தமிழில்: லறீனா அப்துல் ஹக்
சிங்கள மூலம்: லங்கா நிவ்ஸ் இணையதளம் (கிரிஷான்)
ஆளும் தரப்பினர் இரு முகாம்களில் இருந்தவாறு தமது அணிக்காக எங்கள் சுதந்திரம் பற்றிய அர்த்தப்பாடுகளை முன்வைக்கும் ஒரு தளம்பலான காலகட்டத்தில் நாம், ‘சுதந்திரம்’, இந்த ஸ்திரமற்ற தருணம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கின்றோம். இத்தருணத்தின் சமூகத்தைப் பலப்படுத்துவதென்பது மக்கள் முகாமைப் பலப்படுத்துவதே என நாம் உறுதியாக நம்புகின்றோம். ஓர் இலக்கியவாதி, ஊடகவியலாளர் என்ற பாத்திரங்களுக்கு அப்பால் சமூக உணர்வுள்ள ஒரு பிரஜையாகத் திகழும் கவிஞர் கபில எம். கமகே அவர்கள் தற்போதைய சமூகநிலை தொடர்பாக அளித்த பேட்டி, இது:
கேள்வி: அரசாங்கங்கள் மாறுகின்றன. அரசாங்கம் பற்றிய கருத்துக்கள் மாறுகின்றன. ஆனால், சமூகம் என்றவகையில் நாம் உண்மையில் மாறி விட்டோமா? அல்லது நாம் நம்மையே ஏமாற்றிக் கொண்டுள்ளோமா? இந்தச் சந்தர்ப்பத்திலே ஒரு கவிஞரென்ற வகையில், விழிப்புணர்வுள்ள ஒரு பிரஜை என்ற வகையில் இச்சமூகத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:இலங்கை அரசியல் வரலாற்றில் நாம் எதிர்கொண்ட அவலம் இதுதான். சுதந்திரம் அடையும் போராட்டம் முதற்கொண்டு (இதனைப் போராட்டம் என்று சொல்ல நான் அவ்வளவாய் விரும்புவதில்லை.) இந்நாட்டு மக்கள் என்ற வகையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம். சுதந்திரப் போராட்ட முன்னோடிகளாய்த் தம்மை முன்னிறுத்தியோர், ‘நாம் சுதந்திரத்தைக் கோருமுன் உடலாலும் உள்ளத்தாலும் ஆங்கிலேயரைப் போல் மாற வேண்டும்’ என்று கூறினார்கள். இந்தக் கூற்றில் இருந்த பாரதூரமான அரசியல், பொருளாதார, சமூகவியல் கருத்து நமக்குப் புரியவில்லை. நாம் ஏமாந்துவிட்டோம். அன்றிலிருந்து இன்றுவரையும் நாம் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். சுதந்திரத்துக்குப் பின்னுள்ள யுகமாக நான் இதனை வேறுபடுத்திப் பேசினாலும், அதற்கு அப்பால் வரலாற்றிலும்கூட பொதுமக்கள் ஏமாற்றப்படுதல் என்பது ஒரு பொதுவான பண்பாக உள்ளது.
Read More http://www.nilapenn.com/arts/translation/338-kapila-m-gamage-interview-part-1.html