கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி

ஆர்.சூடாமணி

bild

கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள்.

மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி இருக்கும் என்று நம்ப முடியாது. சில மாலை நேரங்களில் கதவடைத்த அறைபோல் கடற்கரையே புழுக்கமாயிருக்கும். வெளிறிய வானத்திலிருந்து காற்றுக்குப் பதில் அனல் இறங்கும். கழுத்தும் முகமும் வேர்வையாய்ப் பெருகும். ‘ராத்திரி மழை பெய்யப் போகுது’ என்று மனசுக்கு லாலிபாப் தந்து ஆறுதலுறுத்த வேண்டி இருக்கும். இன்று அப்படியில்லை. உண்மையாகவே இரண்டு நாள் நல்ல மழை பெய்திருந்த ஈரத்தின் குளிர்ச்சி, காற்றில் விரவியிருந்தது. தன்மையாய்க் கிழ உடலுக்குச் சாமரம் வீசியது. மழைக்கால இருளும் சூழ ஆரம்பித்திருந்தது. அல்லது மாலை ஆறரை மணியின் இருளாகவும் இருக்கலாம். “ஆறரையா?” மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறரைக்கு எட்டு நிமிஷம் இருந்தது. கடற்கரையில் வழக்கமான கூட்டம் இல்லை. சுண்டல் விற்கும் பொடிசுகளைக் கூடக் காணோம். மழைப் பயத்தாலோ அல்லது இருட்டி விட்டதாலோ பெரும்பாலும் மக்கள் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். வெறிச்சோடிய மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறுக்கி எடுக்கலாம் போல தலைகள்.

அவனும் இருந்தான். இளைஞன். சாயம் போன பழுப்பு நிற பான்ட் அணிந்திருந்தான். “இன்” பண்ணிய முழுக்கை சாம்பல் நிறச் சட்டை, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்திருக்கலாம். சட்டைக் கைகளை மடக்கி விட்டிருந்தான். ஒட்டு மீசை, ஒட்டிய தாடைகள், சராசரிக்கு மேல் உயரம் ; ஒல்லியோ – பருமனோ இல்லாத உடல்வாகு. அவன் இங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கிழவி முன்னமே கவனித்திருந்தாள். சற்று நேரம் முன்பு வரை அவள் காருக்கருகில் ஒரு யமாஹா பைக்கில் இரு இளம் பெண்கள் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையலுக்கு அங்கேயே திருட்டுப் பார்வை. அந்தப் பக்கமாய் வாக்கிங் செய்கிறவன் மாதிரி முன்னேயும் பின்னேயுமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது ஓரக் கண்ணால் கிழவியையும் பார்த்துக் கொண்டான். இளசுகளிடம் வம்பு செய்ய முடியாமல் கிழடு ஒன்று பக்கத்தில் இருப்பது அவனுக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்று தோன்றியது.

 

இந்த அசடுகள், இறுக்கிப் பிடிக்கும் பனியன்களின் பிரக்ஞை இல்லாமல், கண்ட கழிசடைகளின் கண்களுக்கு விருந்தாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறதுகளே! சினிமா பற்றிய பேச்சாயிருக்கும். அதுதான் அத்தனை லயிப்பு. கடற்கரையில மனித நடமாட்டம் குறைந்து வருகிறது என்ற எச்சரிக்கை கூட இல்லாமல்… இருட்டு நேரம் வேறு. என்ன பைத்தியக்காரத் துணிச்சல்! என்னதான் மாடர்ன் என்றாலும் பெண்மைக்குள் எப்போதும் சிவப்புக் கண் விழித்திருக்க வேண்டாமோ?

அந்தப் பயல் இன்னும் இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஒரு தீர்மானத்துடன் கிழவி காரை விட்டிறங்கி அந்தப் பெண்களை அணுகினாள்.

“எக்ஸ்கியூஸ் மீ.”

தலை நரைத்து முகத்தில் கோடுகளுடன் கைத்தறிப் புடவை சுற்றிய ஒரு கிழ வடிவம் சாந்தி நிகேதன் ஹேண்ட்பாகும் ஷோலாப்பூர் சப்பல்களுமாய் ஆங்கிலம் பேசக் கேட்ட அதிர்ச்சியில், பேசிக் கொண்டிருந்தவர்கள் வாயில் “பிரசாந்த்…” பாதியில் நின்றார்.

“நான் சொல்றத தப்பா எடுத்துக்காதீங்க யங் லேடீஸ். உங்களுக்குப் பாட்டியாயிருக்கக் கூடிய வயசு எனக்கு. உங்க நல்லதுக்காக ஒன்று சொல்றேன்…”

“என்ன, ஜீஸஸ் வரப் போறாரா?” என்றாள் ஒருத்தி சீரியஸான முகத்துடன். இன்னொருத்தி சிரமப்பட்டுச் சிரிக்காமல் இருந்தாள்.

“சமத்து சொட்டுது. கிண்டல் பண்ணாலும் பொருத்தமாப் பண்ணணும். நெத்தியில் கால் ரூபா அளவுக்கு இருக்குற குங்குமப் பொட்டைப் பார்க்கமா பேசறீங்களே. இவ்வளவுதானா உங்க கவன சக்தி? போகுது. இப்ப நான் சொல்றதையாச்சும் கவனமா கேளுங்க. அதோ அங்க பாருங்க. தீவட்டித் தடியன் ஒருத்தன் இங்கயே சுத்திக்கிட்டிருக்கான். நான் ரொம்ப நேரமா கவனிக்கறேன். பயல் உங்களத்தான் டாவடிக்கறான். இருட்டிட்டு வருது. ஆள் நடமாட்டம் அதிகமில்லே. வம்பை விலைக்கு சேதமில்லாம வீடு போய்ச் சேருங்கம்மா குழந்தைகளா. பிரசாந்த் விமர்சனத்தை வீட்ல வச்சிக்கலாம். அதுக்குள்ள அவருக்கு ஒண்ணும் வயசாயிடாது.”

அந்த “டாவடிக்கறான்” என்ற அருமையான சொற்பிரயோகம். அவள் வெறும் பஞ்சாங்கமல்ல ; இன்றைய பிரக்ஞை உள்ள நாகரிகப் பாட்டி என்று உணர்த்தியிருக்க வேண்டும். ஒரு கணம் ஆராய்ச்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்த இளம் பெண்கள் தலை திருப்பி நோக்கினார்கள். “தீவட்டித் தடியன்” இவர்கள் மீது பதிந்திருந்த கண்களைச் சட்டென்று வேறெதையோ பார்ப்பது போலத் திருப்பிக் கொண்டதைக் கவனித்த போது முகங்களில் கலவரம் தெரிந்தது.

“ம்.ம் கிளம்புங்கடியம்மா. பாட்டி சொல்லைத் தட்டாதேண்றது வெறும் சினிமா மட்டும் இல்லே.”

“ஷி இஸ் ரைட், சுசி. வா, போயிடலாம்.”

“சரிடி. நாங்க போயிடறோம் பாட்டி, தாங்ஸ்.”

“வெல்கம்.”

அந்த மறுமொழி கேட்டு மீண்டும் ஒரு சிறிய ஆச்சரியத்துடன் மறு கணம் இரு பெண்களும் பைக்கில் சிட்டாய்ப் பறந்து மறைந்தார்கள். கிழவி மிதப்பாய் புன்னகை செய்து கொண்டாள். தடியன் மேல் திருப்தியுடன் ஒரு பார்வை வீசிவிட்டு, திரும்பி வந்து காரில் உட்கார்ந்தாள்.
இதெல்லாம் முடிந்து சிறிது நேரம் ஆகியிருந்தது. பயல் இன்னும் ஏன் இடத்தைக் காலி பண்ணவில்லை? இங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, வேறு யாரும் இளம் பெண்கள் கண்களில் படவில்லையே?

மூன்று ஆண்கள் வானத்தைப் பார்த்து, “இன்னிக்கும் மழை வரும்” என்று
பேசியபடி, செருப்பு சரசரக்க விரைந்து கடந்து சென்றார்கள்.

கிழவி கவனித்தாள். பயல் தலை தெரியவில்லை. ஒரு வழியாய்ப் போய்த் தொலைந்தானா? அப்பாடா, தானும் கிளம்ப வேண்டியதுதான்.

இந்த ‘பார்க்கிங்’ பகுதியில் அவள் காரைத் தவிர வேறு வாகனங்கள் இல்லை. அவள் வந்த போது இங்கிருந்த இரண்டு டூரிஸ்ட் பஸ்களும் ஓர் ஊதா நிற மாருதியும் மூன்று பைக்குகளும் எப்போதோ போய்விட்டிருந்தன. அந்தப் பெண்களும் போன பின்பு வேறு வாகனங்களில்லை.
சில்லென்று அடித்த காற்றில் நரைமுடி படபடத்தது. கையால் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். தலையைத் திருப்பினாள். வியப்புற்றாள். அவள் கார் பக்கத்திலேயே முளைத்திருந்தான் அந்த இளைஞன்.

திறந்திருந்த கார் கதவின் மேல் லேசாய் சாய்ந்த படி அவளையே பார்த்தான். உதடுகளில் வினோதமான புன்னகை. அந்த அருகாமையில் ஷர்ட்டின் லேசான வியர்வை வாடை அடித்தது.

ஏன் இங்கே வந்து நிற்கிறான்? அந்தப் பெண்களை அப்புறப்படுத்தி விட்டாளென்ற ஆத்திரத்தில் அவளிடம் கூச்சலிட வந்திருக்கிறானா? ஜிவ்வென்ற கோபடம் இழை காட்டியது.

“யாருப்பா நீ? எதுக்காக இங்க வந்து நின்னுட்டிருக்கே? உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ.”

“என் வேலையத்தான் பார்த்துக்கிட்டுப் போறேன்.” நாகரிகக் குரல். உரக்காத, ஆனால் தெளிவான தொனி. மறுபடியும் அந்தப் புன்னகை. “ஏன் பெர்சு, உன் கூட யார் வந்திருக்காங்க? புருஷனா? புள்ளயா? பேரனா?

அவள் பேச்சின்றி வெறித்தாள்.

“சொல்லு பெர்சு, யார் வந்திருக்காங்க? சமுத்திரத்துல கால் நினைக்கப் போய்ட்டாங்களா, இங்க உன்னை தனியாவிட்டுட்டு?”

கோபத்தை மீறிக் கலக்கம் எழுந்தது. கண் எட்டும் தூரம் வரை, தான் தனியாக இருப்பது உறைத்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் தைரிய நகலுடன் பேசினாள்.

“ஏய் யாருடா நீ? எதுக்கு இங்க வந்து அநாவசியமா கலாட்டா பண்றே? மரியாதையா போயிடு.”

“இல்லாட்டி என்ன செய்வே?”

கிழவியின் வாய் உலர்ந்தது. இளைஞன் கையில் திடீரென்று பளீரிடும் அந்த மின்னல் கத்தி, இடது சட்டைக் கை மடிப்பு பிரித்துவிடப்பட்டிருந்தது. எப்படிச் செய்தான் இமை நேரத்தில்-
“உன் புருஷனோ, புள்ளையோ, பேரனோ இல்ல. எல்லாருமோ திரும்பி வரதுக்குள்ள நான் என் வேலைய முடிச்சுக்கிட்டுப் போயிடறேன். நோ, நோ, நோ பயந்துக்காத பெர்சு. நான் சொல்றபடி கேட்டியானா உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன். முதல்ல, கொஞ்சம் அந்த சைடுக்கு தள்ளி உக்காரு. நான் உள்ள ஏறி உன் பக்கத்துல உக்காந்துக்கறேன். ஒருத்தர் ரெண்டு பேர் எதிர்க்க நடந்து போறவங்களுக்கு அப்பத்தான் சந்தேகம் வராது.”

அவன் சரேலென்று பின் இருக்கையில் அவள் பக்கத்தில் ஏறி அமர்ந்து கதவை மூடி இரு கதவுகளையும் “லாக்” செய்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அவன் இடது கை கத்தியோடு அவள் முதுகுக்குப் பின் இருந்தது.

“முனை உறுத்துதில்ல பெர்சு? ஜாக்கிரதை. நீ ஏதானும் சத்தம் போட்டு கலாட்டா பண்ணினே, முனையோடு முழுக்கத்தியும் உன் உடம்புக்குள்ள பூந்துடும்.”

பயங்கரக் கனவு காண்பது போல் இருந்தது. ஏதோ திகில் படம் டி.வி.யில் பார்ப்பது போலிருந்தது. அவளும் ஒரு பாத்திரம். கதை தெரியாமல் பங்கேற்கும் பாத்திரம். எப்படி முடியப் போகிறது?

நரை மயிர்க்கால்களிலிருந்து வெப்ப அலைகளாய் வியர்வை பெருக்கெடுத்தது.

“ஒரு வேடிக்கை தெரியுமா பெர்சு? உன் கார் பக்கத்துல பைக் மேலே ரெண்டு பொண்ணு உக்காந்திருந்தாங்க இல்லே? அவங்க இருக்கறபோது எப்படி உன்னை நெருங்கி வந்து மிரட்டறது அப்படின்னு எனக்கு ஒரே டென்ஷன். இந்த நாள் பொண்ணுங்க வெவரமானவங்க. சந்தேகமான ஆளுனு தோணிச்சுன்னா அப்படியே பாஞ்சு வந்து ஆளுக்கு நாலு கராத்தே உதை உதைச்சு போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. என்னடா செய்யறதுன்னு யோசனையோடு குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டே இருந்தேன். அவங்களோ கிளம்பற வழியாத் தெரியல. அப்புறம் என் அதிர்ஷ்டம் ; நீயே அவங்களண்ட போய் ஏதோ சொல்லி விரட்டியடிச்சிட்டே!” மறுபடியும் சிரித்தான்.

அவள் அதிர்ச்சியுற்றாள். அட ஈஸ்வரா, இப்படி ஒரு விதி விளையாட்டா? தானே தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு… இன்று அவளுக்கு ஆபத்து என்பது
விதியின் தீர்மானம் போல் இருக்கிறது. இனி பயந்து ஆவதொன்றுமில்லை.

“சரி பெர்சு, விஷயத்துக்கு வருவோம்…”

“இந்தாப்பா, பேச்சுக்குப் பேச்சு அது என்ன, ஏளனமாய் ‘பெர்சு’? பெரியவங்களா ஆகறது ஒரு குத்தமா? மனுஷன் ஆயுசை எப்படியெல்லாம் நீட்டிக்கலாம்னு ஒரு பக்கம் அறிஞர்கள் மாஞ்சு மாஞ்சு ஆராய்ச்சி பண்றாங்க. கட்டுரை எழுதறாங்க. இன்னொரு பக்கம் வயசாளின்னா கிண்டலா? நீ கிழவனா ஆகவே மாட்டியா? ஒரு நாள் நீயும் ‘பெர்சு’ ஆகமாட்டியா? ஒருவேளை அற்பாயுசுலேயே செத்துப்போயிடலாம்னு ஏதானும் சங்கல்பம் பண்ணியிருக்கிறயா என்ன?”
அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“அட, பலே கிழவியாயிருக்கியே! பெர்சுங்கள்ளாம் கூட இப்படிப் பேச முடியுமா? சரி. இனிமே பெர்சுன்னு கூப்பிடலே. அதுக்காக உன்னை விட்டுடப் போறேன்னு அர்த்தமில்ல.”
அவளுக்கு மறுபடியும் பயம் பற்றியது. தொலைவில் கடலலைகள் இரைச்சல். மணல்மேல் ஒரு சிலர் தென்பட்டார்கள். இங்கு கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு எதிராக சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கார்மீதும் இரண்டொரு பார்வைகள் பட்டன. பாட்டியும் பேரனும் அழகான குடும்பக் காட்சி. இந்த நாளிலும் இப்படியொரு பாசமுள்ள பேரனா என்று வியந்திருப்பார்கள் ஒருவேளை.

கூச்சல் போடலாமா? கொலை கொலை என்று கத்தலாமா? வாயைத் திறப்பதற்குள் கூர் முனை ஒன்று முதுகில் உரசியது. திறக்க இருந்த வாய் மூடிக் கொண்டது.

அவர்கள் கடந்து போய்விட்டார்கள். கடற்கரையில் இப்போது ஈ, காக்காய் இல்லை. இருட்டில் அழுத்தம் கூடியிருந்தது. மப்பு மூடிய இரவின் சோடியம் வேப்பர் விளக்கொளியை அது சட்டை செய்யவில்லை. சிலுசிலுவென்ற காற்றினாலோ, பயத்தாலோ கிழ உடம்பு முள்குத்தி நின்றது.

“ஏண்டாப்பா உனக்குப் பாட்டியே கிடையாதா? இந்த அக்கிரமம் பண்றியே!”

“நிச்சயம் நீ புது டைப்தான் ஆயா, வம்பு பண்ற பசங்களண்டை பொண்ணுங்க உனக்கு அக்கா, தங்கச்சி கிடையாதான்னு கேட்பாங்க. நீ என்ன, உனக்குப் பாட்டி கிடையாதான்னு கேக்கற?”

“ஒரு பாட்டியத்தான நீ மிரட்டிகிட்டிருக்கே. அதுவும் தவிர, இதுதான் சரியான கேள்வி. எல்லாப் பசங்களுக்குமே அக்கா, தங்கச்சி இருக்கணும்னு அவசியமில்லே. ஆனா உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு பாட்டி இருந்துதானே ஆகணும்.”

அவன் சிரித்தான். “கில்லாடி ஆயா நீ, ஆமா உன் ஆளுங்க என்ன இன்னும் திரும்பி வரல்லே? இருட்டி இவ்வளவு நேரத்துக்கப்புறமுமா ஒரு வயசான பொம்பளயை தனியா விட்டுட்டு தண்ணியில அளைஞ்சி கிட்டிருப்பாங்க?”

கிழவி பேசவில்லை. அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். “ஓ தனியாத்தான் வந்திருக்கியா?” மௌனம். “குருட்டு தைரியம்தான். அப்போ கார் ஓட்டத் தெரியும்னு சொல்லு.” மௌனம். “பின்ன ஏன் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கே?” “காத்து வாங்கணும். அதுக்காக முன் சீட்டில் கதவைத் திறந்து உக்காந்திருந்தா கார் லைட் கண்ணைக் குத்தாதா? என் கூட பூனை – எலி விளையாட்டு விளையாடாதேப்பா. கையெடுத்துக் கும்பிடறேன். இந்தக் கிழவிக்குத் தாங்காது. உனக்கு என்ன வேணும்?”

“ஒரு கிழவிகிட்ட என்ன வேண்டியிருக்கும்? நகை, பணம், இல்லாட்டி உயிர்.” காத்து வாங்க வந்து உக்காந்த இடத்துல நகைக்கும் பணத்துக்கும் எங்கே போக? காத்ரேஜ் பீரோவா கொண்டு வந்திருக்கேன்?” “இருக்கறதைக் கொடுத்தால் போதும். அதோ உன் காதுல பெரிசா தங்கக் கம்மல் மின்னுதே. உனக்குத் தேவையில்லாத கனம். அப்புறம் கழுத்துல தங்கச் செயின். மூணு பவுன் தேறுமா?” வெடுக்கென்று செயினை இழுத்துப் பார்த்துக் கையில் எடையைக் கணித்தான். “தேறும். கையில் ரிஸ்ட்வாட்ச் வேற கட்டியிருக்கே. க்வார்ட்சா? நல்ல விலை போகும். இன்னொரு கையில் தங்க வளையல்.”

“நகையெல்லாம் கவரிங்.” “அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் ஹேண்ட் பாக். பலே, ஸ்டைலான ஆயாதான். ஹேண்ட் பேக் காலியாவா இருக்கப் போகுது? பேரனுக்காக ஏதேனும் கொண்டு வந்திருப்பியே?” அவசரமாய் தொடைக்கடியில் மறைத்துக் கொள்ள முயன்ற கைப்பையை உரிமையாய் வெளியே இழுத்து, திறந்தான். இந்தத் தங்கக் கம்மலும் செயினும் வளையும் கடிகாரமும் பார்த்துவிட்டுத்தானா அவளைக் குறி வைத்திருந்தான்? கடங்காரன்! திருட்டு ராஸ்கல்! இன்று உயிரோடு தப்பிச் சென்றால் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான்.
கார் விளக்கை ஏற்றிக் கொண்டு கைப்பையில் இருந்தவற்றை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். “பேரு, அட்ரஸ் – கிழவிங்களுக்குக் கூட சரோஜான்னு பேர் இருக்குமா என்ன? டிரைவிங் லைசென்ஸ், கார் சாவி, சின்னப் பொட்டலத்தில் ஏதோ மாத்திரை, இன்னொரு பொட்டலத்தில் குங்குமம், ஒரு கைக்குட்டை, பால்பாயிண்ட் பேனா, கொஞ்சம் வெத்துக் காகிதம்… பணமே இல்லையே?” அவள் பேசாதிருந்தாள். “ஆ. இதென்ன இன்னொரு ஜிப்? அட, இந்தப் பையில் நோட்டுங்கதான்! ஒருநூறு, ஒரு அம்பது. இவ்வளவுதானா? காரெல்லாம் வச்சிருக்க, ஒரு ஆயிரமாவது கொண்டுவரக் கூடாது?” உதட்டைப் பிதுக்கினான். “கஞ்சப் பாட்டி! போகுது ; அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.”

 

“பாதி வழில திடீர்னு கார்ல பெட்ரோல் தீர்ந்து போயிட்டா அஞ்சு லிட்டராவது போட்டுக்கிட்டு போயிடலாம்னுதான்.”

“அதான் முன்யோசனையுள்ள ஆயாவுக்கு அழகு. இப்போ பேரனுக்கு உதவுது பாரு! பையிலேர்ந்து பணத்தை மட்டும் எடுத்துக்கறேன் ஆயா?” விளக்கை அணைத்துவிட்டு நோட்டுகளை பான்ட் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு மற்ற எதையும் எடுக்காமல் ஹேண்ட் பேகை மூடி அவளிடம் கொடுத்தான். “அதென்ன, காலண்டை ஏதோ பளபளக்குது? ஓ, தண்ணி பாட்டில்தானா? சுத்தமான வீட்டுக் குடிநீராக்கும்! வச்சிக்க. சரி ஆயா, சத்தமில்லாம நகைங்களையும் ரிஸ்ட் வாட்சையும் கழட்டிக் குடு. நான் போயிடறேன். நீயும் வீட்டுக்குப் போவாணாமா? உன் புருஷனும் புள்ளயும் பேரனும் கவலைப்படுவாங்களில்ல?”
கிழவி தலை குனிந்து அசையாமல் உட்கார்ந்திருந்தாள். “ம் ம், சீக்கிரமாக கழட்டிக் குடு கிழவி, எனக்கு நேரமாகுது. இன்னும் ரொம்ப நேரம் என் பொறுமை நிக்காது.”

