சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ-

photowide

கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும் 
ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி 
விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால் 
வழிமாறா தென்றன் வலி.

மீசை அரும்பா மிடறு முதிரா:அவ் 
ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும் 
மூசிப் பருக முனையும் பொழுதெலாம்
கூசி நிதமும் குமைந்து

மார்பில் இடையில் மதர்த்த தொடையிலின்னும் 

பேர்சொல ஒண்ணாஎன் பெண்மைகளில் — வேரோடி 
சாறு பிழிந்துசக்கை துப்பும் விரல்க்ளின் 
கோரச் சிறைக்குள்:சிக் குண்டு

துச்சக் கரங்கள் துகிலுரிக்க நிற்கையில் 
பச்சையாய்:அப் பாஞ்சாலி அம்மையாய் — “அச்சா கேள் 
பூப்பு பொழுதென்று” நாணம் பொசுக்கிக்:கை 
கூப்பி தலையும் குனிந்து

ஆவல் மிகவே அவசரமாய் நானழைத்தேன் 
காவல்நீ செய்குவாய் கெளதமா– ஏவலாய் 
மொட்டவிழும் இம்மொழி முன்னிருத்தி என்னையின்றே 
“சட்டெனக் கல்லாய்ச் சபி” 
– 
“அச்சா,கேள் மாதவிலக் காதலா லோராடை தன்னி லிருக்கிறேன்”. பாஞ்சாலி சபதம்… பாரதி.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *