“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு – ரவி
அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.
தனது பாத்திரமான பார்வதியின்மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. அவர் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் சார்ந்து பேசுகிறார். தாயாகவும், ஒரு ஆற்றலுள்ள பெண்தலைமைப் பாத்திரமாகவும் அவர் நாவல் முழுக்க நடமாடுவது அவ்வப்போது தலைகாட்டும் அவரது போராளிப் பாத்திரத்தை பின்தள்ளி, ஒரு சாதாரண பிரசையின் போர் வாக்குமூலமாக, அலைக்கழிக்கப்பட்ட வாழ்வியலாக நாவலை பரிணமிக்கச் செய்கிறது.
தமிழ்கவியின் ஊழிக்காலம் நாவல் அறிதலை உணர்தலாக மாற்றிபடி பயணிக்கும் ஒரு போர்க்கால நாவல். வாசகரையும் உடன் அழைத்துச் சென்றபடியே இருக்கிறார். உணர்ச்சியூட்டலுக்கான தளங்கள் மலிந்து கிடந்தாலும், அதற்குள் நுழையாமல் எழுதப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம். ஒரு தேர்ந்த படைப்பாளியாக தமிழ்க்கவி வாசக மனதில் அமர்ந்துவிடுகிறார்.
இயக்கத்தில் அவரது பாத்திரம் அவருக்கு வழங்கியிருந்த அறிமுகப் பரப்பு போராளிகள் மத்தியில் விசாலமானது. அந்த அறிமுகங்கள் அவரது இடப்பெயர்வுகளின் போது சில அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள உதவியிருக்கிறது. அது இயல்பானதுதான் என ஏற்றுக்கொள்ளப்படும் எல்லைக்குள் அதை சொல்லிச் சென்றிருக்கிறார் அல்லது மட்டுப்படுத்தியிருக்கிறார். அதேநேரம் இறுதியில் இராணுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கைவிடப்பட்ட மாந்தராய் அவர் உட்புகும்போது, அவரது அடையாளம் அவரை இலகுவில் இராணுவத்துக்கு அறிமுகமாக்கியும் விடுகிறது.
மீண்டும் ஒரு காலம் திரும்பி தனது சொந்த இடத்துக்கு வரலாம் என்ற கனவை அழித்துவிடாமலே மக்கள் துயரத்தோடும் ஆபத்துகளோடும் சந்திக்கும் பிரிதல் என்ற வகையான இடப்பெயர்வு ஒருவகை. ஆனால் ஈழப்போரின் போதான வன்னி மக்களின் இடப்பெயர்வு இந்த அர்த்தத்தை சிதைத்துப் போட்டது. அது உயிர்வாழ்வதற்கான கனவாக எல்லையைக் குறுக்கிவிட்டது. தாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கணங்களையும் – உயிர்வாழ்தலின் மீதான நிச்சயமற்ற தன்மையுடன்- யுகங்களாகக் கடந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.
போர் என்பது சண்டையுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது மனித உயிர்களோடு சம்பந்தப்பட்டது. இயற்கை அழிப்புகளோடு சம்பந்தப்பட்டது. பன்னெடுங்காலமாக படிப்படியாக மாற்றங்களை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட சமூக உருவாக்கத்தை, அதன் கலாச்சாரத்தை, விழுமியங்களை, தொடர்பாடல்களை, பரஸ்பர உறவுகளை, அதன் வலைப்பின்னல்களை எல்லாம் நாசமாக்கக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக பழைய நிலைக்கு அசலாக திரும்புதல் என்பது சாத்தியமில்லாத போதும், தம்மை பொருளாதார ரீதியில் உளவியல் ரீதியில் நிலைப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நீண்ட காலங்கள் தேவைப்படுகிறது. அதை வந்தடைய சகலதையும் செய்யக்கூடிய அரசு தேவைப்படுகிறது. மொத்தத்தில் போரானது சமூக இயக்கத்தை நிலைகுயைச் செய்துவிடுவது என்றளவில் எப்போதுமே போருக்கு எதிராக நிற்றல் என்பதன் அவசியத்தை அதற்கான உணர்வை இந்த நாவல் இடையறாது தந்துகொண்டிருக்கிறது.
“அங்காலை மழை எப்படி என்று ஆவலாய் விசாரித்த காலமெலாம் போய், அங்காலை ஷெல்லடி எப்படி?“ என்ற கேள்வி விசாரிப்பின் இடத்தை எடுத்துக்கொண்டது.
இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் ஆயுத மூச்சை விடத்தொடங்கிய 80 களின் நடுப்பகுதியிலேயே அது இயல்பு வாழ்க்கையை மெல்லக் கொறிக்கத் தொடங்கிவிட்டது. அது புலிகளின் தனியலகுப் போராட்டமாக உருவெடுத்து, பேயாட்டமாடி 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலையாக முடிவுற்றது. தமிழ்க்கவியின் நாவல் களம் 2008 இலிருந்து 2009 மே வரை ஊழிக்காலமாய் நகர்கிறது.
புயல்போல தொடங்கிய போர்க்காலம் மக்களை அவர்களின் வாழ்வை வேலிக் கதியால்களுக்கு வெளியே இழுத்துவந்து அலைக்கழிய விடுகிறது. வன்னிப் பெருநிலமெங்கும் அகதியாய் அபலைகளாய் மனிதர்கள் அலைக்கழிந்தனர். ஆரம்ப இடப்பெயர்வுகள் அப்படியே மக்களையும் அவர்களுடன் சேர்த்து நிர்வாக அலகுகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்டலைகிறது. படிப்படியாக அவை மங்கிப்போய் அது இறுதியில் சின்னாபின்னமாகி, உடனடி உயிர்வாழ்வதற்கான கணநிலை வாழ்க்கை முறைக்குள் தள்ளிவிட்டது.
வெடியோசைகள் குழந்தைகளின் தூக்கத்தை கலைக்காதளவு இசைவாக்கமடையும் கொடுமை, எத்தனை குண்டுகள் வீசப்பட்டன என கணக்கிட்டு சண்டைபிடிப்பது விளையாட்டாகப் போனமை, பங்கருக்குள் இருந்தபடியே தாயக்கட்டை விளையாடுவது, பங்கர் துண்டாக்கிய வானத்தில் முகில் சேர்க்கைகளை பிரிதலை இரசிப்பது என போரின் யதார்த்தத்தை இந்த நாவல் சொல்லிச் செல்கிறது.
அரச பயங்கரவாதத்தின் குண்டுகள் தீப்பிடித்தலையும் பிசாசுபோல பாடசாலை, ஆஸ்பத்திரி, நெரிபடும் வீதிகள், பதுங்குகுழி என மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியழித்தது. அதற்கு நேரகாலம்கூட இருக்கவில்லை. பகலிலும் அது அலைந்தது. காலையிலும் அது அலைந்தது. இந்தப் பிசாசை கடந்து இந் நாவலின் ஒரு பக்கத்தைத்தானும் தாண்ட முடியவில்லை. மக்களின்மீது சுமத்தப்பட்ட இந்தப் போரில் அவர்கள் இரண்டு பக்கத்துக்கும் இடையில் நசிபட்டார்கள்.
இயக்கம் போர்ப்பட்ட மக்களிடமிருந்து ஆட்சேர்ப்புகளை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தியதை அவர் நாவலின் வெளிக்குள் வைத்தே சொல்லிச் செல்கிறார். களப்பணிக்கு பிடிக்கப்படுபவர்கள் முன்னரங்கப் பகுதிகளில் மட்டுமல்ல பொறுப்பாளர்களின் இடப்பெயர்வுகளின்போதான பங்கர் அமைப்பு, சாமான்கள் வாங்குவது போன்றவற்றிற்கு ஈடுபடுத்தப்பட்டதை சொல்கிறார்.
பார்க்குமிடமெலாம் பிள்ளைபிடிப்போரே நீக்கமற நிறைந்திருந்தனர் என்கிறார். இதிலிருந்து தமது பெண்பிள்ளைகளை தற்காத்துக் கொள்ள குங்குமப் பொட்டு இடுவதிலிருந்து தனது தாலியை தன் மகளின் கழுத்தில் அணிவிக்குமளவுக்கு நிலைமை இருந்ததை அவர் வெளிப்படுத்துகிறார்.
பற்றைகளுக்குள் படுத்திருந்து அங்கு மலம்கழிக்க வரும் இளைஞர் யுவதிகளை பிடித்துச்சென்றனர். வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு மிச்சப்பேர் என இது நடைமுறைப்படுத்தப்பட்டதாய் சொல்கிறார். வலுவான இளம் பிள்ளைகளை பங்கருக்குள் ஒளித்துவைக்க வேண்டி ஏற்பட்டதாகவும், பழைய சட்டியுள் அவர்கள் மலசலம் கழிக்கவைத்து பெற்றோர் அதை வெளியில் கொண்டுபோய்க் கொட்டியதாகவும் சொல்கிறார். பதுங்கு குழியானது ஷெல்லடிக்கு பாதுகாப்பளிப்பதாக மட்டுமல்ல, பிள்ளை பிடிப்பிலிருந்து பாதுகாப்பளிப்பதாகவும் இருந்திருக்கிறது. சிறைவாழ்வை உணரவைக்கக்கூடிய பங்கர்கள் பாதுகாப்பான வாழ்விடமாய் அவர்களை உணரவைத்த முரண் போரின் கொடுமையை வரைந்து காட்டுகிறது.
மறுபக்கத்தில் புலிகள் நடத்திய கஞ்சிவார்ப்பு நிலையங்கள் மக்களுக்கு பெரும் பயன்பாடாய் இருந்ததையும், கிணறுகளில் அசுத்தநீர் கலந்துவிட்டபோது குடிநீர் விநியோகத்தை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. பெண்போராளிகள் காயப்பட்டு மருத்துவ வசதியின்றி கிழங்குகள் போல் கிடத்தப்பட்ட காட்சிகளையும், கீழணிப் போராளிகளின் (முக்கியமாகப் பெண் போராளிகளின்) மனிதாபிமானத்தையும், அவர்களது மனப்போராட்டங்களையும்கூட ஆங்காங்கு தொட்டுக் காட்டிச் செல்கிறார்.
புலிகள் ஆயுதத்தை ஆணையில் வைத்து அரசியலை பின்தள்ளிய போக்கின் விளைவுகள் படிப்படியாக வியாபித்து இப்படி முயல்பிடிப்பது போன்று மனிதர்களை பிடித்துச் செல்லும் நிலைக்கு தள்ளியது. தமது தியாகங்கள், வலிகள் எல்லாம் தாம் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்றவாறான உளவியல் சிக்கலில் அல்லாடியிருப்பதற்கான சான்றுகளாகவும் அவர்கள் நடந்துகொண்ட முறைகளை எடுத்துக்கொள்ள முடிகிறது.
பங்கருக்குள் படுத்துறங்குவதிலிருந்து கால்கையை நீட்டி படுத்துறங்குவதை ஒரு தவம்போல உணரச்செய்கிறார் நாவலாசிரியர். போரின் கொடுமையான முகத்தை இப்படி எளிமையாக அவர் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
பங்கர்களே வாழிடமாய்ப் போன நிலையில் மழை அவர்களுக்கு இயற்கை தொடுக்கும் இன்னொரு போராக மாறியது. அதற்கெதிராகவும் அவர்கள் தாக்குப் பிடிக்க வேண்டியதாகிற்று. மழை அவர்களுக்கு நாசத்தையே விளைவித்தது.
இப்படி தமது வளவை தமது உடமையை விட்டுச் சென்று அலைவுறும் மக்கள் எண்ணற்ற இடப்பெயர்வுகளையும் பங்கரையும் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். இதை பார்வதி என்ற பாத்திரத்தினூடு வெளிப்படுத்தி தனது அனுபவங்களை சொல்லிச் செல்கிறார் தமிழ்க்கவி. அவர்களது உடமைகள் இடப்பெயர்வுகளுடன் சுருங்கிச் சுருங்கி சென்றுகொண்டேயிருக்கிறது. அவர்களது தேவைகள் குறுகிக்கொண்டே போகிறது. பரஸ்பரம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிய இடங்களை ஆங்காங்கு நாவல் சொல்லிச் செல்கிறது.
இந்த நிலையிலும் சாதிய மனநிலைகள் கிணற்றில் தண்ணீர் எடுப்பதுவரை கண்காணித்தபடியே இருப்பதையும் அவர் காட்டுகிறார். பொருட்களை பதுக்குதல், பின்கதவால் அறாவிலைக்கு விற்றல், நிவாரண இடங்களில் நாட்டாமை காட்டுதல் என தொடர்ந்த நிலைமைகளையும் நாவல் தொட்டுச் செல்லத் தவறவில்லை.
ஓரிடத்திலே சொல்கிறார்,
“அகதிக் கொட்டிலைச் சுற்றி வேலியடைக்கிற சனம்தானே. அவ்வளவு சுலபமாக இடம் கிடைக்குமா? முன்னதாக வந்து இடம் பிடித்து கொட்டில் போட்டவர்கள் பிந்தி வருவோருக்கு காணி உறுதி காட்டுமளவுக்கு உரிமை பாராட்டிக் கதைத்தார்கள்.“
சமூகத்தின் ஒடுங்கிய மனநிலையை இவ்வாறு எளிமையாக சித்திரமாய்த் தருகிறார்.
மூன்று புளிம்பழத் துண்டை 300 ரூபாவுக்கு வாங்கவேண்டிய நிலையில்; பசிபோக்குதலின் துயரத்தை வெளிப்படுத்துகிறார். பனை வடலிகள், ஈச்சை மரங்களின்; குருத்தை தேடியலைய வைக்கிறது பசி. தனது 6 மாதக் குழந்தைக்கு பால்மா பைக்கற் ஒன்றுடன் வந்த தாய் செல்லடிக்கு தப்ப தரையில் கிடந்தபோது, அவளிடமிருந்து ஒருவன் அந்த பால்மாவை பறித்தெடுத்து ஓடுகிற காட்சிக்குள் உட்புதைந்து செல்கிறது கொடுமையான வாசனை அனுபவம்.
ஆடுகள் மாடுகள் கோழிகள் என இறைச்சிக்கான விலங்கினங்கள் ஷெல்லடி மற்றும் தீன் இல்லாமை என்பவற்றால் மட்டுமல்ல, மனிதர்களின் பசிக்கும் இரையாகிவிடுகின்றன. கடைசி காலங்களில் அவைகள் காணாமலே போய்விட்டன. அரைக்கும் ஆலை (மில்) வாசலில் குவிக்கப்படும் உமிக் குவியலைத் தூற்றி அரிசி பொறுக்க பசி அவர்களை அனுப்பிவைக்கிறது.
உரப்பைகள், மரக்;குற்றிகள், தறப்பால்கள் (படங்குகள்) எல்லாம் அடிப்படைத் தேவையாக மாறியது. அவர்களது உயிர்கள் அதில் ஒட்டியிருந்தன. முண்மூட்டைக்கான உரப்பைகள் தட்டுப்பாடாகியபோது, மாற்றாக அவர்கள் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். சேலைகளை பைகளாக தைத்து மண்மூட்டைகளாக்குகின்றனர். பழைய சேலை வியாபாரம் புதிசாகத் தொடங்குகிறது.
உயிரைக் காப்பாற்றுவதே இலக்காகக் கொண்ட சமூகத்தின் அறிவு அதைச்சுற்றி வளர்ச்சியடைவதும் மாற்றுகளைக் கண்டுபிடிப்பதும் இயல்பானது என்பதை நாவல் சொல்லிச் செல்லும் சம்பவங்கள் சாட்சிப்படுத்துகின்றன.
ஓரிடத்தில் சொல்கிறார்.
“உழவு இயந்திரச் சாரதி பிரதான வீதிதான் சரியா வரும் என்றான். றவுண்ட்ஸ் வந்தாலும் பிரதானவீதி பள்ளம்தானே. றவுண்ட்ஸ் தலைக்கு மேலாலை போயிடும். வலையர்மடம் வீதியின் உயரத்துக்கு நெஞ்சு மட்டத்துக்கு றவுண்ட்ஸ் வரும்“ என்ற உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
முண்மூட்டை அடுக்கில் கீழுள்ள மூட்டையில் றவுண்ட்ஸ் பட்டால் மண் கொட்டுப்படத் தொடங்கிவிட, மண்காப்பரண் கவிண்டு கொட்டுப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையுடனும் அவர்கள் இருந்தார்கள். போர் தவிர்க்கமுடியாமல் அவர்களது அறிவை அதைச் சற்றி வளர்த்தது. உயிர்தப்பியாக வேண்டுமே.
