தகவல் நண்பர்கள்
வெறித்த பார்வையோடு புதைத்த சோகத்தின் நிழல் மேற்கிளம்ப படுத்திருக்கும் இவர்தான் கவிஞர் மஜீத் அவர்கள். கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீராத இருதய நோயுடன் போராடிக்கொண்டே தொடர் வறுமைக்குள் சுழன்று கொண்டும் கனதியான பல கவிதைகளை நூலாகவும் உதிரிகளாகவும் தந்த (ஏறு வெயில், இலையின் மரணம், கள்ளிச்சொட்டும் செம்புடையனும், மஜீத்தின் கவிதைகள்) ஈழத்தின் முக்கியமான ஒரு கவிஞன். இன்று வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டு இனி வாழ்வதாயின் (Dual Pace maker) என்னும் இயந்திரம் மிக விரைவில் பொருத்தியே ஆக வேண்டும் என்று மருத்துவர்களால் தகவல் விடுக்கப்பட்ட ஒரு அபாக்கியவான். அதை பொருத்துவதற்கு இலங்கை நாணயப்படி 530000/= தேவைப்படுவதனால் உயிர் மறுக மறுக நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் உதவி கோரி நிற்கின்றார். ஒரு உன்னதமான கவிஞன் உயிர்வாழ கரம் கொடுங்கள் தோழர்களே.
Name: ABDUL MAJEED ATHAMKANDU
A/C No: 063200180022795
Bank : Peoples Bank
Branch : Akkaraippattu (Sri lanka)
மஜீத்தின் கவிதையொன்று
ஒரு இலையின் மரணம்
வயதைக் கணிக்க முடியாத
அந்த மரத்திலிருந்து ஒரு இலை
காற்றை விலக்கிக்கொண்டு நிலத்தில் விழுகின்றது
மரத்தடியில் கால் நீட்டி நான் அமர்கின்றேன்
அந்த இலை முதுமையடைந்திருந்தது
பழுக்கவுமில்லை
கிளையில் ஒட்டியிருக்கும்போது
உற்றுக்கவனிக்காத இலைதான்
இன்று எனது முழுக்கவனத்தையும் தின்றது.
அங்கு இடையிடையே வீசும் காற்றில்
ஒத்திவிடப்பட்டு தாவி
நிலத்தில் உரசி நகர்கிறது
கிளையில் இருக்கும்போது
நிலத்தில் விழாது காத்த கடைசி மழைத்துளியை
இன் நேரங்களில் நினைவு கூரலாம்.
அவ்விலையை கிளையுடன் இணைக்கும்
சாத்தியங்களை எழுதுகிறேன்
இலையை பொறுக்கிய எனது மனைவி
குப்பையில் போட்டுவிட்டு செல்கின்றாள்
வயதைக் கணிக்க முடியாத அம்மரத்திலிருந்து
இன்னுமொரு இலை என் நெஞ்சில் விழுகிறது
மறு நாள் காலையில் பார்க்கிறேன்
நெஞ்சில் விழுந்த அவ்விலை
இன்னும் உதிரவில்லை
இலையை கிளையுடன் இணைப்பது
பற்றிய சாத்தியங்கள்
மறந்து போயுமிருந்தன