பெண் எனும் பொருள்-விற்பனைக்கு பெண்கள்,சிறுமிகள், –

தமிழில் விஜயசாய்

vidiyal 2

‘சிறந்த பத்திரிகையாளராக வர வேண்டும் என்று விரும்புவோருக்கெல்லாம் மிகச் சிறந்த முன் மாதிரியாக திகழ்பவர் லிடியா காச்சோ. அசாத்திய துணிச்சல்காரரான இந்த பெண்மணி, எவரும் ஒரு பொருட்டாகவே கருதாததொரு சிறுபான்மைப் பிரிவினர் மீது அக்கறைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும்- மெக்சிகோவிலும் மற்றும் உலகின் மிக ஏழ்மையான பிராந்தியங்களிலும் பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் இழைக்கப்படும் வன்கொடுமைகளின் பக்கமாய் மக்களின் கவனத்தைக் கொண்டு செல்வதற்காகவும் சிறைவாசத்தையும் சித்ரவதைகளையும் அனுபவித்தவர். இதுநாள் வரை வெளியுலகிற்கு தெரியாமலிருந்த நிழலுலகத் தகவல்கள் பலவற்றை வெளிகொணர்ந்துள்ள லிடியா, தனக்கு பெரும் ஆபத்துகள் வரும் என்று தெரிந்துமே அதைப் பற்றிக் கவலைப்படாமல் மிக முக்கிய வர்த்தகப் புள்ளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தலைவலியை ஏற்படுத்தக்கூடிய பல வில்லங்கங்களை அம்பலமாக்கியவர்.’

-ராபட்டோ சாவியான, இத்தாலிய பத்திரிக்கையாளர்.

”லிடியா, அவர் மேற்கொண்டிருந்த பணிகளுக்காக பலதரப்பட்ட இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியதானது. அநியாயமாக அவர் சிறையிலடைக்கப்பட்டார். கடுமையாக அச்சுறுத்தப்பட்டார். சித்ரவதைகளுக்கும் ஆளானார். எனினும், அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மைகளின் அடிப்படையிலானவை என்று பின்னாளில் தெரிய வந்தன. அவர் ஆணித்தரமாக முன் வைத்த ஆதாரத்தின் முக்கியத்துவமானது உலகளவில் செல்லுபடியாகக் கூடியது. பொதுவாக, எங்கெங்கெல்லாம் அரசாங்கம் பலவீனமாக இருக்கிறதோ – எங்கெங்கெல்லாம் குற்றச் செயற்பாட்டை (Criminality) சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ அங்கெங்கெல்லாம் பெண்களும், குழந்தைகளும் தான் முதலில் பாதிப்புக்கு இரையாகின்றனர். சக மனிதர்களைக் கடத்தி அவர்களை மூலதனமாக வைத்துச் சுரண்டிச் (Exploitation) சம்பாதிப்பது பழங்காலம் தொட்டே இருந்து நடந்து வரும் குற்றச் செயலாகும். இன்னும் சொல்லப்போனால், இது தான் குற்றங்களிலேயே மிகவும் ஆதிக் குற்றம் ஆகும். தொன்மையானதானாலும் ஆட்களைக் கடத்திச் சுரண்டும் இச்சட்ட விரோத வர்த்தகம் தான் இன்றைக்கும் – ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் வர்த்தகங்களுடன் ஒப்பிடும்போது அவற்றை விட குறைவான ஆபத்துகளை கொண்டதாகவும் அதே சமயம் வானளாவிய இலாபத்தைக் கொட்டிக் குவிப்பதாகவும் உள்ளது…

vidiyal 2

…..ஒரு நாளைக்கு 12 தடவைகளுக்கும் மேல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் இளம் பெண்; வாடிக்கையாளர்களின் பார்வைக்காக சின்ன கண்ணாடிக் கூண்டுகளுக்குள் செல்லப்பிராணிகளைப் போல் அடைத்து வைக்கப்படும் அடிமைச் சிறுமிகள்; விபச்சார விடுதியில் இருந்து தப்பிய சிறுமியை வெட்டிச் சமைத்து கறியை மற்றப் பெண்களுக்குக் கொடுத்து எச்சரிக்கும் கொடூர எசமானி; இரவெல்லாம் விபச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு பகலெல்லாம் தெருத்தெருவாக பிச்சை எடுக்க விரட்டப்படும் அடிமைச் சிறுமிகள் ; வக்கிரம்பிடித்த மாஃபியாக்களிடம் இருந்து தப்பி முழு நிர்வாணமாக நடு ரோட்டில் ஓடி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்கும் இளம் பெண்; . அடிமைச் சிறுமிகளின் மேல் மூத்திரம் கழிந்தும், காறி துப்பியும் சுகம் காணும் ஒரு வக்கிரக் கிழம் ; சூட்டுக் கோலால் அடிமை அடையாளக் குறியிடப்பட்ட இந்தியப் பெண்கள் ……

….உலகில் இன்றைய தேதியில் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் அடிமைகள் இருப்பதாகவும் ; உலகளவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்காகவும், 19 சதவீதம் கட்டாய உடலுழைப்புக்காகவுமாக உள்ளதாகவும் மற்றும் சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் சட்டவிரோத வர்த்தகம் ஆண்டுக்கு $32 பில்லியன் அளவுக்கு இலாபம் குவிப்பதாகத் தெரிய வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எதோ இதெல்லாம் கம்போடியாவிலும், கொலம்பியாவிலும் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.; கூடவும் கூடாது. நம்மூரில், நம்ம தெருவில் கூட பெண்களைத் தொடரும் அந்த ‘பணம் தின்னிப் பிசாசுகள்.’ இருக்கலாம்; எந்த உருவத்திலும், எந்த ஒரு உறவுமுறையிலும் இருக்கலாம்”

பெண் எனும் பொருள்-விற்பனைக்கு,பெண்கள்,குழந்தைகள்.
ஆசிரியர்,லிடியா காச்சோ.
தமிழில்,விஜயசாய்.
வெளியீடு.விடியல் பதிப்பகம் கோவை-4
பக்கம்-460, விலை,350.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *