டிகள், பெரிய பாட்டிகள் என்று பலர். சாயங்கால நேரத்தில் ஆற்றில் குளிப்பதற்காக அவர்கள் என்னையும் அழைத்துக் கொண்டு போவார்கள். முதலில் என்னைக் குளிப்பாட்டி கரையில் உட்கார வைத்து விட்டு, அவர்கள் நிதானமாக சவக்காரம் போட்டுத் துணி துவைத்து முடித்த பின், குளிப்பதற்காக நடு ஆற்றுக்கு நீந்திப் போவார்கள். அப்படி போவதற்கும் முன் அவர்கள் எல்லோரும் முதலில் செய்யும் வேலை தங்கள் கழுத்திலிருக்கும் தாலிக்கயிறு தாலிச்சங்கிலிகளைக் கழற்றி என் கழுத்தில் போட்டு விட்டுப் போவதுதான். வளையல் ஸ்டாண்டுகள் போல நான் ஒரு காலத்தில் தாலி ஸ்டாண்டாக இருந்ததை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆற்றில் நீண்ட நேரம் மூழ்கிக் குளிக்கும்போது, கழுத்திலிருக்கும் சங்கிலி ஆற்றோடு போய் விடும் ஆபத்தைத் தவிர்க்கவே அவர்கள் அப்படிச் செய்வார்கள். அதிகம் படிக்காத, கிராமத்துப் பெண்களான அவர்கள் தாலி புனிதமானது என்றோ, அதைக் கழற்றும்போது தங்கள் கணவன்மார்களின் ஆயுளுக்கு ஆபத்து என்றோ ஒருபோதும் நினைக்கவேயில்லை. நகை பறி போய் விடக்கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வு மட்டுமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. பூசை புனஸ்காரங்களையும் அவர்கள் கடைப்பிடித்தவர்களில்லை. பூசை அறை என தனியாக எதையும் நான் பார்த்ததேயில்லை. மாடப்பிரையிலோ அல்லது அதன் கீழே குத்து விளக்கேற்றி வைத்தோ வணங்கி விட்டுப் போவார்கள் அவ்வளவுதான்.

சம்பவம் – 2

 அதற்கு அடுத்த தலைமுறையான என் மாமன் மார்களின் மனைவிமார்கள், (பாட்டியரின் மருமகள்கள்) மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்துப் போட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதைக் கழற்றவே மாட்டார்கள். நிறைய மஞ்சள் பூசி அதைப் பளபளப்பாக்கி வைத்திருப்பதுடன், பூஜை முடித்த பின், தாலிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பின் அதைக் கண்களிலும் ஒற்றிக் கொள்வார்கள். போன தலைமுறைப் பாட்டிகள் செய்யாத ஒன்றை இந்த தலைமுறை மாமிகள் செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இதை வாய்விட்டுக் கேட்டும் இருக்கிறேன். அதற்கு அவர்களிடமிருந்து பாட்டிகளைப் பற்றி விமர்சித்து பதில் வரும்.

மஞ்சள் கயிறு நைந்து போகும்போது, அதை அவர்கள் மாற்றுவது இன்னும் வேடிக்கையாக இருக்கும். சப்ஸ்டிட்யூட் கயிறு ஒன்றில் வெறும் மஞ்சளைக் கோர்த்து, யார் வயதில் மூத்த சுமங்கலியோ அவர்களிடம் கொடுத்து கழுத்தில் போடச் சொல்லுவார்கள். அதன் பிறகே, நைந்து போன கயிறு அகற்றப்பட்டு, வேறு புதுக்கயிற்றில் தாலி கோர்க்கப்படும். பின் மறுபடியும் இந்தக் கயிற்றை மூத்த சுமங்கலியின் கையால் கழுத்தில் போட்டுக் கொள்வார்கள், பின்னர் அந்த சப்ஸ்டிட்யூட் கயிறு மறுபடி அகற்றப்படும். இது ஒரு பெரிய பிராசஸ். அதையும் செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேஷ நாட்களில் செய்ய மாட்டார்கள்.அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாக இப்போது கூடுதலாகப் பூஜை அறையும், சாமி படங்களும் புதிதாக வந்து சேர்ந்திருந்தன. வெள்ளி, செவ்வாய், சோமவாரம் இத்தியாதி பட்டினி விரதங்களும் கூடவே வந்தன.

 சம்பவம் – 3

 இடையில் சில தாலி கட்டாத திருமணங்களும் நடந்தேறின. என் திருமணத்தில் நான் தாலி கட்டிக் கொள்ள மறுக்க, இணையரும் தாலி கட்ட மாட்டேன் என மறுக்க…. ஆனால், எதுவும் நடைமுறை சாத்தியமாகவில்லை. நீண்ட நெடிய விவாதங்களுக்கும் மிரட்டல்களுக்கும் பின் தாலி கட்டுவது என முடிவாயிற்று. பிறகு அந்தத் தாலியை யார் வாங்குவது என்றும் விவாதம். நாங்கள் இதைப் பார்த்து சோர்ந்து போனோம். ஒரு வழியாக பேருக்குத் தாலி என்ற ஒன்றை வாங்கி வந்தார் மணமகனாகப் போகிறவர். என்னுடைய கண்டிஷனும், ’உங்கள் குடும்பப் பெரியவர்களின் ஆசைக்குக் கட்டிக் கொண்டு கழற்றி வைத்து விடுவேன்’ என்பதுதான். அதைப் போலவே கழற்றியும் வைத்து விட்டேன். பிறகு அது எங்கே போனது என்பதும் நினைவில் இல்லை. அதனால் ஒரு குடியும் மூழ்கி விடவில்லை.

 தேவதைக் கதைகளில் வருவதைப் போல ஏழு கடல் ஏழு மலை தாண்டி எங்கோ ஒரு பாதாளக்குகையில் இருக்கும் மந்திரச் சிமிழுக்குள் இருக்கும் வண்டில் மந்திரவாதியின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைப் போல,  இந்தப் ‘புருடர்’ களின் ஆயுள், தாலி என்ற மந்திரச் சிமிழுக்குள் மறைந்திருக்கிறதா?

 

தாலி என்பது மங்கலச் சின்னமா? மந்திரச் சிமிழா? இல்லை வெத்துவேட்டா எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 (இம்மாத ‘தோழமை’ தனிச்சுற்று இதழில் வெளியான கட்டுரை?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *