ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்

கொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செய்கின்ற ஒரு ஆணின் மனம் எப்படி செயற்படுகின்றது என்று இஸ்தான்புல்லில் இருக்கும் ஒரு முன்னணி மனோதத்துவ நிபுணரான சாஹிகா யுக்சேலிடம் பிபிசி பேட்டி கண்டது:

கேள்வி: ஏன் ஒரு ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்? அவருடைய நோக்கங்கள் என்ன?

பதில்: நீங்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஒரு ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறு. தெருவில் இருக்கும் ஒரு மனிதன் ஒரு பெண்ணை திடுமென வன்புணர்ச்சி செய்துவிடுவதில்லை. அப்படி செய்வது தவறு என்ற எண்ணம் இருப்பதால்தான் இத்தகைய செயல்கள் மறைவாக, யார் கண்ணிலும் படாமல் செய்யப்படுகின்றன.

சாஹியா யுக்சேல்

பாலியல் வன்புணர்ச்சி என்பது ஒரு பாலியல் இச்சை தொடர்பான செயல்பாடு கிடையாது. வன்புணர்ச்சி என்பது ஒரு தாக்குதல். வெற்றி என்பது இதன் நோக்கமாக இருக்கிறது. சக்தியைக் கொண்டு ஒரு பொருளை அபகரிக்க நடக்கும் நடவடிக்கை. இங்கு பெண் பொருளாக கருதப்படுகிறாள். ஒரு சிலர் இந்த செயலில் இன்பமடையலாம்.

வன்புணர்ச்சி என்பது மிக மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது. இருந்தும் ஆண்கள், வேறு பல தாக்குதல்களையும் செய்கின்றனர். மனரீதியான வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள், பொருளாதார வன்முறைகள், பெண்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது போன்ற விடயங்கள் சாதாரணமான விடயங்களாக சமூகத்தால் ஏற்கப்படும்போது பாலியல் வல்லுறவுகள் நடக்கின்றன.

திருமண ஆடையைப் போன்ற ஆடைகளை அணிந்துபோராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமிகள்

கேள்வி: ஒருவர் வளர்க்கப்படும் விதம் அவர் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களைச் செய்ய வழிசெய்கிறதா?

பதில்: இங்கே இருக்கும் கலாச்சாரத்தில் ஆண்களின் ஆளுமை அதிகம் காணப்படுகிறது. அதிகாரத்தை போற்றும் போக்கு இருக்கிறது. ஒருபெண்ணுக்கு, தன்னுடைய கணவனை வேறுமாதிரி நடத்த வேண்டும் அவர் சொன்னதைக் கேட்டுக் கீழ்ப்படியவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

அந்தப் பெண் இந்தப் படிப்பினையை தனது மகனிடமும், மகளிடமும் கொண்டு சேர்க்கிறார். வீட்டில் தம்முடைய தாய்மார்கள் வன்முறையை அனுபவிப்பதைக் கண்ட பெண்கள் பின்நாளில் தம்முடைய திருமண வாழ்க்கையில் வன்முறையை சந்திக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தன்னுடைய அப்பா, அம்மாவை அடிப்பதை பார்த்து வளர்ந்த ஆண்கள் தம்முடைய வாழக்கையிலும் தமது மனைவியிடம் வன்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். வீட்டில் அம்மா இரண்டாவது குடிமகளாக நடத்தப்படுவதை பார்க்கும் சிறுவர்களும், சிறுமிகளும் சமூகத்தில் அந்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றனர். துருக்கியில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவே கல்விபெறுகின்றனர். அரசியல்வாதிகளும் ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது என்று பேசுகின்றனர். இதுவும் இங்குள்ள பிரச்சனைகளுக்கு ஒரு காரணம்.

சிலர் பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், அவர்களின் விரைப் பைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். மரண தண்டனை என்பது மானுடத்துக்கு எதிரானது. அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் மாநிலங்களுக்கும் அந்த தண்டனை இல்லாத மாநிலங்களுக்கும் இடையே குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் மக்களின் கோபத்தை தணிக்க கடுமையான தண்டனைகள் பற்றி பேசுகின்றனர்.

நாம் இங்கே பழி வாங்குவதைப் பற்றிப் பேசவில்லை. பாலியல் குற்றங்களை சமூகத்தில் எவ்வளவு அதிகம் குறைக்க முடியும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர்

கேள்வி: பாலியல் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? அவர் நடந்தது குறித்து தைரியமாக பேச வேண்டுமா?

பதில்: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, பாலியல் விஷயத்தை மறைவாகத்தான் பேச வேண்டும் போன்ற கருத்துகள் நிலவும் சமூகங்களில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் குறைந்த அளவில்தான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விடயங்களை பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகின்றனர். அப்பெண்ணை மேலும் மேலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நடந்த விடயத்தை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிடப் போவதாக மிரட்டலாம்.

வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நடந்த சம்பவம் குறித்து நம்பிக்கை மிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசலாம். அமைதியாக இருப்பதன் மூலம் பாலியல் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டுவிட முடியாது.

சில நேரங்களில், பாலியல் தாக்குதல்கள் காரணமாக உடல்ரீதியான உபாதைகள் ஏற்படலாம். உடல் உறவால் பரவும் நோய்களும், கர்ப்பம் தரிப்பதும் ஏற்படலாம். எனவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சீக்கிரம் மருத்துவரைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாலியல் வன்முறைக்கு இலக்கான பெண்ணின் கணவன்மார்களுக்கும் இந்த விடயம் கடுமையான பாதிப்புக்களைக் கொடுக்கும். அவர்களுக்கும் உளவியல்ரீதியான ஆலோசனைகளும் சமூகரீதியான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150217_whymenrape

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *