இந்தியாவின் மகள் ஆவணப்படம் பல முறை தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூப், டேய்லி மோசன், விமோ என ஒவ்வொரு தளத்திலும் யாராவது தரவேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் அழிக்கப்படுகிறது. “தில்லி நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில்” என்ற குறிப்புடன் அந்த பக்கங்கள் தெரிகின்றன.
சளைக்காமல் தரவேற்றிக் கொண்டுள்ள யாரோ பலரின் உதவியால் அந்த ஆவணப் படத்தை பார்த்தேன். குற்றவாளியின் பேட்டி மட்டுமல்ல, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் அப்பா, அம்மா, நண்பன், குற்றவாளிகளின் வக்கீல்கள், வழக்கை கையாண்ட அதிகாரிகள் என அனைவரையும் பேட்டி கண்டுள்ளனர்.
போராட்டக் காட்சிகளுடன் தொடங்கும் ஆவணப்படம் ஆண்களும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வன்முறைக்கு எதிராக முழக்கமிடுவதையும், போராட்டத்தை அடக்க தாமதமில்லாமல், தயக்கமும் இல்லாமல் காவல்துறை வந்து குவிந்ததைக் காட்டுகின்றனர். “பொறுப்புணர்வு பற்றி நீங்கள் பேசத் தொடங்கினால் அது அரசுகளை அச்சப்படுத்தும்” என்கிறார் ஒரு கருத்தாளர்.
போராட்டத்தில் பங்கெடுத்த ஒரு பெண், வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி காவலர்களுடன் வாக்குவாதம் செய்ததை நினைவுகூர்கிறார்.
*
அந்தப் பெண்ணை பால் இன்பத்துக்காக பலாத்காரம் செய்யவில்லை என்பதும். இரவு நேரத்தில் ஒரு பெண் தன் நண்பனுடன் வெளியே சென்றால் அது தவறாகத்தான் இருக்கும் என்ற முன் முடிவும், அந்த முன் முடிவோடு அவளை அதட்டியபோது அவள் எதிர்த்துப் பேசுவதை பொறுக்க முடியாத ஆதிக்கமும்தான் கரணம் என்பதும் தெரிகிறது.
‘பாடம் கற்பிக்கிறேன்’ என்றபடி பலாத்காரத்தை தொடங்கியதாக சொல்கிறான் குற்றவாளி. அவனின் முன்முடிவு எத்தனை தவறானது, அந்தப் பெண்ணின் குடும்ப பின்னணி என்ன? மருத்துவக் கல்விக்கு தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டார் என்பதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது ஆவணம்.
இன்றைக்கும் பெண்கள் பற்றிய முன் முடிவுகள் பலரிடமும் நிலவுகின்றன. தில்லி பாலியல் பலாத்கார செய்தி பத்திரிக்கையில் வந்தபோதும் உண்மையை முழுமையாக அறியாமலே பலரும் பெண்ணின் நடத்தை பற்றி பேசியதை நினைத்துப் பார்கிறேன்.
ஆணாதிக்க அடிப்படையிலான இந்த முன்முடிவுகள்தான் படுகொலைக்கு காரணமாக அமைந்தன என்பதுடன், ஆவணத்தில் பலாத்காரத்துக்கு ஆதரவாக பேசியிருக்கும் அனைவரிடமும் அத்தகைய கருத்துக்கள் இருப்பதை படம் காட்டியது. “எங்கள் கலாச்சாரம் உயர்ந்தது. அதில் பெண்களுக்கு இடம் கிடையாது” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “என் மகளாக இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன் என்கிறார் இன்னொருவர்”
*
“அவன் ஒரு சைக்கோ – கொன்று வீசுங்கள் அவனை – பிரச்சனை முடியட்டும்” என்று சுலபமாக முடியும் பிரச்சனை அல்ல பாலியல் பலாத்காரங்கள். நம் அனைவரிடமும் சகஜமாகப் புழங்கும் ஆணாதிக்கக் கருத்துகளை வீழ்த்தாமல் சாத்தியம் இல்லை. குற்றத்தையும் குற்றவாளியையும் சமூகத்தில் இருந்து தனித்துப் பார்க்க முடியாது என்று உணர்த்துகிறது.
ஆனால், இந்த ஆவணப்படத்தில் பெண்ணின் பெயரை வெளியிட்டு விட்டார்கள். குற்றவாளியை பேட்டிகண்டுவிட்டனர் என்று மட்டும் சொல்லி – தடை செய்வதில் முனைப்பாக இருக்கிறது அரசு.
நேற்று நள்ளிரவு வரையில் ஒவ்வொரு தளமாக முடக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
*
அதே சமயம் – பாலியல் கல்வியை தவறாக போதிக்கும் எராளமான இணையதளங்களும், பெண் உடலை, பாலியலை மிக மோசமான முறையில் விளக்கும் பல தளங்களும் தடை செய்யப்பட முடியாத வகையில் இன்றும் தொடர்கின்றன.
Thanks – http://maattru.com/chasing-indias-daughter/