ஜெனி டொலி (JENYDOLLY)
தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு.
அன்புள்ள ஷோலே,
கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?
இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.
ஆயினும், சபிக்கப்பட்ட அந்த தாக்குதலால் கதை மாறிப்போனது. என் உடல் சாலையில் தூக்கியெறியப்படவில்லை மாறாக, எவின் சிறைச்சாலையின் தனிமை அறைகளிலும் இப்போது ஷாஹர்- ஈ- ரேயின் கல்லறை போன்ற சிறைச்சாலைகளிலும் எறியப்பட்டிருக்கிறது. ஆனால் விதிக்கு வழிவிட்டு, புலம்புவதை நிறுத்து. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்கு அறிந்தவள் நீ.
ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையும் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.
பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா? உன்னுடைய அனுபவம் தவறானது நான் கற்றுக் கொண்டவை எவையும், . இந்த நிகழ்வின் போது எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.
ஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.
நீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.,
அன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.
என் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.
என்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.
இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்.
இந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.
மென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.
ரேஹானே