கிழவி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். காருக்குள் மங்கலாய் விழுந்த கடற்கரை விளக்கின் ஒளியில் அவன் சில கணங்கள் அந்தப் பார்வையை எதிர்கொண்டான். பிறகு கண்களை விலக்கிக் கொண்டான். “என்னை அப்படி உருக்கமா பார்க்காதே ஆயா. ஒண்ணும் பிரயோஜனமில்லை. சீக்கிரம் நகைங்களும் வாட்சும் குடுத்துட்டியானா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.” கிழவி மௌனமாய் கைக்கடிகாரத்தைக் கழற்றினாள். வளையலைக் கழற்றினாள். கழுத்துச் சங்கிலியைக் கழற்றினாள். காதுக் கம்மல்களைக் கழற்றினாள். எல்லாவற்றையும் உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள். “துண்டு துண்டாயிருந்தா எப்படி எடுத்துட்டுப் போறது? ஒண்ணு கீழே விழுந்தாக் கூடத் தெரியாது. கர்சீஃப் வச்சிருக்கயில்ல? அதில் சுத்திக் கொடு.” சுற்றி முடிச்சுப் போட்டுக் கொடுத்தாள்.
அவன் வாங்கினான். பான்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கத்தியை மடக்கி, பிரித்து விட்டிருந்த சட்டைக் கையில் வைத்து மறுபடியும் சுருட்டி மடித்துக் கொண்டான். கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான். அவளைப் பார்த்துத் தலையசைத்தான்.

“போய் வரேன் ஆயா. குட் நைட். நைஸ் டு ஹவாவ் மெட் யு.”

அவன் வேகமாய் நடந்து சிறிது தூரம் சென்று விட்டான். காற்று, விட்டு விட்டுச் சுழன்று வீசியது. மேக அடர்த்தியில் நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. திடீரென்று பின்னாலிருந்து அவள் குரல். தொலைவினால் பலவீனமாய் இருந்தாலும் இயன்ற வரையில் உரக்க அழைத்த அவசரக்குரல். “இந்தாப்பா… இந்தாப்பா… பையா… யங்மேன், உன்னைத் தான். ஒரு நிமிஷம் நில்லேன் ப்ளீஸ்!” அவன் நின்று திரும்பினான். நாலடி முன்னால் வந்தான். “என்ன ஆயா, ஏதானும் ட்ரிக் செய்யாலாம்னு பார்க்கிறியா? என்னாகும் தெரியுமில்ல?”

மடித்த சட்டைக் கையைப் பிரிக்க முனைந்தான். “இங்கே ரெண்டாம் பேர் கிடையாது, கவனமிருக்கட்டும்.” “இல்லேப்பா, அபடியெல்லாம் ஒண்ணுமில்ல.” “பின்னே என்ன?”

“கொஞ்சம்… கொஞ்சம் அந்த கடிகாரத்தில் மணி பார்த்துச் சொல்றியா? ஏழரை மணிக்கு நான் என் பி.ப்பி மாத்திரை சாப்பிடணும் நேரப்படி அந்த மாத்திரையை முழுங்காட்டி ரத்த அழுத்தம் எகிறிடும். டாக்டர் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்னு சொல்லியிருக்கார்.”
கெஞ்சலாய் வந்த குரல். கண்களும் கெஞ்சியிருக்கும் மப்பலான வெளிச்சத்தில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை. அவள் கிழக் கண்களுக்கும் அவன் முகபாவம் சரியாய்ப் பிடிப்படவில்லை. அவன் தன்னையே சிறிது நேரம் உற்றுப் பார்ப்பது மட்டும் தெரிந்தது. அவன் நெருங்கி வந்தான். கார் கதவைத் திறந்தான். பான்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை வெளியே இழுத்து முடிச்சைப் பிரித்து கடிகாரத்தை எடுத்து, கார் விளக்கை ஏற்றி அதனடியில் பிடித்துப் பார்த்தான்.

“ஏழு நாப்பது, கொஞ்சம் லேட். பரவாயில்லே.” கைப்பையிலிருந்து மாத்திரைப் பொட்டலத்தைப் பிரித்து மாத்திரையை எடுத்துக் கொண்டாள். வாயில் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டிலைத் திறந்து தண்ணீரோடு சேர்த்து மாத்திரையை விழுங்கினாள். நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “ரொம்ப தாங்ஸ்ப்பா.” அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிதானமாய் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான். “என்னப்பா…? எ… எதுக்கு…? அவன் ஏதும் பேசாமல் அவள் கையை மென்மையாய்ப் பற்றி எடுத்து கடிகாரத்தை அவள் மணிக்கட்டில் கட்டிவிட்டான். நகைகளை மறுபடியும் கைக்குட்டையில் முடிந்து அவள் ஹேண்ட்பேக்கினுள் வைத்தான். தன்பான்ட் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் நோட்டையும் ஐம்பது ரூபாய் நோட்டையும் எடுத்து அவற்றையும் அவள் கைப்பையில் வைத்து மூடி அவள் மடியில் பையை வைத்தான். கார் விளக்கை அணைத்து விட்டு இறங்கி நின்றான்.

வியப்பில் அவளுக்கு வாயெழவில்லை.

“வரேன் ஆயா. நான் பிறவித் திருடனில்லை. தொழில் முறைத் திருடன் இல்லை. சொன்னா நம்புவியோ என்னமோ, நான் சரியா சாப்பிட்டு அஞ்சு நாளாகுது. நேத்திலிருந்து என் ஆகாரம் வெறும் டீ தான். அதுக்காக என்னை என்னமோ அப்பு சப்புன்னு நினைச்சிடாதே, எம்.காம். படிச்சிருக்கேனாக்கும்! ஒரு கழுதையா பிறந்திருந்தா அந்தப் பட்டம் அச்சிட்ட காகிதத்தையாவது சாப்பிட்டுப் பசியாறியிருக்கலாம்.” கார் கதவை மூடினான். “குட் நைட் ஆயா. உடனேகிளம்பி ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. உன் வயசுக்கு இந்த நேரத்துல ஒத்தையில வெளிய கிளம்பறது நல்லதில்லே. ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தி!”

சிரித்து விட்டுப் பரபரவென்று நடந்து செல்லலானான். “இந்தாப்பா… ஏ பையா… பேர் தெரியாதது கஷ்டமா இருக்கு. ஏ ஜென்டில்மேன் திருடா. கொஞ்சம் நில்லுப்பா யங் மேன்…” “வாட் நௌ?” எரிச்சலுடன் திரும்பினான். இரைக்க இரைக்க ஓடி வந்து அவன் எதிரே நின்றிருந்தாள் கிழவி. அவன் கையில் எதையோ திணித்தாள்.

 

இரண்டு நோட்டுகள். நூறு, ஐம்பது. “பிச்சை போடறியா?” என்றான் சீற்றமாய், கண் கனல. “இல்லை. நான் உயிர் தப்பிச்சச் சந்தோஷத்தைக் கொண்டாடறேன். முதல்ல போய் ஒரு நல்ல ஹோட்டல்ல ஒரு முழுச் சாப்பாடு வாங்கி வயிறாரச் சாப்பிடு. மிச்சப் பணத்தைக் கைச் செலவுக்கு வச்சிக்க. அப்புறம் – அடிக்க வராதே – உன் எம்.காமைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு அந்த ஹோட்டல்லயே ஏதாவது எடுபிடி வேலையாவது இப்போதைக்குக் கிடைக்குமான்னு கேட்டுப் பாரு. ஒண்ணும் தப்பில்லே. நீ நல்ல பையன். ஆல் தி பெஸ்ட்.” காரிடம் விரைந்து திரும்பினாள். வேகமாய் அதை செலுத்திக் கொண்டு அவனைக் கடந்து சென்றபோது பலமாக விழத் தொடங்கியிருந்த மழைத் துளிகளின் உணர்வே இல்லாமல் அவன் அதே இடத்தில் பிரமித்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *