கீதா கணேஸ் இலங்கை
தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும். அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க
மாட்டாள் போலும்! ‘மகனே! சூரியா! வா!” நீயும் சில வேளைகளில்….”கடலன்னையின் ஏக்கம் அலைகளாய் விரிகிறது. இருள் வேகமாய் ஆட்கொள்கிறது. இருளோடு போட்டியிட்டு தத்தம் வீடு செல்லும் மக்கள்.
ம்மா….ம்மா…ம்மா… கச்சான் நன்றாக வறுக்கப்பட்டதை காற்றோடு கலந்து வந்த வாசனை சொல்லியதும் இரண்டு கச்சான்களை வாயில் போட்டுப் பதம் பார்க்கிறாள். மணலுக்குள் ஒளிந்து கிடக்கும் கச்சான்களையெல்லாம் முழுவதுமாய் அரித்து எடுத்து பெட்டியில் போடுகிறாள். நெருப்பில் துவண்டு வந்த கச்சான்களை மெல்லிய காற்று தடவிக் கொடுப்பது போல் இளம் தென்றல், கூடவே.. நல்லம்மாவின் நெற்றியோரத்தில் வழிந்த வியர்வைத் துளிகளையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறது. வேலை முடித்து செல்பவர்களால் கிழவியின் கச்சான்
வியாபாரம் சூடுபிடிக்கும். அவள் வியாபாரத்தின் இலவச விளம்பரமாய் வறுத்த கச்சானின் நறுமணம்…
உண்மைதான். வேலை முடிந்த களைப்பில் செல்லும் ஜடங்களுக்கு, இந்த வறுத்த கச்சானின் வாசனை மூக்கினுள் நுழைய கைகள் தாமாகவே பணப்பையைத் தேடும்…..
தினமும் புதிதாய்ப் பயணிக்கும் மக்களை விடவும் கிழவிக்கு வழக்கமான வாடிக்கையாளர்களாய் அதிகமானோர் இருந்தனர். ஏன்? வெற்றிலையைச் சப்பி பேருந்துடன் கூடவே தம் வாழ்க்கைப் பயணத்தையும் ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்களும் வெற்றிலையைக் கைவிட்டு கச்சானையும் மஞ்சட் கடலையையும் கொறிக்கப் பழக்கியதில் கிழவி வெற்றிகண்டது என்னவோ உண்மைதான்.’ஆச்சி எனக்கு முப்பது ரூபாய்க்கு”‘எனக்கு ஐம்பது ரூபாய்க்கு”
‘ஆ…….அம்மம்மா. எங்களுக்கு பத்து ரூபாய்க்கு தாங்க அம்மம்மா” பள்ளிச்செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மீதப்படுத்தி பத்து ரூபாய்க்கு கச்சானை வாங்கி மூன்று நான்கு பேராய் பங்கிட்டு உண்ணும் சிறுசுகள்.
‘டேய் நீ எனக்கு அஞ்சு கச்சான்கடனல்லே..” “அம்மம்மா பாத்துப் போடண… கடன் கச்சான் குடுக்கோணும்”
‘டேய் பயலுகள்! கச்சானெல்லாம் கடன் வாங்குறீங்கடா! ம்…..அஞ்சு கச்சா னுக்குக் கடன்”நான்கைந்து கச்சான்களை அவனின் கையிலும் கொடுத்துசிறுபையினுள் நிரப்பிக் கொடுக்கிறாள் கிழவி.ம்மா…ம்மா…..ம்மா….அவன் ரூபனும் இப்படித்தான் பத்து வயசுவரைக்கும் ஓடித்திரிஞ்சு சுட்டியா இருந்தவன். பதினொரு வயதில் சுயமாகவே தன் பொறுப்புணர்ந்து வளர்ந்தவன்.ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வீடு மெழுகுவதற்குத் தேவையான சாணகம், தண்ணி என்பவற்றை ஆயத்தம் செய்து வீட்டையும் ஒழுங்கு செய்வான்.
தினமும் பொழுதுபட்டதும் தன் சிறு கைகளால் விபூதி போட்டு சிமினியைப் பக்குவமாய்த் துடைத்தெடுக்கும் பாங்கு நல்லம்மாவிற்கு அவன் மீதான நம்பிக்கையின் அடித்தளமாயமைந்தது.
அவன்தான் சுவாமி அறையிலும் விளக்கேற்றிப் பின் லாம்பையும் ஏற்றி வைப்பான்.வீட்டிற்கு வெளிச்சம் கொடுப்பது அந்த சிறிய லாம்புதான்.|வீட்டின் முன் விறாந்தையில் விளக்கு ஒளிர அவன் தன் பாடங்களை நேர்த்தியாய் படிக்கும் அழகை நல்லம்மா குப்பிவிளக்கில் பிட்டுக் கொத்திக் கொண்டே ரசிப்பாள். சீராக வாரப்பட்டிருக்கும் தலை, மாலையில் தேவாரம் படித்து, நெற்றி நிறைந்த விபூதியும் சந்தனமும் அவன் அழகை மெருகூட்டும். உனக்காக நான் எனக்கா நீ| என்ற பாசப்பிணைப்பில் நல்லம்மாவும் ஒரே மகன் ரூபனும் அந்தச் சிறுகுடிசை வீட்டினுள். பதினைந்து வயதுக் கட்டிளமைப் பருவத்தில் அவனுடன் கூடவே பொறுப்புணர்ச்சியும் அதிகரித்தது. விறகு கொத்தி, சந்தைக்குப்போய், சமையல் சரக்குக் கொள்வனவு என தாய்க்குரிய தேவைகளை நிவர்த்தியாக்கியதன் பின்பே தன் காரியம்.
‘டேய் நீ…..பொன்ஸ்தான்.
அம்மா பிள்ளையாகத்தான் வளரப் போறாய்” ரூபனின் நண்பர்கள் அவனைக் கேலி செய்யும் போதெல்லாம் அவனுக்கும் பெருமையாயிருக்கும். அதை விட வேறு சந்தோசம் என்ன இருக்கடா?
‘என்ர பிள்ளை வருவான். நான் இதில இருந்து கச்சான் விக்கிறதும் என்னத்துக்கு? அவனுக்குத் தெரியும். அம்மா எங்கையும் போகமாட்டா எண்டு….” ‘இப்ப இருபது, இருபத்தைஞ்சு வருசம்….. இதிலான் இருக்கிறன்… என்ர சீவியத்துக்கு ஏத்த மாதிரி வருகுது என்றத விட வருமானத்துக்கு தக்கபடி வாழப்பழகீறன் மோனே” அருகிலிருக்கும் மாம்பழ வியாபாரிக்கு கூறிக்கொண்டிருந்தாள். நாராயண வியாபாரி மாம்பழ வியாபாரத்திற்காய் இவ்விடம் வந்து ஒரு கிழமை கூடக் கடக்கவில்லை. நல்லம்மாக் கிழவி, கச்சானை வறுத்துக் கொண்டே, ரூபனைப் பற்றிய நினைவுகளை அவன் வருகையை முன்மொழிவது வழக்கமாயிற்று. நாராயணன் வருகைக்கு முன்பு, அவள்
கதைகளை கேட்பது, கச்சான் தாச்சியும் மணலும் அகப்பையும்தான்.
‘உங்களுக்கு எல்லாரும் இருக்கினமே…?
ஒருத்தரும் காணாமப் போகேல்லயே….?”
‘நாங்க வவுனியாவில இருந்து கிட்டடிலான் இங்கவந்தனாங்கள். நாலு பெடியள். ரெண்டு பேர் கட்டீற்றினம். ஒருத்தன் அவுஸ்ரேலியா போயிட்டான். கடைசி இவன்தான் ராமு. ‘அவுஸ்ரேலியாவுக்கு என்ன கள்ளமாயோ போனவன்?.. ஐயோ என்ர மோன அந்த நாளேல எத்தின தரம் சொல்லியிருப்பன் போடா எண்டு… என்ன விட்டுக் கொஞ்சமும் அரக்கமாட்டான் தம்பி. அவன் ஓ.எல். படிக்கேக்க பள்ளியால சுற்றுலாக் கூட்டிக்கொண்டு போனவை.அம்மாவத் தனியா விடமாட்டன் எண்டு போக மாட்டான் எண்டான். ‘அப்டியிருந்த என்ர பிள்ளை எப்பிடியும் என்னத்தேடி வருவான். இருபத்தைஞ்சு வயது கடந்த இளந்தாரியாட்டம் வருவான்.” கறுத்தக் கொழும்பான், விளாட், விளாட், கிளிமூக்கு…ஒண்டு பத்து… ரூபா… பத்து ரூபா நாராயணன் செவிசாய்ப்பதாயில்லை. காலையிலிருந்தே வியாபாரம் அவரோகணமாய் இருந்தது.
ம்மா…ம்மா..ம்மா….
‘
தம்பி நாராயணா! இதில சிவப்பு ரீசேட்டோட வந்து கச்சான் வாங்கினான்….சிவலப் பெடியன்…அவனப் போலதான் என்ர மோன் ரூபனும். இன்னும் சிவல எண்ணலாம். எப்பன் கோவம் வந்தாலும் முகம் சிவந்திடும்…. அப்பிடியே அந்த முருகப் பெருமானை வடிச்செடுத்தது மாதிரி….” வாடிக்கையாளரைக் கவனித்துக் கொண்டே அவனுடனான கதையாடலையும் தொடர்ந்தாள்.
‘மகன் எங்கையணை போனவன், வெளிநாட்டுக்கோ?” அவள் மீது கொண்ட பரிவால் அவனுக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது போலும். ‘எங்கட பண்பாட்ட சாகடிச்சு உயிர் வாழுறதவிட, பண்பாட்டோட செத்துப் போறது மேல்” நல்லம்மாக் கிழவி தத்துவமாய்
எடுத்துரைத்தாள
‘அப்ப மோன் இங்கையே இருக்கிறான்?” நாராயணனுக்கு ஆவல் விழித்துக் கொண்டது.
’99ஆம் ஆண்டு ஐப்பசி வெள்ளிக்கிழமை…. என்ர பிள்ளைதான் ஒவ்வொரு நாளும் சிமினி துடைச்சு வீட்டு விளக்குக் கொளுத்துவான். அந்தச் சின்ன விளக்கு அடக்கமாய் எரிஞ்சாலும் அந்தளவு வெளிச்சமும் எங்களுக்குப் போதுமாயிருக்கும். பளிச் பளிச் என்று சிமினி மினுங்கும். எல்லாத்தையும் நேர்த்தியா செய்வான். ‘அண்டைக்கெண்டு நான் பாவி, சிமினி துடைக்க எடுக்க, அதுக்கே பிடிக்கேல்ல அப்பிடியே கீழே விழுந்ததுதான். ‘அம்மா இருட்டில் இருக்கக் கூடாதெண்டு வேலுவின்ர கடையில சிமினி வாங்கப்போனவன்… ‘உங்களுக்கும் தெரியுமெல்லே. சிமினி அவரின்ர கடையில் மட்டும்தான் இருக்கும்… ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கால…..”
நாராயணன் தலையசைத்து ஆமோதித்தவாறே தன் அன்றைய கணக்கிடலில் மூழ்கினான். அவன் கேட்க வேண்டும் என்ற சிரத்தையெல்லாம் அவளுக்கு இல்லை. ரூபனின் பிரிவின் பின் காற்றோடும் கதை பேசும் காலமாய் அவள் வாழ்வு…..
‘ம்….ஏக்கமாய் வந்த பெருமூச்சு, அவள் உள்ளத்து மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது. ‘அம்மா…. உங்க மகனக் கொஞ்சம் விசாரிக்க வேணுமாம். கூட்டிக்கொண்டு போறம். கொழும்புக்குத்தான் கொண்டு போறம். இரண்டு கிழமையால கூட்டிவாறம்….. மொழி பெயர்க்கப்பட்ட செய்தி அவளிடம் வந்தது என்னவோ…இப்படித்தான். கடையில வைச்சுப் பிடிச்சவன சிமினி கொண்ணந்து தர விட்டாங்கள்…..ஆனால்…அவன் இல்லாம… விளக்கு எப்பிடி……” ‘பிறகு போய்ப் பாக்கேல்லயோண?” ‘ரெண்டு தரம் கொழும்பில போய்ப்பார்த்தனான் மோன. பிறகு எனக்கும் சிக்குன் குனியா….வந்து முடங்கிப் போனன். பிறகு போக்குவரத்தெல்லாம் பிரச்சனையாயிட்டுதே….. ‘என்ர மோனுக்குத் தெரியுமடாம்பி, அம்மா இதிலான் கச்சான் வித்துக் கொண்டு இருப்பா எண்டு, ..போனமாசம் கூட அவன்ர போட்டோவெல்லாம் குடுத்து பெரிய அதிகாரிகளோட கதைச்சிற்று வந்தனான்….” அந்த இருளிலும் கிழவியின் பற்கள் நம்பிக்கையோடு பளிச்சிடுகின்றன.
‘எல்லாம் விளக்கமாய்க் கேட்டுப் பதிஞ்சவை.”
..ம்ம…….ம்மா…….ம்மா… தன்னிடம் மீதமாய் இருக்கும் நேரத்தைத் துரத்திக் கலைப்பதற்காய், பலரும் வந்து கூடும் முச்சந்தியில் துரையர் ஒரு கிழமையின் பின் தன் வரவைப் பதிவு செய்கிறார். கிழவி வறுக்கும் கச்சானின் சுகந்தம் மூக்கைத் துளைக்க, வெற்றிலை சப்பல் விடுதலை பெற்று வீதியோரமாய் விழுகிறது. ‘தம்பி துரை..என்ன காணாதமாதிரி நிக்கிறாய் கனகாலமா உன்னக்காணவுமில்ல?” நல்லம்மா வழக்கம் போல் தானாகவே ஆரம்பித்தாள். ‘தம்பி துரை……போனமாசம் என்ர மகன்ர போட்டோவெல்லாம் குடுத்து ஒரு பெரியவரிட்ட பதிஞ்சு இருக்கிறன். எப்பிடியும் தான் முயற்சி செய்யுறன் எண்டவர்…… வீடு வீடா வந்து ஆக்களக் கணக்கெடுப்புச் செய்தவ. மகன் இருக்கிறான் எண்டுதான் பதிஞ்சனான். அவன் வருவான்…..என்ன தம்பி.. நம்பிக்கையாய் உதிர்ந்த அவள் சொற்களில் ததும்பும் குளிர்மை, குரல்வளையை விறாண்டி வரட்டி எடுத்தனவாயிருந்தன.
‘இந்த வருசம் எப்பிடியும் வெளிச்சத்துக்கு வரும்….. ஒரு கைப்பிடியாய் அள்ளிய கச்சானை துரையின் கையில் கொடுத்து, கச்சான் மூட்டையை சரிசெய்து முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டே….
மீண்டும்…..
‘தம்பி துரை என்னப்பா பேச்சு மூச்செத்து நிக்கிறாய்? ‘ஓமண எதப்பேசிறது…….எதவிடுறது? காசுக்கட்டை சீலைத் தலைப்பில் முடிந்து இடுப்பில் பத்திரப்படுத்தி, ஆயத்த நிலையில் கிழவி பெருமூச்சொன்றை உதிர்த்து நீண்டதாய் விடுவித்தாள்.
……ம்மா…….ம்மா…….ம்மா……. ‘கிழவியும் பாவம், நன்மை தீமை தெரியாது” ‘ஏதோ மகன் பக்குவமா இருக்கிறான் என்ற நினைவு.
நினைவுகள் அநாதையாய் போனால் எஞ ;சுவது….எதுவுமில ;லை….இல ;லை….எதுவும ; பேசிக்கொள்ளலாம். சுயமே தொலைந்தபின் யாருடன் எதைப்பேசுவது என்பது மட்டும் எப்படி விளங்கும்? ‘நாராயணா! கிழவிக்கு எப்ப வெளிச்சம் வரப்போகுதோ தெரியேல்ல.” ‘ஓமண்ணை இண்டைக்கு இந்தப் பின்னேரத்துக்கிடையிலேயே…… எனக்கு தலை வெடிச்சிடும் போலிருந்தது. பாவம் மனுசி. வயசு போயும் ஏதோ மனத்தைரியத்தில சீவிக்கிறா…..
……ம்மா……ம்மா…..ம்மா……
‘தம்பி துரை ஒரு கிழப்பசுவொண்டு காத்தால இருந்து கதறிக்கேக்குது.” ஆரும் கணக்கெடுக்கிறதா இல்ல. எங்கையோ
தூரமாக் கதறிக்கேட்டது. இன்னும் கதறி முடியேல்ல…..வரவர கிட்டவாக்கேக்குது….. எத்தனையோ ஆயிரம் கூர்மையான செவிகளில் பட்டும் செல்லுபடியற்றுப் போன அலறல் கிழவியின் செவிப்பறையில் மட்டும் ஒலித்து அவளின் உள்ளத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருந்ததன் வெளிப்பாடாய் கொட்டித்
தீர்த்தாள். கச்சான் மூட்டை அவள் தலையில் ஏறி அமர்ந்து கொண்டது.
….ம்மா……ம்மா…….ம்மா…….
ஒட்டிய வயிறு, கண்களின் ஓரத்தில் வடிந்து காய்ந்த கண்ணீர், ஏதோ ஒன்றின் ஏக்கம் படர்ந்திருக்க….கதறிய படி…..
ம்மா….ம்மா….. ‘கன்டுக்குட்டி போனகிழமை காணமப் போனதாம் நேற்றுத்தான் எங்கையோ பத்தேக்க அதுகின்ர மண்டையோடு கிடந்து எடுத்ததாம். தாய் கதறிக் கொண்டு திரியுதாம்’ நல்லம்மா, என்ன நினைத்தாளோ? எதைத்தான் நினைப்பாள் அவள்? ‘பாவியள் ஈவிரக்கம் இல்லாம…வாய்விடாச் சாதியள கொல்லுறாங்கள்.”
ச்சீ…….ஒரு கிழப் பசுவ இப்படி துடிக்க விட்டவங்கள் உருப்படுவாங்களே….. அந்தப் பிஞ்சுக் கண்டு தாய நினைச்சு
எப்பிடிக் கத்தியிருக்கும்? கிழவி தன் அனுபவங்களை முன்வைக்கிறாளோ? ‘பித்தாகும் பெத்த மனங்கள்.”
உயர்திணையென்ன? அஃறிணையென்ன?
‘பாவியள் கத்தியக் தூக்கேக்க தன்னும் கொஞ்சம் யோசிக்கிறேல்ல……
‘இவங்களெல்லாம் பிள்ள குட்டி இல்லாத மலட்டுக் கூட்டங்களாக்கும்’ ‘தம்பி துரை! இப்பிடி பசுமாடு கதறுறத பாக்கிறதும் பாவம்..அதுக்கும் மனுசர் போல விசர்கிசர் பிடிக்கிதோ தெரியேல்ல…..” தலையில் சுமந்த மூட்டையுடன் இரண்டடி நகர்ந்திருக்க மாட்டாள் திரும்பி வந்து, ‘தம்பியவ நான் நாளைக்கு ஏ.ஜி. ஒவ்வீசுக்கு போவன். இங்க வாறது சமசியம். நாளைக்கு அந்தப் பெரியவரப் போய் காணவேணும். அந்த மனுசன் பாவம்…ஏதோ….தெய்வத்தப் போல”
‘மகன்ர போட்டோவெல்லாம் வாங்கி, எழுதினவர். சிலவேளை வாற கிழமை மட்டில கொழும்புக்குப் போவன்”
..ம்மா….ம்மா….ம்மா…..
கிழப்பசு நல்லம்மாவைக் கடந்து செல்ல அவளும் அதன் பின்னே சென்று…..சிறு புள்ளியாய் மறைகிறாள் நாராயண வியாபாரி நீண்ட பெருமூச்சை இறக்கி வைத்து வானொலியை அவசரமாய் முறுக்கினான்.
‘இதுவரை மீட்கப்பட்ட மண்டையோடுகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு.”.. ..ம்மா….ம்மா…..கிழப்பசுவின் கதறல மெலிதாய் காற்றில் கலந்து செய்தியோடு காதில் நுழைந்தது.
‘ஏன் அப்பா எல்லாரையும் புதைச்சுப்போட்டு திரும்ப கிளறி எடுப்பினமோ?” மாம்பழங்களை பெட்டியில் அடுக்கி சைக்கிள் கரியலில் கட்டி ஆயத்தமாக, அவனுடன் கூடவே இருந்த பன்னிரண்டு வயசு வாரிசு இடைவிடாத கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தான். நடந்ததை எல்லாம் மறந்து புதுவாழ்வு வாழவேண்டும். இனிமேலும் இந்த அழிவுகள், துன்பங்கள், கதறல், ஓலங்கள், அங்கங்களைப் பிய்த்து எடுக்கும் வேட்டுக்கள்……எல்லாமே எங்கள் சந்ததியோடு மரணித்து விடவேண்டும். இந்தப் பிஞ்சுகளாவது சுதந்திரமாய் பழுத்து, வாழ்வை ருசியாக்கட்டும். நெஞ்சுப் புதைக்குழிக்குள் புதைக்கப்பட்டு வாய்ப்பூட்டு போட்டு பூட்டிவிட எண்ணியவற்றையெல்லாம், அவனின் இடைவிடாத கேள்விக்கணைகள் கிளறி எடுக்க, சைக்கிளின் முன்கரியலில் அமர்ந்திருக்கும் அவனுக்கு நெஞ்சப் புதைகுழியிலிருந்து இரகசியங்களை ஒப்புவிக்கிறான்.
ஞானம் சஞ்சிகையில் வெளிவந்த கதை