யுத்தம் உக்கிரமைந்து பேயாட்டம் ஆடிய வேளையில் காயப்பட்ட போராளிகளை கன்ரர் ரக வாகனங்களிலும், உழவு இயந்திர பெட்டிகளிலும் கிடத்தியிருந்தனர். யார்யாரோ உணவளித்தனர். பெற்றவரோ அறிந்தவரோ கண்டால் தூக்கிச் செல்லவே அப்படி வீதியோரங்களில் விடப்பட்டிருந்தனர். அவர்களிலும் ஷெல் விழுந்து செத்தவர்கள் அதிகம் என நாவல் பதிவுசெய்கிறது. மாவீரர்களாக கௌரவிக்கப்பட்ட நிலை போய் இப்படி அநாதாரவாகக் கிடந்தார்கள்.
ஆரம்பத்தில் இறந்த தமது உறவினரை அடக்கம் செய்த நிலைமைகள் கடந்து, இறுதியில் அந்தந்த இடங்களிலேயே விட்டுவிட்டு தாண்டிச் செல்லும் நிலை உருவாகியது. தெந்தட்டாக இயங்கிய வைத்தியசாலை என சொல்லப்படும் இடங்களில் காயப்பட்டவர்கள் மரத்துக்குக் கீழ் தரையில் கிடத்தப்பட்டார்கள்.
என்ன நடக்கிறது என எதுவுமறியாத மக்கள் மரணத்தை வெல்வதையே வாழ்வாகக் கொண்டு அலைந்து திரிந்தனர். உடனடி உயிர்வாழ்வு என்பது அவர்கள் முன்னான தேர்வாக இருந்தது. அதற்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வது அவர்களுக்கு கடைசியில் உவப்பானதாகவே இருந்தது. ஆனால் புலிகள் அதற்கு குறுக்கே நின்றார்கள். மீறியவர்களை சுட்டுத்தள்ளினார்கள்; என்ற விடயங்களை நாவல் சொல்லத் தயங்கவில்லை.
எந்த மக்களை காப்பதற்கென தொடங்கிய ஆயுதப் போராட்டமானது தானே அரசியலின் இடத்தை எடுத்துக்கொண்டதன் விளைவு அதே மக்களை கொல்வதில் தயக்கமின்றி செயற்படும் நிலைக்கு கொண்டுவந்து விட்டது. இன்னொருபுறம் உலகமயமாதலின் ஒழுங்குகளுக்குள் ஆயுதப் போராட்டத்தின் மீதான கேள்விகளை எழுப்பியபடி ஈழப் போர் அவலமாக முடிவுற்றது.
வன்னி நிலப்பரப்பெங்கும் பங்கர்களை வெட்டியபடி செல்கிறது நாவல். மண்மூட்டைகள், உரப்பைகள், மரக்குற்றிகள், கைவிடப்பட்ட வாகனங்கள், அநாதரவாய் கிடந்த உடலங்கள் காயப்பட்டவர்கள் என்றெல்லாம் வழிநெடுக காண்பித்தபடி அழைத்துச் செல்லும் நாவலாசிரியர், வன்னியின் வளமாயிருந்த காடுகளின் அழிவை, மரங்களின் கோலங்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார்.. போர் மனிதர்கள் மீது மட்டுமல்ல சுற்றுச் சூழல் மீதும் நாசம் விளைவிப்பது என்றளவிலும், அந்த இயற்கையை அண்டித்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றளவிலும் நாவலாசிரியர் இதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற சிறு இடறல் எனது வாசிப்பில் நிகழ்ந்ததை சொல்லியாக வேண்டும். நாவலின் சித்தரிப்புககளில் அவை விடுபட்டுப்போயின. என்றபோதும் உணர்வுகளை சதா அலைக்கழித்தபடி கடைசிப் பக்கம்வரை அழைத்துச்செல்கிறது ஊழிக்காலம் நாவல்.
நாவலை வாசித்து முடித்தபின்னும் பங்கர்கள் பின்தொடர்கின்றன.
நெஞ்சைக் கணக்க வைக்கிறது. சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை.