எஸ்தர் நந்தகுமார் -(திருகோணமலை.இலங்கை)
இருவரும் பார்க்கவும் தொடவும்
இயலாத வெட்டவெளியில்
புள்ளிகளாக மறைந்துக் கொண்டிருக்கிறோம்.
காலங்கள் வெறும் ஏமாற்றுப் பயணியாhய்
காற்றுப்போல் தொடருகின்றது.
ஒரு காலத்தில் உன்னை தவிர்த்து
என்னால் எதையும் சிந்திக்கவில்லை.
நானொரு பட்டத்து ராணியாய் உந்தன் தேசத்து
அரண்மனைகளில் உறங்கிக் கொண்டிருந்தேன்.
திடிரென்று தூக்கம் கலையும் யுகத்தில்
பணயக்கைதியாகிவிட்டேன்.
எப்போதும் என் வசந்தக்காலங்களில் பெரும் புயலை ஊதிவிடும்
சுனியக்காரனாகிவிட்டாய்.
என் வல்லினங்களை பணத்துக்காக பேரம் பேசுகிறாய்
என் இரவகளுக்கு வெள்ளையடிக்க
விரும்பும் நிலவுகளை
நீ
பணத்தினால் மாத்திரமே ஒளி வீச வைக்கலாம் என்று கதைகள் நூறு
அலட்டுகிறாய்.
நம் தேசத்தில் இப்போது வேடந்தாங்களுக்கு இடமில்லை.
ஆந்தைகளே குடியேறிவிட்டன.
பனித்துளியை விட மென்மையாக இருந்த உன் கண்கள் அகோரமாகி
மலைப் பாம்பைப்போல சிறுக சிறுக விழுங்கிக்கொண்டிருக்கிறது.
மூக்கும் முளியுமான நான் எலும்பும் தோலுமாகி யாதுமாகி…
தொங்கிக் கொண்டிருக்கிறேன்
உன் ஆன்மாவின் தொங்கல்களைப் பிடித்துக் கொண்டு!!
இப்போது என்னை புதைக்க வேண்டும் உடல் அழுகிக் கொண்டுவருகின்றது
நீயோ
வெட்டியானேடு பேரம் பேசிக்கொண்டிருக்கிறாய்!!