– ஆதிலட்சுமி -8..3.2015
சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்…
இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்..
ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும்
பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்..
கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும்
துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள்.
துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல்
மானாய் மருண்டு வலைக்குள் சிக்கியவள்.
இப்படித்தான் இன்னமும் என்னை நீ
எண்ணிக்கொண்டிருக்கிறாய்…
எரிந்த உளத்தீயில் என்னைப்புடம்போட்டு
உருக்காய் மாறி இறுகிக்கிடக்கிறேன் இப்போது.
வலிகளே எனக்கு வரமென்றிருந்ததை
வாழ்தலே எனக்கு விடிவென்றுணர்கிறேன்….
கண்ணீர்ச் சுரப்பிகளை அடைத்துவிட்டேன்
கைவிலங்குகளையும் உடைத்துவிட்டேன்..
கால்களில் சலங்கை ப+ட்டி என்
உத்ரதாண்டவத்தை தொடக்கிவிட்டேன்
இன்னமும் புரிதலின்றி எனக்காக தீமூட்டுகிறாய்..
இனி எரியப்போவது நானல்ல…..