அரவக்கோன்(நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…)
பெண்ணியமும் தற்பால் சேர்க்கையும்
ஓவிய உலகில் பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அல்லது Gay Liberation என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் ஓரின வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெரும்பாலான பெண் கலைஞர்கள் தங்களை அது சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மேலை நாடுகளில் தெரிந்து எடுக்கப்பட்ட தீர்மானமான முடிவுதானென்றாலும், தொடக்கத்தில் அவர்கள் தங்களுடைய பெண்மை, பாலியல் தொடர்பான வெளிப்பாடுகள் போன்றவற்றைப் பற்றி நேரடியாகச் சொல்லாமல் பெண்ணிய சிந்தனை வெளிப்பாட்டின் மூலமாகவே தங்களது படைப்புகளில் வெளிப்படுத்தி வந்தார்கள். ஆயின், ஆண் கலைஞர்களோ தயக்கமேதுமின்றித் தங்கள் ஓரினச் சேர்க்கை சார்ந்த எண்ணங்களையும், கோட்பாடுகளையும் வெளிப்படையாகத் தங்கள் படைப்புகளில் இடம்பெறச் செய்தனர்.
முன்னேறிய நாடுகளில் 1970-களின் தொடக்கத்திலிருந்து தற்கால ஓவிய உலகில் நிகழ்ந்த மாற்றங்களில் வீரியமுள்ள சக்தியாகப் பெண்ணியவாதம் இருந்தது. அமெரிக்க ஓவிய உலகில் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும்,இதனுடன் முரண்படும் விவாதங்களும் நிறைய இருந்தன. 1970 களிலும், பின்னும், அறிவுஜீவிகளான சில ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடிக் கலைஞர்கள் தங்களுணர்வுகளை வெளிப்படையாகப் படைப்பதற்கான கருத்துகளையும், ஆலோசனகளையும் வழங்கினர். இவ்வகைப் படைப்புகள் இதற்கு முன் வந்ததில்லையெனலாம். ஏனெனில், இந்த மாதிரியான வாழ்க்கைமுறை சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் இவ்வகை அமைப்பு ஒழுக்கக்கேடானது என்ற மனோபாவமும் மேலோங்கியிருந்தது. எனவே இவர்கள் ஒரு குற்றவுணர்வுடன் தம் விருப்பை மறைத்துக்கொண்ட வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர்.
எழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச்சமின்றி வெளிப்படுத்திக்கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980-களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்பு வெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் எய்ட்ஸ் (AIDS) என்னும் ஆட்கொல்லி நோய். ஓரினச்சேர்க்கை சார்ந்தவரிடமிருந்தே இந்நோய் பரவுகிறது என்பதாகக் கருதப்பட்டு, இந்த வகை வாழ்க்கை முறையைத் தடைசெய்யும் வகையில் குறுக்கீடும் தொடர்ந்தது. அதன் காரணமாக, இக் கலைஞர்களின் படைப்புக்கரு படைப்புத்தளத்திலிருந்து விலகி வேறு தளத்திற்குச் சென்று விட்டது. எனவே, இவ்வகை ஓரினச் சேர்க்கை எனப்படுவது பாலியல் சுதந்திரம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டதா, அல்லது எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் பரப்பும் ஒழுங்கீனமா என்னும் குழப்ப நிலையை உருவாக்கியது.
பெண்ணியவாத ஓவியர்களுக்கு ஓவியம் படைப்பதில் மரபுரீதியான முறைகள் சலிப்பையும் தொய்வையும் ஏற்படுத்துவதாக இருந்தன. கித்தானில் வண்ணம் சேர்ப்பது, முன்மாதிரிகளையே கையாள்வது போன்றவை அலுப்பைக் கொடுத்தன. பல பெண்ணிய ஓவியர்கள் வீடியோ என்னும் உத்தியைத் தங்களது படைப்புக்குதவும் சாதனமாகத் தேர்ந்தெடுத்தனர். ’நிகழ்த்துதலை’ (Installation/ performance) அடிப்படையாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பதிவு செய்தனர். அவர்கள் அழகியலை நிராகரித்தனர். வரலாற்றில் பெண்களை சித்தரித்தது பற்றியும், இன்றைய உலகில் பெண்களின் நிலை பற்றியும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். இவ்வகை அணுகல் அவர்களுக்குத் தங்கள் படைப்பாற்றலை எடுத்துச் செல்லச் திறந்த ஒரு புதுக் கதவாகத் தென்பட்டது.
1980-களில் இப் படைப்பாளிகளின் படைப்புகளில் எய்ட்ஸ் பற்றின தாக்கம் பெரிதும் காணப்பட்டது. பாலியல் சுதந்திரம் என்னும் சிந்தனை பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்நோய் தொடர்பான செய்திகளே கருப்பொருளாயின. அவற்றில் நோய் பற்றின அவர்களது அச்சமும் வெளிப்பட்டது. “எய்ட்ஸ் ஆர்டிஸ்ட்ஸ்’”என்று அறியப்பட்ட ஓவியர்களின் படைப்புகளின் கருப்பொருளாகவே இது அமைந்தது. பொதுவாக, பெண்களை ஆண்கள் ஓவியம்/சிற்பம் இரண்டிலும் கவர்ச்சிப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ மட்டும்தான் கண்டு வந்திருக்கின்றனர். ஆனால், எழுபதுகளின் தொடக்கத்தில் பெண்ணியவாதம் ஓவியம்-சிற்பம் மூலம் வெளிப்படவும், பெண்களைப் பற்றிய கலை வெளிப்பாட்டில் மாற்றுச் சிந்தனை எழுந்தது.
அப்போது இன்னொரு வகைச் சிந்தனையும் கலையுலகில் தோன்றியது. அதுதான் ’பெண்களின் பார்வையில்’ உடலுறவு என்பதாகும். அதை அவர்கள் போற்றினார்கள். புராணங்களில் அல்லது வரலாற்றில் முன்னரே கூறப்பட்ட பெண்களைத் தங்கள் படைப்பின் கருப்பொருளாக எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தற்கால வடிவம் தந்தனர். பெண்ணிய ஓவியம் என்பது மரபான வரலாறு சார்ந்ததாக இல்லாமல் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இடம் என்பது பற்றியதாகவே இருந்தது. மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் ’தனக்கும்’ ’தனதுடலுக்கும்’ உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றில் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப்பொருள் என்பன போன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண் ஆணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.
ஓவிய உலகில் இன்றைய நாளில் ஓரினச்சேர்க்கை/பெண்ணியவாதம் என்னும் வாழ்க்கை முறையைப் பின்பற்றிய இவ்வகைக் கலைஞர்களில் (பெண்) சிலரையும் அவர்களது படைப்புகளையும் பற்றி இனி பார்க்கலாம்.
ஜூடி சிகாகோ (JUDY CHICAGO)
பிறப்பு: சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா- (1939- )
சிற்பி/ ஓவியர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் பெண்ணியவாதி என்பதாகப் பலதளங்களில் இயங்கியவர். 1979 இல் இவர் படைத்த “THE DINNER PARTY” என்னும் தலைப்பு கொண்ட சிற்பம் இவருக்குப் பெரும் புகழீட்டியது. ‘வடிவமைத்து நிறுவுதல்’ (Instalation) என்னும் உத்தியில் படைக்கப்பட்டது அது.
48 அடிகள் கொண்ட சமபக்க முக்கோண வடிவமுள்ள ஒரு மேடை. அது திறந்த வெளியிலமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது வரிசையாக 39 பீங்கான் தட்டுகள் முப்புறமும் உள்ளன. அவற்றில் நேரடியாகவும் பூடகமாகவும் வடிவமைக்கப்பட்ட பெண்குறி, பெண்களின் உடலுறவு தொடர்பான உறுப்புகள் சிற்பங்களாக பரிமாறப் பட்டுள்ளன. பார்வையாளர் அந்த முக்கோணவடிவச் சிற்பத்தைச் சுற்றிவந்து தட்டுகளில் உள்ள சிற்பங்களில் உள்ள கலை நயத்தைக் காணும் விதமாய் உள்ளது. அந்த 39 பீங்கான் தட்டுகள் வரலாற்றிலும், கலைத்துறைகளிலும் சிறப்புறப் பங்களித்தும் இருட்டடிக்கப்பட்ட முப்பத்து ஒன்பது பெண்களுக்கான உணவாகப் படைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயரும் இணைக்கப் பட்டுள்ளன இவை ஏசுவுக்குப் படையலாக அளிக்கப்பட்ட உணவின் பிரசாதமாக வினியோகிக்கப் பட்டதாக சிற்பி குறிப்பிடுகிறார். உடலுறவைப் பெண்களின் பார்வையில் கொண்டாடும் விதமாகவும் கூட இச்சிற்பம் அமைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
லுயீஸ் பூர்ஷுவா (LOUISE BOURGEOIS)
சிற்பி/ பிறப்பு: பாரிஸ்; காலம் (25-12-1911 – 31-5-2010)
மற்ற பெண்ணியவாத கலைஞர்களிலிருந்து இவர் மாறுபட்டு இருந்தார். தனது படைப்புகளில் பெண்ணியம் பற்றிப் பூடகமாக வெளிப்படுத்தினார். உடல் உறுப்புகளில் முக்கியமாகக் கருதப்படுபவை ஆனால், வெளிப்புறத் தோற்றத்துக்குத் தென்படாத இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை போன்றவை அவரது படைப்புகளில் கருப்பொருளாக விளங்கின. இவரது படைப்புகள் காண்போரை – குறிப்பாக ஆண்களை – அச்சுறுத்துவதாக விளங்கின. ஏனெனில், இவரது பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஆண்களின் அணுகு முறையினின்றும் வேறுபட்டு இருந்தன. பாலுறவு என்பது காலங்காலமாக ஆண்களின் பார்வை சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இனி அவர்களின் இடையூறு இல்லாத பாலியல் எண்ணங்களைப் பெண்கள் வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்பினார்.
பள்ளி நாட்களில் தனது ஆங்கில ஆசிரியையாகவும் தனது செவிலியராகவும் பணி புரிந்த பெண்ணுடன் தந்தைக்கு இருந்த தொடர்பு தெரிந்து தந்தையை வெறுக்கத் தொடங்கினார். 1990களில் சிலந்திப்பூச்சி அவரது படைப்புகளில் முதன்மைப்படுத்தப்பட்டது. ‘MAMAN’ என்னும் தலைப்பிடப்பட்ட சிற்பம் அளவில் பெரியது. எஃகு, பளிங்குக்கல் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் உயரம் ஒன்பது மீட்டருக்கும் மேலேயிருக்கும். திறந்த வெளியில் அமையப்பெற்ற அதன் கால்களின் ஊடே நடந்துசென்று மக்கள் சிற்பத்தை கண்டு மகிழ்ந்தனர். அவரையே ‘சிலந்திப் பெண்’ (SPIDER WOMAN) என்றும் குறிப்பிட்டு சிறப்பித்தனர். தனது தாயின் அரவணைப்பது, காப்பது, நூட்பது, நெய்வது போன்ற உயர் பண்புகளின் குறியீடுதான் சிலந்தி என்கிறார் சிற்பி. Tapestry எனப்படும் துணியில் படைக்கும் வடிவங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிப்பதுதான் அவரது தந்தை செய்து வந்த பணி.
தமது எழுபது வயதுவரை பரவலாக அறியப்படாத இவர், “உன்னைப்பற்றிக் கூறு; பிறர் சுவையாக உணர்வர். பணமும் புகழும் கண்டு முட்டாளாகாதே. உனக்கும் படைப்புக்கும் இடையே எதையும் நுழைய அனுமதியாதே” என்று இளம் படைப்பாளிகளுக்குக் கூறுகிறார். ‘என் படைப்பைக் கண்டு பிறர் கவலையும் கலக்கமும் பெறுவதையே நான் விரும்புகிறேன்’ என்றும் ஒரு பேட்டியில் சொல்கிறார்.
அந்த வரிசையில் மேலும் இருவர்:
மேரி கெல்லி (MARY KELLY)
ஓவியர்/ பிறப்பு-ஐக்கிய அமெரிக்கா-1941
பெண்ணியவாதியான ஓவியரான இவர் 1973-79 களில் ‘POST-PARTUM DOCU-MENT’ (தாய் எதிர்கொள்ளும் குழந்தைப் பேற்றிற்கு பிற்பட்ட காலம் பற்றிய பதிவு) என்னும் பொருளில் தனது உணர்வுகளைப் படைப்புகளில் பதிவு செய்தார்.
ஒரு தாயாகத் தனக்கு மகனிடம் ஏற்பட்ட உறவை அவனைப் பெற்ற நாளிலிருந்து படிப்படியாகப் பதிவு செய்துகொண்டே வருகிறார். மகன் வளர்ந்த பிறகு சமுதாயமும் கலாசாரமும் எவ்வாறு தாயிடமிருந்து மகனைப் பிரித்துவிடுகிறது என்பதை வலியுறுத்தி உரத்துச் சொல்லும் படைப்புகள் இவை. இந்தப் படைப்புகள் அனைத்துமே இவரால் ஒழுங்கற்ற சிறிய கித்தான்களில் பழமைத் தோற்றம் கொண்ட எழுத்து வடிவில் படைக்கப்பட்டுள்ளன.
இவை பற்றி அமெரிக்க கலைத் திறனாய்வாளர் Lucy R.Lippard என்பவர் “இவை ஒரு கலாச்சாரக் கடத்தலின் பதிவுகள்” என்கிறார். மேலும், “காட்சி மூலமாகவும், மொழி மூலமாகவும் ஒரு பெண் தனது எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்துள்ளார்” என்றும் சிறப்பிக்கிறார்.
இவர் ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்
பார்பரா க்ரூகர் (BARBARA KRUGER)
பிறப்பு: ஐக்கிய அமெரிக்கா -1945
இவரும் தனது பெண்ணியவாதக் கருத்துக்களை எழுத்துவடிவம், புகைப்படம், குறும் படம், அச்சுக்கலை, போன்றவவை நிரவிய உத்திகொண்டு வெளிக்கொணர்கிறார். இவை ‘வடிவமைத்து நிறுவுதல்’ (Instalation) என்னும் உத்தியில் அமைந்துள்ளன. காட்சிக் கூடத்தில் பெரிய அரங்கில் மேற்கூரை, சுற்றுச்சுவர், தரை என்று எங்கும் பூதாகாரமான கண்களைப் பறிக்கும் வண்ணங்கள் கொண்டு காண்பவர் அதனுள் புதையும்படி சொற்தொடர்களைக் கொண்ட படைப்புகளை ஓவியர் அமைத்துள்ளார். வாழ்வு பற்றிய வினாக்கள், அச்சுறுத்தும் சமூகக் கட்டமைப்பு, பாலியல் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை பற்றின மறு ஆய்வு போன்றவை அவற்றில் சில. ருஷ்யப் புரட்சியின்போது புரட்சியாளர் பயன்படுத்திய AGITPROP (agitation and propaganda) என்னும் சுவரொட்டி உத்தியால் கவரப்பட்டு அதையே தனது வெளிப்பாட்டுத் தளமாகக் கொண்டுள்ளார்.
“சொற்களுடனும் படங்களுடனும் படைப்பது ‘நாம் யார், நாம் யாரில்லை’ என்பதை முடிவு செய்கின்றன” என்று தனது படைப்பு உத்தி பற்றி இவர் விளக்கமளிக்கிறார். அவரது படைப்புகளில் “I shop because I am” “Your body is a battle-ground” போன்ற அச்சடிக்கப்பட்ட சொற்கோர்வைகள் மையப்படுத்தப்பட்டு பளீரிடும் வண்ணத்தில் இடம் பெறுகின்றன. அவை பெண்ணியவாதம், நுகர்வோர்வாதம் (Consumerism) பற்றிய தாக்கங்களைக் காண்போரிடம் தோற்றுவிப்பதாக உள்ளன. கருப்பு, வெளுப்பு, சிவப்பு நிறங்கள் மட்டுமே கொண்டவை அவை. வரைதல் என்பது அங்கு இல்லை. வெட்டி ஒட்டுதல், ஒருங்கிணைத்தல் மட்டுமே உள்ளன.
இவர் படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
பார்பரா ப்ளூம் (BARBARA BLOOM)
பிறப்பு- ஐக்கிய அமெரிக்கா/ 1951-
இந்த ஓவியருக்குப் பெண்ணியவாதப் படைப்பாளிகளில் ஒருவராக அங்கீகாரம் கிடைத்ததே தற்செயலான ஒரு நிகழ்வுதான் எனக் கூறலாம். இவரது படைப்புகள் எப்போதுமே பூடகத்தன்மை கொண்டவையாகவேயிருக்கும். ஏனெனில், பெண்ணியம் பேசும் படைப்புகளில் தீவிரமான அழுத்தத்துடன் கூடிய, போர்க்குணம் கொண்ட அணுகுமுறை தேவையில்லை என்பது இவரின் கருத்து.
“THE REIGN OF NARCISSIM” (படைத்த ஆண்டு 1989) என்பது இவரது ஒரு படைப்பின் தலைப்பு. தமிழில் இதை ‘சுய உடலை மோகித்தலின் ஆட்சி’ என்று சொல்லலாம். இங்கு ஓவியர் ஒரு கண்ணாடியின் முன்பு உடையின்றி நிற்கிறார். ஆடியில் தெரியும் தனதுடலைக் கண்டு அதில் லயித்து, அதை மோகித்து அனைத்தும் மறந்த நிலையில் இருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களிலும் ஏதாவது ஒரு வகையில் அவரைப் பிரதிபலிக்கும் விதமாக ஓவியம் உள்ளது. இதில் ஒருவித ஏளனமும் உள்ளது. இவருடைய உருவத்தின் இருபுறமும் கிரேக்க பாணியில் வடிவமைக்கப்பட்ட தூண்கள். அவற்றின் மேல் இவரது முகம் சிலாரூபமாக, நகையலங்காரங்களுடன் காணப்படுகிறது. விரவியுள்ள மேசை, நாற்காலிகள் எல்லாம் 16ஆம் லூயி மன்னன் பயன்படுத்தியது போன்றவை. மேஜை விரிப்பின்மீது ஓவியரின் கையெழுத்திடப்பட்ட தாள்கள், அவரது ஜாதகக்குறிப்புக் காகிதம், பல்லின் xRay புகைப்படம் போன்றவை பரப்பி வைக்கப் பட்டுள்ளன. அங்கு காணப்படும் சாக்லேட் பெட்டியின் மீதுகூட ஓவியரின் பக்கவாட்டு முகம் கருமை நிறத்தில் உள்ளது. அவருக்குப் பரவலாகப் புகழீட்டித்தந்த படைப்பு இது.