யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)

 

குழிவிழுந்த கண்களுக்குள்

குறுகிக் கிடக்கின்றன நினைவுகள்.

கூன் விழுந்த முதுகில் ஏறி

உட்கார்ந்திருக்கிறது உலகம்.

எல்லாவற்றையும் சுமந்தபடி

அவள் நடக்கிறாள்.

எல்லையற்ற வானத்தில்

எப்போதும் தெரிகின்றனர் அவளின்

சூரியரும் சந்திரரும்.

நட்சத்திரங்களுடன் அவள்

தினமும் பேசுகின்றாள்.

பொழுதோய்ந்து போகையில் அவளிடம்

துயில வருகின்றன பறவைகள்.

அம்மா எனப் பள்ளி எழுச்சிபாடி

அவளை எழுப்புகின்றன பசுக்கன்றுகள்.

எவரிடமும் கையேந்த விடாமல் அவளுக்கு

உணவிடுகின்றது விளைநிலம்.

குரல் கொடுத்தவுடன் கூட்டமாய்

விருந்துண்ண வருகின்றன காக்கைகள்.

வருத்தங்கள் ஏதுமற்று அவள்

வாய்விட்டுச் சிரிக்கின்றாள் கனவுகளில்.

காலனுடன் சென்றுவிட்ட கணவனும்

காவுகொடுத்துவிட்ட பிள்ளைகளும்

காவல் தருகின்றனர் அவளுக்கு.

ஆணிவேரை அறுத்த பின்பும்

உயிர்வாழும் உன்னதம் அவள்.

தனிமையின் சூனியத்தை அவள்

 

ஒருபோதும் உணர்ந்ததில்லை.

கண்ணுக்குத் தெரியாமல்

பேய்கள் அவளைத் தொடரும்போதும்

தேசமெங்கும் கடமையெனத்

திரிகின்றாள் அவள்.

அவளின் மகிழ்ச்சியென முற்றமெங்கும்

ப+த்துக்கிடக்கின்றன புதுமலர்கள்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *