நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.

 

ரவி (சுவிஸ்)நன்றி உயிர்நிழல்

mayoo mano thoguppu-s(மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு)

குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் புதிய படைப்பாக்கத்துடனும் குழந்தை முயன்று கொண்டிருந்தது. “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ என்ற மயூ மனோவின் கவிதைத் தொகுதியினை நான் கையில் வைத்திருந்தேன்.

எனது முதலாவது வாசிப்பு -மெதுவாகவெனினும்- முடிந்துவிட்டது. புத்தகத்தை தயக்கத்துடன் மூடினேன். குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அது தனது படைப்பை உருவாக்கி முடித்திருந்ததில் மகிழ்ச்சிகொண்டிருந்தது. ஆனால் நான்… திருப்தி வரவில்லை. கவிதையின் வரிகளினுள் நான் முழுமையாகப் புகுவதில் சிரமப்பட்டேன். எனக்குள் மழை பெய்துகொண்டிருந்தது. கவிதைகள் என்னை நனைத்திருந்தன. ஒரு குறிப்பு எழுதலுக்கான ஏற்பாடாய் பென்சிலால் கோடுகள் இட்டபடியான கவிதைகளுடன் புத்தகம் மூடப்பட்டது. மாதங்கள் சில போய்விட்டிருந்தன.

“எனது சஞ்சிகைக்காய் ஏதாச்சும் எழுது“ என்றாள் இன்னொருத்தி. வாளாவிருந்தேன். “எழுதடா“ என்றாள். இனியும் தயங்கினால் எழுது நாயே என்பாள். அதற்குள் எழுதிவிட முடிவு செய்தேன். மீண்டும் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ உடனான என் நனைவு. இரண்டாவது வாசிப்பைத் தொடங்கினேன். என்னை அதனுள் மூழ்கவிடாமல் தடுத்த வேலிகளை நான் பிரிக்கும் முயற்சியில் இறங்கினேன். இந்த வேலி அவ்வளவு பலவீனமானதல்ல. எனது சந்ததிக் கவிதைகள் மெல்லமெல்ல ஏற்றிவைத்த படிமங்களின் வேலி அது.

இங்கு அடுத்த சந்ததியின் கவிதை முற்றத்தை அடையும் முயற்சியில் நான். சிறுகதை, நாவல் என புதிய உத்வேகங்களோடு போர்ப்பட்ட நினைவுகளிலிருந்து – நாட்டிலும் புகலிடத்திலும்- வரும் எழுத்துக்கள் அண்மைக் காலமாக வாசிப்பைத் தூண்டியிருக்கிறது. இங்கே மயூ மனோவின் கவிதையுடன் நான். புகலிட இலக்கியத்தின் அடுத்த சந்ததி எழுத்துக்களில் ஒன்றாக வந்து விழுகின்றன மயூவின் கவிதை வரிகள்.

என் சிசுவொன்றழிந்து
கழியும் குருதியைவிட
பிரசவ சீழின்
வெடுக்கு நாற்றத்தைவிட
கேவலமாய் மணக்கிறீர்கள்
அதனால் உங்கள் எல்லைக்குள்ளிருந்தே
சொல்லித் தாருங்கள்

என்றவள் விட்டாளா… அறிவிக்கிறாள்,

உண்மையான இரவின் இருட்டு
உங்களைக் கொல்வதுபோல்
உங்கள் போலிப் பகல் வெளிச்சம்
பயமுறுத்துகிறது என்னை. ( மழைக்குப் பின்னதான இரவு)

என்கிறாள்.

மழை. வரண்ட பிரதேசமொன்று மழையின் பசுமையை, அழகை, எதிர்பார்ப்பை, வாழ்வாதாரத்தை எல்லாம் அள்ளிவரும் வல்லமை மழைக்கு இருப்பதாக எமக்கு சொல்லித் தந்தது. அதன் நீர்க்கோடுகளாலான பார்வைப்புலத் துண்டிப்பை உயிர்கொள்ளும் ஓவியமாய் வரைந்து வரைந்து ஈரலித்துப் போய்விடும் மனசு. மழையை நாம் காதலித்தோம், இங்கு வந்த பின்னரும்கூட. இந்த நாட்டவரிடம் வெயில் மீதான காதல் அதிகம். மழையை வெறுக்கவும்கூட செய்கிறார்கள். பனிகொட்டுவதும் எப்போதும் ஈரலிப்பான பூமியாய் இருப்பதும் மழை மீதான நாட்டத்தை நாம் கொண்டாடுமளவுக்கு அவர்கள் இல்லை. நான் அவர்களுடன் இப்போதும் சண்டை பிடிப்பேன். பனித்திரளோ வெயிலோ உயிர்ப்புள்ள காலநிலை இல்லை என்பேன். மழை பார்ப்பதற்கு மட்டுமல்ல காதால் ஓசையைக் கேட்பதற்கு மட்டுமல்ல, இடி மின்னல், வானவில் என அது இயக்கமுறுவதும் பற்றிச் சொல்வேன். மழையில் நனைந்தால் களைப்பும் சோர்வும்கூட பறந்துவிடுகிறது என்பேன். நரம்புகள் சிலிர்ப்பதையும் உணரலாம் என்பேன். அவர்கள் “நீ நோர்மலான ஆள் இல்லை“ என்பார்கள்.

நேற்றைய தினமும் மழை பெய்வதற்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்த வேளையில் நான் மரமொன்றின் கீழிருந்த வாங்கிலில் உட்கார்ந்திருந்தேன். கையில் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ இருந்தது. கவிஞையுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆயத்தமில்லாமல் இருக்கவில்லை
இருந்தும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டு
சுற்றிப் பெய்த மழையை
பிராக்குப் பார்த்தபடியிருந்தேன்
அது தூவான முத்தங்களை
யன்னல் கம்பிகளில் பதித்தது
தொடர்பற்றுப்போன துளிகளைத் தேடி
துமித்துக்கொண்டிருக்கிறது வானம்

என்றவள் தொடர்ந்தாள்,

இன்னும் விட்டுவிட்டு
இடிகளில் முரசறைந்து
மின்னல்கள் புலப்படவில்லை.(மழைக்குப் பின்னதான இரவு)

தொடர்பற்றுப் போன துளிகளைத் தேடி
துமித்துக் கொண்டிருக்கிறது வானம்

எஞ்சிய வர்ணங்களையும் கட்டிக்கொண்டு
சுருளத் தொடங்கியிருக்கிறது வானவில்

 என்பதன் கற்பனைத்தளம் மட்டுமல்ல படிமமும் ஆழப் புதைகிறது. “வழுவிய கவிதை“ என்ற கவிதையில் மழையை ‘மார்கழிப் பனிக்குடம்| என சொல்லாடுகிறாள்.

 மார்கழிப் பனிக்குடத்தை
தாங்கியும் தாங்காதும்
நாணல் படும் அவஸ்தையை
அள்ளிக் கொண்டது மனது

என காதல் அவஸ்தையை பாடுகிறாள்

தனிமை, வெறுமை, காதல், பெண்ணுடலின் உணர்ச்சிகள் எல்லாமே ஒரு மனிதஜீவி என்ற நிலையிலிருந்து பேசப்படுகின்றன. பெண் மீதான ஆண்நோக்குநிலையிலிருந்து அவை பேசப்படவில்லை. காதலை புனிதமாக்கி அதை உணர்வோடு மட்டும் சம்பந்தப்படுத்தி, அதில் பாலியல் விருப்பின் இயல்பான தேவையின் பாத்திரத்தை கவிஞை மறுப்பதாயில்லை.

மூலையில் சிலந்தி
நெய்தலில் இருந்தது
எறும்புகள் இரண்டு
காதலைப் பேசின. 

யன்னலின் கம்பிகள்
நகர்ந்ததாகப்பட்டது
தென்றலின் ஸ்பரிசத்தில்
விலகியது சேலை. (- நிசப்த மையம்)
அன்பே
நாளை என்பதற்குத் தேவையான
என் சுதந்திரங்களின் நீளங்களை
அடிகளால், சாண்களால், முழங்களால்
எதனால் அளந்து முடித்தாய்?
அவற்றை நான் எதற்குள் போட்டுக் கொள்ளட்டும்? (- சாணும் முழமும் அடியும்)

டிமங்கள், சொற்தேர்வு எல்லாம் இன்னொரு சந்ததியின் கவிவரைவை எமக்குக் காட்டிநிற்கின்றன. சூரியனை விடிவின் படிமமாகக் கண்டு பழகிய வாசிப்புக்கு “சூரியனின் தற்கொலை” என்ற கவிதையினூடு முரண்படிமங்களைதரிசிக்க நேர்கிறது.

அடர் மரக்காடுகளின்
இடையிடையே கிழித்து
விழுந்தும் குதித்தும்
தற்கொலை முயற்சியில்
இருக்கிறான் சூரியன்

காற்று வெளியிடையில்
கசியும் ஈரத்தையும்
அந்திமாலை நனைத்த
அரைகுறை மழையின்
மிஞ்சிய சூட்டையும்
உடலெங்கும் அப்பியபடி
நகர்கிறது பாம்பு

ஆண்பார்வை பெண்ணுடலை பெண்களின் இயல்பான உணர்ச்சிகளிலிருந்து பிரித்தெடுத்து விடுகிறது. அந்த உடல் தனது அனுபவிப்புக்கானதென அதன்மீது தன் உணர்ச்சிகளை பரப்புகிறது. இங்கு தன்னைப்போலவே ஒரு உணர்ச்சியுள்ள மனிதஜீவி என்பதை இந்த ஆண்நோக்கு சமனாய் இருத்த அனுமதிப்பதில்லை. உயிரினத்தின் படைப்பாக்கம் என்பதில்கூட பெண்ணுடலுடன் மட்டுமே சம்பந்தப்படுத்துவதன் மூலம் ஒழுக்கம், உரிமை, கற்பு போன்ற கருத்தாக்கங்களை பெண்மீது சுமத்திவிடுகிறது. அதாவது கட்டுப்படுத்துகிறது.

இதை உடைத்துக் கொண்டு பெண்ணிய எழுத்துகள்கள் குறிப்பாக தமிழகத்திலும் புகலிடத்திலும் வெளிவந்தபோது பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறது. தமது உடலை அவர்கள் கொண்டாடவும் தமக்கான மொழியில் பேசவும், தமது இயல்பான உணர்ச்சிகளை உணர்வுகளை தாமே சொல்லவும் அதற்கான மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கவும் செய்தார்கள்.

மயூவுக்கு புகலிடத்தின் தமிழ்ச்சூழலிலும் இந்த நாட்டுச் சூழலிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவரின் கவிப்பொருள் அதற்குள் செல்ல எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. அவர் தமிழ்ச் சூழலுக்கு வெளியே வந்து சொல்வது தவிர்க்க முடியாததாகிறது. “கண்ணில்லாக் கண்ணாடி” என்ற தனது கவிதையில் அவள் கண்ணாடி முன் வருகிறாள். கண்ணாடிக்கு கண்கள் முளைக்கிறது. அவள் எதிர்பார்த்ததை விடவும் அது அகோரமாகத் தெரிந்தது. அவள் அழகாகத் தெரிந்தாள். தனது உணர்ச்சிகளை, தன் உடல்மீதான நேசிப்பை படிமமாக கண்ணாடியினூடு வரைந்து செல்கிறாள்.

பொலபொலவென உதிர்ந்த
புற உடம்மை அள்ளி
பொட்டலங் கட்டி எடுத்து
என் முன்னே கடைபரப்பியது கண்ணாடி

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
தின்றுகொண்டே
கண்ணாடி பார்த்தது
நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவி;லை
அதற்கு
இப்போது எனக்கும்..!

இத் தொகுப்பின் “இயல்பாயிருத்தல்” என்ற கவிதை ஒரு வரியைத் தன்னும் தனியாகப் பிரித்து எழுதிவிட முடியாதபடி உடல், உணர்ச்சி சார்ந்து பேசுகிறது.மரணம் பற்றிப் பேசுகிறாள் அவள். “தூங்குவது போலவும் சாக்காடு” என அறிவிக்கிறாள் இன்றைய சூழலை. சிறுவயதில் நாட்டைவிட்டு மரணபயம் துரத்திய நினைவுகளையும் அவள் எடுத்துவந்திருக்கக்கூடும். அதன் எம்பலில் வரும் சொற்கள் அவள் பிறந்து பின் அளைந்து விளையாடிய மண்சார்ந்து மணக்கிறது. மரணம் சார்ந்தும் மணக்கிறது.

சாம்பல் கோடிட்ட நெற்றியில்
எலும்பொன்றின் தூசு
நாசியில் நிறையும்
மரணவாசனை
….
என் வாழ்நாளில் ஒரு எறும்பை
கொல்லாது விட்டிருக்கிறேன்
சொர்க்கத்தின் பொருட்டு
என்ன இருந்தும் என்ன
நேற்றைய இரவின் சவப்பெட்டி ஆணி
இறுக்கமாயிருந்திருக்கவில்லை.

பிறந்த மண்ணுக்கும் புகலிடத்துக்கும் இடையில் அல்லாடுகிறது “பனியில் விளையும் உடற்பொருக்குகள்” என்ற கவிதை.

பனிச் சகதியுள் உறையும் என்னுடல்

எந்த நூற்றாண்டின்

எத்தனையாவது கூர்ப்பின் சான்றாகும்?

உனக்குத் தெரியாதென்கிறாயா?

தொலைத்த தெருவும்

தொலைத்த மண்ணும்

எனக்கே தெரியாது போனபின்

தொலைந்துகொண்டிருக்கும் உயிரின் சாறு

என்ன நிறத்தில் இருந்தால்

எனக்கென்ன?

இந்த இரண்டாவது சந்ததியின் மனவுணர்வு என்பது புகலிட இலக்கியங்களில் நிறைய வெளிக்கொணரப்பட வேண்டும். தாய் மொழி, தாய் நாடு, தாய் மண் என்ற கருத்தாக்கம் பற்றியெல்லாம் அவர்களின் சுயமான கருத்துகள் வெளியில் வரவேண்டும். இதற்கு புலிகள்பாணி தமிழ்த் தேசிய அரசியல் விடைதராது. அதேநேரம் இலங்கையில் பிறக்காமலேயே தமிழ் அரசியலே என்னவென தெரியாத பிள்ளைகளே தமது அடையாளத்தை இலங்கையுடன் சேர்த்துப் பார்க்க முனைவதை நாம் காண்கிறோம். அவர்கள் இலங்கையில் சென்று இருக்க தயாராக இல்லாதபோதும், தமிழை எழுத வாசிக்கத் தெரியாத போதும்கூட இது நிகழ்கிறது. இந்த நாட்டின் நிறவெறிப் பாதிப்புகள், கூட்டுக் கலாச்சாரவுணர்வின்மை என்பன காரணமாக இருக்கலாம். இதற்கான விளக்கத்தை தாய்மண் அல்லது (மறுதலையாக) கற்பிதம் என்ற ஒற்றைச் சொல்லாடல்களால் இலகுவாகக் கடந்துவிட முடியுமா?

சிறுமியின் நாட்குறிப்பேட்டின்

அந்நிய மொழி பெயர்ப்பில்

தவறவிடப்பட்ட மென்னுணர்வுகள் போல்..

என்ற ஒரு வரி “வாழ்தலில்” என்ற கவிதையில் வந்து விழுவதை மேற்சொன்ன விடயத்தில் எதிரொலியாகக் கொள்ளலாம். தாய்மொழி எது? அந்நிய மொழி எது? சிந்தனா மொழி எது? தொடர்பாடல் மொழி எது? என்பதெல்லாம் விரிவான தளத்தில் பேசப்பட வேண்டியவை.

புகலிட இலக்கியம் ‘முத்தல்’ எழுத்துகளோடும் விளக்கங்களோடும் தொடர வாய்ப்பில்லை என எண்ணத் தோன்றுகிறது. பொதுப்புத்தியின் குப்பைகளோடு நல்லனவற்றையும் சேர்த்தே புரட்டிப்போடும் ‘ஒற்றை மாற்றுச் சிந்தனை’ முறைமைக்கு இரண்டாம் சந்ததி பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு பின்நவீனத்துவ அரைகுறை விளக்கங்களை தாண்டிப்போக முடியவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் தமிழ்த் தேசிய வெறியை இரண்டாம் சந்ததிக்கும் ஊட்டிவிட்டார்கள் என புதிய சந்ததிகளின் தனித்துவங்களை தங்கள் அகப்பையால் சிலாவிக்கொள்வார்கள்.

புகலிட இலக்கியத்தின் எதிர்கால வடிவம் எப்படி இருக்கப் போகிறது? அல்லது அது இறந்துவிடப் போகிற ஒன்றா? என்ற கேள்விகளுக்க இனிவரும் சந்ததியிடமே விடை கிடைக்கும். அது தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகளினூடும் வடிவம் கொள்ள சாத்தியம் உண்டா? வேற்று இலக்கியங்களின் பாதிப்புகளோடு அல்லது உள்வாங்கல்களோடு அதன் உள்ளடக்கம் வடிவம் கொள்ளுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு ‘முத்தல்’ விளக்கங்களில் இடமிருப்பதாக சொல்ல முடியுதில்லை. மயூவின் கவிதைகள் இதற்கான முகப்பை மட்டுமே வழங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இதற்குள் ஊடுருவும் படைப்புகளை அவரிடமிருந்து நாம் தரிசிக்கலாம் என நம்புகிறேன்.

இயற்கையை உதாரணிக்காமல் அதை உள்வாங்கியபடி கூட்டுச் சொல்லாடல்களால் அதை வரிகளுக்குள் புகுத்தியதில் ஈழக் கவிதைகள் தனித்துவம் பெற்றதாய் இருந்தது. (இப்போ தமிழகக் கவிதைகளிலும் இது தொற்றிக்கொண்டுவிட்டது.) மனித வாழ்வு இயற்கையோடு பிணைந்ததால், அதாவது மனிதஜீவியும் ஓர் இயற்கைதான் என்றளவில் இந்த உத்தி கவிதைக்குள் அற்புதமான படிமங்களை வெளிப்படுத்தியது. மயூவின் கவிதைகளிலும் இதை செறிவாகக் காணலாம். இன்னமும் சொல்வதானால் படிமங்களின் சிற்பத்தன்மையாய் அவரின் பல கவிதைகள் அமைந்துள்ளன என்பேன். சொற்செறிவாலும் வெளிப்பாட்டுத் தன்மையாலும் அவை மெருகூட்டப்படுகின்றன.

முகில்கள் திரட்சிகொண்டன. ஊடுருவியதும் ஊடுருவித் தோற்றதுமான எனது பார்வையை மூடிக்கொள்கிறேன் நான். வாசிப்பு நனைந்துபோயிருந்தது. மழை வானத்திலிருந்து தூறத் தொடங்குகிறது. அவள் தன் “இரவு (வில்) எழுதிய நாட்குறிப்பு” இனை வாசிக்கத் தொடங்குகிறாள்.

துளிர்த்து ஊத்தும் வானத்தின் முடிவை நோக்கி விரிகிறது கனவு
விழிகளில்.
வெளியில்
மார்பில் அடித்துப் பெய்து கொண்டிருக்கிறது மழை..!
என் பிரியங்களை சொல்லிக்கொண்டிருக்கிறேன் மழைக்கு..!

என்றபடி அவள் எழுந்துசெல்கிறாள். புத்தகத்தை நான் மூடிக்கொள்கிறேன். போகும்போது அவள் என்னை எனக்கே ஞாபகப்படுத்திவிட்டுப் போய்விடுகிறாள்.

என் ஒரு நாள்

ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
என் அறையின் குப்பைத் தொட்டி

நேற்றையதுகளில் புதைந்த
இன்றையதுகளுக்கான மனதை
தேடித் தொலைத்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்

தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி

அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்தநாள்..!

நூல்: நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை கவிஞை:

மயூ மனோ முதற் பதிப்பு மே2011 வெளியீடு:

வடலி (றறற.எயனயடல.உழஅ)

தொடர்புகளுக்கு: தமிழ்நாடு

0091 97892 34295 கனடா 001 64789 63036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *